இங்கிதம் பழ(க்)குவோம்: 14-20

அறம் வளர்ப்போம்
இங்கிதம் பழகுவோம் – 14
ஏப்ரல் 27, 2020

தலைமுறை இடைவெளியின் தாக்கம் குறையட்டுமே!

‘தலைமுறை இடைவெளி இருக்கக் கூடாது’ என பிள்ளைகளை தங்கள் நண்பர்களைப்போல நடத்துவதில் தவறில்லை. ஆனால் எந்த இடத்தில் நண்பர்களைப் போல பழக வேண்டும் எனவும், எந்த இடத்தில் பெற்றோராக கண்டிப்புடன் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்பதிலும் கவனம் வேண்டும்.

சிறு வயதில் பெரியவர்களை கிண்டலாகவும் விளையாட்டாகவும் பிள்ளைகள் பேசுகின்ற போது அதை ரசித்து உற்சாகப்படுத்தும் பெற்றோர்கள் அதே வார்த்தைகளை வளர்ந்த பிறகு(ம்) பேசும்போது அவர்களை மாற்ற முடியாது. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பதை மனதில் வைத்து சிறு வயதில் இருந்தே நல்லவற்றையும் சொல்லிக்கொடுக்க வேண்டும்.

இந்த தலைமுறையினரின் தொழில்நுட்ப அறிவு, நட்பு, தன்னார்வத் தொண்டாற்றும் மனப்பாங்கு போன்றவை முந்தைய தலைமுறையினருக்கு  தானாகவே சென்றடைந்துவிடுகிறது. ஆனால், முந்தைய தலைமுறையினரின் நல்ல பழக்க வழக்கங்கள், சகிப்புத் தன்மை, இயற்கை மருத்துவம், கலாச்சாரம், பண்பாடு  போன்றவை அடுத்தத்தலைமுறையினருக்கு முழுமையாக சென்றடைவதில்லை. அவை முழுமையாகச் சென்றடையும்போதுதான் தலைமுறை இடைவெளியின் தாக்கம் குறையும்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்
இங்கிதம் பழகுவோம் – 15
ஏப்ரல் 28, 2020

தினமும் உடற்பயிற்சி செய்வோமே!

தினந்தோறும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். சைக்கிள் ஓட்டுவது ஆகச் சிறந்தது. யோகா தியானம் போன்றவை உன்னதம். ஆனால் இதற்கெல்லாம் வாய்ப்பில்லை என்றால் அரைமணி நேரம் நடக்கவாவது செய்வோம்.

சாலையில் வாக்கிங் செல்ல முடியாதவர்கள் வீட்டு மொட்டை மாடியில் செல்லலாம். பிடித்த சுவாமி ஸ்லோகங்களையோ அல்லது மென்மையான சினிமா பாடல்களையோ அல்லது ஏதேனும் ஆன்மிக உரைகளையோ கேட்டபடி நடக்கலாம்.

முக்கியமாக நடைப்பயிற்சி செல்லும்போது பேசிக்கொண்டே நடக்காதீர்கள், பாட்டு கேட்காதீர்கள், மொட்டை மாடி வாக்கிங் எல்லாம் உடற்பயிற்சி என்ற கணக்கிலேயே வராது என்பதுபோன்ற அறுவுரைகளை புறந்தள்ளுங்கள். அவை உங்கள் முயற்சிக்கு முட்டுக்கட்டைப் போடும்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்
இங்கிதம் பழகுவோம் – 16
ஏப்ரல் 29, 2020

நம் சுவாசத்தில் கவனம் வைப்போமே!

தினமும் எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது பத்து நிமிடம் மூச்சுப் பயிற்சி செய்தால் நல்லது. மூச்சுப் பயிற்சி செய்வது மிகவும் சுலபம். அவசரம் அவசரமாக செய்யக்கூடாது. நிதானமாக மூச்சை உள்ளிழுத்து வெளியே விட வேண்டும். மூச்சு விடும்போது சுவாசத்தை  கவனிக்க வேண்டும். உணர வேண்டும்.

முதலில் அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து பத்து முறை மூச்சை மெதுவாக உள்ளிழுத்து வெளியே விட வேண்டும்.

அடுத்து மூக்கின் வலதுபக்கத்தை மூடிக்கொண்டு இடது பக்கத்தால் சுவாசத்தை உள்ளிழுத்து வெளியே விடவேண்டும். இதுபோல 10 முறை செய்ய வேண்டும். இடதுபக்கத்தை மூடிக்கொண்டு வலது பக்கத்தால் சுவாசத்தை உள்ளிழுத்து வெளியே விட வேண்டும். இதையும் 10 முறை செய்ய வேண்டும்.

இறுதியாக மூக்கின் வலதுபக்கத்தை மூடிக்கொண்டு இடது பக்கத்தால் சுவாசத்தை உள்ளிழுத்து  மூக்கின் வலதுபக்கத்தால் வெளியே விடவேண்டும்.  அதுபோல மூக்கின் இடப்பக்கத்தை மூடிக்கொண்டு வலது பக்கத்தால் சுவாசத்தை உள்ளிழுத்து  மூக்கின் இடதுபக்கத்தால் வெளியே விடவேண்டும். இதையும் 10 முறை செய்ய வேண்டும்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்
இங்கிதம் பழகுவோம் – 17
ஏப்ரல் 30, 2020

குடிக்கும் தண்ணீரிலும் கவனம் வைப்போம்!

காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது உடல் உறுப்புகளை சுறுசுறுப்புடன் சீராக இயங்க உதவும்.

உடற்பயிற்சிக்கு முன்பும் பின்பும் ஒரு டம்ளர் தண்ணீர் சாப்பிட்டால் உடல் வறட்சி குறையும்.

டீ காபி அருந்துவதற்கு முன்னர் ஒரு டம்ளர் தண்ணீர் அருந்தினால் டீ காபியினால் உடலில் அதிகரிக்கும் அசிடிட்டி குறையும்.

ஒவ்வொரு வேளை சாப்பாட்டுக்கு அரை மணி நேரம் முன்னர் ஒரு டம்ளர் தண்ணீர் சாப்பிடலாம். சாப்பிட்டு முடித்ததும் உடனடியாக தண்ணீர் குடிக்காமல் அரை மணி நேரம் கழித்து குடித்தால் சாப்பாடு சரியாக ஜீரணம் ஆகும்.

குளிப்பதற்கு முன் ஒரு டம்ளர் தண்ணீர் அருந்தினால் இரத்த அழுத்தம் குறையும். வெந்நீரில் குளித்தால் குளிர்ந்த நீர் அருந்துவதை தவிர்க்கவும்.

இரவு தூங்கச் செல்லும் முன்னர் சூடாக ஒரு டம்ளர் தண்ணீர் அருந்தினால் இரத்த ஓட்டம் சீரடையும்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்
இங்கிதம் பழகுவோம் – 18
மே 1, 2020

இயற்கை மருத்துவம் போற்றுவோம்!

சின்ன சின்ன உடல் உபாதைகளுக்கு மருத்துவமனைக்குச் செல்லாமல் மருந்து மாத்திரை சாப்பிடாமல் வீட்டிலேயே இயற்கை மருத்துவத்தை எடுத்துக்கொள்ளலாம்.

துளசி, கற்பூரவல்லி, வெற்றிலையை தண்ணீரில் கொதிக்க வைத்துப் பருகினால் இருமல் சளி காய்ச்சல் போன்றவை காணாமல் போய்விடும்.

எங்கேயேனும் விருந்து விசேஷங்களில் சாப்பிடச் சென்றால் மிளகை பொடி செய்து எடுத்துச் செல்லுங்கள். சாப்பிடும் முன்னர் அந்தப் பொடியில் ஒரு டீஸ்பூன் சாப்பிட்டு தண்ணீர் குடித்துவிட்டு சாப்பாட்டை சாப்பிட்டால் அதில் ஏதேனும் நம் உடம்புக்கு ஒத்துக்கொள்ளாதவை இருந்தால் அதன் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம்.

இரவு வெந்தயத்தை ஊற வைத்து காலையில் அத்துடன் கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா போன்றவற்றை சேர்த்து அரைத்து காலை டிபனுக்கு முன் ஒரு டம்ளர் சாப்பிடலாம். வெந்தயம் நீரழிவு நோய் வந்தவர்களுக்கு ஓர் அருமையான மருந்து.

மதியம் சாப்பாட்டில் வேகவைத்த ஒரு முழு நெல்லிக்காய், பூண்டு இவற்றை கட்டாயம் சேர்த்துக்கொள்ளலாம். நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

சீரகம், பெருஞ்சீரகம், கருஞ்சீரகம், ஓமம், சாப்பாட்டு மஞ்சள், கடுக்காய் போன்றவற்றை அரைத்து பொடி செய்து வைத்துக்கொண்டு இரவு தூங்குவதற்கு முன்னர் வெந்நீரில் கலந்து ஒரு டம்ளர் சாப்பிடலாம். நல்ல செரிமானம் நடக்கும். இரத்த ஓட்டம் சீரடையும்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்
இங்கிதம் பழகுவோம் – 19
மே 2, 2020

உமிழ்நீரிலும், தும்மலிலும், இருமலிலும்  கவனமாக இருப்போம்!

எச்சிலை உமிழ்நீர் என்று அழைக்கலாம். நம் வாய் உமிழ்நீரை பிறர் மீது தெறிக்கும் அளவுக்கு பேசக்கூடாது.

பால் காய்ச்சும்போது அதை வாயால் ஊதி ஊதி அதன் மீது படிந்திருக்கும் ஏட்டை விலக்கி டம்ளரில் ஊற்றும் வழக்கம் நிறைய பேரிடம் உள்ளது. அப்படி செய்வது நல்லதல்ல. நம் வாயில் இருந்து வெளிப்படும் காற்று கார்பன்டை ஆக்ஸைடு. அது பாலில் பட்டு கெடுதலாக மாறி அதை சாப்பிடுபவர் உடலுக்கு ஊறு விளைவிக்கும். ஊதுபவர் வாயில் இருந்து உமிழ்நீர் பாலில் கலப்பதற்கும் வாய்ப்புண்டு.

ரூபாய் நோட்டையும் புத்தகங்களையும் திருப்பும்போது நாக்கில் தொட்டுத் தொட்டு திருப்புவார்கள். அப்படி செய்வது ஆரோக்கியத்துக்குக் கேடு. ரூபாய் நோட்டுகளிலும் புத்தகங்களிலும் உள்ள அசுத்தமும் கிருமிகளும் எச்சில் தொட்டு திருப்பும்போது கிருமிகள் வாய்க்குள் சென்று நோய்களை உருவாக்கும்.

பிறந்தநாள் கேக் வெட்டும்போது அதன் மீது மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அதை வாயால் ஊதி அணைத்து கொண்டாடுகிறார்கள். அப்படி வாயால் ஊதும்போது வாயில் இருந்து உமிழ்நீர் கேக்கில் பட்டு சுகாதரத்துக்கு கேடு விளைவிக்கும். இதற்கு பதிலாக விளக்கு ஏற்றலாம்.

ஒருவர் சாப்பிட்ட கேக்கை அப்படியே அடுத்தவர் வாயிலும் ஊட்டுவார்கள். இப்படி செய்யும்போது ஒருவர் வாயில் இருந்து உமிழ்நீர் அடுத்தவர் வாய்க்குச் சென்று கிருமிகள் மூலம் நோய்த் தொற்று உண்டாகும்.

அதுபோல ஒருவர் டிபன் பாக்ஸில் இருந்து ஸ்பூனால் சாப்பாட்டை எடுத்து சாப்பிட்டுவிட்டு அப்படியே அடுத்தவரும் அதே ஸ்பூனினால் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.

காபி டீ தண்ணீர் இவற்றை டம்ளரில் எச்சில் செய்து சாப்பிட்டால் அந்த டம்ளரை நன்றாக தேய்த்த பின்னரே பிறர் பயன்படுத்த வேண்டும்.

தும்மும்போதும் இருமும்போதும் கைக்குட்டை வைத்து இரும வேண்டும். இல்லையெனில் வாயில் இருந்து தெறிக்கும் நீர்த்திவலைகள் மூலம் கிருமிகள் பரவக் கூடும். அந்த கைகுட்டையை பிறர் பயன்படுத்தக் கூடாது. வாஷிங் மெஷினில் போடுவதற்கு முன் கைகுட்டையை தனியாக அலசி போடலாம். கைகளால் வாயை மூடி இருமினால் உடனடியாக கைகளை நன்றாக கழுவ வேண்டும்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்
இங்கிதம் பழகுவோம் – 20
மே 3, 2020

சுத்தம் பேணுவோம்!

ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது கை குலுக்குவதற்கு பதில் கைகூப்பி வணக்கம் சொல்லிப் பழகுவோம்.

பொது இடங்களில் லிஃப்ட், ஸ்விட்ச்சுகள் போன்றவற்றை பயன்படுத்த இடது கையை பயன்படுத்தலாம். இடது கைப்பழக்கம் உள்ளவர்கள் வலது கையைப் பயன்படுத்தலாம். பிறகு கைகளை நன்றாக அலம்பிய பிறகே வேறு வேலைகளில் ஈடுபட வேண்டும்.

வெளியில் சென்று வீடு திரும்பினால் கைகால் முகம் கழுவிக்கொள்ள வேண்டும். அலுவலகம் சென்று திரும்பினால் குளிப்பது நல்லது.

சினிமா தியேட்டர், பீச், பார்க் போன்ற கூட்டம் அதிகம் உள்ள இடங்களுக்குச் சென்று வீடு திரும்பிய பிறகு உடை மாற்றிக்கொண்டு குளிக்க வேண்டும். போட்டிருந்த ஆடையை தோய்க்கப் போட்டு விடலாம் அல்லது தோய்த்து விடலாம்.

பஸ், ரயில், விமானப் பிரயாணங்கள் செய்த பிறகு நாம் எடுத்துச் சென்ற பைகளையும் பெட்டிகளையும் நன்றாக டெட்டால் தண்ணீரில் துணியை நனைத்து துடைத்த பிறகு உள்ளே எடுத்து வைக்க வேண்டும். வீட்டுக்கு வந்ததும் குளித்து வேறு உடை அணிந்துகொள்ள வேண்டும். போட்டிருந்த உடையை தோய்க்கப் போட்டுவிட வேண்டும்.

மாதம் ஒருமுறை தலையணை உறை மற்றும் போர்வைகளை துவைத்து காய வைத்துப் பயன்படுத்த வேண்டும்.

சாப்பிடுவதற்கு முன், தண்ணீர் குடிப்பதற்கு முன், ஏதேனும் தின்பண்டங்கள் தின்பதற்கு முன் இரண்டு கைகளையும் நன்றாக அலம்ப வேண்டும்.

வீட்டு வாசலை காலையில் அது ஃப்ளேட்டாகவே இருந்தாலும் சரி தினமும் டெட்டால் விட்டு துடைக்க வேண்டும்.

காய்கறிகள் பழங்கள் இவற்றை வாங்கி வந்த பிறகு உப்பு தண்ணீரில் ஒருமுறையும், சாதாரண தண்ணீரில் ஒரு முறையும் நன்றாக கழுவ வேண்டும். அதன் பின்னரே ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும்.

கீரை வகைகளை முதலில் சாதாரண தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊற வைத்து அலம்பிய பிறகு,  உப்பு மஞ்சள் தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பிறகு சாதாரண தண்ணீரில் நன்றாக கழுவிய பிறகே சமைக்க வேண்டும்.

பால் பாக்கெட், எண்ணெய் பாக்கெட்டுகளை கடைகளில் இருந்து வாங்கி வந்தவுடன் அவற்றை தண்ணீரில் கழுவிய பிறகு அதனதன் இடத்தில் வைக்கலாம். மற்ற பொருட்களை ஈரத் துணியால் துடைத்து வைக்கலாம்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

(Visited 163 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon