ஹலோ with காம்கேர் – 127
May 6, 2020
கேள்வி: நமக்கு ஒருவரை ஏன் மிகவும் பிடித்துப் போகிறது?
இந்தக் கேள்விக்கான பதிலை ஆராய்ந்தால் மிகவும் விசித்திரமாக இருக்கும்.
நம்மைப் போலவே இருப்பவர்களை, நம் கருத்துக்களை ஆமோதிப்பவர்களை, நாம் தவறே செய்தாலும் தட்டிக் கேட்காதவர்களை, இன்னும் சொல்லப் போனால் நாம் தவறு செய்தாலும் அதையும் சரி என்று ஆங்கீகரிப்பவர்களை, நம்மை புகழ்பவர்களை என நம் சார்ந்தே பிறரையும் நம் மனம் அங்கீகரிக்கிறது.
ஒருவரைப் பிடிக்க வேண்டுமானால் அவரது குண நலன்களும், பண்புகளும், பழக்க வழக்கங்களும் இன்ன பிற விஷயங்களும் அல்லவா நம்மை ஈர்க்க வேண்டும். ஆனால் நம்மை ஈர்ப்பது நம்மைப் போலவே இருக்கும் மற்றொரு ஜீவனை.
இந்த இடத்தில்தான் மனிதர்கள் தனித்தனிக் குழுக்களாக தீவுகளாகிறார்கள். சற்றே கூர்ந்து கவனித்தால் சமூக வலைதளங்களில் இந்த மனப்பான்மை அப்பட்டமாக வெளிப்படுவதைக் காணலாம். வெவ்வேறு சிந்தனை கொண்டவர்கள் பழகினால்தானே பழக்க வழக்கங்களும் அறம் சார்ந்த விஷயங்களும் பரவலாக்கப்படும்.
எழுத்தாளர்கள் ஒரு பக்கம், பதிப்பாளர்கள் ஒருபக்கம், குழந்தைகள் நலன் சார்ந்து சிந்திப்பவர்கள் ஒரு பக்கம், கல்வி சார்ந்து குரல் கொடுப்பவர்கள் ஒரு பக்கம், தன்னம்பிக்கை பற்றி பேசுபவர்கள் ஒரு பக்கம் இப்படி தனித்தனி குழுக்கள். இதில் லைக்கும் கமெண்ட்டும் போடுபவர்களும் அந்தந்தக் குழுவைச் சேர்ந்தவர்களே. மறந்தும் ஒரு குழுவினருக்கு மற்றவர்கள் லைக்கோ கமெண்ட்டோ போட்டுவிட மாட்டார்கள். ஆனால் படிப்பார்கள், அது குறித்து தங்களுக்குள் விவாதிப்பார்கள், ஏன் மோசமாக விமர்சனம் கூட செய்வார்கள். ஆனால் அத்தனையும் திரைக்கு மறைவில். பொது வெளியில் தங்கள் அங்கீகாரத்தை வெளிப்படையாகக் காட்டிவிட மாட்டார்கள்.
உதாரணத்துக்கு இலக்கிய கூட்டங்களையே எடுத்துக்கொள்வோமே. அதில் கலந்து கொள்ளும் பார்வையாளர்களும் இலக்கியம் சார்ந்து இயங்கிக்கொண்டிருப்பவர்கள்தான். சிறப்பு விருந்தினரும் ஓர் எழுத்தாளராகவோ அல்லது பதிப்பாளராகவோ இருப்பார். அவருடன் அமர்ந்து பேசுகின்ற சக பேச்சாளார்களும் இலக்கியம் சார்ந்தவர்களாகவே இருப்பார்கள். மிஞ்சிப் போனால் திரைத்துறை சார்ந்தவர்களாக இருப்பார்கள்.
இலக்கியத் துறையில் நேரடியாக இயங்காவிட்டாலும் அது குறித்து ஆழமாக தெரிந்து வைத்திருக்கும் பிற துறை வல்லுநர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். மருத்துவம் சார்ந்த விஷயங்களைப் பேசும் படைப்புகள் மருத்துவ இலக்கியம், தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களை பேசும் படைப்புகள் தொழில்நுட்ப இலக்கியம். அடிப்படையில் இலக்கியம் என்பது அடித்தளம். அது எது குறித்துப் பேசுகிறதோ அதைச் சார்ந்த இலக்கியமாகிறது.
இலக்கியத் துறையில் புத்தக வெளியீட்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினராகவும் பேச்சாளர்களாகவும் பிற துறை சார்ந்தவர்களை அழைக்கலாம். தகுந்த நேரம் கொடுத்து வெளியிட இருக்கும் புத்தகத்தை முன்பே அனுப்பி வைத்தால் அவர்களால் உங்கள் புத்தகத்தை வேறு கோணத்தில் அலசி ஆராய முடியும். அதுதான் நேர்மையான விமர்சனம். அப்போதுதான் இலக்கியம் பிற துறையினர்களையும் பரவலாக சென்றடையும் என்பது என் அனுபவம். இன்னும் அதிக அளவில் ரீச் ஆகும்.
இலக்கியம் தொழில்நுட்பத்துடன் இணையும்போது அனிமேஷன் படைப்பாகவும், மொபைல் ஆப் ஆகவும், இணைய வழி ஆடியோ வீடியோ படைப்பாகவும் உருமாறி பலதரப்பட்ட வாசகர்களுக்கு சென்றடைகிறது.
இலக்கியம் திரைத்துறையினருடன் இணையும்போது பிரமாண்ட திரைப்படங்கள் உருவாக வழிவகுக்கிறது.
மருத்துவம் இலக்கியத்துடன் இணைந்து தொழில்நுட்பத்துடன் கைகோர்க்கும்போது நோயாளிகளுக்கு மருத்துவர்கள் நோய்கள் குறித்துப் பேசி புரிய வைப்பதும், அவர்களின் சந்தேகங்களை தீர்ப்பதும், பயத்தைப் போக்குவதும் சுலபமாகிறது.
எந்த ஒரு விஷயத்தையும் சுவைபடச் சொல்வதற்கும், சுலபமாக புரிய வைப்பதற்கும் இலக்கியம் உதவுகிறது என்பேன். அது கதையாகட்டும், சினிமாவாகட்டும், பைபாஸ் ஆப்பரேஷன் குறித்து பேசுவதாகட்டும், இறந்தவர்களின் கண்களை எப்படி பிறருக்கு பயன்படுத்துகிறார்கள் என்று சொல்வதாகட்டும், சிலை வடிப்பதன் நுட்பத்தைப் பேசுவதாகட்டும், இல்லறம் குறித்து சிலாகிப்பதாகட்டும், துறவு குறித்து சிந்திப்பதாகட்டும். இப்படி உலகில் எந்த ஒரு சப்ஜெக்ட் குறித்து பேசுவதாகட்டுமே. அதை சுவைபட பயனுறக் கொடுக்க முடியுமேயானால் அதுவே ஆகச் சிறந்த இலக்கியம்.
இந்தப் பதிவில் இலக்கியக் கூட்டம் என்பதை ஒரு உதாரணத்துக்காக எடுத்துக்கொண்டேன். இதே உளவியல்தான் எல்லா துறையினருக்கும், எல்லா விஷயங்களுக்கும்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software