ஹலோ With காம்கேர் -128: 1990-2020 நியதிகள் மாறவில்லையே. ஏன்?

ஹலோ with காம்கேர் – 128
May 7, 2020

கேள்வி: 1990-2020 நியதிகள் மாறவில்லையே. ஏன்?

ஒரு வளைகாப்பு நடந்துகொண்டிருக்கிறது. உறவினர்கள் கர்ப்பிணிப் பெண்ணுக்கு வளையல் அடுக்கிக்கொண்டிருக்கிறார்கள். அந்தப் பெண்ணோ ஏக்கத்துடன் திரும்பித் திரும்பி ஓரமாக ஒதுங்கி நிற்கும் தன் தாயை பார்த்துக்கொண்டிருக்கிறார். அந்தத் தாய் கணவனை இழந்தவர் என்பதை காட்டுவதற்கு நெற்றியில் விபூதி மட்டும் வைத்துகொண்டிருப்பதாக காட்டுகிறார்கள். அந்தத் தாய் கைகளாலேயே சைகைக் காட்டி ‘கவலைப்படாதே’ என கண்களால் ஆசிர்வாதம் செய்கிறார். இதற்குள் கர்ப்பிணிப் பெண்ணின் மாமியார் ‘எல்லோரும் வளையல் போட்டாச்சா, ஆரத்தி எடுக்கலாமா’ என கேட்கிறார். அப்போது ஒரு சிறுமி ‘லஷ்மி பாட்டி இன்னும் வளையலே போடலை, வாங்கப் பாட்டி, வாங்க’ என கைகளைப் பிடித்து இழுக்கிறாள். அப்போது மாமனார், ‘குழந்தை சொல்வது சரிதானே, வாங்க சம்மந்தி வாங்க என அழைக்கிறார். அந்தத் தாய் மனம் மகிழ்ந்து பூரிப்புடன் தன் மகளுக்கு வளையல் அடுக்கி சந்தனம் பூசி சம்பிரதாயங்களை செய்கிறார். தாயுடன் சேர்ந்து மகளின் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர்.

இந்தக் காட்சியின் பின்னணியில் ‘நடப்பதை எல்லாம் பார்க்கும்போது ஏதோ சினிமாவில் வருவதைப் போல் இருக்கிறதா, வாழ்க்கையைத்தானே சினிமாவாக எடுக்கிறார்கள்… வாழ்க்கையோடு கலந்த சினிமாவைக் கொண்டாடுவோம். புதிய தமிழ் மூவி சேனல் Zee திரை’ என அந்த விளம்பரம் முடிவடைகிறது. இந்த விளம்பரம் வந்த ஆண்டு 2020.

அடுத்து ஒரு சிறுகதை.

கணவனை இழந்த ஒரு தாய் தன் மூன்று குழந்தைகளையும் படிக்க வைத்து நல்ல பழக்க வழக்கங்களைச் சொல்லிகொடுத்து வளர்த்து ஆளாக்கி வேலைக்கும் தயாராக்குகிறார். மூத்த மகன் எம்.சி.ஏ படித்துவிட்டு ஒரு நிறுவனத்தில் வேலையில் இருக்கிறான். இரண்டாவது மகள் ஆசிரியராக பணிபுரிகிறாள். மூன்றாவது மகள் வேலைக்கு முயற்சிக்கிறாள். திருமண நாள் அன்று திருமாங்கல்யத்தை விதவை தாயிடம் கொடுத்து ஆசிர்வாதம் வாங்குவதில் சிறு சலசலப்பு. அப்போது சம்மந்தி பேசும் வசனம்தான் கிளைமேக்ஸ்.

‘ஆணுக்கு சமமா வேலைக்குப் போய் குடும்ப பாரத்தை இத்தனைநாள் தனியா தன் தோளில் சுமந்து வந்த அந்த அம்மாவிடம் ஆசி வாங்கலைன்னா அவங்க மனசு குளிரலைன்னா இந்த கல்யாண ஆர்பாட்டத்தில் அர்த்தமே இல்லை. மணமகளுக்குத் தாயாரான அந்த விதவைதான் அவளை வளர்த்து, படிக்க வைத்து, உத்தியோகமும் வாங்கிக்கொடுத்தார். பெற்ற மனதின் ஆசி இருந்ததால்தானே என் மருமகள் சிறக்க முடிந்தது. முதலில் திருமாங்கல்யத்தை அவரிடம் நீட்டி ஆசி வாங்குங்கோ, அப்பத்தான் இந்தக் கல்யாணம் நடக்கும்’

இந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ள  விளம்பரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது என் அம்மாதான் ‘இது நீ சாவியில் எழுதிய முத்திரை கதை நியதிகள் மாறலாம் போலவே உள்ளதே…’ என கதையின் தலைப்புடன் நினைவூட்டினார். அப்பா அந்தக் கதையை சற்றே விரிவாகச் சொல்லி அசைபோட்டார். நம் பெற்றோர்கள் எப்போதுமே நம்மைவிட ஸ்மார்ட்தானே.

நான் எழுதிய இந்தக் கதையை முழுமையாக சாவி பத்திரிகையில் வந்தது வந்தபடி என் இணையதளத்தில் படிக்க… http://compcarebhuvaneswari.com/?p=4475

இந்தக் கதை பிரசுரம் ஆன ஆண்டு 1990.

இதே கான்செப்ட்டில் வந்துள்ள விளம்பரம் வந்துள்ள ஆண்டு 2020.

1990-2020.

கிட்டத்தட்ட 30 வருடங்கள். 30 வருடங்களாக பெண்களின் நிலைமை இப்படியேத்தான் இருக்கிறதா?

இரண்டுமே ஒரு பெண் தன் அடிப்படை உரிமைகளுக்கு மற்றவர்களைத்தான் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. தானே இயல்பாக எதையும் செய்யும் அளவுக்கு மாற்றம் ஏற்படவில்லை என்பதையல்லவா சொல்லிச் செல்கிறது?

30 வருட  ஒப்பீடு ஏதோ சினிமாவில் வருவதைப்போல் இருக்கிறது என நினைத்துக்கொண்டிருந்த போது மனம் தன்னிச்சையாக விளம்பரத்தின் மையக் கருத்தான ‘சினிமாவில் வருவதைப் போல் இருக்கிறதா, வாழ்க்கையைத்தானே சினிமாவாக எடுக்கிறார்கள்…’ என்ற வசனத்துடன் ஒப்பிட்டுச் சென்றது.

1990 – ல் நியதிகள் மாறலாம் என தலைப்பிட்டு கதை எழுதினேன். 2020 – ல் கூட நியதிகள் மாறவில்லையே?

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

 

(Visited 26 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon