இங்கிதம் பழ(க்)குவோம்: 21-27

அறம் வளர்ப்போம்
இங்கிதம் பழகுவோம் – 21
மே 4, 2020

நன்றி சொல்லப் பழகுவோம்!

நாம் ஒருவரிடம் உதவி கேட்டால் அவர் நமக்கு உதவி செய்ய முயற்சித்தாலே அது அவர் நமக்குக் கொடுக்கும் ஆகப் பெரிய மரியாதை. அந்த முயற்சியை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

நாம் கேட்ட உதவியை அவர் செய்தால் மறக்காமல் நன்றி சொல்ல வேண்டும்.

நாம் கேட்ட உதவியை அவரால் செய்ய முடியாவிட்டாலும் அவருடைய முயற்சிக்கு நன்றி சொல்ல வேண்டியது நம் கடமை. எனவே மறக்காமல் நன்றி சொல்வோம்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்
இங்கிதம் பழகுவோம் – 22
மே 5, 2020

கூச்சத்தை அகற்றுவோம்!

பழகிய ஒருசிலரைத் தவிர பிறரிடம் பேசுவதற்கு சிலருக்கு கூச்சமாக இருக்கலாம். அந்தக் கூச்சம் பல வெற்றிகளை அவர்களைவிட்டு தூர விலக்கும்.

பிறரிடம் பேசுவதற்கு கூச்சம் ஏன் ஏற்படுகிறது என்றால் மற்றவர்கள் நம்மைவிட உயர்வானவர்கள் என்கின்ற எண்ணமே. ஒரு சிலருக்கு நம்மைவிட பிறர் குறைவானவர்கள் என்கின்ற எண்ணமும் இருக்கும். அதனாலேயே அவர்களிடம் சகஜமாக பேச மாட்டார்கள்.

யாரும் யாரையும்விட உயர்வானவர்களோ தாழ்வானவர்களோ கிடையாது. அந்த எண்ணத்தை நம்மிடம் இருந்து நீக்கிவிட்டாலே வெற்றிகள் நம்மை நோக்கி வரத் தொடங்கும். எல்லோரும் சமமானவர்களே என்ற எண்ணத்தை நமக்குள் விதைப்போம்.  வெற்றிக் கனியை பறிப்போம்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்
இங்கிதம் பழகுவோம் – 23
மே 6, 2020

அர்ப்பணிப்பு அவசியம்!

எந்த வேலையை செய்தாலும் நம் முழு ஈடுபாட்டுடன் அர்ப்பணிப்புடன் செய்ய வேண்டும். ஏனோ தானோ என செய்யும் வேலைகள் பெரும்பாலும் வெற்றி பெறுவதில்லை.

எந்த ஒரு வேலையையும் செய்ய ஆரம்பிப்பதற்கு முன்பு அது குறித்து கற்பனையில் சிந்திக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் கற்பனைக் கொடுக்கும் உற்சாகம் அந்தப் பணியை செய்யும்போது நமக்குள் மாபெரும் உத்வேகத்தை ஊட்டும். அந்த வேலை வெற்றிகரமாக முடியும்.

பெரும்பாலும் வீடுகளில் அம்மாக்கள் சமைக்கும் சமையலில் தனி சுவை இருக்கும். அவர்கள் சமைப்பதற்கு முன்பே தன் குழந்தைகளுக்கு இது பிடிக்கும் அது பிடிக்கும் என மனதில் சிந்தித்துக்கொண்டேதான் சமையலுக்குத் தயாராவார்கள். சமைக்கும்போதும் அன்பையும் பாசத்தையும் சேர்த்து சமைப்பார்கள். அதனால்தான் அம்மாக்கள் சமைக்கும் சமையலுக்கு அத்தனை சுவை.

தினமும் சமைக்கும் சமையலுக்கே இந்த லாஜிக் என்றால், பெரிய பெரிய வேலைகளுக்கும் முயற்சிகளுக்கும் எத்தனை அர்ப்பணிப்பு அவசியம் தேவை என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்
இங்கிதம் பழகுவோம் – 24
மே 7, 2020

புகழ்ச்சி தவிர்ப்போமே!

அநாவசியமாக யாரையும் எதற்காகவும் புகழ வேண்டாம். புகழ்ச்சி என்பது ஒரு வகை போதை. கயிற்றின் மீது நடக்கும் சாகசம் போன்றது. கொஞ்சம் மிகையானாலும் வஞ்சப் புகழ்ச்சி ஆகிவிடும்.

புகழ்பவர்களையும் புகழப்படுபவர்களையும் ஒரு சேர பாதிக்கும் சக்தி வாய்ந்தது.

புகழ்ச்சி என்பது ஏதேனும் எதிர்பார்புடன் எய்யப்படும் ஓர் அஸ்திரம். அந்த எதிர்பார்ப்பு பூர்த்தி ஆகாதபோது புகழ்பவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும். புகழப்படுபவர்களும் புகழ்ச்சியினால் பலமிழந்து போவார்கள். ஒருவித போதையினால் தன் நிலை மறக்கவும் வாய்ப்புகளை உருவாக்கும்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்
இங்கிதம் பழகுவோம் – 25
மே 8, 2020

பாராட்டை தாராளமாக்குவோமே!

சின்னச் சின்ன விஷயங்களுக்கும் பாராட்டுவோம். அந்தப் பாராட்டில் உண்மைத்தன்மை இருக்கட்டும்.

பாராட்டும்போது நமக்குள்ளும் நேர்மறை சிந்தனைகள் தோன்றி  புத்துணர்வு ஒட்டிக்கொள்ளும். பாராட்டப்படுபவர்களுக்கும் ஊக்கமாக இருப்பதுடன் அவர்கள் எதற்காகப் பாராட்டப்படுகிறார்களோ அந்த செயலை மென்மேலும் திறம்பட செய்ய ஊக்கமாக இருக்கும்.

பாராட்டில் உண்மைத்தன்மை குறையும்போது அது பாராட்டு என்ற பதத்தில் இருந்து வஞ்சப் புகழ்ச்சி எனும் பதத்துக்கு மாறிவிடும். கவனம் இருக்கட்டும்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்
இங்கிதம் பழகுவோம் – 26
மே 9, 2020

இயற்கையையும் இறைசக்தியையும் மதிப்போமே!

நம் சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி உள்ளது. அதுவே இறைசக்தி. நாம் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் நம் உழைப்புக்கு ஏற்ப அமையவும் வெற்றி கிடைக்கவும் ஆத்ம திருப்தி உண்டாகவும் இறைசக்தியும் வேண்டும். இது கண்களுக்குப் புலப்படாத சக்தி.

நம்முடைய  முயற்சிகள் அனைத்தையும் தொய்வின்றி செய்வதற்கு நம் உடல் நலனும் மன நலனும் ஒத்துழைக்க வேண்டுமல்லவா. அதற்கு உதவுவது இயற்கை.  இது கண்களுக்கு புலப்படும் சக்தி.

இயற்கையையும் இறைவனையும் மதிப்போம். நம் தேக நலத்தையும் மன நலத்தையும் காப்போம்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்
இங்கிதம் பழகுவோம் – 27
மே 10, 2020

துரோகம் துறப்போமே!

பிறர் செய்த துரோகத்தை மறப்பது அத்தனை சுலபமல்லதான். ஆனால் அதை மனதுக்குள் வைத்து குமைந்துகொண்டிருந்தால் நம் உடல்நலம்தான் பாதிக்கும்.

துரோகத்தின் வலிகள் எப்போதெல்லாம் எட்டிப் பார்க்கிறதோ அப்போதெல்லாம் அவை நம்மை பாதிக்காமல் இருக்க வேறு ஏதேனும் நல்ல ஒரு நிகழ்வை, சூழலை, கனவை நம் மனதுக்குள் கொண்டுவரலாம். இதனால் வலிகளை மறக்க முடியும் என்று சொல்வதற்கில்லை. நினைவுகளுக்கு போக்குக் காட்டி மறக்கச் செய்யும் ஒரு அருமையான வழி.

துரோகத்தை துரத்துவது நல்லது. துறப்பது அதைவிட நல்லது.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

(Visited 157 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon