வாழ்க்கையின் OTP-22 (புதிய தலைமுறை பெண் – மே 2020)

வருவதை எதிர்கொள்வோம், வருத்தங்களை நாம் வெல்வோம்!

கம்ப்யூட்டர் புரோகிராமுக்கு லாஜிக் இருப்பதைப்போல் வாழ்க்கைக்கும் லாஜிக் உண்டு.

தன்னுடைய தோல்விகளுக்கும் பிறரது வெற்றிகளுக்கும் காரணம் தேடித்தேடி சொல்லிக்கொண்டிருப்பவர்கள் அவர்கள் இயலாமையைத்தான் வெளிப்படுத்துகிறார்கள்.

வெற்றியோ தோல்வியோ அது அந்தந்த நேரத்துக்கான சூழல் அமைத்துக்கொடுக்கும் வாய்ப்பு என்று சொல்லலாம். நம் திறமை, படிப்பு, முயற்சி, உழைப்பு இவை அனைத்தையும் முதலீடாகப் போட்டு நாம் தொடங்கும் எந்த ஒரு செயலுக்குமான வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது அந்த செயல் நடைபெறும் சூழல் என்று நான் உறுதியாக சொல்வேன். பெரும்பாலானோர் அதை அதிர்ஷ்டம் என்று சொல்கிறார்கள்.

நடிகர் அரவிந்த சாமியின் நேர்காணல் வீடியோ ஒன்றை பார்த்தேன். நடிகர், புகழ் பெற்றவர், கோடிகளில் புரள்பவர்கள் தவிர பிசினஸ் பின்னணியில் பிறந்து வளர்ந்தவர் கொடுத்து வைத்தவர் என பொதுவாக எல்லோரும் பிரமிக்கும் ஆளுமை அவர்.  ஆனால் அவர் சொன்ன ஒரு கருத்து வாழ்க்கை மீது பலர் கொண்டிருக்கும் கண்ணோட்டத்தை மாற்றுவதாக அமைந்திருந்தது.

மிகப் பெரிய தொழிலதிபரின் ஒரே மகனாக பிறந்தவர். இருந்தாலும்  வாழ்க்கை புரிவதற்காக அவர் அப்பா பஸ் பாஸ் எடுத்துக்கொடுத்து பஸ்ஸில்தான் பள்ளிக்கு அனுப்பினாராம். ஒரு கட்டத்தில் அப்பா அம்மா இருவரையும் ஒருசேர பறிகொடுத்திருக்கிறார். தளபதி ரோஜா திரைப்படங்களில் வெளியான சமயம் பொது இடங்களில் இளம் பெண்கள் அவரை சூழ்ந்துகொண்டு ஆட்டோகிராஃப் வாங்கும்போது மிகவும் சங்கடமாக உணர்வாராம். எங்கு சென்றாலும் 40, 50 பேர் உற்றுப்பார்க்கும் பிரபலம் என்கின்ற முத்திரையை கையாளத் தெரியாமல் அந்த சூழல் பிடிக்காமல் நடிப்பை விட்டு சற்றுவிலகி அயல்நாட்டுக்கு படிக்கச் சென்றிருக்கிறார். திருமணம் ஆகி 3 வயதிலும் 7 வயதிலும் இரண்டு குழந்தைகள் இருக்கும்போது மனைவியுடன் விவாகரத்து. இரண்டு குழந்தைகளையும் தானே தன் கவனிப்பில் வளர்க்கும் சூழல். இடையில் ஒரு விபத்தில் முதுகெலும்பு உடைந்து கை கால் செயலிழந்து மருத்துவ உதவியுடன் தன்னம்பிக்கையுடன் போராடி அதில் இருந்து மீண்டிருக்கிறார்.

இதையெல்லாம் சொல்லி விட்டு கடைசியாக, ‘இதுவரை என் வாழ்க்கையில் எனக்கு நடந்த விஷயங்களை பரிதாபத்தைப் பெறுவதற்காக சொல்லவில்லை. என் வாழ்க்கையில் இப்படியெல்லாம் நடந்துள்ளது. நான் இவற்றை எப்படி கையாள்கிறேன் என்பதில்தான் வெற்றியும் தோல்வியும் அடங்கியுள்ளது. இதுபோல் எல்லோர் வாழ்க்கையிலும் சோகங்கள் இருக்கும். அதை அவரவர்கள் எப்படி கையாள்கிறார்கள் என்பதில்தான் அவரவர்களின் வெற்றியும் தோல்வியும்’ என்று சொன்னாரே பார்க்கலாம். அதுவே ஹைலைட்.

நானும் இதையேத்தான் சொல்கிறேன்.

வெற்றி தோல்வி என பிரித்துப் பார்க்க வாழ்க்கை பந்தயம் அல்ல. அது ஒரு பயணம். அதில் எதிர்படும் நல்லவை கெட்டவைகளை எப்படி கையாள்கிறோமோ அதன் அடிப்படையில் தொய்வில்லாமல் செல்வதே வாழ்க்கை.

நமக்குக் கிடைக்கும் நல்லவற்றை இயல்பாகக் கொண்டாடும் நாம், நமக்கு நேர்கின்ற கஷ்டங்களை எப்படி சமாளிக்கிறோம் என்பதில்தான் வாழ்க்கையின் லாஜிக் அடங்கியுள்ளது.  இதுவே அமைதியான வாழ்க்கைக்கான OTP.

இந்த லாஜிக் புரிந்தவர்கள் பாக்கியவான்கள். அவர்களால் வாழ்க்கைப் பயணத்தை சுலபமாக கடந்துவிட முடியும்.

கம்ப்யூட்டர் லாஜிக் போல்தான் வாழ்க்கை லாஜிக்கும். இரண்டுமே ரொம்ப சுலபம்தான்.

நம் அபிர்ப்பிராயங்களும் அனுமானங்களும் மட்டுமே சரியான தீர்வை கொடுக்குமா?

‘கம்ப்யூட்டர் லாஜிக் போல்தான் வாழ்க்கை லாஜிக்கும். ரொம்ப சுலபம்’  என்ற கருத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தேன். அதற்கு  நண்பர் ஒருவர், ‘வாழ்க்கை ஒற்றைப் படையானது அல்ல. லாஜிக் என்பது 1 அல்லது 0. Yes or no. தர்க்கங்களால் அணுகுவது சரியாகாது. தொழிலை வேண்டுமானால் அவ்வாறு அணுகலாம். உறவுகளை, நட்பை, காதலை அன்பை அப்படி வரையறுக்க இயலாதே. தர்க்கரீதியாக யோசிப்பவர்களுக்கு தர்ம ரீதியான நியாயங்கள் புலப்படாது என்பது என் கருத்து’ என பின்னூட்டமிட்டிருந்தார்.

முதலில் ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். கம்ப்யூட்டர் லாஜிக்  என்பதே  விடை கிடையாது. விடை வேண்டுமானால் 0 அல்லது 1 என கிடைக்கலாம். லாஜிக் அப்படி கிடையாது. விடை காணும் முயற்சியே லாஜிக். லாஜிக் என்பது கம்ப்யூட்டர் மொழிகளில் எழுதப்படும் புரோகிராம்.

வாழ்க்கையில் ஒவ்வொரு விஷயத்துக்கும் நம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அபிர்ப்பிராயங்கள் இருக்கும். அதுதான் சரி என அனைவருமே நினைத்துக்கொண்டிருப்போம். அதற்கு நாம் வளரும் சூழல், நம் அனுபவங்கள் இப்படி பல்வேறு காரணிகள் இருக்கலாம். அந்த அபிர்ப்பிராயங்களின் அடிப்படையில் நாம் சில கணிப்புகளுடன் நம் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை கையாண்டு பயணித்துக்கொண்டிருப்போம். அந்த அபிர்ப்பிராயங்களும் அதன் அடிப்படையிலான கணிப்புகளும் அதனைத் தொடர்ந்த முயற்சிகளுமே நம் வாழ்க்கைக்கான லாஜிக் எனலாம்.

நம் லாஜிக் சரியில்லை என்றால் வீட்டில் உள்ள உறவுகளிடம் ஆலோசனை கேட்போம். அப்போதும் தெளிவாகவில்லை எனில் நண்பர்களிடம். அப்போதும் தீர்வு கிடைக்காத நிலையில் கவுன்சிலிங் செய்பவர்களை அணுகுவோம். ஒரே பிரச்சனைக்கு ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு தீர்வுகள் இருக்கும். அவற்றில் நம் பிரச்சனைக்கு தர்மம் நியாயத்தின் அடிப்படையில் எது சரியாக பொருந்துகிறதோ அதன்படி நடக்க வேண்டியது நம் கடமை. இப்படி பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விஷயமே லாஜிக். அதற்கு கிடைக்கும் தீர்வுதான் 0 அல்லது 1.

கம்ப்யூட்டரின் ஆரம்பகால மொழிகளில் கோபால் (COBOL) மொழியும் ஒன்று. 2000-ம் வருடம் அந்த மொழி நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றது. காரணம் Y2K பிரச்சனை. 2000-ம் ஆண்டு கம்ப்யூட்டரில் பதிவாக்கப்பட்ட தகவல்கள் எல்லாம் அழிந்துவிடும் என்ற புரளியுடன் Y2K பிரச்சனை உருவானபோது அந்த பிரச்சனைக்கான தீர்வுகாண கோபால் மொழியே உதவி செய்தது.

அதில் லாஜிக் எழுதும் போது பக்கம் பக்கமாக புரோகிராம் எழுத வேண்டியிருக்கும்.  கோபால் மொழியில் எழுதப்பட்ட புரோகிராமை இயக்கும்போது வஞ்சனை இல்லாமல் 500 600 தவறுகளைக்கூட காண்பிக்கும். ஒரு புள்ளி, கமா விட்டிருந்தாலே மானிட்டர் முழுக்க தவறுகளை  அள்ளி வீசும். பிரமாண்டமாக எழுதப்பட்டிருக்கும் புரோகிராமில் டைப் செய்யும்போது எங்கேனும் தவறுதலதாக ஒரு புள்ளியையும் சேர்த்து டைப் செய்திருப்போம் அல்லது கமாவை டைப் செய்யாமல்விட்டிருப்போம். அது எங்கு என கண்டுபிடிப்பதே பெரும் சாதனைதான்.

இதுவே சி, சி++ போன்ற மொழிகளில் லாஜிக் எழுதும்போது புரோகிராம் சிறியதாக இருக்கும். தவறுகளும் அத்தனை காண்பிக்காது. அதை கண்டுபிடித்து சரி செய்துவிட்டால் விடை சரியாக இருக்கும்.

கம்ப்யூட்டர் லாஜிக் என்பது விடை காண முயலும் புரோகிராம்.  ஒரு முறையிலேயே அல்லது முயற்சியிலேயே சரியான லாஜிக் கிடைக்காது.  ரிசல்ட் தவறாக வந்தால் சரியாக வரும்வரை  லாஜிக்கை மாற்றி மாற்றி முயற்சிப்பதே கம்ப்யூட்டரின் அடிப்படை.

நான் சொல்லும் வாழ்க்கை லாஜிக்கும் இதுபோல்தான்.  தோல்வியையும் வெற்றியின் சிறு தடங்கலாக பார்க்கும் மனோபாவத்தையே லாஜிக் என்கிறேன். வாழ்க்கையிலும் நம் தவறுகளை, இடர்களை சரி செய்ய முயற்சித்து முன்னேறிக்கொண்டே இருக்க வேண்டும்.

குட்டைபோல் ஓரிடத்தில் தேங்கிவிடாமல் அருவிபோன்ற ஆர்பரிப்புடனும் ஆறு போல் நில்லாமலும் ஓடிக்கொண்டே இருக்கும் மனோபாவமே தொய்வில்லாத வாழ்க்கைக்கான OTP.

எதிர்மறையான எதிர்பார்ப்புகள் நேர்மறை பலனை கொடுக்குமா?

வாழ்க்கையில் எல்லாவற்றையும் நேர்மறையாகவே யோசிக்க வேண்டும் என்பதெல்லாம் சரிதான். அப்படி நேர்மறையாகவே யோசித்துக்கொண்டிருக்கும்போது ஏதேனும் எதிர்மறையாக நடந்துவிட்டால் சட்டென உடைந்து போவதும் நாம்தான்.

நேர்மறையாகவே சிந்தித்துக்கொண்டிருப்பதால் நம்மைச் சுற்றி எல்லாமே நேர்மறையாகவே நடந்துவிடும் என்றெல்லாம் சொல்வதற்கில்லை. எதிர்மறையாகவும் நடக்கலாம். முதலில் அந்தத் தெளிவு வேண்டும் நமக்கு.

வாழ்க்கையில் பல நேரங்களில் நேர்மறையான சிந்தனையுடன் கூடிய எதிர்மறையான எதிர்பார்ப்புகள்கூட நேர்மறையான பலனை பெற்றுத் தரும். இந்த மனநிலையில் நேர்மறை பலன் கிடைத்தால் இரட்டை மகிழ்ச்சி கிடைக்கும். எதிர்மறை பலன் கிடைத்தால் ஏமாற்றம் இல்லாத பக்குவப்பட்ட மனநிலை உண்டாகும்.

ஏழெட்டு வருடங்களுக்கு முந்தைய வீட்டு ப்ளான் ஒன்றை A1 ஷீட்டில் (பெரிய சைஸ்)  செராக்ஸ் எடுப்பதற்காக நேற்று நானே நேரடியாக செராக்ஸ் கடை சென்றிருந்தேன். செராக்ஸ் எடுப்பவரிடம் ‘செராக்ஸ் நன்றாக வருமா?’ என கேட்டேன். ‘சுமாராகத்தான் வரும். ஏனெனில் ப்ளான் பழசாகி விட்டது. மடிப்புகள் வேறு உள்ளது’ என்று சொன்னார்.

செராக்ஸ் எதிர்பார்த்ததைவிட அருமையாக தெளிவாக வந்தது. என் முக மலர்ச்சியை பார்த்துவிட்டு ‘நான் நன்றாக வரும் என்று சொல்லி செராக்ஸ் சுமாராக இருந்திருந்தால் நீங்கள் வருத்தப்பட்டிருப்பீர்கள். நான் நன்றாக வராது என சொன்னேன். செராக்ஸ் நன்றாக வந்துள்ளது. இப்போது உங்களுக்கு சந்தோஷமாக உள்ளதல்லவா…’ என்று சொன்னார்.

அவரைப் பொருத்தவரை அவர் நேர்மறையாகவே சிந்தித்திருக்கிறார். வாடிக்கையாளர்களின் மனதறிந்து அவர்களிடம் எப்படி பேசினால் அவர்களுக்கு மனம் கோணாமல் சர்வீஸ் செய்துகொடுக்க முடியும் என்ற நுணுக்கம் அறிந்து எதிர்மறையான எதிர்பார்ப்பை கொடுத்து நேர்மறை பலனை பெற்றிருக்கிறார். இது ஒருவித உளவியல் சிந்தனை. இது உளவியல் என்றெல்லாம் அந்த செராக்ஸ் கடைக்காரருக்கு தெரியாது. அவரது அனுபவம் அவரை பண்படுத்தியுள்ளது.

இப்போதெல்லாம் அப்பா அம்மாக்கள் தங்கள் பிள்ளைகளை அவர்களின் சின்ன சின்ன தவறுகளை எடுத்துச் சொல்வதில்லை. மெல்லியதாக கடிந்துகொள்வதும், மென்மையாக அடிப்பதும் இல்லை. அவர்கள் கேட்டதையெல்லாம் செய்வதோடு கேட்காததையும் மனதறிந்து அள்ளிக் கொடுக்கிறார்கள். விளைவு தொட்டால் சிணுங்கி மனம் பெருகி வருகிறது.

படித்துவிட்டு கல்லூரியில் இருந்து நேரடியாக வேலையில் சேர்கின்ற இளைஞர்களுக்கு அவர்கள் படித்தத் துறையிலும் ஞானம் இருப்பதில்லை. ஞானம் கூட வேண்டாம், அடிப்படையாவது தெரிகிறதா என்றால் அதுவுமில்லை.

பி.ஈ கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு புரோகிராமிங்கின் அடிப்படையான if..else, loop, arrays இவற்றில்கூட அடிப்படை அறிவு இல்லாமல் இருக்கிறார்கள். எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படித்த மாணவர்களுக்கு சின்ன சின்ன எலக்ட்ரிக்கல் பழுதுகளைகூட சரிசெய்யத் தெரிவதில்லை. கிராஃபிக்ஸில் RGB  கலர்கோட் டிஜிட்டல் சாதனங்களில் பார்ப்பதற்கும், CMYK என்பது பிரிண்ட் எடுப்பதற்கான கலர்கோட் என்ற மிக மிக அடிப்படையான விஷயம்கூட தெரியாமல் புத்தக அறிவை மட்டும் வைத்துக்கொண்டு வேலைக்கு வந்துவிடுகிறார்கள்.

டீம் லீடர் சொல்லிக்கொடுக்கும்போது கொஞ்சம் குரலை உயர்த்திவிட்டால் போச்சு. கண்கள் சிவக்க அழுது ஏதோ நடக்கக் கூடாத விஷயம் நடந்துவிட்டதைப் போல சூழலை உருவாக்கி விடுகிறார்கள். எங்கள் அப்பா அம்மாகூட இப்படி கடிந்துகொண்டதில்லை என துக்கம் அடைக்க பேசி அடுத்த நாளே வேலையில் இருந்து நின்றுவிடுகிறார்கள்.

சீனா புகழ்  ‘ஃபார்ச்சூன் குக்கீஸ்’ பிஸ்கட்டுகளில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் அதிர்ஷ்ட வாசகங்களைப் போலதான் வாழ்க்கையில் நமக்கு நடக்கும் நல்லதும் கெட்டதும். அந்த பிஸ்கட்டுகளில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் வாசகம் என்ன என்று வெளிப்படையாக தெரிந்துவிட்டால் என்ன சுவாரஸ்யம் இருந்துவிடப் போகிறது.

நேர்மறையாக சிந்தியுங்கள், எதிர்மறையான பலனுக்கும் மனதை தயார்படுத்துங்கள். இதுவே நிம்மதியான மனநிலையைப் பெறுவதற்கான OTP

இந்தா பிடிங்க உங்களுக்கான OTP…

நமக்குக் கிடைக்கும் நல்லவற்றை இயல்பாகக் கொண்டாடும் நாம், நமக்கு நேர்கின்ற கஷ்டங்களை எப்படி சமாளிக்கிறோம் என்பதிலும், குட்டைபோல் ஓரிடத்தில் தேங்கிவிடாமல் அருவிபோன்ற ஆர்பரிப்புடனும் ஆறு போல் நில்லாமலும் ஓடிக்கொண்டே இருக்கும் மனோபாவத்திலும், நேர்மறையான சிந்தனையுடன் எதிர்மறையையும் எதிர்நோக்கும் பக்குவத்துடன் மனதை தயார்படுத்துவதிலும்தான்  தொய்வில்லாத வாழ்க்கைக்கான OTP மறைந்துள்ளது. தவறவிடாமல் பற்றிக்கொள்வோமே!

எழுத்தும் ஆக்கமும் காம்கேர் கே. புவனேஸ்வரி
புதிய தலைமுறை – பெண் மாத இதழ்
வாழ்க்கையின் OTP – 22
மே 2020

(Visited 30 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon