இங்கிதம் பழ(க்)குவோம்: 28-34

அறம் வளர்ப்போம்
இங்கிதம் பழகுவோம் – 28
மே 11, 2020

திறமையை பட்டைத் தீட்டுவோமே!

நமக்கு நல்ல திறமை இருந்தும் நம்மைவிட திறமையில் குறைந்தவர்கள் புகழிலும் பணத்திலும் முன்னணியில் இருக்கிறார்களே என்ற எண்ணம் தோன்றாதவர்கள் மிகக் குறைவு.

திறமையை பட்டை தீட்டிக்கொண்டே இருக்க வேண்டும். தொடர்ச்சியாக அப்டேட் செய்ய வேண்டும்.

இதையெல்லாமும் செய்தாலும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் முன்னேற முடியவில்லையே என புலம்பாதீர்கள். வேகமாக முன்னேற திறமையை சரியான இடத்தில் பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். ஒருசிலருக்கு நூற்றுக்கு நூறு வாங்குவது சாதனை, ஒரு சிலருக்கோ பாஸ் மார்க் வாங்குவதே சாதனைதான்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்
இங்கிதம் பழகுவோம் – 29
மே 12, 2020

தவறுகளை அவ்வப்பொழுதே உணர்வோமே!

வாழும் காலத்தே செய்த தவறுகளை உணர்ந்து அதற்கான பிராயச்சித்தம் தேடிக்கொண்டுவிட வேண்டும். இல்லை என்றால்  கடைசி காலத்தில் உடலைக்கொல்லும் வலிகளுடன், நாம் செய்த தவறுகளும் சேர்ந்துகொண்டு நம் மனதை பல மடங்குகளாகக் கொன்றெடுக்கும்.

நம் மனசாட்சி மனசாட்சியே (?!) இல்லாமல் வார்த்தைகளால் குதறித் தள்ளும். தப்பிக்கவே முடியாது. ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது.

உடல் வலிக்கு மருந்து சாப்பிட்டு தப்பிக்கலாம். ஆனால் மனவலிக்கு பிராயச்சித்தம் ஒன்றே மருந்து. அதை வாழும் காலத்தே செய்துவிடுங்கள்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்
இங்கிதம் பழகுவோம் – 30
மே 13, 2020

சுயத்தை இழக்காமல் வாழ்க்கையில் ஜெயிப்போமே!

சுயத்தை இழக்காமல் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும். தம்மைத் தாமே மதிப்பவர்களுக்கு அது சாத்தியமே.

பிறர் நம்மை மதிக்கும்போது எத்தனை மகிழ்ச்சி கிடைக்கிறதோ அதைவிட பல்மடங்கு சந்தோஷத்தைப் பெற முடியும் நம் உணர்வுகளை நாம் மதிக்கும்போது.

பிறர் என்ன நினைப்பார்களோ என நினைத்து அவர்களுக்காக போலி கெளரவத்துடன் வாழாமல் நமக்காக நம் சந்தோஷத்துக்காக வாழும்போது நம் உணர்வுகளை நாம் மதிக்கின்றோம் என்று அர்த்தம். நம் வாழ்க்கையில் நாம் பின்பற்றும் சில நல்ல விஷயங்களை யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக்கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. நாம் உறுதியாக இருந்தால் நம்மைச் சுற்றி இருப்பவர்களும் புரிந்துகொள்வார்கள்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்
இங்கிதம் பழகுவோம் – 31
மே 14, 2020

வேலைகளைப் பகிர்ந்து கொடுப்போமே!

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.

இந்தச் செயலை இதன் பொருட்டு இவரால் செய்ய முடியுமா என்று ஆய்ந்து அதனை அவரிடத்தில் கொடுக்க வேண்டும்.

தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் தங்களைச் சார்ந்தவர்களையும் தங்களுடன் அரவணைத்துக் கொண்டு தங்கள் செயல்பாடுகளை செய்யும்போது அதனால் கிடைக்கும் பலன்கள் பலமடங்காக பல்கிப் பெருகுவது நிச்சயம்.

அந்தத் தலைமை வீடாக இருக்கலாம், நிறுவனமாக இருக்கலாம், நாடாக இருக்கலாம்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்
இங்கிதம் பழகுவோம் – 32
மே 15, 2020

முகமூடிகளைக் குறைத்துக் கொள்வோமே!

பொதுவாகவே நம் எல்லோருக்குமே இந்த இரண்டு முகங்கள் இருக்கும். வீட்டுக்கு உள்ளே. வீட்டுக்கு வெளியே.

இன்று நம்மில் பெரும்பாலானோருக்கு இரண்டு முகங்கள் போதுமானதாக இல்லை. அவரவர்களின் இயல்புக்கும் செளகர்யத்துக்கும் தேவைக்கும் ஏற்ப வெர்ச்சுவலாக பல முகங்களை உருவாக்கிக்கொள்கிறோம்.

சூழலுக்கேற்ப முகத்தை மாற்றிக்கொண்டு செயல்பட வேண்டியுள்ளதால் அதற்கேற்ப உணர்வின் மாற்றங்களை  நம் மனதிலும், உடலிலும் ஏற்படுத்தும். விளைவு அழையா விருந்தாளியாய் நோய்கள்.

உடலும் மனதும் நலமாக இருக்க ஆரோக்கியமாக வாழ முகமூடிகளைக் குறைத்துக்கொள்வோம்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்
இங்கிதம் பழகுவோம் – 33
மே 16, 2020

சமையல் அறையும் கடவுள் குடியிருக்கும் இடமே!

நம் பாட்டி தாத்தா காலத்தில் கேஸ் அடுப்பெல்லாம் கிடையாது. மண் அடுப்பு. ஒற்றை மண் அடுப்பு, இரட்டை மண் அடுப்பு (கொடி அடுப்பு), குமுட்டி இவைதான்.

இரவே அவற்றை சுத்தம் செய்து அடுப்பின் மேலேயும் விறகு வைக்கும் இடத்தின் முகப்பிலும் கோலம் போடுவார்கள்.  ஒரு சிலர் அடுப்பை சாணமிட்டு மெழுகி மூன்று பட்டை விபூதியிட்டு நடுவில் குங்குமம் வைப்பார்கள்.

தினமும் அடுப்பில் வேலைகளைத் தொடங்கும் முன்னர்  கண்களை மூடி ‘ராமா கிருஷ்ணா’ என பிரத்தனை செய்வார்கள்.

சமைக்கும்போது அந்த இடத்தைவிட்டு நகராமல் கொதிக்கும் சாம்பார், ரசம், வதங்கும் பொறியல் இவற்றை கண்களால் பார்த்துப் பார்த்து ரசனையுடன் செய்வார்கள். தங்களைக் கொண்டாட்டத்துடன் ரசித்துப் பார்த்துக்கொண்டே சமைப்பவர்களுக்கு கொஞ்சமும் ஏமாற்றம் கொடுக்காமல் கைமேல் பலன் கொடுக்குமாம் அன்றைய சமையல் முறை.

பிராத்தனையுடன் தொடங்கி, கொண்டாட்டத்துடன் தயாராகி, காக்கைக்கு முதல் உணவாகி பின்னரே மனிதர்கள் இலையில் பரிமாறப்படும்.

சமையல் அறையும் கடவுள் குடியிருக்கும் இடமே. மனமிருந்தால் இந்த காலத்திலும் கேஸ் அடுப்பாக இருந்தாலும் இறைத்தன்மையை சமையல் அறையில் கொண்டுவர முடியும். முயற்சிப்போமே!

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்
இங்கிதம் பழகுவோம் – 34
மே 17, 2020

ஒழுக்கமாக வாழ்வதற்குப் பெருமைப்படுவோமே!

ஒழுக்கமாக வாழ்பவர், ஒழுக்கமே இல்லாமல் தீய பழக்க வழக்கங்களுடன் வாழ்பவர் இவர்களில் யார் பெருமைப்பட வேண்டும், யார் வெட்கப்பட வேண்டும் என்ற கேள்விக்கு விடை தேடினால் முதலாமானவர் பெருமைப்பட வேண்டும், இரண்டாமானவர் வெட்கப்பட வேண்டும் என்ற பதில் கிடைக்கும்.

வாழ்க்கையில் ஒழுங்கீனமாக வாழ்பவர்களால் நமக்கு ஏதேனும்  ஓரிரு துன்பங்கள் நடக்கத்தான் செய்யும். அப்படியே ஒடிந்து உட்கார்ந்து விடக் கூடாது. ஒருமுறை அடிப்பட்ட பிறகு அடுத்து நடக்காமல் இருக்க என்ன செய்யலாம் என்று யோசித்து சென்றுகொண்டே இருக்க வேண்டும்.

தொடர்ச்சியாக இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படும்போது சட்ட ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் அதை எதிர்கொள்ள ஏராளமான வழிகள் உள்ளன. தேவைப்பட்டால் சரியான வழிகாட்டுதலுடன் அவற்றை முயற்சி செய்யலாம்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

(Visited 163 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon