ஹலோ with காம்கேர் – 133
May 12, 2020
கேள்வி: ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது. பிறகு என்னதான் செய்வது?
ஒரு ஆய்வு. இரண்டு விதமான சூழல்கள்.
நீங்கள் தவறுகள் செய்திருக்கிறீர்களா, அப்படி செய்த தவறுகள் உங்களை உறுத்தியிருக்கிறதா, மாற முயற்சித்து உள்ளீர்களா?
இதுதான் ஆய்வின் சாராம்சம்.
ஆய்வு இரண்டு விதமான சூழல்களில் நடத்தப்பட்டது.
முதல் சூழல்.
உடலில் வலு. நல்ல வேலை அல்லது தொழில் அல்லது பதவி. போதுமான அல்லது அதற்கும் மிஞ்சிய வருமானம். தகுதிக்கு அதிகமான புகழ். திருமணம் குழந்தைகள் என அழகிய குடும்பம். இவை அனைத்தும் பெற்று சர்வ மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருப்பவர்களிடம் நடத்தப்பட்டது.
இரண்டாவது சூழல்.
உடலில் வலு இழந்து, பதவியும் பணமும் புகழும் ஒரு இம்மிக்குக்கூட நம் வலிகளை தாங்க உதவப் போவதில்லை, நம்முடன் வரப் போவதில்லை, அதனால் எந்த உருப்படியான பிரயோஜனமும் இல்லை என்ற பேருண்மையை உணர்ந்து வாழ்வின் கடைசி கட்டத்தில் இன்றோ நாளையோ என உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் மனிதர்களிடம் நடத்தப்பட்டது.
ஆய்வு முதலில் ஒரு மனிதவள மேம்பாட்டு நிகழ்ச்சியில் நடத்தப்பட்டது. அவர்கள் முதல் சூழலில் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரிடமும் ஒரு காகிதம் கொடுக்கப்பட்டு அதில் மேலே குறிப்பிட்டுள்ள ஆய்விற்கான கேள்விகளைச் சொல்லி பதிலை எழுதச் சொன்னார்கள். உங்களைப் பற்றிய விவரங்கள் பொதுவெளியில் எங்கும் வெளிவராது. பெயர், இருப்பிடம், வேலை இந்த விவரங்கள் எதையும் குறிப்பிடத் தேவையில்லை. தைரியமாக பதிலை எழுதுங்கள் என்று வாக்குறுதியும் கொடுத்தார்கள்.
அனைவரின் பதிலும் அடிப்படையில் ஒரே மாதிரியாகவே இருந்தது.
நான் வெகுளி. என் வெகுளித்தனத்தைத்தான் பிறர் பயன்படுத்தி ஏமாற்றுகிறார்கள்.
நான் நேர்மையானவன். நேர்மையாக இருப்பதால் என்னை இளிச்சவாயன் பட்டம் கட்டுகிறார்கள்.
நான் அன்பானவன். என்னைச் சுற்றி உள்ளவர்கள் என் அன்பை புரிந்துகொள்ளவில்லை. ஏமாளிப்பட்டம் கட்டுகிறார்கள்.
நான் அப்படி, நான் இப்படி, தான் எந்தத் தவறுமே செய்யவில்லை. பிறர்தான் தன்னைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதே அவர்களின் பதிலின் சாராம்சமாக இருந்தது.
யாராவது ஒருவராவது தான் தவறு செய்துள்ளதாகவும், அதற்காக மனம் வருந்தியதாகவும், மன்னிப்புக்கேட்டு பிராயச்சித்தம் செய்ததாகவும் சொல்லி இருக்கிறார்களா என தேடித்தேடிப் பார்த்தார்கள்.
ம்ஹூம். அதற்கு யாருமே வாய்ப்பே கொடுக்கவில்லை அந்த ஆய்வில்.
அதே ஆய்வை ஒரு மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் நோயாளிகளிடம் நடத்தினார்கள். அவர்களை எழுதச் சொல்லவில்லை. பதில் சொல்ல விருப்பம் இருப்பவர்களிடம் நாசூக்காக கேள்விகளைக் கேட்டு பதிலைப் பெற்றார்கள்.
இவர்களின் பதிலில் நேர்மை இருந்தது.
தங்கள் வாழ்க்கையில் இளம் வயதில் விளையாட்டுக்கு நண்பனை ஏமாற்றியது, உடன் பிறந்த தம்பி தங்கைகளை தேவையில்லாமல் அடித்து அழ வைத்தது, பெற்றோருக்குத் தெரியாமல் சிகரெட் மது என தீய பழக்கங்களுக்கு அடிமை ஆனது, காதலித்த பெண்ணை / ஆணை திருமணம் செய்துகொள்ளாமல் அற்பக் காரணங்களுக்காக உதறித் தள்ளியது, அலுவலகத்தில் தான் ஒரு பதவியை அடைய வேண்டும் என்பதற்காக சக பணியாளரை நட்பு என்ற போர்வையில் இருந்துகொண்டே துரோகம் செய்தது, அப்பா அம்மாவை கவனிக்காமல் விட்டது, மனைவியை / கணவனை புரிந்துகொள்ளாமல் வார்த்தைகளால் கொடுமைப்படுத்தியது, தான் பெற்ற குழந்தைகளிடமே ஆண் பிள்ளைக்கு மட்டும் பாரபட்சம் காட்டியது என ஆரம்பித்து சின்னதும் பெரியதுமாக தாங்கள் செய்த தவறுகளை கொட்டினார்கள்.
இப்போது அதையெல்லாம் சரி செய்யவே முடியாத சூழல் பெரும்பாலானோருக்கு. அவர்கள் காயப்படுத்தியதாகச் சொல்லும் நண்பர்களோ, உடன் பிறந்தோரோ, பெற்றோரோ ஏன் ஒரு சிலருக்கு குழந்தைகளோ கூட உயிருடன் இல்லை.
வாழும் காலத்தே செய்த தவறுகளை உணர வேண்டும். அதற்கான பிராயச்சித்தம் தேடிக்கொண்டுவிட வேண்டும். இல்லை என்றால் இப்படித்தான் கடைசி காலத்தில் உடலைக்கொல்லும் வலிகளுடன், நாம் செய்த தவறுகளும் சேர்ந்துகொண்டு நம் மனதை பல மடங்குகளாகக் கொன்றெடுக்கும்.
நம் மனசாட்சி மனசாட்சியே (?!) இல்லாமல் வார்த்தைகளால் குதறித் தள்ளும். தப்பிக்கவே முடியாது. ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது. உடல் வலிக்கு மருந்து சாப்பிட்டு தப்பிக்கலாம். ஆனால் மனவலிக்கு பிராயச்சித்தம் ஒன்றே மருந்து.
அதை வாழும் காலத்தே செய்துவிடுங்கள் என்பதையே அவர்கள் அனைவரும் ஒன்றுபோல சொன்னார்கள்.
இந்த ஆய்வை நடத்தியது யார் தெரியுமா? சில வருடங்களுக்கு முன்னர் எங்கள் ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை மூலம் நாங்கள் செய்த ஆய்வுதான் இது.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software