ஹலோ with காம்கேர் – 138
May 17, 2020
கேள்வி: யார் வெட்கபட வேண்டும், யார் பெருமைப்பட வேண்டும்?
இது நடந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. ஆனாலும் எப்போதெல்லாம் பெண் குழந்தைகள் மீதும், இளம் பெண்கள் மீதும் வன்முறை நிகழ்த்தப்படுகிறதோ அப்போதெல்லாம் கண்முன் வந்து நிற்கும் நிகழ்வு இதுதான்.
எங்கள் ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளையில் கோடை விடுமுறை தினங்களில் ப்ளஸ் 2 முடித்த மாணவ மாணவிகளுக்காக வாழ்வியல் கருத்தரங்குகள் நடத்துவதுண்டு. தினம் ஒரு பேச்சாளர், ஒரு சிறப்பு விருந்தினர்.
பேச்சாளர்களாக யாரை எல்லாம் அழைப்போம் தெரியுமா?
தன்னந்தனியாக வாழ்க்கையில் போரடி ஜெயித்த அம்மாக்கள், இளம் வயதிலேயே மனைவி இறந்திருந்தாலும் இரண்டாம் திருமணம் செய்துகொள்ளாமல் தன் குழந்தைகளை வளர்த்தெடுத்த அபூர்வ அப்பாக்கள், 70 வயதைத் தாண்டிய தாத்தா பாட்டிகள்.
அவர்களிடம் நாங்கள் வைக்கும் ஒரே நிபந்தனை. அறிவுரை சொல்லக் கூடாது. அனுபவங்களை மட்டும் இயல்பாக பகிர்ந்துகொள்ள வேண்டும்.
அவர்கள் யாருமே மேடையில் முழக்கம் எல்லாம் இடமாட்டார்கள். ஆனால் அவர்கள் பேசுவது ஆத்மார்த்தமாக இருக்கும்.
ஒரு முறை, ஒரு மாணவி நிகழ்ச்சி முடிந்ததும் என்னிடம் தனியாக பேச வேண்டும் என தயங்கித் தயங்கிச் சொன்னாள்.
அப்பா இறந்துவிட்டார். அம்மா மட்டும்தான். வீட்டு வேலை செய்தும், சமையல் வேலை செய்தும் படிக்க வைக்கிறார். கூடப் பிறந்த ஒரு அக்காவுக்குப் படிப்பு வராததால் திருமணம் செய்து வைத்துவிட்டார் அம்மா.
தனக்கு நடந்த ஒரு நிகழ்வை சொன்னாள். அழக்கூடாது என ரொம்பவே பிரயத்தனப்பட்டாள். ஆனால் அழாமல் அவளால் சொல்லவே முடியவில்லை.
ப்ளஸ் ஒன் படிக்கும்போது சைக்கிளில் பள்ளியில் இருந்து வந்துகொண்டிருந்தபோது ஒரு பைக்கில் மூன்று பேர் அமர்ந்து கொண்டு இவளது சைக்கிளுடன் கூடவே வந்து நக்கல் அடித்து கிண்டல் செய்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அவர்கள் திடீரென இவள் முதுகில் அடித்துவிட்டு வேகமாக பறந்து சென்றுவிட்டார்கள். நடு ரோடில் சைக்கிள் ஒரு பக்கம், இவள் ஒரு பக்கம், புத்தக மூட்டை ஒரு பக்கம் என விழுந்துவிட அவமானம் தாங்காமல் அழுதுகொண்டே வீட்டுக்குச் சென்றிருக்கிறாள். அம்மா வேலைக்குச் சென்றிருந்தார். அதனால் உடனடியாக அம்மாவிடம் எதையும் சொல்ல வாய்ப்பில்லாமல் போனது. பொதுவாக 7 மணிக்கே வீடு திரும்பும் அம்மா அன்று 8 மணிக்குத்தான் வந்தார். வேலை செய்த இடத்தில் தங்க நகை ஏதோ காணாமல்போக இவர் மீது பழி வந்து பஞ்சாயத்து நடந்திருக்கிறது. அதனால் அம்மாவும் அழுதுகொண்டே இருந்ததால் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை சொல்லாமல் மறைத்துவிட்டாள்.
மனதில் அந்த நிகழ்வு பெரிய தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி விட்டது. அதனால் கைகால்கள் அவ்வப்பொழுது நடுங்குகிறது. ஆசிரியர்களிடம் பேசக் கூட பயமாக இருக்கிறது என தன் பிரச்சனையைச் சொன்னாள்.
அவளுடைய மன முதிர்ச்சி என்னை வியக்க வைத்தது. 16, 17 வயதில் தனக்கான பிரச்சனை என்ன என்று யோசிக்கத் தெரிந்திருக்கிறது. அதை சரியான நபரிடம் சொல்லவும் தெரிந்திருக்கிறது.
‘ஒழுக்கமாக சமர்த்தாக வாழும் ஒருவர், ஒழுக்கமே இல்லாமல் தீய பழக்க வழக்கங்களுடன் வாழும் ஒருவர். இருவரில் யார் வெட்கப்பட வேண்டும், யார் பெருமைப்பட வேண்டும்?’ என்ற கேள்வியை முன் வைத்தேன்.
‘ஒழுக்கம் இல்லாதவர்தான் வெட்கப்பட வேண்டும், ஒழுக்கமாக வாழ்பவர் பெருமைப்பட வேண்டும்’ என்றாள் அவள்.
‘அப்போ வெட்கப்பட வேண்டியதும், அவமானமாக உணர வேண்டியதும் அவர்கள்தான். நீ அல்ல. வாழ்க்கையில் இதுபோல நம்மையும் அறியாமல் எதிர்பாராமல் ஏதேனும் ஓரிரு நிகழ்வுகள் நடக்கத்தான் செய்யும். ஒருமுறை அடிப்பட்ட பிறகு அடுத்து நடக்காமல் இருக்க என்ன செய்யலாம் என்று யோசித்து சென்றுகொண்டே இருக்க வேண்டும். இனி பள்ளியில் இருந்து வீடு திரும்பும்போது தனியாக சைக்கிளில் வராமல் உன் தோழிகளுடன் வருவதற்கு முயற்சி செய்யலாம். தொடர்ச்சியாக இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படும்போது சட்ட ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் அதை எதிர்கொள்ள ஏராளமான வழிகள் உள்ளன. தேவைப்பட்டால் சரியான வழிகாட்டுதலுடன் அவற்றை முயற்சி செய்யலாம் என தைரியம் சொல்லி அனுப்பி வைத்தேன்.
அந்த மாணவி இப்போது பத்திரிகைத் துறையில் பணியில் இருக்கிறாள். முதல் நாள் சம்பளம் வாங்கிய பிறகு தன் அம்மாவுடன் என்னை நேரில் சந்தித்து இனிப்பு கொடுத்து ஆசிர்வாதம் பெற்றபோது அவள் முகத்தில் வெளிப்பட்ட அசாத்தியமான தன்னம்பிக்கை எனக்குள் இனம் தெரியாத பரவசத்தை உண்டு செய்தது.
சற்றே பெருமையாகவும் இருந்தது!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software