ஹலோ With காம்கேர் -159: குவாரண்டைன் செய்துகொள்ளும் உணர்வுகள்!

ஹலோ with காம்கேர் – 159
June 7, 2020

கேள்வி:  உணர்வுகள்கூட தன்னைத்தானே குவாரண்டைன் செய்துகொள்ளுமா(மோ)?

ஒரு வீடியோ. அதுவே ஹாட் நியூஸ் நேற்று.

புதுச்சேரியில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி இறந்த ஒருவரின் உடலை உறவினர்கள் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்ட நிலையில், அரசு ஊழியர்கள் மயானக் குழியில் வீசிச்செல்லும் காட்சி. குப்பைகளை குப்பைத்தொட்டியில் வீசுவதற்கு ஒப்பாக இருந்தது.

இவ்வளவுதான் வாழ்க்கை. உயிர் உடலில் இருக்கும்வரைதான் எல்லாமே நம் கண்ட்ரோலில். நம் உடலை ஆட்டிப் படைக்கிறோம் நம் இஷ்டத்துக்கு. மனதையும் உடலையும் என்னவோ செய்தது இந்தக் காட்சி. ஒரு முறைதான் பார்த்தேன். ஆனால் திரும்பத் திரும்ப ரிபீட் மோடில் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது.

மரணம். அத்தனை வலி கொடுப்பதா? நம் மரணம் நமக்கு வலி கொடுக்கப் போவதில்லை. நம் மரணம் நம்மைச் சுற்றி இயங்குபவர்கள் அத்தனை பேருக்கும் வலிகொடுக்குமா எனத் தெரியாது. ஆனால் ஆத்மார்த்தமாக இருப்பவர்களுக்கு வலிகொடுக்காமல் இருக்காது. இறந்தவர்களின் மரணத்தைவிட அவர்களுக்காகவே அவர்களுடன் இருப்பவர்களின் மரணவலி கொடியது. பெரியது.

எங்கள் சிறு வயதில் இருந்தே உறவுகளில் ஏதேனும் நல்லது கெட்டது என்றால் என் அப்பா அம்மா எங்களையும் உடன் அழைத்துச் செல்வார்கள். யாரேனும் இறந்துவிட்டால் கூட.

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அப்போது எனக்கு பத்து வயதிருக்கும். அடுத்தத் தெருவில் வசித்து வந்த அப்பாவின் அலுவலக  நண்பர், நடுத்தர வயது, திடீரென இறந்துவிடவே, என் அப்பா மட்டும் சென்று வந்தார்.

அது ஒரு அமாவாசை நாள். மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து வீட்டில் இருப்பவர்கள்  ‘அமாவாசை தாண்டனும் நல்லபடியா’ என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன்.

அப்பா கிளம்பிச் சென்ற இரவு ஒன்பது மணியில் இருந்து திரும்ப வந்த பதினோறு மணி வரை அழுதுகொண்டே படுத்திருந்தேன். என்னை ஏன் அழைத்துச் செல்லவில்லை என்கின்ற கோபம். அம்மா எத்தனை சமாதானப்படுத்தியும் கேட்கவில்லை.

அப்பா வீட்டுக்கு வந்து குளித்ததும் அப்பாவின் அருகிலேயே படுத்துக்கொண்டேன். இறந்தவர் குறித்து பேசிக்கொண்டே இருந்தேன். ஏன் செத்துப் போனார், அவர் குழந்தைகள் அழுதுகொண்டே இருந்தார்களா, அவர்கள் பாவம் இனி என்ன செய்வார்கள் என்றெல்லாம் கேட்டபடியே தூங்கிப் போனேன். அந்த வயதில் அந்த விஷயங்களை கேட்டது இப்போது நினைத்துக்கொண்டாலும் எனக்கே ஆச்சர்யமாகவே இருக்கும்.

அவர் இறந்ததுக்கு என் அம்மா சொன்ன காரணம், கை நகத்தைக் கடித்துக்கொண்டே இருந்திருக்கிறார். சதையுடன் சேர்த்து கடித்துவிட்டார். செப்டிக் ஆகி அந்த இன்ஃபக்‌ஷனில் இறந்துவிட்டார்.

ஆனால் அது உண்மையான காரணம் அல்ல. அவர் தற்கொலை செய்துகொண்டுவிட்டார். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் கணக்காக அம்மா ஒரு காரணத்தில் இரண்டு விஷயங்களை திருப்தி செய்தார்.

ஒன்று கை நகம் கடிக்கும் வழக்கம் உள்ள என்னை அதில் இருந்து வெளியே கொண்டு வர இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டார். கைநகம் கடித்தால் செப்டிக் ஆகும் என்பதை இப்படி மறைமுகமாகச் சொன்னார்.

இரண்டாவது, அந்த வயதில் தற்கொலை குறித்தெல்லாம் எதற்காக தெரியப்படுத்த வேண்டும் என்கின்ற எண்ணம்.

நம் அப்பா அம்மாக்கள் எப்படியெல்லாம் நம் மனநிலையை சமன் செய்யவும் நம்மைப் பாதுகாத்து வளர்க்கவும் மெனக்கெடுகிறார்கள் என்பதை நினைக்கும்போது மனம் தழுதழுக்கும்.

ஏற்கெனவே அப்பா கோண்டு. அந்த நிகழ்வுக்குப் பிறகு என் அப்பா மீது ஏற்கெனவே இருந்த பாசம் பலமடங்காகியது. பல நாட்கள் அப்பா இறந்து விடுவதைப் போல கனவு கண்டு பயந்து போயிருக்கிறேன். திடுக்கிட்டு எழுந்து இருட்டில் அப்பாவைப் பார்ப்பேன். அப்பாவின் கைகளை கட்டியபடி தூங்கிய நாட்கள் அதிகம். அப்படி நான் அப்பாவின் கைகளைக் கட்டிக்கொண்டுவிட்டால் அவரை யாரும் நெருங்க முடியாது என்ற நம்பிக்கை.

ஒரு முறை என் பள்ளித் தோழியின் அம்மா இறந்துவிட கனவில் என் அம்மா இறந்துவிடுவதைப் போலவும், என் அம்மாவுக்கு பதில் என் அம்மாவின் உருவத்திலேயே அச்சு அசலாக மற்றொரு அம்மா வருவதாகவும் காட்சிகள் வரும். நிஜத்தில் நடப்பதைப் போலவே இருக்கும். அழுதுகொண்டே எழுந்துப் பார்த்தால் கனவாக இருக்கும். இப்படி கனவு வந்தால் அம்மாவின் கைகளைப் இறுக்கமாகப் பிடித்தபடி தூங்குவேன். நான் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டால் அம்மாவை யாரும் நெருங்க முடியாதே.

அங்கொன்றும் இங்கொன்றுமாக உறவுகளிலும் நட்புகளிலும் மரணங்களை சந்திக்கும் போதெல்லாம் மரணம் குறித்த கேள்விகளும் யோசனைகளும் மேலோங்கி இருக்கும். படிப்பில் கவனம் குறையும். விரக்தியாக இருக்கும். பல நாட்கள் அதே நினைவாக இருக்கும். அந்தத் தாக்கத்தில் அப்பா அம்மாவிடம் எரிந்து விழுவேன். காரணமே இல்லாமல் கோபம் வரும். தேவையே இல்லாமல் தம்பி தங்கைகளுடன் சண்டை போடுவேன்.

‘என் அப்பா அம்மாவின் காலத்துக்குப் பிறகு ஒரு நாள் கூட உயிர் வாழக் கூடாது. நானும் இறந்துவிட வேண்டும்’ என்றெல்லாம் மனதுக்குள் உறுதிமொழி எடுத்துக்கொண்டிருக்கிறேன். பத்து பன்னிரெண்டு வயதில் இப்படியெல்லாம் யாராவது சிந்தித்திருக்கிறார்களா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நான் இப்படியெல்லாம் பயந்திருக்கிறேன்.

அந்த அளவுக்கு தாக்கத்தை உண்டாக்கிய மரண பயம், இன்று நித்தம் கொரோனாவினால் மடியும் உயிர்களைப் பார்க்கும்போது ஏற்படவில்லையோ என நினைப்பதுண்டு. அதுவும் அமெரிக்காவில் லட்சத்தைத் தாண்டிய மரண எண்ணிக்கையுடன் இந்தியாவில் ஏற்படும் மரண எண்ணிக்கையை சர்வ சாதாரணமாக ஒப்பிட்டுப் பார்த்து ‘நம் இந்தியா எவ்வளவோ பரவாயில்லை’ என்று நிம்மதி அடைய முடிகிறது.

நடக்கும் எல்லாமே நம் கைமீறிச் சென்று கொண்டிருக்கும்போது உணர்வுகள்கூட தன்னைத்தானே குவாரண்டைன் செய்துகொள்ளுமோ?

ஆம். அப்படித்தான் இருக்க வேண்டும்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 13 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon