ஹலோ with காம்கேர் – 160
June 8, 2020
கேள்வி: எழுத்தாளர்களின் பெற்றோரையும் கொண்டாடிப் பார்த்திருக்கிறீர்களா?
எழுதுவதில் இரண்டு வகை உண்டு. ஒன்று தனக்குப் பிடித்ததை எழுதுவது. மற்றொன்று வாசகர்களுக்குப் பிடித்ததை எழுதுவது.
முன்னதில் எழுத்தாளர் தனக்கு என்னத் தெரியுமோ, தனக்கு என்ன வருமோ அதை எழுதுவார். பின்னதில் எழுத்தாளர், வாசகர்களுக்கு என்ன பிடிக்குமோ அது தனக்கு பிடித்திருந்தாலும் பிடிக்காவிட்டாலும் அவர்களைத் திருப்த்திப்படுத்த வேண்டும் என்கின்ற கட்டாயத்தில் தகவல்களை சேகரித்து, அது தங்கள் துறை சார்ந்தது இல்லை என்றாலும் மொழி பெயர்ப்பு செய்தாவது எழுதுவார்.
முன்னதில் எழுத்தாளருக்கு இருப்பது Passion. பின்னதில் எழுத்தாளருக்கு இருப்பது Commitment.
ஃப்ரீலேன்ஸராக எழுதுபவர்கள் பெரும்பாலும் தங்களுக்குப் பிடித்ததை (Passion) தங்களுக்குத் தெரிந்ததை எழுதுகிறார்கள். அதனால்தான் சொல்கிறேன் தங்களுக்கு இயல்பாக வருவதை ஆத்மார்த்தமாக எழுதும்போது அதில் கூடுதல் அழகு வெளிப்படும்.
பத்திரிகை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் அங்கு பணி ரீதியாகக் கொடுக்கப்படும் (Commitment) கான்செப்ட்டுகள் எதுவாக இருந்தாலும் எழுதுவார்கள். அது அவர்களின் விருப்பமான சப்ஜெக்ட்டுக்கு மாறாக இருந்தாலும். அதனால்தான் அவை பெரும்பாலும் தகவல்களால் கோர்த்திருப்பதைப் போல கொஞ்சம் டிரையாக இருப்பதை கவனித்திருப்பீர்கள்.
மேலே சொன்ன இரண்டு வகை எழுத்தாளர்களைத் தவிர மற்றுமொரு பிரிவு எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு எந்த சப்ஜெக்ட்டைக் கொடுத்தாலும் இரண்டையுமே பேஷனுடனும் செய்வார்கள், கமிட்மெண்ட்டுடனும் செய்துமுடிப்பார்கள். அவர்களின் எழுத்து வாசகர்களுக்கு வரம்.
வாழ்வதற்காக எழுதுவது commitment. வாழ்வதை எழுதுவது Passion. கமிட்மெண்ட்டை (Commitment) பேஷனுடன் (passion) செய்யும்போது அந்த செயல்கள் தெய்வீகமாகின்றன.
பத்திரிகை நேர்காணல்களில் என்னை பேட்டி எடுக்கும் இளம் பத்திரிகையாளர்களுக்கு (ஒரு சிலருக்கு) நான் சொல்வதில் உள்ள தொழில்நுட்பம் சார்ந்த பல விஷயங்களை நான் எத்தனை முறை தெளிவாகச் சொன்னாலும் புரிவதில்லை. காரணம் அவர்கள் படித்தது வேறு துறையாக இருக்கும். என் துறை அனுபவங்களை அவர்கள் உள்வாங்கிக்கொண்டு எழுத வேண்டும் என்றால் அவை குறித்த அடிப்படையாவது தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் நான் சொல்வதை புரிந்துகொண்டு இணைத்து எழுத முடியும். ஆனால் பெரும்பாலும் அவை அப்படி அமைவதில்லை.
சினிமா குறித்தும், டிவி சீரியல்கள் குறித்தும் பொதுவாகக் கருத்துச் சொல்லும் பேட்டிகளை யார் வேண்டுமானாலும் செய்துவிட முடியும். ஆனால் அதுவே அவை சார்ந்த தொழில்நுட்பம் குறித்து எழுத வேண்டும் என்றால் கொஞ்சம் அவை பற்றி முன்பே குறிப்பெடுத்து படித்து புரிந்துகொண்டு நேர்காணல் செய்யத் தயாராக வேண்டும். அவ்வளவுதான்.
அந்த முனைப்பு இல்லாததினால்தான் தொழில்நுட்பம் சார்ந்த (அது எந்தத் துறையாக இருந்தாலும்) பேட்டிகள் அத்தனை ஈர்ப்பாக அமைவதில்லை. வெறும் தகவல்களால் நிரப்பப்படுகின்றன.
பி.ஈ. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த நிருபர்களை நடிகர் நடிகைகளைப் பேட்டி எடுக்கவும், இலக்கியம் படித்த நிருபர்களை தொழில்நுட்பம் குறித்தும் பேட்டி எடுக்க அனுப்பினால் அந்த செயல் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்கும்.
காபி சூடாக வேண்டும் என்றால் பாலை அடுப்பில் வைத்து சுட வைத்துத்தான் குடிக்க வேண்டும். பாதாம் பாலை குளிர்ச்சியாக குடிக்க வேண்டும் என்றால் காய்ச்சிய பாலை பாதம் பருப்பு ஏலக்காய் போட்டு கலந்து ஆற்றி ஃப்ரிட்ஜில் வைத்துத்தான் குடிக்க வேண்டும்.
எதை எப்படி செய்ய வேண்டுமோ அதை அப்படி செய்தால்தான் அதற்கான அவுட்புட் கிடைக்கும். இல்லை என்றால் உழைப்புதான் வீணாகும். அது சாப்பாடாக இருந்தாலும் சரி, எழுத்தாக இருந்தாலும் சரி.
நான் இயங்குவது முழுக்க முழுக்க தொழில்நுட்பம் என்பதும் உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். காம்கேர் சாஃப்ட்வேர் என்ற நிறுவனத்தை ஆரம்பித்து தொய்வில்லாமல் கடந்த 27 வருடங்களாக இயக்கி வருகிறேன் என்பதையும் அறிந்திருப்பீர்கள்.
என் பத்து வயதில் இருந்து எழுதுகிறேன் என்பதும் உங்களில் பெரும்பாலானோர் அறிந்ததே. கதை, கவிதை, கட்டுரை என நூற்றுக்கும் மேற்பட்டவை விகடன், குமுதம், சாவி, பாக்யா, அமுதசுரபி, கலைமகள், விஜயபாரதம் போன்ற பத்திரிகைகளில் வெளியானதோடு பரிசுகளையும் விருதுகளையும்கூட பெற்றுள்ளன.
நிறுவனம் ஆரம்பிக்கும் வரை என் எழுத்து இப்படித்தான் பயணம் செய்தது. நிறுவனம் தொடங்கிய பிறகு என் எழுத்து தொழில்நுட்பம் பக்கம் மடைமாறியது. காரணம், அந்த காலகட்டத்தில்தான் (1992) நம் நாட்டில் தொழில்நுட்பம் காலடி எடுத்துவைத்திருந்தது. அது குறித்த விழிப்புணர்வு அதிகம் தேவைப்பட்டது.
அதனால் என் கவனமும், எண்ணமும் என் முயற்சியின்றி தானாகவே தொழில்நுட்பத்தை நோக்கி நகர்ந்தது. என் நிறுவன சாஃப்ட்வேர் தயாரிப்புகளில் நான் பெறும் அனுபவங்களை மக்களிடம் தமிழிலும் ஆங்கிலத்திலும் கொண்டு சென்றேன். தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் என் எழுத்து புத்தகங்களாக நூலகங்களிலும், பல்கலைக்கழகப் பாடதிட்டமாகவும், பத்திரிகைகளில் தொடர் கட்டுரைகளாகவும் வெளிவந்தன.
என் கிரிடேட்டிவிட்டி சாஃப்ட்வேர், அனிமேஷன், ஆப், ஆவணப்படங்கள், தொழில்நுட்பத் தொலைக்காட்சித் தொடர்கள் என பரவலாக பரந்துவிரிந்து என் எழுத்து பல அவதாரங்களை எடுத்துள்ளன.
இன்றும் அதே வேகத்துடன் தொடர்கிறது. இன்னும் கூடுதல் ஆழத்துடன் இந்தத்துறையில் பயணிக்கிறேன்.
இப்போது வாழ்வியல், நேர்மறை சிந்தனைகள், தன்னம்பிக்கை, உளவியல் என என் கிரியேட்டிவிட்டி நகர்ந்துள்ளது.
1992-களில் தொழில்நுட்பம் தேவையாய் இருந்தது நம் மக்களுக்கு. எனவே அதை எழுதினேன். இப்போது நம் மக்கள் தொழில்நுட்பத்தை தங்கள் வசதிக்கு ஏற்ப மிக சிறப்பாகவே ஆட்டிப் படைக்கிறார்கள். இப்போது அவர்களுக்குத் தேவை நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் மட்டுமே. அதனால் அவை குறித்து(ம்) கவனம் செலுத்துகிறேன். அவ்வளவுதான்.
அப்போதும் சரி இப்போதும் சரி என்னை பாராட்டுபவர்களும் வாழ்த்துபவர்களும் என் எழுத்தைக் கொண்டாடும் அதே அளவுக்கு பெற்றோரையும் சேர்த்தே கொண்டாடுகிறார்கள்.
‘நல்ல பெற்றோர், நல்ல வளர்ப்பு’ – இப்படிப்பட்ட பெற்றோர்கள் எல்லோருக்கும் அமைந்துவிட்டால் அதைவிட கொடுப்பினை வேறென்ன இருக்க முடியும் என்றெல்லாம் மனதாரப் பாராட்டுவார்கள். இன்றும்.
எழுத்தாளர்களை ஆஹா, ஓஹோ என பாராட்டி கொண்டாடி மகிழ்வார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் என்னளவில் என்னைவிட சமுதாயத்துக்குப் பயன்படும் தொழில்நுட்பம் சார்ந்த என் படைப்புகளுக்கும், வாழ்க்கைக்குப் பயன்படும் வாழ்வியல் சார்ந்த என் படைப்புகளுக்கும் காரணக் கர்த்தாவான என் பெற்றோரையும் சேர்த்தே கொண்டாடுகிறார்கள். அதில் எனக்கு சற்றே பெருமைதான்.
நல்ல விஷயங்களுக்கு நம்மை நாமே உற்சாகப்படுத்திக்கொள்ள தலைக்கனம் இல்லாத பெருமை நல்லது.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software