ஹலோ with காம்கேர் – 164
June 12, 2020
கேள்வி: இளைய தலைமுறையினர் உணர்வுப்பூர்வமாக இருப்பதில்லையா?
யார் சொன்னது. முந்தைய தலைமுறையினரைவிட அதிகமாகவே உணர்வுப்பூர்வமாக இருக்கிறார்கள். ஆமாம். பிறர் உணர்வுகளை புரிந்துகொள்ள வேண்டும் என நினைப்பதில்லை. தம்முடைய உணர்வுகளை மற்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதில் உறுதியாகவே இருக்கிறார்கள்.
பிறர் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட தங்கள் உணர்வுகளுக்கு அதிமுக்கியத்துவம் கொடுக்கிறார்கள். நண்பன் தான் அனுப்பிய வாட்ஸ் அப் தகவலைப் பார்த்ததற்கான அடையாளமாக புளூ டிக்கை தன் கண்களால் பார்த்த பிறகு அவனிடம் இருந்து பதில் வரவில்லை என்றாலோ அல்லது ஃபேஸ்புக்கில் ப்ளாக் / அன் ஃப்ரண்ட் செய்துவிட்டாலோ தற்கொலைவரை செல்லும் அளவுக்கு மன உளைச்சளுக்கு ஆளாகிறார்கள். ஆனால் தமக்காகவே வாழும் தம்முடைய அப்பா அம்மாவை எடுத்தெறிந்து பேசிவிட்டு அவர்கள் மனதை நோகடித்துவிட்டு வெளியில் கிளம்பி இருப்பது நினைவிற்கே வருவதில்லை.
இரண்டு நிமிட வீடியோ.
ஒரு தாய் தன்னுடைய பதினைந்து வயது மகனுக்கு சர்ப்ரைஸாக ஒரு கிஃப்ட் கொடுக்கிறார். அந்த கிஃப்ட்டைப் பிரித்துப் பார்த்த அவன் முகம் சுளிக்கிறான். ‘எனக்கு என்ன பிடிக்கும், என்ன பிராண்ட் பொருத்தமாக இருக்கும் என்றுகூட தெரியவில்லை உனக்கு…’ என்று கடிந்துகொள்கிறான். அதை அலட்சியமாக தூக்கி எறிகிறான்.
அவனை பள்ளியில் சேர்த்த நாளில் இருந்து தினமும் பள்ளிக்கு அழைத்துச் செல்வது, திரும்ப அழைத்து வருவது, பள்ளி முடிந்ததும் சிறப்பு வகுப்புகளுக்கு அழைத்துச் செல்வது, அவன் பங்கேற்கும் பள்ளி நிகழ்ச்சிகளுக்குத் தவறாமல் செல்வது, படிக்கும்போது உடன் அமர்ந்து தானும் படிப்பது எழுதுவது காய்கறி நறுக்குவது என பிற வேலைகளை செய்வது, காலையில் எழுந்து படிக்கும்போது காபி டீ போட்டுத்தருவது என அவன் செய்கின்ற அத்தனை வேலைகளுக்கும் அவள் பக்கபலமாக இருக்கிறாள். அவனுடைய ஒவ்வொரு அசைவிலும் இவள் கூடவே இருக்கிறாள்.
அவன் இயங்குவது அவளுடைய இருப்பினால்தான் என்பதை அவன் புரிந்துகொள்ளவே இல்லை.
‘Presence is more important than presents’ என்ற வாசகத்துடன் வீடியோ நிறைவுறுகிறது.
இப்படித்தான் பிறர் தன்னைப் புரிந்துகொள்ள வேண்டும் என நினைக்கிறார்களே தவிர மற்றவர்களின் உணர்வுகளுக்கு தாம் எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதை நினைப்பதில்லை.
எல்லாவற்றிலும் விதிவிலக்குகள் இருப்பதைப் போல இதிலும் உண்டு.
என் சகோதரியின் மகன் இரண்டாம் வகுப்புப் படிக்கும்போது அவன் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி அன்று அலுவலகத்தில் முக்கிய மீட்டிங் இருப்பதால் தன்னால் வர முடியாது எனவும், மாலை பள்ளியில் இருந்து வரும்போது அவனுக்குப் பிடித்த ஐஸ்க்ரீம் வாங்கித்தருவதாகவும் சொல்லி இருக்கிறாள் அவள்.
அதற்கு ஏழே வயதாகும் அவன் என்ன சொல்லி இருப்பான் என நினைக்கிறீர்கள்?
‘அம்மா, நீ எனக்கு ஐஸ்க்ரீம் எல்லாம் வாங்கித்தர வேண்டாம். நீ நிகழ்ச்சிக்கு வருவதுதான் எனக்கு முக்கியம். இன்று வேலை இருந்தால் வர முடியவில்லை என்றால் பரவாயில்லை…’ என பதில் சொல்லி இருக்கிறான்.
இப்படி எத்தனை குழந்தைகள் சிந்திக்கிறார்கள்.
பத்து வயது சிறுமியிடம் ஓர் ஆய்வுக்கட்டுரைக்காக நான் ஒரு கேள்வி கேட்டேன்.
‘உன் அம்மா வேலைக்குப் போவது உனக்குப் பிடித்திருக்கிறதா, நீ பள்ளியில் இருந்து வரும்போது வீட்டில் அம்மா இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்திருக்கிறாயா?’
‘அதெல்லாம் இல்லை ஆண்ட்டி, என் அம்மா வேலைக்குச் செல்வது எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது, ஏன்னா தினமும் ஏதேனும் தின்பண்டம் வாங்கி வருவாங்க, எத்தனை காஸ்ட்லியா ட்ரஸ் கேட்டாலும் வாங்கித்தருவாங்க, என்ன டாய் கேட்டாலும் உடனே வாங்கித் தருவாங்க…’
அந்தச் சிறுமியின் பதிலில் எனக்கு கொஞ்சம் வேதனைதான்.
‘அம்மா குடும்பத்துக்காக உழைக்கிறாள். அப்பாவுடன் சேர்ந்து அம்மாவும் வேலைக்குச் சென்றால்தான் நன்றாக படிக்க வைக்க முடியும், அம்மாவின் திறமைகளுக்கு அவளுடைய வேலை ஒரு அடையாளம்’ என்றெல்லாம் அந்தத் தாயினால் தன் மகளுக்கு புரிய வைக்க முடியாதது மிகவும் வேதனை.
தன்னைப் புரிய வைக்க முடியாமல், தெரியாமல் எதற்காக அவர்களுக்காக காலம் எல்லாம் உழைக்க வேண்டும்?
டிஜிட்டல் சாதனங்களை உணர்வு ரீதியாகவும், உறவுமுறைகளை சாதனங்களாகவும் பார்க்கத் தொடங்கியதன் விளைவுதான் உணர்வு ரீதியான அத்தனை குழப்பங்களுக்கும் காரணம். சாதனங்களுக்குள் உணர்வுகளையும், உணர்வுகளுக்குள் சாதனங்களையும் தேடுவதை நிறுத்திக்கொள்ளலாமே. இதுவரை இல்லாவிட்டாலும் இனியாவது.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software