ஹலோ with காம்கேர் – 163
June 11, 2020
கேள்வி: எது விதிக்கப்பட்டிருக்கிறதோ அது நடந்தே தீரும் என்பதற்கு உதாரணம் சொல்ல முடியுமா?
சில மாதங்களுக்கு முன்னர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒரு காதல் தம்பதியின் கதை என்னை ஆச்சர்யப்பட வைத்தது.
அவர்களின் காதல் கல்லூரிக் காதலோ, அலுவலகக் காதலோ, கண்டதும் காதலோ, காணாமலே காதலோ அல்லது ஃபேஸ்புக் காதலோ அல்ல. சொன்னால் ஆச்சர்யப்படுவீர்கள். ஜெயில் காதல்.
மிக இளம் வயதிலேயே பெற்றோரை இழந்த ஓர் இளம் பெண் வயிற்றுப் பிழைப்புக்காக ஒரு பணக்கார வீட்டில் வேலைக்குச் சேர்கிறாள். அப்போது அவளுக்கு வயது பதினெட்டு. அந்த வீட்டில் இவளைப் போலவே இவள் வயதை ஒத்த பெண்கள் சிலர் இருக்கிறார்கள். வேலைக்குச் சேர்ந்த புதிதில், ‘இத்தனை பேர் என்ன வேலை செய்வார்கள் இந்த வீட்டில்’ என்று வெகுளியாய் நினைத்திருக்கிறாள்.
அந்த வீட்டுப் பெண்மணி நல்லவள் அல்ல. இளம் பெண்களை விபச்சாரத்துக்குத் தயார் செய்யும் மோசமான வேலையைச் செய்பவள். அந்த வீட்டில் என்ன நடக்கிறது என சில தினங்களிலேயே யூக்கித்துவிட்டாள் அவள். தப்பிக்கலாம் என்றால் அதற்கும் வழியில்லை. பயங்கரக் காவல்.
தினம் ஒரு பெண்ணாகக் காணாமல் போய்க் கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்மணி அவர்களை எங்கேயோ கடத்திக்கொண்டிருக்க, இந்தப் பெண்ணின் முறையும் வருகிறது.
அழுது ஆகாத்தியம் செய்கிறாள். முரண்டு பிடிக்கிறாள். ஒரு கட்டத்தில் அந்த பெண்மணியை கையில் கிடைத்த பூஜாடியால் அடிக்க அவள் மயங்கி விழுகிறாள்.
இந்தப் பெண்ணுக்கு என்ன செய்வது என தெரியவில்லை. மயங்கியவள் தலையில் இருந்து ரத்தம் ஒழுக, இவள் பயந்துபோகிறாள். அழுதுகொண்டே அங்கேயே உட்கார்ந்திருக்கிறாள்.
போலீஸ் வருகிறது. கைதாகிறாள். கொலைப் பழி விழுகிறது. அவர்களின் தவறான செயல் அம்பலத்துக்கு வந்தாலும் இவள் அடித்தது தற்காப்புக்காக என்றாலும் நீதியின் முன் இவள் கொலைக் குற்றவாளி என தீர்ப்பாகிறது.
ஜெயில் தண்டனை. காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறாள்.
அதே சமயம் மற்றொரு ஜெயிலில் ஓர் இளைஞன் ஏதோ ஒரு காரணத்துக்காக ஜெயில் தண்டனையில் இருக்கிறான்.
ஜெயில் கைதிகள் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதி உண்டாம். மாதா மாதம் நடக்குமாம். அந்த மாதம் அந்த இளைஞன்தான் கதை வசனம் எழுதி ஒரு நாடகத்தை இயக்குவதாக இருந்தது. கதைப்படி ஒரு இளம் கதாநாயகி வேண்டும். அந்த ஜெயிலில் எல்லோருமே வயதானவர்கள் என்பதால் என்ன செய்யலாம் என யோசித்துக்கொண்டிருக்கிறார்கள்.
அப்போதுதான் அந்த இளம் பெண் இருக்கும் சிறையில் இருந்து சிலர் இந்த ஜெயிலுக்கு ஏதோ ஒரு காரணத்துக்காக அழைத்து வரப்படுகிறார்கள்.
அந்த இளைஞன் கண்களில் அந்தப் பெண் படுகிறாள். வேக வேகமாக ஜெயிலரிடம் ஓடுகிறான். அந்த மாத கலை நிகழ்ச்சிக்கு தயாராகிக்கொண்டிருக்கும் நாடகத்துக்கு அந்தப் பெண்ணை கதாநாயகியாக்க அனுமதி கேட்கிறான். அந்த இளைஞன் மீது ஏற்கெனவே நல்ல அபிர்ப்பிராயம் கொண்ட அந்த ஜெயிலர் முறையாக அனுமதி பெற்று அந்தப் பெண்ணை நாடகத்தில் நடிக்க ஏற்பாடு செய்கிறார்.
அந்த நாடகம் அட்டகாசமான வரவேற்பைப் பெற இருவருக்கும் நல்ல நட்பு மலர்கிறது. அவ்வப்பொழுது சில கலை நிகழ்ச்சிகளுன் போது இதுபோல ஜெயில் கைதிகள் மற்ற சிறைச்சாலைகளில் இருந்தும் இங்கு வந்து கூடுவது வழக்கமானது.
இந்தச் சிறையில் இருந்த இளைஞனுக்கும், அந்தச் சிறையில் இருந்த இளம் பெண்ணுக்கும் நட்பு வலுவாகி ஒரு கட்டத்தில் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். கடிதம் எழுதி காதலை பரிமாறிக்கொள்கிறார்கள்.
வருடங்கள் இப்படியே ஓடுகிறது. அவர்கள் விடுதலை ஆகும் நாளும் வந்தது. ஓரிரு வருடங்கள் முன்னே பின்னே இருவரும் விடுதலை ஆகிறார்கள்.
திருமணம் செய்துகொண்டு ஒரு கிராமத்தில்போய் செட்டில் ஆகிறார்கள். குழந்தைகளும் பிறக்கிறது. விவசாயம் பார்க்கிறார்கள். குழந்தைகளை வளர்க்கிறார்கள். காதலுடன் வாழ்க்கையை நடத்துகிறார்கள்.
இதெல்லாம் ஆச்சர்யம் அல்ல. தாங்கள் வாழ்கின்ற இந்த சமுதாயத்துக்கும் சேர்த்து தங்களால் இயன்ற நற்பணிகளைச் செய்கிறார்கள் என்பதுதான் ஹைலைட்.
கேட்கவே எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது.
இது கற்பனை அல்ல. உண்மைக் கதை.
படித்து நல்ல வேலையில் நன்கு சம்பாதிக்கும் பல இளைஞர்களுக்கே / இளம் பெண்களுக்கே இப்படி எல்லாம் கைகூடி நல்ல வாழ்க்கைத்துணை அமைவதும், அப்படியே அமைந்தாலும் மனஸ்தாபம் வராமல் நிலைப்பதும், அப்படியே நிலைத்தாலும் நோய்நொடிகள், விபத்து போன்றவற்றால் ஏதேனும் அசம்பாவிதம் நடக்காமல் இருப்பதும் கேள்விக் குறியாக இருக்கும் இந்தக் காலத்தில் கொலைக் குற்றம் சுமத்தப்பட்ட ஒரு பெண்ணுக்கும், ஒரு ஆணுக்கும் சிறைச்சாலையில் காதல் மலர்வது வெகு அழகான நிகழ்வு.
அந்தக் காதலும் தமிழ், இலக்கியம், கலை போன்றவற்றினால் வலுபெற்றிருப்பது அதைவிடக் கூடுதல் அழகு.
இருவரும் திருமணம் செய்துகொண்டு இல்லற வாழ்க்கையுடன் சேர்த்து பொதுவாழ்விலும் இணைந்து நற்காரியங்கள் செய்து வாழ்வது பேரழகு.
எது விதிக்கப்பட்டிருக்கிறதோ அது நடந்தே தீரும் என்பதற்கு இவர்களின் காதல் வாழ்க்கை ஒரு சான்றுதானே!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software