ஹலோ With காம்கேர் -165: பேட்டி எடுப்பது பணியல்ல. அப்புறம் வேறென்ன?

ஹலோ with காம்கேர் – 165
June 13, 2020

கேள்வி:  பேட்டி எடுப்பது பணியல்ல. அப்புறம் வேறென்ன?

பேட்டி எடுப்பதும் அதை எழுதுவதும் வேலையல்ல. அது ஒரு கலை!

எழுதுவது என்பது கதை, கவிதை, கட்டுரை என்பதைத் தாண்டி இன்று நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் எழுதிக் கொட்டிவிட முடிகிறது, தொழில்நுட்ப உச்சம் தொட்ட இந்நாளில்.

அவரவர்களின் கையெழுத்தில் ஃபாண்ட் தயாரிப்பதைப் போல அவரவர்கள் குரலில் அவரவர்கள் எழுதிய எழுத்துக்களைப் படிக்கும் சாஃப்ட்வேர் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன்.

உதாரணத்துக்கு, அப்துல்கலாம் அவர்கள் எழுதிய புத்தகத்தை படிக்கும்போது அவர் குரலிலேயே அதை காதாலும் கேட்க முடியும். நான் எழுதிய புத்தகங்களை வாசிக்கும்போது என் குரலிலேயே நான் எழுதியவற்றைக் காதாலும் கேட்க முடியும். அந்தப் பணி இன்னும் முழுமை அடையவில்லை. விரைவில் எதிர்பார்க்கலாம்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். எழுத்தாளர்களை அவர்கள் எழுதிய புத்தகங்களை வாசிக்க செய்து ரெகார்ட் செய்து அந்த ஆடியோவை வெளிப்படுத்தும் நுட்பத்தைச் சொல்லவில்லை. கம்ப்யூட்டரில் டைப் செய்யும்போது நாம் தேர்ந்தெடுக்கும் ஃபாண்ட்டுக்கு ஏற்ப எழுத்துகள் வெளிப்படுவதைப் போல, எழுத்தாளரின் குரலின் பெயரைத் தேர்ந்தெடுத்தால் அந்தப் புத்தகத்தை அவர் குரலிலேயே காதால் கேட்கலாம்.

இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால், ஒரு பேட்டியை படிப்பவர்களுக்கு பேட்டி கொடுப்பவர் அவரே அவர் குரலில் பேசுவதைப் போல படிப்பவர்களின் காதுகளில் ஒலிக்க வேண்டும். அந்த அளவுக்கு எழுத்தில் பேட்டிக் கொடுப்பவரின் வட்டார மொழி / பேச்சு மொழி ஆளுமை செய்திருக்க வேண்டும். அதற்கு சாஃப்ட்வேரெல்லாம் தேவையில்லை. பேட்டி எடுக்கும் நிருபர் தன் எழுத்தில் அதை கொண்டுவர வேண்டும்.

பேட்டியை எழுதும்போது தான் பேட்டி எடுத்த நபராகவே மனதுக்குள் மாறி அவரே தன் கைப்பட எழுதுவதைப் போல அந்த எழுத்து அமையப்பெற வேண்டும். அப்போதுதான் அந்த எழுத்து பேசப்படும். மெச்சப்படும்.

நான் இயங்குவது முழுக்க முழுக்க தொழில்நுட்பம். மிக இளம் வயதிலேயே சாஃப்ட்வேர் நிறுவனத்தைத் தொடங்கி கடந்த 27 வருடங்களாக தொய்வில்லாமல் கொண்டு செல்கிறேன். இது உங்களில் பெரும்பாலானோருக்குத் தெரிந்திருக்கும்.

என் துறை தொழில்நுட்பமாக இருந்தாலும் பதிப்பாளர், பத்திரிகையாளர், எழுத்தாளர் என பல துறைகளிலும் தொழில்நுட்பத்துக்கு ஈடான அனுபவம் உள்ளது. அத்தனையும் எங்கள் காம்கேரின் தனித்தனி டிபார்ட்மெண்ட்டுகள்.

இதுவரை வெளியான என்னுடைய பேட்டிகள் 100-க்கும் மேற்பட்டவை. பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி, இணையம், சமூகவலைதளம் என காலமாற்றத்துக்கு ஏற்ப களமும் தளமும்தான் வேறுபடுகின்றன.

நேர்காணல் செய்பவர்கள் சின்ன சின்ன விஷயங்களில் கவனமாக இருந்தால் அவர்கள் எழுத்து சிறப்பாக அமையும். அந்தந்த காலகட்டத்தில் என்னை நேர்காணல் செய்பவர்களுக்கு அவற்றை எடுத்துச் சொல்லி இருக்கிறேன். அவை புதிதாக எழுத வருபவர்களுக்கு உதவலாம் என்ற நம்பிக்கையில் இங்கு பகிர்கிறேன்.

என் துறை தொழில்நுட்பம் என்பதால் பெரும்பாலும் பேட்டி எடுப்பவர்கள் எழுத்தில் இடம்பெற்றுள்ள தொழில்நுட்ப விவரங்கள் சரியாக இருக்கிறதா என என்னிடம் படித்துக்காட்டி உறுதி செய்த பின்னரே பிரிண்ட்டுக்கு அனுப்புவார்கள்.

என் முதல் நேர்காணல் – ஜனரஞ்சக முன்னணிப் பத்திரிகையில். அப்போது என் வயது 25.

பேட்டி எடுத்தவர் அனுபவமிக்கவர்தான். என்னை நேரில் சந்தித்து நிதானமாக குறிப்பெடுத்துக் கொண்டு சென்றார். சில தொழில்நுட்ப விவரங்களை சரிபார்த்துக்கொள்வதற்காக எழுதியதை என்னிடம் படித்துக் காண்பித்தார். நான் பேட்டியில் ‘நிறுவனத்தை சிறிய அளவில் ஆரம்பித்து என் உழைப்பில் மெல்ல மெல்ல நல்ல நிலைக்குக் கொண்டு வந்துகொண்டிருக்கிறேன்…’ என்று சொல்லி இருந்தேன். அவர் வார்த்தைக்கு வலு சேர்ப்பதற்காக  ‘சிறிய அளவில்’ என்பதற்கு பதிலாக ‘பெட்டிக்கடை போன்ற சிறிய இடத்தில்’ என்று இணைத்து ‘நிறுவனத்தை பெட்டிக்கடை போன்ற சிறிய இடத்தில் ஆரம்பித்து இவரது உழைப்பில் நல்ல நிலைக்குக் கொண்டு வந்துகொண்டிருக்கிறார்’ என்று எழுதி இருந்தார்.

பெட்டிக்கடைப் போன்ற சிறிய இடத்தில் என்று சேர்த்திருந்தது எனக்கு உறுத்தலாக இருந்தது. அதை சரி செய்யச் சொன்னேன். மாற்றம் செய்த பிறகே பிரிண்ட் ஆனது.

நான் சிறிய அளவில் என்று சொன்னது சிறிய ப்ராஜெக்ட்டுகள், குறைவான பணியாளர்கள், குறைந்த முதலீடு என்ற நோக்கில். அவர் நினைத்துக்கொண்டு எழுதியது நிறுவனம் நடத்தும் இடத்தின் அளவை.

வார்த்தைகளுக்கு வலு சேர்ப்பதற்காக இல்லாத ஒன்றை சொல்லும்போது அது வாசகர்கள் மனதில் சம்மந்தப்பட்டவரை மதிப்பிழக்கச் செய்யும்.

அதுபோல பேட்டி எடுத்து எழுதுபவர்கள் எழுத்தில் அவர்கள் நடை / பாணி வெளிப்படலாம். ஆனால் பேட்டிக் கொடுப்பவர் நேரடியாக Direct Speech –ல் சொல்வதை எழுதும் இடங்களில் பேட்டிக் கொடுப்பவரின் மொழி தெரிய வேண்டும். அதைவிட்டு நிருபரின் வட்டார மொழியோ பேச்சு வழக்கோ வரக்கூடாது.

ஒரு செய்தித்தாளின் இணைப்புப் பத்திரிகையில் வெளியான ஒரு பேட்டி அது. அதில் ‘எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது, கண்களில் கண்ணீர் வந்தது’ என்று நான் சொன்னதை ‘எனக்கு சந்தோஷமா இருந்திச்சு… அழுகை அழுகையா வந்திச்சு…’ என அந்த நிருபர் தன் வட்டார மொழியில் ‘வந்திச்சு, இருந்திச்சி’ என்பது போன்ற அவர் பேசுகின்ற பேச்சு வழக்கில் எழுதியிருந்தார். அப்படியே பேச்சு வழக்கில் எழுத விரும்பினால் நான் பேசுகின்ற மொழியின் பாணியில் அல்லவா அது வெளிப்பட்டிருக்க வேண்டும். அதையும் எடுத்துச் சொல்லி மாற்றிய பிறகே பத்திரிகையில் வெளியானது.

நான் ஆரம்பத்தில் சொன்னதைப்போல, ஒரு பேட்டியை படிப்பவர்களுக்கு பேட்டி கொடுப்பவர் அவரே அவர் குரலில் பேசுவதைப் போல காதுகளில் ஒலிக்க வேண்டும். அந்த அளவுக்கு எழுத்தில் பேட்டிக் கொடுப்பவரின் வட்டார மொழி / பேச்சு மொழி ஆளுமை செய்திருக்க வேண்டும்.

கதை கட்டுரை கவிதை இவற்றில் வேண்டுமானால் எழுத்தாளர்களின் மொழி ஆளுமை செய்யலாம். சுவையைக் கூட்ட வார்த்தை ஜாலங்களை சேர்க்கலாம்.

ஆனால் நேர்காணல்களில் உயிருள்ள ஒரு மனிதனே பேசுபொருள். அதில் வார்த்தை ஜாலங்கள் இல்லாமல் பளிச்சென சொன்னது சொன்னதுபோல அமைந்தால் (மட்டுமே) அது ஓஹோவென பேசப்படும். இல்லையெனில் அதுவும் ஓர் கற்பனை செய்தியாக மிகைப்படுத்தப்பட்ட கட்டுரை என்ற அளவிலேயே கடந்து செல்லும்.

ஒரு பெண்கள் மாத இதழில் வெளியான பேட்டி அது. நான் அரை மணி நேரம் பேசியிருப்பேன். என் கனவுகள், லட்சியம், கொள்கைகள், ஈடுபாடு, ஆர்வம் இப்படி அணு அணுவாக ரசித்து ரசித்துச் சொன்னதை எல்லாம் குறிப்பெடுத்துக்கோண்டே வந்தவர் கடைசியில் ஒரு கேள்வி கேட்டாரே பார்க்கலாம்.

‘மேடம், அப்போ நீங்கள் வசதியானவராக இருந்ததால் வேலைக்குச் செல்லாமல் சொந்தமாக பிசினஸ் தொடங்கினீர்களா?’

எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. என் கனவுகளை அவரால் எப்படி பொருளாதாரத்துடன் முடிச்சுப் போட முடிந்தது என்று யோசித்தேன். பிறகுதான் புரிந்தது அவர் வாழ்க்கையுடன் என் வாழ்க்கையை இணைத்து யோசித்திருக்கிறார் என்று. அவர் வேலைக்கு வருவது வீட்டுப் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவதற்காகவே என்பதை அவரிடம் பேசியதில் பிறகு தெரிந்தது. எனவே தான் நான் வேலைக்குச் செல்லாமல் பிசினஸ் ஆரம்பித்ததே நான் வசதியானவள் என்பதால்தான் என நிர்ணயம் செய்துள்ளார்.

நிருபர்கள் பேட்டி எடுக்கும்போது பேட்டிக் கொடுப்பவருடன் தங்கள் வாழ்க்கையை ஒருபோதும் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளவே கூடாது. அதுபோல அவர்கள் அனுபவங்களை இடைஇடையே சொல்லி குழப்பக் கூடாது. அது நிருபர்களின் professionalism-த்தைக் குறைக்கும்.

ஒரு வார இதழில் வெளியான பேட்டி அது. அதில் என்னை பேட்டி எடுத்தவர் என் அனுபவங்களை நான் சொல்லிக்கொண்டிருக்கும்போதே என் மனைவியும் இப்படித்தான், என் சகோதரியும் அப்படித்தான் என தன் வீட்டு மனிதர்களுடன் ஒப்பிட்டுக்கொண்டே வந்தார். ஒரு கட்டத்தில் நான் ‘இடை மறித்தால் எனக்குப் பேச வராது’ என நாசூக்காக சொல்ல வேண்டி வந்தது. பேட்டியில் எதிராளியைப் பேச விட்டு பேட்டி எடுப்பவர் அதில் இருந்து கேள்விகளை எடுத்து பதில்களை வாங்க வேண்டும்.

நல்ல திறமைசாலியான நிருபர்களாக இருந்தால் முன்பே கேள்விகளைக் கூட தயார் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. பேட்டி கொடுப்பவரிடம் முதலில் ஒரு கேள்வியை மட்டும் கேட்பார்கள். அதற்கு அவர் கொடுக்கும் பதிலில் இருந்தே மற்ற கேள்விகளை தொடுப்பார்கள்.

கதை கவிதையைக் கூட யார் வேண்டுமானாலும் எழுதிவிடலாம். அவை முழுக்க முழுக்க கற்பனை. கதாப்பாத்திரங்கள் கோபித்துக்கொள்ளாது, வருத்தப்படாது. வார்த்தை ஜாலங்கள் எத்தனை வேண்டுமானாலும் சேர்க்கலாம்.

பேட்டி என்பது அப்படியல்லவே. உயிருள்ள ஜீவன்கள் சம்மந்தப்பட்டது. வார்த்தை ஜாலங்கள் செல்லுபடியாகாது. அங்கு உண்மைத்தன்மையே ஜெயிக்கும்.

அதனால்தான் சொல்கிறேன் பேட்டி எடுப்பது பணியல்ல, அது ஒரு கலை!

இதுவரை வெளியான என் நேர்காணல்களின் தொகுப்பு, தெரிந்துகொள்ள விருப்பமானவர்களுக்காக இந்த லிங்க்: http://compcarebhuvaneswari.com/?p=2566

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 46 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon