ஹலோ With காம்கேர் -174: நீங்கள் அட்வென்சர் செய்ததுண்டா?

ஹலோ with காம்கேர் – 174
June 22, 2020

கேள்வி:  நீங்கள் அட்வென்சர் (adventure) செய்ததுண்டா?

முன்பே முழுமையாக வரைந்து முடிக்கப்பட்ட நம் வாழ்க்கை எனும் மிகப்பெரிய வரைபடத்தின் ஒவ்வொரு பிக்ஸலுமே அட்வென்சராக இருப்பதால் புதிதாக அட்வென்சர் எல்லாம் செய்ய வாய்ப்பில்லை. அதற்கு முயற்சித்ததும் இல்லை.

எனக்குத் தெரிந்து ஒரு சம்பவத்தை ‘அட்வென்சர்’ என்று சொல்லலாம்.

என் கல்லூரி நாட்களில் படிப்பைவிட பொதுவான புத்தகங்கள் வாசிப்பதும், எழுதுவதுமே என்னை தீவிரமாக இயக்கிக்கொண்டிருந்தன. அதற்காக படிப்பை கோட்டை எல்லாம் விடவில்லை. அன்றன்றைய பாடங்களை அவ்வப்பொழுதே படித்து விடுவதால் கவனம் சிதறுவதற்கும் வாய்ப்பில்லை.

எனக்கு எழுத்து, என் தங்கைக்கு ஓவியம், தம்பிக்கு கார்ட்டூன் என ஒவ்வொருக்கும் தனித்திறமைகள். அதுவே பின்னாளில் எங்களுக்கான பிரத்யோகமான அடையாளங்களாயின.

பி.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துக்கொண்டிருந்த நேரம். திருச்சி அம்மாமண்டபத்தில் குடியிருந்தோம். கீழே வீட்டின் உரிமையாளர். மேலே நாங்கள் குடியிருந்தோம். எங்கள் வீட்டின் வாசல் கதவை ஒட்டி சிறிய மொட்டை மாடி. அங்கு நாங்கள் எழுதுவதற்காக, படிப்பதற்காக, வரைவதற்காக, பேசுவதற்காக, யோசிப்பதற்காக ஒரு டேபிளும் சேரும் போட்டிருப்போம்.

நாங்கள் சண்டைப் போடுவது உட்பட அத்தனையும் அங்குதான் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். சில நாட்கள் நிலா வெளிச்சத்தில் குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிடுவதும் அங்கே தான். அது ஒரு ‘மல்டி பர்பஸ்’ டேபிள். எல்லாவற்றுக்கும் இடம் கொடுக்கும். எங்கள் திறமைகளை வளர்தெடுத்ததும் அந்த டேபிள்தான்.

விடியற்காலையில் மூன்று மணிக்கெல்லாம் எழுந்து மொட்டை மாடியில் உட்கார்ந்து எழுதுவது என் வழக்கம். தியானம் போல. என்ன எழுதுவேன் என கேட்கிறீர்களா? பொதுவாகவே எனக்கு வெளி உலகில் பேச்சு மிக மிகக் குறைவு. விளைவு, என்னைச் சுற்றி நடக்கும் அத்தனை விஷயங்களும் என் பிரயத்தனமின்றி தானாகவே எனக்குள் சென்றுகொண்டே இருக்கும்.

அப்படி உள்ளுக்குள் சென்றதை என் பெற்றோரிடமும் சகோதரன் சகோதரியிடம் பகிர்ந்துகொண்டுவிடுவேன். கூடவே அவற்றை ஆவணப்படுத்துவதுபோல தினமும் எழுதுவேன். அது கதையாகவோ, கட்டுரையாகவோ அல்லது கவிதையாகவோ ஏதோ ஒரு வடிவத்தில் வந்து நிற்கும். அதற்குப் பொருத்தமான தலைப்பிட்டு, என் அப்பா எங்களுக்கு செய்து கொடுத்திருக்கும் பெயர் மற்றும் முகவரிகளுடன் கூடிய ரப்பர் ஸ்டாம்ப் வைத்து சுயமுகவரியுடன் கூடிய (படைப்பு தேர்வாகவில்லை எனில் திரும்பப் பெறுவதற்கு) கவர் இணைத்து ஏதேனும் பத்திரிகைக்கு அனுப்புவது அன்றாடப் பணிகளுள் ஒன்று.

பிரசுரம் ஆகும் படைப்புகளுக்கு இணையாக திரும்பி வரும் படைப்புகளும் இருந்தன.

சரி சரி இதில் என்ன அட்வென்சர் இருக்கிறது என நீங்கள் நினைப்பது எனக்குப் புரிகிறது.

சொல்கிறேன்.

இப்படித்தான் ஒரு நாள் விடியற்காலை 3.00 மணிக்கு மொட்டை மாடியில் அமர்ந்து எழுதிக்கொண்டிருந்தேன். எங்கள் வீட்டுக்கு அடுத்த காம்பவுண்ட் சுவரே ஒரு கல்யாண மண்டபம்தான். எங்கள் வீட்டு காம்பவுண்ட் சுவருக்கும் கல்யாண மண்டபத்தின் காம்பவுண்ட் சுவருக்கும் இடையே ஒரு சிறிய தோப்புபோல் இருக்கும். தென்னை மரங்கள் அடர்ந்திருக்கும்.

முதல்நாள் மாலை மாப்பிள்ளை அழைப்பு, நிச்சயதார்த்தம் என விமர்சையாகக் கொண்டாடிவிட்டு அந்த மண்டம் காலையில் திருமணத்துக்காக அலங்காரம் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

பொதுவாகவே நான் எழுதிக்கொண்டிருக்கும்போது என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே எனக்குத் தெரியாது. எதுவும் என்னை தொந்திரவு செய்யக் கூடாது என்றுதானே  எழுதுவதற்கு விடியற்காலையை தேர்ந்தெடுத்துள்ளேன்.

அன்று 3.30 மணி அளவில் தெருவில் ஏதோ சப்தம் கேட்ட மாதிரி இருந்தது. தென்னை மரங்களின் மட்டைகள் கீழே விழும் சப்தம் போல இருந்தது.

மண்டபத்தின் வண்ண விளக்குகள், சாலை விளக்குகளைத் தவிர வேறு வெளிச்சம் இல்லை. நிமிர்ந்துப் பார்த்தால் கும்மிருட்டில் வானம். சுற்றிப் பார்த்தால் அடர் கருமையில் வீடுகள் இருட்டாக. அதற்காகவெல்லாம் நான் பயந்து உள்ளே சென்றுவிடவில்லை. என் கவனத்தை எழுத்தில் இருந்து நகர்த்திவிடவும் இல்லை.

என்ன எழுதிக்கொண்டிருக்கிறேனோ அதை முடிப்பதிலேயே கவனமாக இருந்தேன். பயமாகவும் இல்லை. பதட்டமாகவும் இல்லை. பரபரப்பாகவுமில்லை.

வழக்கப்போல 5 மணிவரை எழுதிவிட்டு எழுதியதை  சுவாமி படத்துக்கு முன் வைத்துவிட்டு கொஞ்ச நேரம் தூங்கச் சென்றேன்.

ஆறு மணிக்கு எழுந்தபோதுதான் விஷயமே தெரிந்தது. நான் எழுதிக்கொண்டிருந்த நேரத்தில் விடியற்காலை 3.30 மணி அளவில் மண்டபத்தில் திருட்டு மற்றும் கொலை முயற்சி நடந்திருந்தது. மண்டபத்தில் இருந்து கல்யாணத்துக்காக வைத்திருந்த நகைகளைத் திருடிக்கொண்டு மணப்பெண்ணை கத்தியால் கைகளிலும் கால்களிலும் குத்திவிட்டு வாயில் துணியை அடைத்து கைகால்களைக் கட்டி தோப்பில் போட்டுவிட்டுச் சென்றிருந்தார்கள் கொள்ளையர்கள்.

இதெல்லாம் நடக்கும்போது நான் மொட்டை மாடியில் கருமமே கண்ணாயினராக எழுதிக்கொண்டிருந்தேன் என்பதுதான் ஹைலைட்.

கல்யாணக் கோலத்தில் இருக்க வேண்டிய மணப்பெண் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டுக்கொண்டிருந்தாள். மேள தாளங்கள் முழங்க வேண்டிய மண்டபத்தில் அழுகையும் கூச்சலும். சந்தோஷம் பொங்க வேண்டிய இடத்தில் துக்கமும், பயமும், பரபரப்பும். மணப்பெண் இறந்துவிட்டாள் என்று பேசிக்கொண்டார்கள்.

இனி மொட்டை மாடிக்கு எழுதுவதற்காகச் செல்லக்கூடாது என்ற நிபந்தனையுடன் அப்பா எழுதும் டேபிளை வீட்டின் உள்ளேயே காற்றோட்டமான இடத்தில் ஜன்னலுக்கு அருகே எழுதுவதற்கு வசதியாக போட்டு வைத்தார்.

இந்த நிகழ்வை அட்வென்சர் என சொல்லலாமா என எனக்குத் தெரியவில்லை. நான் கொள்ளையர்களின் செய்கைகளை பார்த்துக்கொண்டிருப்பதாக நினைத்து என்னையும் இரண்டு தட்டுத் தட்டிவிட்டுச் செல்லாமல் விட்டார்களே என என் பெற்றோர் பயந்தபோதுதான் அது அட்வென்சர் போல உணரத் தொடங்கினேன்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 25 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon