ஹலோ With காம்கேர் -175: பிரமிக்க வைத்தப் பதிவும், வேதனைப்படுத்திய பதிவும்!

ஹலோ with காம்கேர் – 175
June 23, 2020

கேள்வி:  ஃபேஸ்புக்கில் உங்களை பிரமிக்க வைத்த மற்றும் வேதனைப்படுத்திய பதிவைக் காரணத்துடன் சொல்ல முடியுமா?

இந்தக் கேள்வியை நேற்று என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்ட என் அப்பாவின் நண்பர் ஒருவர் கேட்டிருந்தார். அவர் ஃபேஸ்புக்கில் இல்லை. ஆனால் என் பதிவுகளை தொடர்ச்சியாக என் வெப்சைட்டில் படித்து வருகிறார்.

ஃபேஸ்புக்கில் எத்தனையோ பதிவுகளை தினந்தோறும் கடந்து வருகிறோம். ஒன்றிரண்டு நம்மை வியப்பினாலும் வேதனையினாலும் கட்டிப் போடுவது என்னவோ உண்மைதான்.

முதலில் பிரமிக்க வைத்த பதிவு பற்றி சொல்கிறேன்.

2019 நவம்பர் மாதம் 23-ம் தேதி, கா.சு.வேலாயுதன் அவர்கள் தன் பதிவில் குறிப்பிட்டிருந்த செய்தி  ‘இன்றளவும்’ என்னை மிகவும் பிரமிக்க வைக்கிறது.

ஃபேஸ்புக்கிலும் இவரது பிளாகிலும் ‘அக நக நட்பூக்கும் முகநூல் நட்புகள்’ என்ற தொடர் மூலம் தன் நட்புகள் குறித்து ஆத்மார்த்தமாக எழுதிவருகிறார்.

எழுதுவது ஒன்றும் அதிசயமல்ல. ஆனால், இவர் இப்படி தொடர்ச்சியாக எழுதுவதற்கு என்னுடைய ‘இந்த நாள் இனிய நாள்’பதிவுகளே உந்துதலாக இருந்தது என கொஞ்சமும் ஈகோ இல்லாமல் பரந்த மனப்பான்மையுடன் குறிப்பிட்டிருந்தார்.  இவரை எனக்கு இதற்கு முன்னர் அறிமுகம் கிடையாது. போனிலோ அல்லது நேரிலோ பேசியதும் கிடையாது.

ஓர் அனுபமிக்க எழுத்தாளர், மூத்த பத்திரிகையாளர், தொடர்ச்சியாக இயங்கிவரும் ஊடகவியாளர் வேறு துறை சார்ந்த ஒருவரின் கிரியேட்டிவிட்டியை மனதாரப் பாராட்டுவது என்பது அவரது பரந்த மனப்பான்மையையே காட்டுகிறது. என்னைப் பாராட்டியதற்காக பிரமிக்கவில்லை. ஈகோ எதுவுமின்றி பிறரை அங்கீகரிக்கும் இவரது பண்பைக் கண்டு இன்றளவும் பிரமிக்கிறேன்.

கா.சு.வேலாயுதன் அவர்களின் பதிவு (நவம்பர் 23, 2019) உங்கள் பார்வைக்காக!

//நம்மைப் பற்றியும் எழுதுகிறாரே என்று என் முகநூல் நட்புகள் நான் எழுதி வரும் ‘அக நக நட்பூக்கும் முகநூல் நட்புகள்’ தொடர் மூலம் உளம் பூரிக்கிறார்கள் என்றால், அந்த தொடர் இன்று 87-ம் நட்புகளை தாண்டி சென்று வெற்றி நடை போடுகிறதென்றால் அதற்கு முதற்கண் நன்றி சொல்ல வேண்டியது இந்த பெண்மணி காம்கேர் புவனேஸ்வரி அவர்களுக்குத்தான்.

இன்றைக்கு சரியாக 3 மாதங்கள் முன்பு இவரின் ‘இந்த நாள் இனிய நாள் ‘ தொடர் 250 ஐ எட்டிக் கொண்டிருந்த வேளையில் தான் இவரின் முகநூல் பதிவுகளுக்குள் சென்றேன்.

ஒரு பிஸினஸில் பிஸியான பெண்மணி தினம் ஒரு கட்டுரை இப்படி எழுதுகிறார் என்றால், அதை இத்தனை பேர் அயராமல் வாசிக்கிறார்கள் என்றால் நாமும் ஏன் ஒரு வித்தியாசமான, உருப்படியான காரியத்தை செய்யக் கூடாது என மனதில் தோன்றியது.

அதன் விளைவே அக நக நட்பூக்கும் தொடர். ஏதாவது ஓர் இடத்தில் இதை குறிப்பிட வேண்டும் என்று நினைத்திருந்தேன்.

இப்போது அதற்கான வேளை வாய்த்திருக்கிறது. மீண்டும் நன்றிகள், வாழ்த்துகள் புவனேஸ்வரி மேடம். – கா.சு.வேலாயுதன்//

அடுத்து வேதனைப்படுத்திய ஒரு பதிவு.

சென்ற ஞாயிறு தந்தையர் தினப் பதிவுகளால் களைக்கட்டி இருந்தது ஃபேஸ்புக்.

இடையிடையே சில தந்தைகளின் பதிவுகள் மனதை கனக்கச் செய்தன. தாங்கள் தங்கள் பிள்ளைகளுக்கு விரும்பியப் படிப்பைப் படிக்க வைத்தோம், வேண்டியதை வாங்கிக்கொடுத்தோம், விருப்பப்பட்ட திருமண வாழ்க்கையை அமைத்துக்கொடுத்தோம், ஒரு தந்தையாக தாங்கள் நிறைவான வாழ்க்கையை வாழ்ந்துவிட்டதாகவும் இந்தப் பிறவிக்கு இதுவே போதும் என்றெல்லாம் தங்களைப் பற்றித் தாங்களே பெருமையாகப் பதிவிட்டிருந்த பதிவுகளில் பெருமைகளை மீறி அவர்களின் வேதனைகளே மிதமிஞ்சி தெரிந்தன.

பிள்ளைகள் அல்லவா தந்தையின் பெருமைகளை எழுத வேண்டும். ஒரு தந்தை தன் தந்தையை நினைவு கூறலாம், ஆனால் ஒரு தந்தையாக தன்னைத்தானே பெருமைப்படுத்தி எழுதிக்கொள்வதெல்லாம் கொடுமையான விஷயம்.

இப்படி வருத்தப்படும் பெற்றோர்களில் ஒருசிலரை எனக்கு நேரடியாகவும் அறிமுகம் உண்டு. அவர்கள் மறைந்த தங்கள் பெற்றோருக்கு வருடாந்திர காரியங்களைக் கூடச் செய்வதில்லை என்பது கூடுதல் தகவல். சாஸ்திரம் சம்பிரதாயம் இவற்றில் எல்லாம் எங்களுக்கு நம்பிக்கை இல்லை, அவை அத்தனையும் மூடநம்பிக்கைகள் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு செய்ய வேண்டிய காரியங்களைக் கூட செய்யாமல் ஒதுக்குகிறார்கள்.

இவர்களுக்கு வருடாந்திரக் காரியங்கள் செய்வது மூட நம்பிக்கை. இவர்களின் பிள்ளைகளுக்கோ பெற்றோரின் பிறந்த நாளுக்கு வாழ்த்துச் சொல்வதும், போனில் பேசி நலன் விசாரிப்பதும், தங்கள் திருமண நாளுக்கு அப்பா அம்மா காலில் விழுந்து ஆசிர்வாதம் பெறுவதும் போலியான செண்டிமெண்ட்டுகள். வேறென்ன சொல்ல முடியும்.

சென்ற தலைமுறையினர் தாங்கள் வாழ்ந்து காட்டுவதன் மூலம் நல்ல பழக்க வழக்கங்களை அடுத்தத் தலைமுறைக்குக் கடத்த வேண்டும். அவர்கள் சில பழக்க வழக்கங்களை மூட நம்பிக்கையாக வைத்துக்கொள்ளும்போது அவர்களின் பிள்ளைகள் சிலவற்றை போலி செண்டிமெண்ட்டுகளாக வைத்துக்கொள்வதில் என்ன தவறு? எதை விதைக்கிறோமோ அதைத்தானே அறுவடை செய்ய முடியும்.

முந்தைய தலைமுறையினரின் சொத்தில் இளையதலைமுறையினருக்கு பங்கு இருப்பதைப் போல, அவர்கள் செய்யும் பாவ புண்ணியங்களிலும்  பங்கு உண்டு. பெற்றோர் அல்லது மூதாதையர்கள் செய்யும் புண்ணியம் இளைய தலைமுறையினரின் வாழ்க்கையை  நேர்மறை சிந்தனைகளால் நிரப்பி அவர்களை தடைகளை தகர்த்தெறிந்து வாழ வழி செய்து கொடுக்கும்.  பாவங்கள் ஏதேனும் ஒரு வகையில் அவர்கள் வாழ்க்கையில் எதிர்மறை சிந்தனைகளால் நிரப்பி வாழ்க்கையில் தடைகளை உண்டாக்கும்.

பாவம் புண்ணியம் சாஸ்த்திரம் சம்பிரதாயம் இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை என்றாலும் அறிவியலில் நம்பிக்கை இருக்குமல்லவா? நியூட்டனின் மூன்றாவது விதி  For every action, there is an equal and opposite reaction.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 40 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon