ஹலோ with காம்கேர் – 192
July 10, 2020
கேள்வி: நல்ல அம்மாக்கள் ஏன் எப்போதுமே பிள்ளைகளிடம் தோற்றுப் போகிறார்கள்?
குழந்தைகளுடன் அம்மாக்கள்தான் தங்கள் நேரத்தை அதிகம் செலவிட வேண்டி இருப்பதால் குழந்தைகளிடம் விளையாடும்போது அவர்களை மகிழ்விக்க தாங்கள் வேண்டுமென்றே தோற்றுப் போய் குழந்தைகளுக்கு வெற்றியைக் கொடுத்து அந்த சந்தோஷத்தை அவர்கள் முகத்தில் பார்த்தே சந்தோஷமடைவார்கள்.
சிறு வயதில் அம்மா ‘விட்டுக்கொடுக்கும்’அந்த சந்தோஷத்தையும் வெற்றியையும் தங்கள் நிஜ வெற்றியாக கருதி மகிழும் பிள்ளைகள் வளர வளர அதே டெம்ப்ளேட்டிலேயே அம்மாவை வைத்துக்கொள்கிறார்கள்.
டீன் ஏஜில் உள்ள இரண்டு குழந்தைகளின் தாய் அவர். அமெரிக்காவில் வசிக்கும் இந்தியரான அவர் தொழில்நுட்பத் துறையில் உச்சத்தில் இருக்கிறார். அலுவகத்தில் அவர் சொல்லுக்குக் கட்டுப்படும் பல டீம்கள் உள்ளன. பெரும்பாலான ப்ராஜெக்ட்டுகள் இவர் அப்ரூவ் செய்தால் மட்டுமே லைவுக்கு வரும். கடுமையான உழைப்பு. அதீத புத்திசாலி. அதிபயங்கர தைரியசாலி.
ஆனாலும் அவரின் குழந்தைகளைப் பொருத்தவரை அவர் ஒன்றும் தெரியாதவர். அம்மாவுக்கு ஸ்மார்ட்னெஸ் கிடையாது. அப்படி இப்படி என ஏகப்பட்ட உருவகங்கள். ஆனாலும் அவர் பிள்ளைகள் முன் தன் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்திக்கொள்ள முயலவேமாட்டார். அவர்களிடம் நிரூபிக்க விரும்பமாட்டார். அதற்காக தன் திறன் குறைந்தும் செயல்படமாட்டார். அவர் அவராகவே செயல்படுவார்.
சில தினங்களுக்கு முன்னர் அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ‘ஒரு நல்ல அம்மா என்றுமே தன் குழந்தைகளிடம் ஜெயிக்க மாட்டாள். தோற்றுப் போவதையே விரும்புவாள்’ என சொன்னார்.
அது என்னவோ உண்மைதான். தங்களிடம் தோற்கும் அம்மாக்களைத்தான் பிள்ளைகளுக்கும் பிடிக்கிறது. அம்மாக்களுக்கு அந்த லாஜிக் புரிந்ததால்தான் அவர்கள் எப்போதுமே ‘அம்மாவுக்கு எதுவும் தெரியாது’ என்ற பட்டத்தை விருப்பப்பட்டே சுமக்கிறார்கள்.
அப்பாவை ஜீனியஸ், அறிவாளி, உழைப்பாளி என்றெல்லாம் ஒத்துக்கொள்ளும் பிள்ளைகள் அம்மாவை மட்டும் புத்திசாலியாக ஏற்றுக்கொள்வதில்லை.
‘என் அம்மா ஒரு அறிவுஜீவி… அற்புதமானவள்… தேவதை’ என்று உணர்ந்து கொண்டாடும் நேரத்தில் அவள் நம்மிடம் இருப்பதில்லை.
அடுத்த நிமிடம், அடுத்த நாள், அடுத்த வாரம், அடுத்த மாதம், அடுத்த வருடம் எப்படி இருக்கும் என்றெல்லாம் யாருக்கும் தெரியாது. எதற்கும் உத்திரவாதமும் கிடையாது. வாழும்போதே போகிற போக்கில் வாழ்க்கையையும், மனிதர்களையும், சக ஜீவன்களையும் கொண்டாடிடுவோம். குறிப்பாக நமக்காகவே வாழும் அம்மாக்களை!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software