எப்படி ஜெயித்தார்கள் – புத்தக மதிப்பீடு

‘இறக்கை முளைத்தது

பறக்கத் தெரிந்தது

பறப்பது சுதந்திரமில்லை

நிர்பந்தம் என்பது புரிந்தது’  

‘ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ்’  நிறுவனர் திரு. கிருஷ்ணன் தன் டேபிளில் வைத்திருந்த இந்த கவிதை வரிகளே இந்த புத்தகம் முழுவதும் படிக்கத் தூண்டியது.

‘இந்த அழகான உலகில் அனைவரும் அடைய விரும்பும் ஒரு விஷயம் வெற்றி. ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் வெற்றிக்கான இலக்கும் அளவுகோளும் மாறிக்கொண்டே இருந்தபோதிலும் அனைவருடைய பயணமும் வெற்றி என்ற இலக்கை நோக்கித்தான் இருக்கிறது. தனிமனிதன் தன் இலக்காகக் கொண்ட வேட்கையில் வெளிந்த  வெற்றிகள்தான் ஒரு நிறுவனம் உருவாக, அது ஆழமான வேர்களுடன் விருட்சமாக வளர விதைக்கப்படும் விதை. ஆனால் அந்த வெற்றி வேட்கை கொண்டவர்கள் அனைவரும் வெற்றிப் பெற்றுவிடுவதில்லை. சிலர் மட்டுமே சிகரங்களைத் தொட்டிருக்கிறார்கள். இவர்கள் மட்டும் ஜெயித்தது எப்படி?’

என்ற அழகான முன்னுரையுடன் தொடங்கியுள்ளார் ‘எப்படி ஜெயித்தார்கள்’ நூலின் ஆசிரியர் ரமணன்.

புதிய தலைமுறை பதிப்பகம் வாயிலாக வெளியான இந்த நூல் வெளியாகியுள்ளது (2011).

ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ், யுனிவர்செல், ராம்ராஜ் காட்டன், கே.பி.என் டிராவல்ஸ், அருண் ஐஸ்கிரீம், சவேரா ஓட்டல், ஆச்சி மசாலா, சுகுணா சிக்கன் என பிசினஸ் ஜாம்பவான்களை நேரடியாக சந்தித்து நிறைய பேசி இளைஞர்களுக்கு பயன்படும் வகையில் மிக எளிமையான நடையில் எழுதியிருக்கிறார் நூலாசிரியர்.

எந்த இடத்திலும் வார்த்தை அலங்காரங்களோ இலக்கிய நடை எழுத்துக்களோ தென்படவில்லை. எதார்த்தத்தின் வாசனையை கொஞ்சமும் கூட்டாமல் குறைக்காமல் எதார்த்தமான நடையில் இளைஞர்கள் படிக்கும் வகையில் எளிமையாக கொடுத்துள்ளார். இதுவே இந்தப் புத்தகத்தின் பெருஞ் சிறப்பு.

ஒரு புத்தகம் என்பது முதல் முறை படித்தாலே புரிய வேண்டும். மறுமுறை படிப்பது என்பது அதன் சாராம்சத்தை ரசிப்பதற்காகவே இருக்க வேண்டும். அந்த வகை புத்தகம் இது.

இந்தப் புத்தகத்தில் என்னைக் கவர்ந்த பிசினஸ் தத்துவங்களைக் கொடுத்துள்ளேன். உங்களுக்கும் பிடிக்கும். இதுபோல இன்னும் பல பிசினஸ் ரகசியங்களை வெளிப்படையாக சொல்லி இருக்கிறார்கள் அந்தந்தத் துறையில் வெற்றிபெற்றவர்கள்.

  1. ஒரு நிறுவனத்தின் ஊழியராக இருப்பதைவிட, ஒரு நிறுவனத்தின் தலைவராக வேண்டும் என்று கனவு காணுங்கள் – சுகுணா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு செளந்திரராஜன்
  2. பிராண்டின் பெயர் மக்கள் மனதில் நிற்கும்படி எளிமையாக இருக்கட்டும் – ஆச்சி மசாலா நிறுவனத்தின் நிறுவனர் பத்மசிங் ஐஸக்
  3. போட்டியாளர்களிடம் பகைமை காட்டாதீர்கள். இக்கட்டில் அவர்கள் உதவி தேவைப்படலாம் – சவேரா ஓட்டல் செயல் அதிகாரி நீனாரெட்டி
  4. ஒரு தொழிலில் முழுமையாக வெற்றி கண்ட பிறகே அடுத்த தொழிலில் கால் வையுங்கள் – அருண் ஐஸ்கிரீம் நிறுவனர் சந்திரமோகன்.
  5. நன்றி மறக்காதீர்கள் – கே.பி.என் டிராவல்ஸ் நிறுவனர் கே.பி. நடராஜன்.
  6. நேர்மையுடன் இருந்தால்தான் தொழிலில் நீண்டநாள் நிலைத்திருக்க முடியும். – ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜ்.
  7. முதல் முயற்சியிலேயே வெற்றி வந்துவிடாது. தொடர்ந்து முயலுங்கள் – யுனிவர்செல் நிறுவனர் சதீஷ் பாபு.
  8. தரம், சுவை தவிர கடைக்கு உள் அலங்காரங்களும் அவசியம் – ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனர் கிருஷ்ணன்.

இந்தப் புத்தகம் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பரிசளிக்க ஏற்ற நூல்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software Private Limited

ஏப்ரல் 1, 2019

 

(Visited 169 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon