வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[13] : வாழ்வில் தன்னம்பிக்கை தூவுங்கள்! (நம் தோழி)

வாழ்வில் தன்னம்பிக்கை தூவுங்கள்!

பணக்காரர்கள், ஏழைகள், படித்தவர்கள், படிக்காதவர்கள், நிறைய நண்பர்களை வைத்திருப்பவர்கள், தேர்ந்தெடுத்த சிலரை மட்டும் நட்பில் வைத்திருப்பவர்கள், வெளிநாட்டில் உள்ளவர்கள், உள்நாட்டில் இருப்பவர்கள் இப்படி யாராக இருந்தாலும் கஷ்டங்கள், வருத்தங்கள், துக்கங்கள், தோல்விகள் அத்தனையும் எல்லோருக்கும் பொதுவானதே. அதுபோலவே, இவற்றால் உண்டாகும் வேதனைகளும் வலிகளும் அவமானங்களும் ஓரவஞ்சனையின்றி அத்தனைபேருக்கும் பொதுவானதே.

இவற்றை எல்லாம் தாங்கிக்கொண்டு எதிர்நீச்சல் போட்டு வாழ்பவர்கள் மனவலிமை உள்ளவர்கள், இல்லாதவர்கள் தடுமாறுகிறார்கள்.

திருடுபவர்களும், கொலை செய்பவர்களும், பெண்களை சீரழிப்பவர்களும், குழந்தைகளிடம் கூட காமத்தை பார்க்கும் அசிங்கமான மனோநிலை உள்ளவர்களுமே வாழ வேண்டும் என ஆசைப்பட்டு எப்படியாவது தண்டனையில் இருந்து தப்ப வேண்டும் என துடித்து முட்டி மோதி முயற்சி செய்யும்போது வாழ்க்கையில் தன்னுடைய திறமையினால் தன்னுடைய உழைப்பினால் தன்னுடைய பெருமுயற்சியினால் முன்னேறிய பலர் சட்டென வாழ்க்கையை முடித்துக்கொள்வதை காணும்போது வேதனை மட்டுமல்ல மனிதர்களின் மனநிலை குறித்த பயமும் உண்டாகிறது.

தன்னம்பிக்கை குறித்து அதிகம் பேசுபவர்களே தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்ற கண்ணோட்டத்தில் ஒருசில பதிவுகளை நேற்று படித்தேன்.

தன்னம்பிக்கை என்பது ஒரு குணம், மனோபாவம். மென்மையானவன்,  முரடன், சோம்பேறி, சுறுசுறுப்பானவன் என ஒவ்வொருவருக்கும் பொதுவான குணாதிசயங்கள் இருப்பதைப்போல தன்னம்பிக்கை என்பது நம் பொதுவான குணங்களுக்கு மேல் டாப்பிங் செய்யப்பட்ட ஒரு மனோபாவம்.

ஐஸ்கிரீமில் டாப்பிங் செய்யப்பட்ட முந்திரி, பிஸ்த்தா, வேர்கடலை, பழங்கள்போல என்று வைத்துக்கொள்ளுங்களேன். கோப்பையில் உள்ள கடைசி துளி ஐஸ்கிரீம் வரை டாப்பிங் செய்யப்பட்டதை இணைத்து சாப்பிடும்போதுதான் ஐஸ்கிரீம் கூட சுவைக்கும். அவசரம் அவசரமாக டாப்பிங்கை மட்டும் அள்ளி எடுத்து சாப்பிட்டுவிட்டு ஐஸ்கிரீம் சுவையாக இல்லை என்று சொல்ல முடியுமா?

அதுபோலதான் வாழ்க்கை என்ற நீண்ட பயணத்தில் ஒவ்வொரு மணித்துளியிலும் தன்னம்பிக்கையை இணைத்துக்கொண்டு வாழப்பழக வேண்டும். அப்படி செய்யாமல் தன்னம்பிக்கையை ஏதோ நமக்கான கிரீடம் போல கருதி தேவையானபோது எடுத்து வைத்துக் கொண்டு தேவையில்லாதபோது கழற்றி வைத்துவிடும் பொருளாகப் பயன்படுத்தினால் அதற்கு தன்னம்பிக்கை என்றே அர்த்தம் அல்ல. மீட்டிங் போது நாம் அணிந்துகொள்ளும் கோட்போல, விழா காலங்களில் அணிந்துக்கொள்ளும் பட்டு புடவை வேட்டி போல நிகழ்ச்சி முடிந்ததும் கழற்றி வைத்துவிடும் ஒரு வஸ்த்திரம். அவ்வளவே.

வாழ்க்கை மீதான பிடிப்புக்கு தன்னம்பிக்கை மிக அவசியம். அடுத்த வேளை சாப்பாடு கிடைக்குமா கிடைக்காதா என்றே தெரியாமல் ஏழ்மையில் வாழ்ந்து வருபவர்களை உற்று நோக்குங்கள். அவர்களால் என்ன முடிகிறதோ அதை செய்கிறார்கள். அன்றன்றைய மகிழ்ச்சி துக்கம் சோகம் இவற்றை அன்றன்றைய தினம் அவர்களின் இரவு உறக்கத்தில் கரைக்கிறார்கள். இவர்களுக்கு தங்களை இயக்குவது தன்னம்பிக்கை என்றெல்லாம் தெரியாது. விதிக்கப்பட்ட வாழ்க்கை. வாழ வேண்டும். இது மட்டுமே அவர்களுக்கு தெரியும்.

இப்படி வாழும் பக்குவம் வருவது கடினம்தான். இந்த அளவுக்கு பற்றற்ற மனநிலைக்கு வர முடியாவிட்டாலும் கொஞ்சம் மெனக்கெட்டு ஐஸ்கிரீம் டாப்பிங் போல தன்னம்பிக்கையை நம் ஒவ்வொரு செயலின் மீதும் தூவிக்கொள்வதன் மூலம் வாழ்க்கையை வாழ்ந்துவிடலாம் என்றுதான் நினைக்கிறேன்.

ஐஸ்கிரீம் டாப்பிங்கை தனியே சாப்பிடுகிறீர்களா அல்லது கடைசி தூளி ஐஸ்கிரீம் வரை டாப்பிங்கை சேர்த்து சுவைத்து சாப்பிடுகிறீர்களா என்பதில்தான் உங்கள் தன்னம்பிக்கை வெளிப்படும்.

தற்கொலை எண்ணம் வராமல் இருப்பதற்கெல்லாம் அறிவுரை சொல்ல முடியாது. நம் எண்ணங்களை கட்டுக்குள் வைக்கப் பழகலாம். பயிற்சி எடுக்கலாம்.

நம் எண்ணங்களை நாம்தான் வடிவமைக்கிறோம். எல்லாம் நல்லபடியாக சென்றுகொண்டிருக்கும்வரை நம் எண்ணம் நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். சூழல் எல்லை மீறும்போது நம் எண்ணங்களும் நம் கட்டுப்பாட்டை இழக்கும்.

ஆக சூழலை எல்லை மீறாமல் வைத்திருப்பதில்தான் சூட்சுமம் உள்ளது.

ஒன்றை மட்டும் புரிந்துகொள்ள வேண்டும். எந்த சூழலிலும் அதை மறக்காமல் இருக்க வேண்டும். அதாவது, நாம் தற்கொலை செய்துகொள்வதால் நம்மைச் சுற்றி இயங்குகின்ற இந்த உலகில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படப் போவதில்லை. நம் ரத்த சொந்தங்களுக்கு வேண்டுமானால் சில நாட்கள் அதன் தாக்கம் இருக்கும்.

காலையில் அப்பா இறந்த செய்தியை ஃபேஸ்புக் ஸ்டேட்டஸில் போட்டுவிட்டு மாலையில் தன் நண்பரின் ஃபேஸ்புக் புரொஃபைல் புகைப்படத்துக்கு லைக் போட்டு, லவ்லி என பின்னூட்டம் போட்டு காலத்தை கடந்து சென்றுகொண்டிருக்கும் பலரை நான் பார்த்திருக்கிறேன். இவ்வளவுதான் உலகம்.

அதுபோல நம் கஷ்டங்களை பிறர் அதே மனோபாவத்துடன் புரிந்துகொள்ள வேண்டும் என்பதையெல்லாம்கூட எதிர்பார்க்க முடியாது.

சென்ற மகளிர் தினமன்று எனக்கு விருது அளிப்பதற்காக ஒரு சேவை நிறுவனம் தொடர்புகொண்டது. அவர்களின் ஆன்மிக இலக்கிய சேவை பற்றி அறிமுகம் செய்துகொண்டார்கள்.

என்னைப்போல் 10 பெண்களுக்கு விருது கொடுப்பதாகவும் என்னைப் பற்றிய தகவல்களை அனுப்பி வைக்கச் சொன்னார்கள். அனுப்பியிருந்தேன். சில தினங்களில் ஒரு பிரமாண்டமான பிரவுச்சர் தயாரித்து அதில் சாதனைப் பெண்களின் புகைப்படங்களுடன் அவர்கள் பற்றிய தகவல்களையும் பிரசுரம் செய்து அனுப்பி இருந்தார்கள். பத்து பக்கங்களுக்கும் குறையாத அழைப்பிதழ். ஊர் முழுக்க அதை விளம்பரப்படுத்தி இருந்தார்கள்.

அதில் பெண்களின் புகைப்படங்களுக்கு கீழே அவரவர் துறை சார்ந்த சாதனைகளை சொல்லாமல் அவர்களின் பர்சனல் வாழ்க்கை குறிப்புகளை வெளியிட்டிருந்தார்கள். அவர்களை நான் தொடர்புகொண்டு இப்படி பெண்களின் பர்சனல் வாழ்க்கை விவரங்களை அச்சடித்து கொடுத்தால் இதுவே அவர்களுக்கு தொந்திரவாக அமையுமல்லவா என பொறுமையாக எடுத்துச் சொன்னேன்.

ஆனால் அவர்கள் அதை சரியான கோணத்தில் எடுத்துக்கொள்ளாமல் ஏதோ பெண்களுக்கு விருது அளிப்பதையே தங்கள் சாதனையாகவும் தங்களின் பரோபகாரம் போலவும் கர்வத்துடன் பேசியதால் நான் அந்த விருதை புறக்கணித்தேன்.

இதை என் நட்பு வட்டத்தில் உள்ள ஒருசிலருடன் பேசியபோது பகிர்ந்துகொண்டேன். அவர்களும்  ‘அப்படியா, இப்படியெல்லாம் கூட இருக்கிறார்களே… நீங்கள் சொல்வது சரிதானே… பெண்களுக்கு விருதுகொடுக்கிறேன் என நினைத்து அவர்களுக்கு கஷ்டம் கொடுக்கிறார்களே’  என்றெல்லாம் பேசிவிட்டு இந்த வருட பெண்கள் தினமன்று அவர்கள் அதே அமைப்பில் இருந்து விருது பெற்றுள்ளார்கள்.

இதை எதற்கு சொல்கிறேன் என்றால், இவ்வளவுதான் உலகம். உன் கஷ்டம் உன்னோடு. என்னை அது ஒருதுளியும் பாதிக்கப் போவதில்லை. எனக்கு வரும்போது நான் பார்த்துக்கொள்கிறேன். இந்த மனோபாவம் பெருகிவிட்ட இன்றைய சூழலில் நீங்கள் உங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்வதால் எதுவுமே மாறப்போவதில்லை என்பதை மட்டும் நினைவில் வையுங்கள். 

நமக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்துத்தான் பார்ப்போமே. வெற்றி தோல்வி என பிரித்துப் பார்க்க வாழ்க்கை ஒன்றும் பந்தயம் அல்ல.

வாழ்க்கை ஒரு பயணம். நாம் அதில் ஒரு பயணியாக பயணிக்க வேண்டும். அவ்வளவே.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
May  14, 2020

சக்தி மசாலா குழுமத்தில் இருந்து வெளிவரும்
‘நம் தோழி’  மாத பத்திரிகையில் (ஏப்ரல்-மே 2020)
வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும் – 13

புத்தக வடிவிலேயே படிக்க… நம் தோழி ஏப்ரல்-மே 2020

(Visited 97 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon