வாரிக் கொடுப்பதை அள்ளிப் பருகுவோம்!
நேர்மறை சிந்தனைகள் என்பதும் எதிர்மறை சிந்தனைகள் என்பதும் ஏதோ வெவ்வேறு என்று எண்ணிவிட வேண்டாம்.
இரண்டும் ஒன்று என்று சொல்வதைவிட ‘சிந்தனைகள்’ என்ற ஒற்றை வார்த்தையில் இரண்டையும் அடக்கிவிடலாம்.
நாம் சிரிக்கிறோம், அழுகிறோம், வருந்துகிறோம் என்பதைப்போல சிந்திக்கிறோம் என்பதும் ஒரு செயல். நாம் பொதுவாக சிந்திப்பதே நேர்மறையாகத்தான் இருக்கும்.
நாமாக கற்பனை செய்துகொள்வதினாலும் நம்முடைய அனுபவங்களினால் சாதாரண விஷயங்களைக் கூட பெரிதுபடுத்தி ஜாக்கிரதையாகவோ அல்லது கண்டுகொள்ளாமல் கவனக்குறைவாகவோ அணுகுவதாலும் உண்டாகும் விளைவுகள் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். அவ்வளவே.
சிந்தனையில் எதுவும் மாறுபடுவதில்லை, விளைவுகளில்தான் மாறுபடுகிறது.
உதாரணத்துக்கு எல்லோருமே சமையலில் சாம்பாரை ஒரே லாஜிக்கில்தான் செய்கிறோம். ஆனால் ஏன் அனைவரது கைப்பக்குவமும் ஒன்றுபோல் இருப்பதில்லை. அதில் சேர்க்கப்படும் உப்பு புளி மிளகாய் பொடி பெருங்காயம் இவற்றின் அளவுகளோடு அதில் நாம் கலக்கும் தண்ணீரின் அளவில்தான் சூட்சுமமே அடங்கி உள்ளது. தண்ணீர் கொஞ்சம் கூடினாலும் குறைந்தாலும் சுவை அடியோடு மாறிவிடும்.
அதுபோல்தான் நம் சிந்தனையில் நம் அனுபவம் எனும் இங்ரெடியண்ட்டை (Ingredient) சேர்ப்பதற்கு ஏற்ப விளைவுகளில் நேர்மறையும் எதிர்மறையும் வெளிப்படும்.
நாம் அனைவருக்குமே சிந்தனைகள் ஒன்றாகத்தான் இருக்கும். நமக்கு கெட்டவைதான் நடக்கும் என்றும், நாம் தோல்விதான் அடைவோம் என்றும் நினைத்துக்கொண்டா வாழ்க்கையை நடத்துகிறோம். அப்படி நினைத்துக்கொண்டு நம் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்தால் மனிதன் வாழவே முடியாது. நித்தம் செத்துத் செத்துத்தான் பிழைக்க வேண்டியிருக்கும்.
ஒரு குழந்தை பிறக்கிறது. ஆசை ஆசையாய் அதை என்ன படிக்க வைக்க வேண்டும், அது என்னவாக வர வேண்டும், அது எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ வேண்டும் என ஒரு பெற்றோராய் நமக்குள்தான் எத்தனை எதிர்பார்ப்புகள். அந்தக் குழந்தையுடன் சேர்த்து நம் கனவுகளையும் அல்லவா சுமக்கத் தொடங்கிவிடுகிறோம். அதற்கேற்ப திட்டமிடவும் பணத்தை சேமிக்கவும் ஆரம்பித்து விடுகிறோம். ஆனால் எதிர்பாராத விதமாக அந்தக் குழந்தை ஏதேனும் நோயினாலோ அல்லது விபத்தினாலோ இடையில் பதினைந்து இருபது வயதில் இறந்துவிடுவதாக வைத்துக்கொள்வோம். இந்த நிகழ்ச்சி இப்படித்தான் நடக்கும் என நமக்கு முன்கூட்டியே தெரியாதிருப்பதால்தான் நாம் உயிர்ப்புடன் வாழ்கிறோம். இது இப்படித்தான் நடக்கும் என்பது முன்பே தெரிந்துவிட்டால் நம்மால் நிம்மதியாக மூச்சுவிட முடியுமா?
நம் நம்பிக்கைக்கும் வாழ்க்கை முகத்தில் அறைந்து சொல்லிக்கொடுக்கும் நிதர்சனத்துக்கும் இடையே உள்ள இடைவெளியில்தான் நம் வாழ்க்கையின் உயிர்ப்பு அடங்கியுள்ளது.
அகந்தை. அறியாமை. அலட்சியம். இவற்றை சிந்தனையுடன் கலக்கும்போது அது எதிர்மறை விளைவுகளை உண்டாக்குகிறது.
சமயோஜிதம். அறிவாற்றல். பொறுப்பு. இவற்றை சிந்தனையுடன் கலக்கும்போது உண்டாகும் விளைவுகள் நேர்மறையாக அமையப்பெறும்.
இந்த இரண்டு கலவையில் நாம் நம் சிந்தனையுடன் எந்த இங்ரெடியண்ட்டை கலக்கப் போகிறோம் என்பதில்தான் நாம் நேர்மறை சிந்தனையுள்ள மனிதர்களா, எதிர்மறை சிந்தனையுள்ள மனிதர்களா என்ற முத்திரையைக் கொடுக்கும்.
ஒரு நாள் வெளியே வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. மதியம் பைப்பை திறந்தால் தண்ணீருக்கு பதில் வெந்நீர்.
மாலை ஐந்து மணிவாக்கில் மேகம் கருத்து சில்லென காற்றடிக்கத் தொடங்கி சில நிமிடங்களில் சடசடவென மழை. இடைஞ்சலாய் பரபரத்து அங்கும் இங்கும் ஓடுவதற்கு மனிதர்கள் இல்லாததால் மழையும் விஸ்ராந்தியாய் பெய்யத்தொடங்கியது. அரை மணி நேரம் கொட்டித் தீர்த்தது. முகம் அலம்புவதற்கு பைப்பைத் திறந்தால் தண்ணீருக்கு பதில் ‘ஐஸ்’ நீர்.
சூரியன் புறப்பட்டது முதல் தொடர்ச்சியாக 12 மணி நேரம் அதன் வெக்கையை உள்வாங்கிக்கொண்டிருந்த பூமி அரை மணிநேர மழைக்கே குளிர்ந்துவிட்டிருந்தது. இவ்வளவு துளி கருணை போதுமானதாக உள்ளது பூமித்தாய் குளிர்வதற்கு.
இப்படித்தான் நமக்கு உதவி செய்யும் வாய்ப்பும் வசதியும் இல்லாவிட்டாலும், உதவி செய்ய வேண்டும் என நாம் மனதால் நினைத்தாலேபோதும். நல்லது செய்ததற்கு ஈடான பலன் கிடைத்துவிடும்.
மகாபாரதத்தில் ஒரு நிகழ்வு. தான தர்மங்கள் செய்வதில் கர்ணனை மிஞ்சுவதற்கு யாருமே கிடையாது. அவர் இறந்த பிறகு சொர்க்கத்துக்குச் சென்றார். அங்கு சென்றதும் அவருக்கு பசி எடுத்தது. அங்குள்ள தேவதூதர்களிடம் ‘சொர்க்கத்தில் பசி எடுக்குமா?’ என கேட்கிறார். அதற்கு அவர்கள் ‘உன் ஆள்காட்டி விரலை வாயில் வைத்துக்கொள்’ என சொல்கிறார்கள். கர்ணன் குழம்பியபடி அப்படியே செய்கிறார். என்ன அதிசயம். பசி அடங்கி விடுகிறது. கர்ணன் அதிசயித்து காரணம் கேட்கிறார். தேவதூதர்கள் காரணத்தை சொல்கிறார்கள்.
‘கர்ணா நீ எத்தனையோ தான தர்மங்கள் செய்தாய். ஆனால் அன்னதானம் மட்டும் செய்யவே இல்லை. அதனால்தான் சொர்க்கத்தில் உனக்கு பசி ஏற்பட்டது. பகவான் ஸ்ரீகிருஷ்ணர் போரை நிறுத்துவதற்காக தன் பரிவாரங்களுடன் துரியோதனனிடம் தூது வந்த சமயம் ‘எங்களுக்கெல்லாம் சாப்பிட எங்கே உணவு தயாராகியுள்ளது?’ என கேட்டபோது ‘அதோ அங்கே’ என உன் ஆள்காட்டி விரலால் உணவு தயாராக இருந்த இடத்தை சுட்டிக்காட்டினாய். அதனால் உன் ஆள்காட்டி விரல் அன்னதானம் செய்த புண்ணியத்தைப் பெற்றது. எனவேதான் உன் ஆள்காட்டி விரலை வாயில் வைத்ததும் உன் பசி அடங்கியது’
இப்படித்தான் வாழ்க்கை நம்மிடம் பெரிது பெரிதாக எதையும் எதிர்பார்ப்பதில்லை. ஒரு துளி நேர்மையை, ஒரு துளி ஒழுக்கத்தை, ஒருதுளி மனிதத்தை. அது இருப்பது தெரிந்துவிட்டால் போதும், வாழ்க்கை நமக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கக் காத்திருக்கும்.
ஒரு மாணவனின் தேர்வுத்தாளை திருத்தும் ஆசிரியர் அவன் 33 மதிப்பெண் மட்டுமே எடுத்திருந்தால், அவனுடைய ஏதேனும் ஒரு பதிலுக்கு இரண்டு மார்க் அதிகம் போட முடியுமா என பார்த்து கூடுதல் மதிப்பெண் போட்டு மனிதாபிமானத்தின் அடிப்படையில் அந்த மாணவனின் மதிப்பெண்ணை 35 ஆக்கி பாஸ் செய்ய வைப்பதைப்போல்தான் வாழ்க்கையும் நம்மிடம் எங்கேயாவது குட்டியூண்டு நல்லது தென்படுகிறதா என கண்களில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு பார்த்துக்கொண்டே இருக்கும். அதன் கண்களுக்கு நம்மிடம் தூசுபோல ஏதேனும் நல்லவை ஒட்டிக்கொண்டிருப்பது தெரிந்தால்போதும். அதற்கு குஷி வந்துவிடும். ‘இந்தா இந்தா’ என பல நன்மைகளை வாரிக்கொடுக்கத் தொடங்கிவிடும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
June 14, 2020
சக்தி மசாலா குழுமத்தில் இருந்து வெளிவரும்
‘நம் தோழி’ மாத பத்திரிகையில் (ஜூன் 2020)
வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும் – 14
புத்தக வடிவிலேயே படிக்க… நம் தோழி ஜூன் 2020