ஹலோ With காம்கேர் -234: நட்புகள் சொல்லும் ‘பர்சனல் விஷயங்களில் தலையிடுவதில்லை’ என்பதற்கு என்ன அர்த்தம்?

 

ஹலோ with காம்கேர் – 234
August 21, 2020

கேள்வி:   நட்புகள் சொல்லும் ‘பர்சனல் விஷயங்களில் தலையிடுவதில்லை’ என்பதற்கு என்ன அர்த்தம்?

ஒருமுறை என்னிடம் ஒரு தனி நபருக்காக நிதி சேகரிக்கக் கேட்டு வந்தவருக்கு நான் சொன்ன பதில் இந்தப் பதிவின் ஊடாக உள்ளது.

உயிர் நண்பர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களை நன்கு உற்று நோக்கினால் ஒரு விஷயம் புலப்படும்.

இணைபிரியாமல் இருப்பார்கள். சேர்ந்தே எங்கும் செல்வார்கள். ஒளிவு மறைவே இருப்பதில்லை. பணம் கடனாகக் கொடுத்துக் கொள்கிறார்கள். விருந்து, விசேஷம், துக்கம், கொண்டாட்டம், களிப்பு எதுவானாலும் எங்கும் எப்போதும் இணைபிரியாமல்.

ஒரு விஷயம் மட்டும் எனக்குப் புரிவதில்லை.

அவர்களில் யாரேனும் ஒருவருக்கு சிகரெட், மது என ஏதேனும் பழக்கம் இருந்தால் அதை மற்றவர் எடுத்துச் சொல்வதில்லை. காரணம் கேட்டுப் பாருங்கள். அவர்கள் சொல்வது வியப்பாக இருக்கும்.

‘ஒருவர் பர்சனலில் மற்றவர்கள் தலையிடுவதில்லை!’.

ஒருவரால் மற்றவருக்கு ஆதாயம் ஏற்படும் விஷயங்களில் மட்டும் அத்தனை ஒற்றுமை. ஆனால் ஒருவருக்கு உடலுக்கும் மனதுக்கும் தீங்கு விளைவிக்கும் பழக்கம் இருந்தால் அதை எடுத்துச் சொல்லி அவரை அந்த விஷயத்தில் இருந்து வெளிக்கொண்டு வரும் விஷயத்தில் மட்டும் அது அவரவர்கள் பர்சனலாகி விடுகின்றது.

ஆனால் அதுவே அந்த நபர் அவரது தீய பழக்கத்தினால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடும் காலம் வந்தால் மருத்துவமனை வாசலில் இரவு பகல் பார்க்காமல் காத்திருப்பது, இறந்துவிட்டால் பிரமாண்டமாக இரங்கல் கூட்டம் நடத்தி துக்கத்தை வெளிப்படுத்துவது, அவரது குடும்பத்துக்காக நிதி சேகரிப்பது என அத்தனையையும் அத்தனை நேர்த்தியாய் செய்து தங்கள் நட்பை வரலாற்றுப் பதிவாக்குகிறார்கள்.

புகைத்துக் குடித்து சீரழிவது அவரவர் பர்சனல் என்றால், அந்தப் பழக்கத்தினால் தன் குடும்பத்தை நிர்கதியாக்கிவிட்டுச் சென்றவர் குடும்பத்துக்கு எதற்காக மற்றவர்கள் நிதி கொடுக்க வேண்டும். அதுவும் அவர் பர்சனல்தானே.

பின்னாளில் என்னிடம் யார் குடும்பத்துக்காக நிதி சேகரித்தார்களோ, அந்த பெண்மணிக்கு அவர் படிப்புக்கு ஏற்ற வேலையை எனக்குத் தெரிந்த நிறுவனத்தில் வாங்கிக்கொடுத்தேன் என்பது வேறு விஷயம்.

இந்த உதவி தன் தீய பழக்கத்தினால் உயிரிழந்தவருக்காக செய்ததல்ல. என்னிடம் வேலை கேட்டு வந்தவருக்கு செய்த உதவி என்றளவில் செய்தது.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 44 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon