ஹலோ with காம்கேர் – 235
August 22, 2020
கேள்வி: எங்கள் பிள்ளையார் ‘நம்பிக்கைப் பிள்ளையார்’ ஆனது எப்படி?
பொதுவாகவே நாம் எல்லோருமே விநாயகரை வணங்காமல் எந்த ஒரு பூஜையையும் ஆரம்பிப்பதில்லை. அதுவும் அவருக்கே பூஜை என்றால் கேட்கவா வேண்டும் கொண்டாட்டத்துக்கு. குழந்தைகளுக்குக்கூட பிள்ளையாரைப் பிடித்துப் போவதற்குக் காரணம் அவரது தும்பிக்கையும், பெரிய வயிறும், அதன் காலடியில் வீற்றிருக்கும் மூஞ்சுரும்தான்.
நாங்கள் வீட்டில் எப்போது என்ன தின்பண்டம் செய்தாலும் அந்த மாவினாலேயே பிள்ளையார்போல செய்து பூஜை அறையில் சுவாமிக்கு நெய்வேத்யத்துக்கு வைத்துவிட்டுதான் சாப்பிடுவோம். அது பஜ்ஜி, போண்டாவாகட்டும், ஜாங்கிரி, லட்டு, முறுக்கு, சீடைகளாகட்டும் எதுவானாலும் முதலில் அந்த மாவு பெறும் வடிவம் பிள்ளையார். மாவை கூம்புபோல செய்து விநாயகராக பாவித்து வணங்கிய பிறகே அடுப்பை பற்ற வைப்பார்கள்.
பண்டிகைகளின் போது மஞ்சள்பொடியினால் பிள்ளையார் பிடித்து வைத்துவிட்டு பூஜைகளைத் தொடங்குவோம்.
எங்கள் காம்கேர் நிறுவனம் தொடங்கியதில் இருந்து (1992) இன்று வரை (2020) என் நிறுவனத்தையும் என்னை வழிநடத்துபவரும் பிள்ளையாரே.
எப்போதும் என் டேபிளில் கல்லில் செதுக்கிய சிறிய பிள்ளையார் சிலை வைத்திருப்பேன். ஆனால் எனக்கு பெரிய பிள்ளையார் சிலை வாங்கி அதற்காகவே ஒரு பூஜை அறை கட்டி வைக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. நிறைவேறவும் செய்தது.
1992 முதல் 2000-ம் ஆண்டு வரை வாடகை இடத்தில் காம்கேர் இயங்கி வந்த காம்கேர், 2000-ல் சொந்த கட்டிடத்தில் இயங்க ஆரம்பித்தது. அப்போது செய்த பூஜையின்போது ஒயிட் மெட்டலில் ஆன பிள்ளையார் சிலையை வாங்கினோம். அதற்காகவே பூஜை அறையையும் கட்டினோம்.
இந்த வீடியோவில் அந்த பூஜை அறையில் வீற்றிருப்பது அந்த பிள்ளையார்தான். பூஜை செய்வது நான். ‘பாலும் தெளிதேனும்…’ பாடுபவர் மீரா கிருஷ்ணன் அவர்கள்.
இந்த பிள்ளையாருக்கு ‘தன்னம்பிக்கை பிள்ளையார்’ என்று பெயர் வைத்துள்ளோம். ஆனால் என் நிறுவனத்தில் பணிபுரியும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு அது ‘நம்பிக்கைப் பிள்ளையார்’.
காரணம் இல்லாமல் இல்லை. என்னிடம் பணி புரிந்த ஒரு புரோகிராமரின் அம்மாவுக்கு உடல்நிலை மோசமாக இருந்தபோது இந்தப் பிள்ளையாரிடம் வேண்டிக்கொண்டார். அடுத்த சில நாட்களில் அவர் அபாய கட்டத்தைக் கடந்து பிழைத்துவிட்டார். உடனே அவர் பிள்ளையாருக்கு பழங்கள் பூக்கள் வாங்கி வந்து நமஸ்கரித்துவிட்டுச் செல்ல அதுவே மிகப்பெரிய நம்பிக்கையாகிப் போனது. அவருக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே.
யாருக்கு என்ன வேண்டுதல்கள் இருந்தாலும் இவரிடம் கோரிக்கை வைத்துவிடுவார்கள். அவரவர் நம்பிக்கைக்கு ஏற்ப அவை பெரும்பாலும் நிறைவேறிக்கொண்டே வர இவர் எங்கள் நிறுவனத்தில் உள்ள அனைவருக்கும் நம்பிக்கைப் பிள்ளையாராகி விட்டார்.
உங்களுக்கும் ஏதேனும் பிரார்த்தனைகள் இருந்தால் இவரிடம் சொல்லி வையுங்கள். நிச்சயம் நிறைவேற்றி வைப்பார்.
அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software