ஹலோ with காம்கேர் – 233
August 20, 2020
கேள்வி: சேவைக்கும், சேவை மனப்பான்மைக்கும் என்ன வித்தியாசம்?
சேவை செய்வது என்பது நேரடியாக பணமாகவோ, பொருளாகவோ அல்லது உழைப்பாகவோ இந்த சமுதாயத்துக்கு தங்கள் பங்களிப்பைக் கொடுப்பது.
சேவை மனப்பான்மையுடன் செயல்படுவது என்பது தாங்கள் செய்யும் ஒவ்வொரு பணியையும் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு நேர்மையாக சரியாக செய்வது.
ஒருமுறை மார்க்கெட்டிங் துறையில் இருக்கும் ஒருவர் போனில் தொடர்புகொண்டார். என் தொழில்நுட்பப் புத்தகங்களை வாசித்து அதன் மூலம் என் நிறுவனம் குறித்தும் என் குறித்தும் அறிந்து வைத்திருந்ததை சொல்லி மகிழ்ந்தார். அவரது நிறுவனத்தின் தயாரிப்பு ஒன்றை ஒரு பல்கலைக்கழகத்துக்கு சப்ளை செய்தபோது கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில் உள்ள பேராசிரியர்களிடம் என் குறித்து சொல்லி இவரை உங்கள் மாணவர்களுக்காக நிகழ்ச்சிகளில் பேச வைக்கலாம் என்றிருக்கிறார்.
அதற்கு அந்தப் பேராசிரியர்கள் இதுபோல சிறப்பு விருந்தினர்களை எல்லாம் அழைக்க வேண்டுமானால் நிறைய பணம் கொடுக்க வேண்டுமே என்றிருக்கிறார்.
உடனே மார்க்கெட்டிங் நபர் ‘அந்த மேடம் பணமெல்லாம் எதிர்பார்க்க மாட்டார்… கன்வேயன்ஸ் கூட வாங்க மாட்டார்… சேவை மனப்பான்மையுடன் செயல்படுவார்…’ என்றிருக்கிறார்.
இதை என்னிடம் சொன்னபோது கொஞ்சம் அதிர்ந்தேன்.
நான் என்ன செய்ய வேண்டும் அல்லது என் நிலைப்பாடு என்னவாக இருக்கும் / இருக்க வேண்டும் என்பதை ஒரு மூன்றாவது நபர், என்னை இதற்கு முன் சந்தித்திருக்கவோ அல்லது அறிமுகமாகி இருக்கவோ செய்யாத ஒரு நபர் தானாகவே முடிவெடுக்கிறார் என்றால் அது எந்தவகை நாகரிகத்தில் எடுத்துக்கொள்ள முடியும்?
அந்த பல்கலைக்கழகம் திருச்சியில் உள்ளது. சென்னையில் இருந்து திருச்சி சென்று பல்கலைக்கழக மாணவர்களுக்காக உரை நிகழ்த்துவதற்கு என் உழைப்பு நேரம் இவற்றை எல்லாம் போட்டு என் சொந்த செலவில் சென்று திரும்புவதுதானா சேவை மனப்பான்மை?
அவருக்குப் புரிய வைப்பதற்காக சில விஷயங்களை பொறுமையாக எடுத்துச் சொன்னேன்.
‘சார், பல்கலைக்கழக மாணவர்களுக்கு உரை நிகழ்த்தச் செல்வதற்கு நான் தயாரிக்கும் மல்டிமீடியா பிரசண்டேஷனுக்கே ஒரு வார காலம் எடுத்துக்கொள்ளும். தவிர என் நிறுவனப் பணிகளை ஒதுக்கி வைத்துவிட்டு அந்த உரைக்காகவே மனதை ஒருமுகப்படுத்த வேண்டும். உரை நிகழ்த்த பிரயாணம் செய்ய முன் ஏற்பாடு, பிரயாண நேரம், பிரயாணம் செய்து விட்டு திரும்பியவுடன் சகஜ நிலைக்கு வருவதற்கான ஏற்பாடுகள்.
மேலும், பல்கலைக்கழகத்தில் ஆயிரம் மாணவர்களின் எதிர்காலத்துக்காக உரை நிகழ்த்துவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. அனைவரின் கவனத்தையும் ஈர்க்க வேண்டும், நான் சொல்லும் கான்செப்ட்டில் அவர்கள் அனைவரையும் ஒருமுகப்படுத்த வேண்டும், உரை நிகழ்த்திச் சென்ற பிறகு வாழ்நாளுக்கும் அந்த நாள் உரை அசரிரீ போல அவர்கள் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்க வேண்டும்.
இப்படி செய்வதற்கு நான் எந்த அளவுக்கு ஆக்டிவாக தயார் நிலையில் இருந்து செயல்பட வேண்டும் எனத் தெரியுமா? அது சேவை கிடையாது. என் துறை சார்ந்த பணி. ஆனால் என்னால் அந்தப் பணியை சேவை மனப்பான்மையுடன் செய்ய முடியும்.
இதுபோல பல்கலைக்கழகங்களில் ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் பவர்பாயிண்ட், மல்டிமீடியா பிரசன்டேஷனுடன் உரை நிகழ்த்திய பிறகு இரண்டு மூன்று நாட்கள் மிக சோர்வாக இருக்கும். மனதுக்கு உற்சாகமாக இருந்தாலும் பயணக் களைப்பும், அந்த உரைக்காக நான் எடுத்துக்கொள்ளும் சிரத்தையும் உடல் சோர்வை உண்டாக்கும்…’
நான் இப்படிச் சொல்வேன் என அவர் எதிர்பார்க்கவில்லை. வியப்பாக கேட்டுக்கொண்டிருந்தார்.
பேரிடர் காலங்களில் நேரடியாக களப்பணி செய்வது, சமயம் கிடைக்கும்போதெல்லாம் காப்பகங்களுக்குச் சென்று பொருளாகவோ, பணமாகவோ உதவி செய்வது, அங்கு நம் பிறந்தநாள், திருமணநாள் போன்ற சிறப்பு தினங்களைக் கொண்டாடி அவர்களுடன் நேரம் செலவழிப்பது என்பதெல்லாம் சேவை செய்வதில் அடங்கும்.
அவரவர்கள் துறைசார்ந்த பணிகளை செய்வது (மாணவர்களுக்காக உரை நிகழ்த்துவது உட்பட) சேவை செய்வதன் கீழ் வராது. நாம் கற்றதையும், பெற்ற அனுபவங்களையும் வஞ்சனை இல்லாமல் நேர்மையாக பகிர்ந்துகொள்வது என்பது சேவை மனப்பான்மையுடன் செயல்படுவதன் கீழ் வரும். மேலும் பல்கலைக்கழகங்கள் என்ன இலவச கல்வியையா மாணவர்களுக்கு வழங்குகிறது நாம் அவர்களுக்கு இலவச சேவை செய்ய?
சேவையை ஆத்மார்த்தமாக செய்ய வேண்டுமானால்கூட சேவை மனப்பான்மை இருந்தால் மட்டுமே சாத்தியம்.
எல்லோருக்கும் சேவை செய்வதற்கான சாத்தியகூறுகள் குறைவு. ஆனால் அவரவர் பணியை சேவை மனப்பான்மையுடன் செய்வது என்பது நித்தியப்படி பணிகளை செய்யும்போதே செய்ய முடியும்.
என்னால் தேவை உள்ள இடத்துக்கு ‘சேவை’ செய்யவும் முடியும். செய்யும் பணிகள் அத்தனையையும் ‘சேவை மனப்பான்மை’-யுடனும் செய்ய முடியும்.
இதுவே சேவைக்கும், சேவை மனப்பான்மைக்குமான ஒப்பீடு.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software