ஹலோ With காம்கேர் -236: எப்படி இருந்த சென்னை?

ஹலோ with காம்கேர் – 236
August 23, 2020

கேள்வி:   எப்படி இருந்த சென்னை?

நேற்று (ஆகஸ்ட் 22, 2020) சென்னைக்கு பிறந்த நாள். நான் சென்னைக்கு வந்த ஆண்டு 1992.

அப்பா அம்மாவின் பணியிட மாற்றல் காரணமாக இருபதுக்கும் மேற்பட்ட ஊர்களில் வசிக்கும் அருமையான வாய்ப்பு. ஊருக்கு ஒன்றாக பள்ளிப் படிப்பு. வெவ்வேறு மனிதர்கள், வித்தியாசமான சூழல், முற்றிலும் வேறுபட்ட பழக்க வழக்கங்கள். இதனால் கற்பனை வளமும், எதையும் சந்திக்கும் மனோபக்குவமும், தைரியமும் இயல்பாகவே எங்களுக்குக் கைகூடின.

திருச்சி ஸ்ரீமதி இந்திராகாந்திக் கல்லூரியில் பி.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸும், மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரியில் எம்.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸும் படித்து முடித்துவிட்டு சென்னை வந்தோம். எங்கள் உயர்படிப்பு, வேலை இவற்றுக்காக எங்கள் அப்பா அம்மா இருவருக்கும் சென்னைக்கு மாற்றல் வாங்கிக்கொண்டு வந்தார்கள்.

1992–ல் சென்னையில் நிரந்தரமாக குடிபெயர்ந்தோம்.

நிறைய ஊர்களில் வசித்திருப்பதால் எந்த ஊர் மீதும் குறிப்பிட்டு பற்று இருந்ததில்லை. நாங்கள் எங்கு வசிக்கிறோமோ அந்த ஊர் பிடித்துப் போகும். அப்படித்தான் சென்னையும். பிடிக்கும் பிடிக்காது என்ற வரையறைகளைத் தாண்டி இனி உயர் படிப்பும், வேலையும் இங்குதான் என்ற பொதுவான மனநிலை.

நான் எம்.எஸ்.ஸி படிக்கும்போது கடைசி ஆறு மாதம் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் ப்ராஜெக்ட் செய்ய வேண்டும். நான் ஐ.ஓ.சி-இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் ப்ராஜெக்ட் செய்தேன்.

அப்போது நாங்கள் ஆதம்பாக்கத்தில் இருந்தோம். ஆதம்பாக்கத்தில் இருந்து மவுண்ட் ரயில்வே ஸ்டேஷனுக்கு சைக்கிள். மவுண்ட்டில் இருந்து கிண்டிக்கு மின்சார ரயில். கிண்டியில் இருந்து டி.எம்.எஸ்.ஸுக்கு பஸ். டி.எம்.எஸ்.ஸில் இருந்து நுங்கம்பாக்கம் சாலையில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு நடை. திரும்பி வரும்போதும் ரிவர்சில் இதே வழிதான்.

ஆரம்பத்தில் சென்னை டிராஃபிக் மிரட்டியது. சாலையை கடப்பதற்குள் அத்தனை டென்ஷன் இருக்கும்.

ஒருமுறை டி.எம்.எஸ்ஸில் சாலையைக் கடக்க நான் தடுமாறிக்கொண்டிருந்தேன். அப்போது போக்குவரத்துக் காவலர் ‘என்னம்மா, கை கால் ஒழுங்கா இருந்தாலே வரதட்சணை ஏகத்துக்குக் கேட்பாங்க… இப்படி தடுமாறினால் அவ்வளவுதான் கை கால் போச்சுன்னா என்ன செய்யறது?’ என்று பொறுப்புடன் சொல்லி என்னை சாலையைக் கடக்க உதவினார். அப்போதெல்லாம் வரதட்சணைக் கொடுமை ஆட்டிப் படைத்தது.

மின்சார ரயிலை தூரத்தில் பார்த்ததுமே ஒரு பரபரப்பு ஒட்டிக்கொள்ளும். ரயிலில் ஏறுவதற்குள் கிளம்பிவிடுமோ என்ற அச்சம் இருக்கும்.

அப்படி வேகமாக ஏறினாலும், என்னால் நிம்மதியாக அமர்ந்துவிட முடியாது. காரணம், இறங்க வேண்டிய ஸ்டேஷன் தெரியாமல் போய்விடுமோ என்ற பயம் இருக்கும். அதனால் உட்கார நிறைய இடம் இருந்தாலும் படிக்கட்டு அருகிலேயே நின்று கொண்டிருப்பேன். ஸ்டேஷன் பெயர் பலகையை பார்ப்பதற்காக. அப்போது அமர்ந்திருப்பவர்கள் ‘உட்காரும்மா, ஏன் நிற்கறே?’ என்பார்கள். நான் காரணம் சொன்னதும், ‘எங்கு இறங்கணும் என்று சொல்லு. நாங்கள் அந்த ஸ்டேஷன் வந்ததும் சொல்கிறோம்’ என அன்புடன் சொல்வார்கள். நான் அமர்ந்துகொள்கிறேன் பேர்வழி என்று சீட்டில் நுனியிலேயே அமர்ந்திருப்பேன், ஜன்னல் வழியாக ஸ்டேஷன் போர்டுகளை பார்த்தபடி.

ப்ராஜெக்ட் செய்யும்போது ஐ.ஓ.சியில் அப்போதுதான் எல்லா துறைகளையும் கம்ப்யூட்டர் மயமாக்க ஆயத்தம் செய்து கொண்டிருந்தார்கள். என்னுடம் சேர்ந்து வெவ்வேறு கல்லூரிகளில் இருந்து வந்திருந்த மாணவர்களுடன் குரூப் ப்ராஜெக்ட் கொடுத்தார்கள். எனக்கு தனியாக ப்ராஜெக்ட் செய்யவே விருப்பம். எனவே நிர்வாகத்திடம் சொல்லி பிடிவாதமாக தனி ப்ராஜெக்ட் வாங்கிக்கொண்டேன். அதனால் நிர்வாகத்தினர் என்னை ‘இன்டிபென்டன்ட் கேர்ள்’ என்றே விளையாட்டாக அழைப்பார்கள். காலையில் 8 மணிக்கு வந்தால் இரவு 8 மணி வரை ப்ராஜெக்ட் செய்வேன். என்னுடன் ப்ராஜெக்ட் செய்ய வந்தவர்கள் காலை 11 மணிக்கு வந்துவிட்டு மதியம் 2 மணிக்குக் கிளம்பி விடுவார்கள்.

கல்லூரி ப்ராஜெக்ட் காலகட்டத்தை இத்தனை பயனுள்ளதாக வேறு யாருமே பயன்படுத்தி இருக்க மாட்டார்கள். இரண்டு மூன்று மணி நேரம் வந்து செல்வார்கள். யாரேனும் செய்துகொடுத்தால் அதைப் பயன்படுத்தி டாக்குமெண்ட் தயாரித்து மதிப்பெண் பெற்றுவிடுவார்கள். ஆறு மாத ப்ராஜெக்ட்டை இரண்டு மாதங்களில் முடித்துவிட்டு சென்றுவிடுவார்கள்.

ஆனால் நானோ ஆறு மாதகாலமும் சனி, ஞாயிறு, பண்டிகை தின விடுமுறைகள் என எல்லா நாட்களும் சென்று வந்தேன்.

திறமை, உழைப்பு, உயர்வு. இதைத்தவிர வேறெந்த கனவும் எனக்கில்லை. அங்கு கிடைத்த 6 மாதகால அனுபவம் எனக்கு ‘மெகா’ தைரியத்தைக் கொடுத்தது.

கல்லூரி ப்ராஜெக்ட்டை ஐ.ஓ.சியில் முடித்த பிறகு, சொந்தமாக காம்கேர் நிறுவனம் தொடங்கி தமிழகமெங்கும் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் தொழில்நுட்பத்தை பரவலாக கொண்டு சென்றதில் என் பங்கும், எங்கள் காம்கேரின் பங்கும் நிறையவே உண்டு.

நாங்கள் காம்கேர் நிறுவனம் தொடங்கிய நேரம் நம் நாட்டில் கம்ப்யூட்டர் மெல்ல அடி எடுத்து வைத்திருந்தது. நான் கல்லூரி ப்ராஜெக்ட் செய்த ஐ.ஓ.சிக்கு சென்று சொந்தமாக நிறுவனம் தொடங்கியதை நிர்வாகத்திடம் தெரிவித்தேன். சம்மந்தப்பட்ட துறை மேலாளர்களை சந்தித்துப் பேசினேன்.

என்னுடைய திறமையையும் உழைப்பையும் ஏற்கெனவே அவர்கள் நன்கு அறிவார்கள். அவர்கள் என் திறமைக்கு முழு அங்கீகாரம் கொடுத்து, என்னை எங்கள் காம்கேர் மூலம் அவர்கள் துறைகளை கம்ப்யூட்டர் மயமாக்கும் பணியில் இணைத்துக்கொண்டார்கள். நானே வியக்கும் அளவுக்கு எனக்குள் இருந்த கம்ப்யூட்டர் தொழில்நுட்ப அறிவு வெளிவரத் தொடங்கியது. ராஜ மரியாதைதான் எனக்கு. கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பார்களே, அதை அப்போது பரிபூரணமாக முதன்முறையாக உணர்ந்தேன்.

அந்த ப்ராஜெக்ட்டே எங்கள் காம்கேரின் முதல் ப்ராஜெக்ட்டானது.

சென்னைக்கு வந்த சில வருடங்களிலேயே பைக் ஓட்ட ஆரம்பித்து சுதந்திரமாக பயணிக்க ஆரம்பித்தேன். அப்பா எங்கள் 18 வயதிலேயே கியர் வைத்த பைக் ஓட்டக் கற்றுக்கொடுத்திருந்தார். காம்கேர் ஆரம்பித்த சில வருடங்களில் கார் ஓட்ட ஆரம்பித்தேன். கொஞ்சம் கொஞ்சமாக பஸ், மின்சார ரயில் பயணங்கள் மறந்து போக ஆரம்பித்துவிட்டன.

இப்படியாக நேர்மறை மனிதர்களால் என் மனதுக்குள் விழுந்து விதையாகி வளர்ந்த நம்பிக்கைதான் தன்னம்பிக்கையாகி என்னை இன்றளவும் செயல்பட வைக்கிறது.

விநாயகர் சதுர்த்தி பூஜையுடன் சென்னை நினைவலைகளுடன் நேற்றைய பொழுது இப்படியாக சென்றது.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 33 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon