ஹலோ with காம்கேர் – 237
August 24, 2020
கேள்வி: மொபைலை சார்ஜ் செய்வதைப் போல் உடலை சார்ஜ் செய்கிறோமா?
கொரோனா காலத்தின் தொடக்கத்தில் இருந்தே மருத்துவர்கள் நம் எல்லோருக்கும் பரிச்சயமான SMS என்ற வார்த்தையின் மூலம் ‘நாம் எப்படி சுத்தமாக இருக்க வேண்டும்?’ என்பதை விளக்கி வந்தார்கள்.
S- Sanitizer. கைகளை சானிடைசர் போட்டு சுத்தம் செய்தல்.
M- Mask. முகக்கவசம் அணிந்து கொள்ளுதல்.
S- Social Distance. பொதுவெளியில் சமூக இடைவெளியைப் பின்பற்றுதல்.
இத்துடன் கபசுர குடிநீர் மற்றும் ஹோமியோபதி ஆர்சனிகம் ஆல்பம் இவற்றையும் எடுத்துக்கொள்ள பரிந்துரைத்து வருகிறார்கள்.
கொரோனா பரவத்தொடங்கியதில் இருந்தே என் பெற்றோரின் வழிகாட்டுதலின் அடிப்படையில் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் இயற்கை வழிமுறைகளை நாங்கள் பின்பற்றத் தொடங்கினோம்.
காலை 8 மணிக்கு: முதல்நாள் ஊற வைத்த வெந்தயம், நெல்லிக்காய், கருவேப்பிலை, இஞ்சி, பெருங்காயம், மஞ்சள் பொடி கலந்து அரைத்த நீர்மோர். (ஒரு சிறிய டம்ளர்)
காலை 11 மணிக்கு: மிளகு சீரம் போட்ட இஞ்சி, எலுமிச்சை, தக்காளி சூப். (ஒரு சிறிய டம்ளர்)
மதியம் 1 மணிக்கு: மதிய சாப்பாட்டில் நெல்லிக்காய், பூண்டு கட்டாயம் இடம்பெறும். அத்துடன் கிழங்கு வகைகள் தவிர்த்த நிறைய காய்கறிகள்.
மாலை 3 மணிக்கு: துளசி, கற்பூரவல்லி, வெற்றிலை போட்ட இஞ்சி, எலுமிச்சை டீ. (ஒரு சிறிய டம்ளர்)
இரவு 9 மணிக்கு: ஜீரகம், கருஞ்சீரகம், பெருஞ்சீரகம், ஓமம், மஞ்சள், கடுக்காய் கலந்து அரைத்த பொடியை சுடு நீரில் போட்டு குடித்தல் (ஒரு சிறிய டம்ளர்)
இப்படி எங்கள் சாப்பாட்டு முறைகளை சற்று கவனம் எடுத்து மேம்படுத்திக்கொண்டோம்.
இத்துடன் வழக்கம்போல் அரை மணிநேர வாக்கிங், ஐந்து நிமிட மூச்சுப் பயிற்சி. அத்துடன் யாருக்கும் சிகரெட், மது போன்ற தீய பழக்கங்கள் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
எங்கள் உறவினர்கள், நண்பர்கள் வட்டத்திலும் இதை என் பெற்றோர் பரிந்துரைத்து வருகிறார்கள்.
இப்படி எல்லாவற்றையும் பின்பற்றினாலும் எங்கள் உறவினரில் ஒருவருக்கு கொரோனா வந்துவிட்டது. நல்லபடியாக குணமாகிவிட்டார் என்பது மகிழ்ச்சியான தகவல்.
ஆனால் அவர் எங்களிடம் அடிக்கடி ‘என்ன சாப்பிட்டால் என்ன, யாருக்கு கொரோனா ஒட்டிக்கொள்கிறது என தெரிவதில்லை…’ என சொல்லிக்கொண்டே இருந்தார்.
ஒரு முறை போன் பேசும்போது என்னிடமும் இதையே சொல்ல நான் கொஞ்சம் பொறுமையாக விளக்கினேன்.
உதாரணத்துக்கு, நம் மொபைலையே எடுத்துக்கொள்ளுங்களேன். உயர்ரக மாடல். அதிக விலை. ஆனாலும் தினமும் சார்ஜ் போடத்தானே வேண்டி இருக்கிறது. சார்ஜ் இருந்தால்தானே நம்மால் அதை பயன்படுத்த முடியும். அதில் ஏதேனும் கோளாறு வந்தாலும் சர்வீஸ் செய்ய முடியும். சார்ஜ் இல்லாத மொபைலை முழுமையாக சர்வீஸ் கூட செய்ய முடியாதல்லவா.
அப்படி நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி எனும் ஆற்றலை மேம்படுத்திக்கொள்ளவே உணவு பழக்க வழக்கங்களும், உடற்பயிற்சியும். அத்துடன் டென்ஷன், கோபம், கவலை என எதிர்மறை எண்ணங்களையும் தூர எறிந்துவிட்டால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி சரியான அளவில் இருக்கும். சிகரெட், மது போன்ற தீய பழக்கங்கள் ஏதேனும் இருந்தால் அவற்றையும் கைவிடுதல் உத்தமம்.
இதெல்லாம் இருந்தால் கொரோனா வரவே வராதா என கேட்பவர்களுக்கும் பதில் வைத்துள்ளேன்.
கொரோனா நம்மைத் தாக்குவதற்கு நாம் மட்டுமே காரணம் அல்ல. நம்மைச் சுற்றி உள்ளவர்களும் காரணமாக இருக்கலாம். ஆனால், நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி சரியாக விகிதத்தில் இருந்தால் கொரோனா மட்டுமல்ல எந்த நோய் தாக்கினாலும் நாம் போராடுவதற்கு சக்தி இருக்கும். நோயின் தாக்கத்தில் இருந்து மீண்டு வருவதற்கு நோய் எதிர்ப்பு சக்தி நம் உடலுக்குத் தேவை. அதற்காகவே உணவு பழக்க வழக்கங்களும், உடற்பயிற்சிகளும், எதிர்மறை எண்ணங்களை தூர விலக்கி வைத்தலும் அறிவுறுத்தப்படுகிறது.
கூடுதலாக சிகரெட், மது போன்ற பழக்க வழக்கங்கள் இல்லாதிருந்தால் கொரோனா மட்டுமல்ல, என்ன நோய் வந்தாலும் ‘ஒரு கை பார்த்துவிடலாம்’ என்ற உற்சாக டானிக் உத்வேகத்தை நம் உடலும், மனமும் தானாகவே எடுத்துக்கொள்ளும்.
நம் மொபைலை முழு சார்ஜில் வைத்துக்கொள்வதில் கவனமாக இருப்பதைப்போல நம் உடலையும் முழு சார்ஜில் (நோய் எதிர்ப்பு சக்தியுடன்) வைத்திருப்போமே.
- முறைப்படுத்தப்பட்ட உணவு பழக்க வழக்கம்
- உடற்பயிற்சியும், மூச்சுப் பயிற்சியும்
- எதிர்மறை எண்ணங்களை விலக்குதல்
- சிகரெட், மது போன்ற தீய பழக்கங்கள் இல்லாதிருத்தல்
- செய்யும் பணிகளை சந்தோஷமாக முழு ஈடுபாட்டுடன் செய்தல்
நான் இப்படித்தான் செயல்படுகிறேன். நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software