‘டிகாக்ஷன் காபி’ லாஜிக் தெரியுமா?
சில நாட்களுக்கு முன்னர் எங்கள் உறவினர் ஒருவர் என் பெற்றோருக்கு போன் செய்திருந்தார். அரசு வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர். அவரது கணவர் தனியார் நிறுவனத்தில் பணியில் இருந்தவர். ‘கொரோனா’ விசாரிப்புகளை அடுத்து வெளிநாடுகளில் வசிக்கும் அவர்கள் பிள்ளைகள் குறித்தும், என் சகோதரன் சகோதரி நலன் குறித்தும் பேசிக்கொண்டிருந்தார். இப்படியாக கால் மணி நேர உரையாடலில் உலகையே வலம் வந்துவிட்டார்.
அவருக்கும் அவருடைய கணவருக்கும் வீட்டில் கால் தங்காது. தினந்தோறும் வாக்கிங், ப்ரெஷ்ஷாக காய்கறி வாங்குவதற்கு மார்கெட் செல்லுதல், கோயில், சமையல், உறவினர் / நண்பர் வீட்டுக்குச் செல்லுதல், அவ்வப்பொழுது ஓட்டலுக்குச் சென்று சாப்பிடுதல் என்பதெல்லாம் அவர்களின் நித்தியப்படி செயல்பாடுகள். அதுமட்டுமில்லாமல் மாதத்தில் ஒரு வாரம் எங்கேயேனும் வெளியூர் பிரயாணம் செய்வார்கள். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வெளிநாட்டுப் பிரயாணங்களும் இருக்கும். இப்படியாக எப்போதுமே தங்களை பரபரப்பாக வைத்துக்கொண்டிருப்பார்கள்.
இவர்களைப் போன்று அதிகம் வெளியிலேயே சுற்றிக் கொண்டிருப்பவர்களுக்குத்தான் இந்த லாக் டவுன் காலம் கொடுமையாக இருக்கும் என்று நான் நினைத்துக்கொள்வதுண்டு.
ஆனால் அவர்கள் அப்படி எல்லாம் பெரிதாக வருத்தப்படவில்லை. வீட்டிலேயே தங்களை எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள முடியுமோ அப்படி வைத்துக்கொண்டு சகஜமாகவே இருக்கிறார்கள்.
வெளியில் வாக்கிங் செல்லாமல் மொட்டை மாடியில் வாக்கிங் செல்கிறார்கள். கோயில்களுக்குச் செல்லும் நேரத்தில் டிவி சேனல்களில் ஸ்லோகங்களை ஓட விட்டு கூடவே அமர்ந்து தாங்களும் அமர்ந்து ஸ்லோகம் சொல்கிறார்கள், உறவினர் / நண்பர்கள் வீடுகளுக்குச் செல்லும் நேரத்தில் தொலைபேசி வழியே வாட்ஸ் அப் வீடியோ காலில் நேரடியாகப் பார்த்து பேசுகிறார்கள். ஓட்டலுக்குச் சென்று சாப்பிட வேண்டும் என்கின்ற எண்ணம் தோன்றும்போது யு-டியூபில் லேட்டஸ் ரெசிபி பார்த்து தங்கள் உடல் நலனுக்கு ஏற்ற உணவு வகைகளை தாங்களே தயார் செய்து சாப்பிடுகிறார்கள். இப்படியாக லாக் டவுனுக்கு முன்னர் எப்படி இருந்தார்களோ அப்படியே லாக் டவுனுக்குப் பின்னரும் தங்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்கிறார்கள்.
எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் எது கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் நம் மனது அந்த சூழலுக்கு ஏற்றவாறு தகவமைத்துக்கொள்ளும் வகையில்தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
தினமும் காலையில் எழுந்ததும் காபி சாப்பிட்டுவிட்டு மற்ற வேலைகளைத் தொடங்குவது நம்மில் பெரும்பாலானோருக்கு வழக்கமாக இருக்கும். ஒருசிலருக்கு டீ சாப்பிடும் வழக்கம்.
பால் வாங்கிவர தாமதமாகும் தினங்களில் ஒருவித நடுக்கம்கூட சிலருக்கு ஏற்படும். சிடுசிடுவென மற்றவர்களிடம் எரிந்து விழுவார்கள்.
இது இருந்தால்தான் சந்தோஷம், அது சாப்பிட்டால்தான் உற்சாகம் என்பதெல்லாம் இன்னும் சில மணி நேரங்களில் பால் வந்துவிடும். காபி கிடைத்துவிடும் என்கின்ற உத்திரவாதம் இருக்கும்வரைதான்.
பால் எப்போது கிடைக்கும் என்கின்ற உத்திரவாதமோ அல்லது பால் வரவே வராது என்கின்ற சூழலிலோ எரிச்சலோ, நடுக்கமோ, வெறுமையோ எதுவும் இருக்காது. காரணம், கிடைக்காததை மாற்று வழியில் கிடைக்கச் செய்துகொண்டுவிடும் யுக்தியை அவர்கள் கண்டுபிடித்துவிடுவதே.
அன்று பால் சப்ளையே ஊரில் கிடையாது என்று மனதுக்குத் தெரிந்துவிட்டால் பாலில் டிகாஷன் விட்டு மணமணக்கும் காபி சாப்பிடுவதற்கு பதிலாக வெந்நீரில் டிகாஷன் விட்டு ப்ளாக் காபி சாப்பிட்டு தங்களின் காபி சாப்பிடும் டெம்ப்டேஷனை போக்கிக்கொள்வார்கள்.
காபி பவுடரும் தீர்ந்துவிட்டதா, இருக்கவே இருக்கிறது இன்ஸ்டண்ட் காபி பவுடர். அதைவைத்து சமாளிப்பார்கள்.
இன்ஸ்டண்ட் காபி பவுடரும் கைவசம் ஸ்டாக் இல்லை என்ற சூழல் ஏற்பட்டால்கூட நம்மவர்களால் சமாளித்துவிடுவார்கள். சுடச் சுட வெந்நீரை காபி போல நிதானமாக ஆற்றி மெல்ல குடித்து காபிக்கு ஏங்கும் மனதை சமதானப்படுத்திக் கொள்வார்கள்.
இவ்வளவுதான் வாழ்க்கை. ‘இது’ இருந்தால்தான் என்னால் வாழ முடியும் என்கின்ற நினைப்பு எல்லாம் ‘அது’ கிடைக்கும் என்கின்ற உத்திரவாதம் இருக்கும்வரை மட்டுமே. அந்த உத்திரவாதத்துக்கு வாய்ப்பில்லை எனும்போது எப்படியும் வாழ முடியும் என்கின்ற பக்குவம் நம் எல்லோருக்குமே ஏற்பட்டுவிடும்.
அப்படித்தான் இயற்கை நம்மை கட்டமைத்திருக்கிறது. நம்முடைய டிஸைன் அப்படி.
நம் வாழ்க்கையை நாம் திரும்பிப் பார்த்தால் நிறைவாக உள்ள விஷயங்களுடன் தவறவிட்ட சில விஷயங்களும் நம் கண்முன் தோன்றும். அதை குறை என்று சொல்லிவிட முடியாது. குறைபாடு என்றும் ஒதுக்கிவிட முடியாது. இரண்டும் கலந்த இரண்டும்கெட்டான் நிலை அது.
குறை என்பதை பொதுவாக மனக்குறை என்று வைத்துக்கொள்ளலாம். நிறைவேறாத ஆசை, விருப்பம், குறிக்கோள் இவற்றால் உண்டாகும் ஏக்கம் நமக்கு குறையாக இருக்கலாம். ‘எனக்கு படித்த வேலை கிடைக்கவில்லை’, ‘நான் அழகாக இல்லை’, ‘எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது’ என எதிர்மறை சிந்தனை உள்ளவர்களைப் பார்த்து வீட்டுப் பெரியோர்கள் ‘குறைப்பட்டுக்கொண்டே இருக்காதே’ என்று கடிந்து கொள்வதைப் பார்த்திருப்போம்.
குறைபாடு என்பதை நம்முடைய செயல்திறனில், எண்ண ஓட்டத்தில் உள்ள தடங்கல்களைச் சொல்லலாம்.
முன்னது கழிவிரக்கத்தினால் ஏற்படுவது. பின்னது இயல்பாக நம் குணாதிசயங்களினால் பழக்க வழக்கங்களினால் உண்டாவது. முன்னதைவிட பின்னதை முயற்சி செய்தால் நிவர்த்தி செய்துகொள்ள முடியும்.
‘நான் நல்ல கலராக இல்லை’ என வருத்தப்படுவது குறை. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள் அவர்கள் கலராக இல்லை என வருத்தப்படுவதுதான் குறை. கலராக இல்லை என்பது குறை கிடையாது. அது இயற்கை. அவர்கள் குடும்பத்து ஜீன்.
எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் எத்தனை விலை உயர்ந்த க்ரீம் வாங்கிப் பூசிக்கொண்டாலும் அவர்கள் ஜீன் எப்படி மாறும். அடிப்படை கலரை எப்படி மாற்ற முடியும். நல்ல தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டு நன்றாகப் படித்து நல்ல வேலையில் அமர்ந்து கம்பீரமாக தோற்றம் அளிக்கும் வகையில் நடை உடை பாவனையை மாற்றிக்கொள்ளலாம். அதுதான் சாத்தியம். அதுவே பேரழகு.
‘நான் மிகவும் கோபப்படுகிறேன். என் கோபத்தினால் நிறைய இழந்துள்ளேன். என் மனைவியை / கணவனை காயப்படுத்தி இருக்கிறேன், நண்பர்களை வார்த்தைகளால் குதறி இருக்கிறேன்’ என்று வருத்தப்படுபவர்களின் கோபப்படும் குணம் ‘குறை’ கிடையாது. அது அவர்களின் ‘குறைபாடு’. அதை சின்னச் சின்னப் பயிற்சியின் மூலம் முயற்சி செய்து நிவர்த்தி செய்துகொள்ள முடியும். அப்படி நிவர்த்தி செய்துகொள்ளாமல் திரும்பத் திரும்ப அதே தவறை பிறர் மீது கடத்திக்கொண்டிருப்பதுதான் இருப்பதிலேயே மிக குரூரமானது.
குறையை நிறையாக்கி நிறைவாக்கிக்கொள்வதும், குறைபாடுகளை களைந்து முழுமையாக்கிக் கொள்வதும் அவரவர் கைகளில்தான் உள்ளது.
மைனஸை ப்ளஸ் ஆக்குவது ரொம்ப சுலபம். ஒரு சிறிய குறுக்குக்கோட்டை மைனஸ் குறியீட்டில் இணைப்பதன் மூலம் மைனஸ் ப்ளஸ் ஆகிவிடும்தானே. போலவே, நம் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதும் ரொம்ப ரொம்ப சுலபம்.
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
August 24, 2020
சக்தி மசாலா குழுமத்தில் இருந்து வெளிவரும்
‘நம் தோழி’ மாத பத்திரிகையில் (ஆகஸ்ட் 2020)
வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும் – 16
புத்தக வடிவிலேயே படிக்க… நம் தோழி ஆகஸ்ட் 2020