ஹலோ with காம்கேர் – 251
September 7, 2020
கேள்வி: பூ வியாபாரம் செய்பவரிடமும் தொழில்நுட்ப விழிப்புணர்வை உண்டாக்கினோம் தெரியுமா?
காம்கேர் நிறுவனம் தொடங்கிய காலகட்டத்தில் (1992-ல்) நம் நாட்டில் தொழில்நுட்பம் மெல்ல தலை காட்டத் தொடங்கி இருந்தது.
முதல் ஐந்து வருடங்கள் தமிழ் ஃபாண்ட்டுகளை உருவாக்குவது, வங்கிகளுக்கு கிளிப்பர், ஃபாக்ஸ்ப்ரோ போன்ற மொழிகளில் சாஃப்ட்வேர்களை உருவாக்குவது, பள்ளிகளில் கம்ப்யூட்டர் செண்டர்களை அமைப்பது என சென்றுகொண்டிருந்தது.
இப்படியாக கல்வி நிறுவனங்கள், மருந்துவமனைகள், மருந்துக் கடைகள், மளிகைபொருட்கள் அங்காடி என செல்லும் இடங்களில் எல்லாம் தொழில்நுட்ப விழிப்புணர்வை உண்டாக்கி கம்ப்யூட்டரை நாங்களே அசம்பிள் செய்து குறைந்த விலைக்குக் கொடுத்து, அதில் அவரவர்கள் பயன்பாட்டுக்கு ஏற்றவாறு சாஃப்ட்வேர்கள் தயாரித்துக் கொடுத்து தமிழகமெங்கும் தொழில்நுட்பத்தை எடுத்துச் சென்றதில் எனக்கும் காம்கேருக்கும் பெரும் பங்குண்டு என்பதை பலமுறை சொல்லி இருக்கிறேன். அது உங்களில் பெரும்பாலானோர் அறிந்ததே.
பல இடங்களில் கம்ப்யூட்டர் வாங்க மறுப்பார்கள். மறுப்பார்கள் என்று சொல்வதைவிட பயப்படுவார்கள். அதனால் அவர்கள் தேவைகளுக்காக நாங்கள் பிரத்யோகமாக சாஃப்ட்வேர் உருவாக்கி எங்கள் நிறுவனத்தில் உள்ள கம்ப்யூட்டர்களில் இன்ஸ்டால் செய்துகொள்வோம். அவர்களின் அன்றாடப் பணிகளுக்கான தகவல்களை அன்றன்றைய மாலை அவர்களிடம் இருந்து பெற்றுக்கொள்வோம். அன்று இரவுக்குள் டைப் செய்து மறுநாள் காலை அவர்கள் பணி துவங்கும் முன் அவர்களிடம் ப்ரிண்ட் அவுட் எடுத்து கொடுத்துவிடுவோம்.
இதுபோல தகவல்களை டைப் செய்து தரும் பணிக்கு ‘டேட்டா எண்ட்ரி’ என்று பெயர்.
அப்போதெல்லாம் கம்ப்யூட்டர் சயின்ஸை பாடமாக எடுத்துப் படிப்பவர்களே மிகக் குறைவு என்பதால் என்ன படித்திருந்தாலும் அவர்களுக்கு வேலை வாய்ப்பை கொடுத்து, கம்ப்யூட்டர் சொல்லிக் கொடுத்து அவர்களிடம் தகவல்களை டைப் செய்து வாங்குவோம். இந்தப் பணியை செய்பவர்களுக்கு ‘டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர்’ என்று பெயர்.
எத்தனை டேட்டா டைப் செய்கிறார்களோ, ஒரு டேட்டாவுக்கு இத்தனை ரூபாய் என்ற கணக்கில் அதற்கேப்ப சம்பளம்.
ஆரம்பத்தில் இந்தப் பணி செய்பவர்களுக்கு வேகம் வராது. மெதுவாகவே டைப் செய்வார்கள். 1 மணி நேரம் வேலை செய்தால் 25 டேட்டா மட்டுமே டைப் செய்தவர்களும் இருந்திருக்கிறார்கள். 1 மணி நேரத்தில் 100 டேட்டா டைப் செய்தவர்களும் இருந்திருக்கிறார்கள். அவரவர் வேகத்துக்கு ஏற்ப அவர்கள் சம்பளத்தில் கணக்கு வைத்துக்கொள்வோம்.
இந்தப் பணிக்கு பட்டப்படிப்புதான் தேவை என்றில்லை. +2 முடித்தவர்களைக் கூட பணிக்கு அமர்த்திக்கொள்வோம்.
ஒருமுறை கோயில் வாசலில் பூ வியாபாரம் செய்யும் பெண்மணியின் மகளை வேலைக்கு அமர்த்தினோம். +2 முடித்திருந்தார். அம்மாவுடன் அமர்ந்து பூ கட்டும் வேலையை செய்து வந்தார்.
எங்கள் நிறுவன சாஃப்வேர் தொழில்நுட்பப் பணியாளர் ஒருவரது வீட்டுக்கு தினமும் பூ கொடுக்கும் பெண்மணியின் மகள் அவர். எனவே அந்த அறிமுகத்தில் அந்தப் பெண்ணை பணிக்கு அமர்த்தினேன்.
அவருக்கு கம்ப்யூட்டர் சொல்லிக் கொடுத்து தொழில்நுட்பம் புரிய வைக்க ஒரு வாரகாலம் ஆனது.
அவர் எப்படி முயற்சித்தாலும் ஒரு மணிக்கு 25 டேட்டாவுக்கு மேல் தவறில்லாமல் டைப் செய்ய முடியவில்லை. ஒரு நாளைக்கு அதிகபட்சம் 200 டேட்டா டைப் செய்தாலே பெரிய விஷயம். அந்தக் கணக்கில் பார்த்தால் ஒரு நாளைக்கு 100 ரூபாய் மட்டுமே அவருடைய கணக்கில் சேரும். ஏனெனில் ஒரு டேட்டாவுக்கு ஐம்பது பைசா. அதுவே அந்த காலகட்டத்தில் அதிகம்.
ஒரு நாள் அவர் வேலைக்கு வரவில்லை. அவர் அம்மா வந்திருந்தார். எனக்கு சின்னதாக பதட்டம்.
என்ன ஏது என்று விசாரிப்பதற்குள் ‘என்னம்மா, என் பெண்ணை பிழியப் பிழிய வேலை வாங்கிட்டு இவ்ளோ கொறவா சம்பளம் கொடுக்கறே…’ என்ற தொணியில் பேச ஆரம்பித்தார்.
படிப்பின் அறிச்சுவடே இல்லாத அவரிடம் ஒரு டேட்டா டைப் செய்தால் இத்தனை பைசா, எவ்வளவு டைப் செய்கிறார்களோ அவ்வளவு ரூபாய் சம்பளம் என்று அவருக்குப் புரியும் விதத்தில் எடுத்துச் சொன்னேன்.
ஆனால் அவர் எதையும் காதில் வாங்கும் மனநிலையில் இல்லை.
‘எங்கூட உட்காந்து பூ தொடுத்தாக்கூட இதவிட அதிகம் சம்பாதிக்கும் என் மவ…’ என்று சொல்லிவிட்டு ஏதோ தனக்குள் பேசியபடி நகர்ந்துவிட்டார்.
அடுத்தநாள் அவர் மகளை வரச்சொல்லி சம்பளம் கொடுத்து அனுப்பி வைத்தேன்.
கம்ப்யூட்டரும் தொழில்நுட்பமும் அறிமுகமான காலகட்டத்தில் படித்தவர்கள் பணியில் இருக்கும் நிறுவனங்களே கம்ப்யூட்டர் வேலைவாய்ப்பை குறைத்துவிடும், வேலையில்லா திண்டாட்டம் அதிகமாகிவிடும், அது இளைஞர்களுக்கானது, ஆங்கிலம் பேசுபவர்களுக்கானது என்பது போன்ற போலி நம்பிக்கைகளில் உழன்று கொண்டிருந்தபோது மழைக்குக்கூட பள்ளிக்கூட வாசல் மிதிக்காத பூ வியாபாரம் செய்யும் பெண்மணி இப்படி பேசியதில் ஆச்சர்யம் ஏதுமில்லை.
இதை ஏன் சொல்கிறேன் என்றால், தொழில்நுட்பம் உச்சத்தில் இருக்கும் இன்றைய நிலை வருவதற்கு எங்களின் (எங்களைப் போன்ற சிலரின்) அயராத உழைப்பு மட்டுமல்ல எங்களைச் சுற்றி இயங்கி வந்த சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு நாங்கள் எடுத்துக்கொண்ட சலிக்காத மனோபாவமும் ஒரு காரணம்.
பூ விற்பனை செய்யும் பெண்மணியின் செய்கைக்குப் பிறகு, +2-வுக்குப் பின் பள்ளிப் படிப்பைத் தொடர முடியாதவர்களை டேட்டா எண்ட்ரி பணிக்கு வேலைக்கு அமர்த்தும் முன்னர் அவர்கள் வீட்டில் அண்ணன், அப்பா, அம்மா இப்படி யாரேனும் பெரியவர்கள் இருந்தால் அவர்களை அழைத்துவரச் சொல்லி அவர்களிடம் பணியின் தன்மையை எடுத்துச் சொல்லி, வேலைக்கான ஆர்டரை டைப் செய்து கொடுக்கும்போதே அதிலும் அந்த விவரங்களை தெளிவாக குறிப்பிடுவதை வழக்கமாக்கிக்கொண்டேன்.
தொழில்நுட்ப விழிப்புணர்வை உண்டாக்க எப்படி எல்லாம் செயல்பட்டிருக்கிறோம் பாருங்கள்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software