ஹலோ with காம்கேர் – 255
September 11, 2020
கேள்வி: பாரதி என்பது வெறும் பெயரல்ல, ஒரு குணம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட!
செப்டம்பர் 11. மகாகவி பாரதியார் நினைவு தினம்.
‘பாரதி கண்ட புதுமைப் பெண்’, ‘பெண் விவேகானந்தர்’ என்றெல்லாம் என்னை நன்கறிந்தவர்கள் சொல்வதுண்டு.
பாரதியை அணு அணுவாக கொண்டாடுபவர்களுக்கு நான் பாரதி கண்ட புதுமைப் பெண்ணுக்கான இலக்கணத்துடன் இருப்பதாக தோன்றுவதாலும், விவேகானந்தரை போற்றுபவர்களுக்கு நான் விவேகானந்தரின் இலக்கணத்துடன் வெளிப்படுவதாலும் அவர்கள் பார்வையில் என்னை அப்படி கொண்டாடுகிறார்கள். அவ்வளவுதான்.
உண்மையைச் சொல்ல வேண்டுமானால் நான் பாரதியையும் விவேகானந்தரையும் படிப்பதற்கு முன்பில் இருந்தே நான் இப்படியேதான் இருந்தேன்.
அவர்களை படித்த பிறகு என்னுடைய குணநலன்களும் கருத்துக்களும் அவர்களுடைய கருத்துக்களோடு ஒத்திருந்ததை எண்ணி பலமுறை நான் வியந்திருக்கிறேன்.
என் வாழ்க்கையில் பல சம்பவங்கள் விவேகானந்தரின் வாழ்க்கையோடு ஒத்திருப்பதை ஒப்பிட்டு வியந்து ‘இப்படிக்கு அன்புடன் மனசு’ என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறேன். (இந்த புத்தகம் குறித்து அறிய… http://compcarebhuvaneswari.com/?p=4841)
ஒருமுறை காந்திய ஆர்வலர் ஒருவர் என்னிடம், ‘உங்களைப் போன்றோர்கள் மனதில் காந்தி இயல்பாகவே வாழ்கிறார், நம் ஒவ்வொருக்குள்ளும் வாழும் நற்குணமே காந்தி’ என்றார்.
உண்மைதான். நம் ஒவ்வொருவருக்குள்ளும் வாழ்கின்ற நல்ல குணநலன்களும் சிறப்பான எண்ணங்களுமே காந்தி, பாரதி, விவேகானந்தர் என ஒப்பீட்டு உருவம் கொள்கிறது.
புதுமையான சிந்தனைகள் பாரதியையும், வீரமும் விவேகமும் விவேகானந்தரையும், அஹிம்சை காந்தியையும் நினைவு கூர்கிறது. அவ்வளவுதான்.
அப்படிப் பார்த்தால் பாரதியார், விவேகானந்தர், காந்தி இவர்கள் வாழ்ந்து சென்ற மனிதர்கள் அல்ல, உயர்வான குணநலன்கள், சீரிய சிந்தனைகள்.
இன்னும் புரியும்படி சொல்ல வேண்டுமானால் அன்பு, பாசம், நேசம், பரிவு, கருணை, கரிசனம் போல பாரதி, விவேகானந்தர், காந்தி இவையும் குணநலன்கள்.
நான் நானாக வாழ்கிறேன். அந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ள வரம். பெற்றோர்கள் எனக்குக் கொடுத்த அந்த வரத்தை வெளி உலகிலும் ‘சரியாக’ (Note this point) பயன்படுத்துவது என்பது அத்தனை சுலபமல்ல.
நம் சுயத்தை முறிக்க எத்தனையோ சக்திகள் வெறித்தனமாக காத்திருக்கும். அவற்றை எல்லாம் புறந்தள்ளிக் கொண்டு முன்னேறுவதற்கு திடமான மன உறுதி வேண்டும்.
இந்த மன உறுதியைப் பெற என் பெற்றோர் ‘நான் நானாக’ வாழும் வரத்தை வழங்கியபோதே ஐந்து அம்சக் கொள்கைகளையும் சேர்த்தே கற்றுக்கொடுத்தார்கள்.
1.நமக்காக சில நல்ல பழக்க வழக்கங்களை கொள்கைகளை வைத்துக்கொள்ள வேண்டும். பணத்துக்காகவும் புகழுக்காகவும் இன்ன பிற விஷயங்களுக்காகவும் நம் சுயத்தை இழக்கக் கூடாது. மற்ற எல்லாவற்றையும்விட மன நிம்மதிதான் முக்கியம்.
2.அதுபோல பணம் மற்றும் பதவியின் அடிப்படையில் மனிதர்களை எடைபோடக் கூடாது. எல்லோரையும் சமமாக பாவிக்க வேண்டும்.
3.யாரையும் பிரபலம் என்று கொண்டாட தேவையில்லை. எழுத்தோ, பேச்சோ, ஓவியமோ, நடிப்போ அவரவர்கள் திறமை. அவரவர்கள் பணி. அந்த அளவில் அவர்களுக்கு மதிப்புகொடுத்தால்போதும். சேவைசார்ந்த பிற பணிகள்போல கலைச் சார்ந்த பணிகள் அவை. அவ்வளவுதான்.
4.எந்த ஒரு பிரச்சனைக்கும் நேர்மையான முறையில் போராடலாம். அதன் பலன் பாசிட்டிவாக இருந்தாலும் நெகட்டிவாக இருந்தாலும் கவலைப்பட வேண்டாம். முயற்சி செய்தோம் என்ற மனநிறைவே வெற்றிதான்.
5.தேவையான நேரங்களில் மென்மையாகவும், அவசியமான சூழலில் கடுமையாகவும், முக்கியமான சந்தர்பங்களில் நியூட்ரலாகவும் வாழப் வேண்டும்.
நல்லதோர் வீணை செய்தே – அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி – எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
வல்லமை தாராயோ, – இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
பாரதியின் பாடல்வரிகளில் எனக்கு மிகவும் பிடித்தது இதுதான்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software