ஹலோ With காம்கேர் -256: எல்லா நேரங்களிலும் நேர்மையை நிரூபிக்க வேண்டுமா?

ஹலோ with காம்கேர் – 256
September 12, 2020

கேள்வி: எல்லா நேரங்களிலும் நேர்மையை நிரூபிக்க வேண்டுமா?

எந்த ஒரு விஷயத்துக்கும் பல பார்வைகள் இருக்கும். அதுவும் ஆன்லைனில் நாம் எழுதும் புள்ளி, கமா முதற்கொண்டு ஒவ்வொரு எழுத்துக்கும் ஓராயிரம் பார்வைகள். புகைப்படத்தின் ஒவ்வொரு பிக்ஸலும் ஆயிரம் ஆயிரம் கண்ணோட்டத்தைக் கடந்து செல்லும். வீடியோவாக இருந்தால் ஒவ்வொரு அசைவும் ஆயிரம் அர்த்தங்களையும் அதிர்வுகளையும் உண்டாக்கும்.

இவை எல்லாவற்றையும் கடந்து, எழுத்தோ, படமோ, வீடியோவோ, ஆடியோவோ எதுவாக இருந்தாலும் பதிவிடும் நமக்கென ஒரு பிரத்யோகமாக ஒரு பார்வை இருக்கும்.

நித்தம் முடிந்தவரை நான் எந்த கோணத்தில் சொல்கிறேன் என்பதை மிகத் துல்லியமாக புரிய வைத்துக்கொண்டேதான் கடந்து செல்கிறேன்.

நான் கல்லூரியில் படித்த காலத்திலேயே தனித்துவமாகவே செயல்படும் குணமுள்ளவள் என்ற நோக்கில் சென்ற வருடம் ஒரு நிகழ்வை பதிவாக்கி இருந்தேன்.

இது இரண்டு விதமான கோணத்தில் புரிந்துகொள்ளப்பட்டது.

இப்போது அந்த பதிவின் ஒரு பகுதியை பகிர்கிறேன். இது எந்தவிதமான அதிர்வை ஏற்படுத்தியது என்பதை கடைசியில் சொல்கிறேன்.

நான் மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரியில் எம்.எஸ்.ஸி படித்துக்கொண்டிருந்தபோது எங்கள் வகுப்பில் படித்த ஒரு மாணவிக்கு அதே ஊரில் திருமணம்.

துறைத்தலைவரிடம் அனுமதி பெற்று கல்லூரிக்கு 2 மணிநேரம் தாமதமாகச் செல்வதாக ஏற்பாடு.

எங்கள் வகுப்பு எண்ணிக்கை மொத்தம் 21. அதில்  6 மாணவிகள். மற்றவர்கள் மாணவர்கள்.

அனைவரும் மாணவியின் திருமணத்துக்குச் சென்றோம். அந்த மகிழ்ச்சியில் அப்படியே அனைவரும் திரைப்படத்துக்குச் செல்வதாக ஏற்பாடு செய்துவிட்டார்கள். துறைத்தலைவரிடம் கேட்டதோ 2 மணிநேர பர்மிஷன் மட்டுமே.

வகுப்பில் உள்ள அத்தனை மாணவர்களும் சினிமாவுக்குச் சென்றுவிட்டார்கள். நான் மட்டும் செல்லவில்லை.

திருமண மண்டபத்தில் இருந்து நேராகக் கல்லூரிக்குச் சென்றேன். கல்லூரி லைப்ரரியில் படித்துக்கொண்டிருந்தேன்.

வகுப்புக்குச் சென்றால் மற்ற மாணவர்கள் சினிமாவுக்குச் சென்றதை நான் புகார் அளித்ததைப் போலாகிவிடுமே என்ற எண்ணத்தில் வகுப்பறைக்கும் செல்லவில்லை. துறைத்தலைவரையும் சந்திக்கவில்லை.

மாணவர்கள் அனைவரும் சினிமா முடிந்து மதியம்தான் வகுப்புக்குத் திரும்பினார்கள்.

நானும் அவர்களுடன் சேர்ந்து வகுப்புக்குச் சென்றேன். எங்கள் மீது துறைத்தலைவருக்கு கடுமையான கோபம். தவறுக்கு தண்டனையாக அனைவரையும் வகுப்புக்கு வெளியே நிற்க வைத்தார். பதினைந்து இருபது நிமிடங்களுக்குப் பிறகு மன்னிப்புக் கேட்ட பிறகு வகுப்புக்குள் அனுமதித்தார்.

இந்த நிகழ்வில் நான் ஆசிரியர் இட்ட கட்டளையை மீறாமல் அவர் கொடுத்த 2 மணிநேர பர்மிஷனுடன் கல்லூரிக்குத் திரும்பினேன். ஆனாலும் நானும் சேர்த்தே தண்டனையை அனுபவிக்க வேண்டியதாகிவிட்டது.

என் நேர்மையை நான் நிரூபிக்க முயலவில்லை. அதே நேரம் மற்ற மாணவர்களையும் காட்டிக்கொடுக்க முயற்சிக்கவில்லை. என் மனதுக்கு நான் நேர்மையாக செயல்படுவது எனக்கு சந்தோஷத்தையும் பூரணத்துவத்தையும் கொடுப்பதே எனக்கு நிறைவாக இருந்தது.

இன்றுவரை நானும் சளைக்காமல் என் குணத்தை மாற்றிக்கொள்ளாமல் எல்லா சூழலையும் நேர்மையாகவே கடந்து வருகிறேன்.

இப்படி சின்ன சின்ன விஷயங்களிலும் நேர்மையாக இருந்ததினால்தான் எனக்கான பாதையை போட்டு அதில் தனித்துவத்துடன் செல்ல முடிகிறது.

இதனால்தான் தனித்துவத்துடன் இருப்பவர்களை என்னால் சுலபமாக அடையாளம் காணவும் முடிகிறது. அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உதவவும் முடிகிறது. நல்ல நிர்வாகத் திறமையுடன் செயல்படவும் முடிகிறது.

நேர்மையாகவும் தனித்துவமாகவும் இருப்பது அப்போதைக்கு வேண்டுமானால் கஷ்டமாக இருக்கலாம். தொலைநோக்குப் பார்வையில் அதன் பலன் இருக்கத்தான் செய்கிறது.

இதுதான் அந்த பதிவின் சாராம்சம். இது இரண்டு விதமான அதிர்வுகளை ஏற்படுத்தியதாக சொல்லி இருந்தேன் அல்லவா?

ஒன்று, மதிப்பெண் பெற வேண்டும், ஆசிரியர்களிடத்தில் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்கின்ற நோக்கில் செயல்படும் மாணவர்களுக்கே உரித்தான குணம் இது. இதில் ஒன்றும் நியாய தர்மங்கள் எல்லாம் இல்லை. நீங்கள் ஒன்றும் அரிச்சந்திரன் அல்ல என்று ஒரு பார்வை. இவர் வயது 40+.

மற்றொன்று, உண்மைக்காக எந்த தண்டனையையும் தாங்கிக்கொள்ளும் பக்குவதுடன் செயல்படுவதே சத்யாகிரஹத்தின் அடிப்படை. அதை செயல்படுத்திய அதே நேரம் தம்முடன் படிக்கின்ற சக மாணவர்களையும் காட்டிக்கொடுக்காமல் பக்குவமாக செயல்பட்டது பாராட்டுக்குறியது, அதுவும் அந்த இளம் வயதில் என்றொரு பார்வை. இவர் வயது 80+.

இந்த இரண்டு கருத்துக்களையும் தாண்டி இந்த நிகழ்வில் எனக்கென ஒரு பார்வை உண்டு. எல்லா நேரங்களிலும் நேர்மையை நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நேர்மை நிரூபணம் செய்ய வேண்டிய விஷயம் அல்ல. உணர வேண்டிய விஷயம் என்பது என் கருத்து.

இந்த நிகழ்வில் மூவருமே அவரவர் இயங்கும் தளத்தில் அவரவர் களத்தில் இருந்து சிந்தித்திருப்பதை கவனியுங்கள்.

இந்த மூன்று கருத்துக்களும் அவரவர் தரத்தை புடம்போட்டு காட்டுகின்றன அல்லவா?

எழுதுபவர்களை மட்டும் மற்றவர்கள் கவனிப்பதில்லை. அந்த எழுத்துக்குப் பின்னூட்டம் இடுபவர்களையும் மற்றவர்கள் உன்னிப்பாக கவனிக்கிறார்கள்.

எழுத்துக்கு இணையான மதிப்பை பின்னூட்டங்களும் பெறுகின்றன.

எண்ணும் எண்ணத்தில் கண்ணியம் காப்போம். பேசும் வார்த்தைகளில் நயத்தைக் கூட்டுவோம். எழுதும் எழுத்தில் கவனம் வைப்போம்.

ஃபேஸ்புக்கில் எந்த பதிவையும் எழுதாத என் பதிவுகளின் பின்னூட்டத்தில் மட்டுமே சந்தித்துக்கொண்ட இருவர் காதலித்து திருமணம் செய்துகொண்ட சுவாரஸ்யங்கள் எல்லாம் நடந்திருக்கின்றன.

பிறகொரு சந்தர்பத்தில் அவற்றை பகிர்கிறேன்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 23 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon