ஹலோ with காம்கேர் – 264
September 20, 2020
கேள்வி: வதந்திகள் எப்படி பரவுகின்றன?
நடந்த ஒரு நிகழ்வு செய்தியாக ஒருவர் வாயில் இருந்து புறப்பட்டு மற்றொருவர் வாயிற்குச் செல்லும்போதே அதன் உண்மைத் தன்மையில் கொஞ்சம் சிதைவு உண்டாகும். அது அவரிடம் இருந்து புறப்பட்டு அடுத்தவர் வாயிற்குச் செல்லும்போது இன்னும் கொஞ்சம் சிதையும். இப்படியாக வட்ட வடிவில் இருக்கும் ஒரு செய்தி கடைசி மனிதருக்கு கடத்தப்படும்போது ஒரு புள்ளியைவிட சிறியதாக சிதைந்து உருமாறிவிடும். அது அப்படியே மக்கிப் போய்விட்டால் பிரச்சனை இல்லை. அது உண்மை செய்திக்கு கொஞ்சமும் பொருந்தாத வேறொரு உருவம் எடுத்து பிறர் கவனத்தை திசை திருப்பும். அதுதான் வேதனை.
ஏனெனில் எல்லோருடைய புரிதலும் ஒன்றாக இருப்பதில்லையே.
உண்மையிலேயே ஒரு செய்தி புரியாமல் இப்படி வதந்தியாக உருமாற்றம் அடைவது ஒரு வகை என்றால், ஒரு செய்தியை வேண்டுமென்றே சிதைத்து தவறாகவே பரப்புவது மற்றொரு வகை வதந்தி.
இப்போதெல்லாம் எது உண்மை எது பொய் என ஆராய்ந்து அறிவதற்கெல்லாம் யாருக்கும் பொறுமை இருப்பதில்லை. தங்கள் கைகளில் உள்ள மொபைலும் கண் எதிரே உள்ள தொலைக்காட்சியும் என்ன காட்டுகிறதோ அது தானாகவே உள் சென்று உட்கார்ந்துவிடுகிறது.
எது உண்மை, எது வதந்தி என்றெல்லாம் யோசிக்கவும் யாருக்கும் பொறுமை இருப்பதில்லை.
2000-ம் ஆண்டு ஜெயா டிவியில் நான் கொடுத்த ஒரு நேர்காணலில் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து ஒரு தகவலை சொல்லி இருந்தேன்.
தொழில்நுட்பத்தில் கம்ப்யூட்டர்களின் விலையும், அதில் நாம் பயன்படுத்தும் சாஃப்ட்வேர்களின் விலையும் குறையும்போது மக்களிடம் வேகமாக சென்றடைய வாய்ப்புண்டு. மேலும் மொழியும் தடையாக இருக்கக் கூடாது. அவரவர் தாய்மொழியில் கம்ப்யூட்டரைப் பயன்படுத்த முடியும் என்ற நிலை வரும்போது தொழில்நுட்ப வளர்ச்சி உச்சத்துக்கு செல்லும் என்று சொல்லி இருந்தேன்.
என் தொலைநோக்குப் பார்வை அது.
கம்ப்யூட்டரின் விலை குறைப்பாலும் அவரவர் தாய்மொழியில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் வசதிகள் பெருகியதாலும் இன்று தொழில்நுட்ப வளர்ச்சி உச்சத்துக்குச் சென்று 20 வருடங்களுக்கு முன்னர் நான் சொன்னதை நிரூபணம் செய்துள்ளது.
அந்த நேர்காணலை பார்த்துவிட்டு மளிகைக்கடை வியாபாரி ஒருவர் என்னிடம் முன் அனுமதி பெறாமலேயே என்னை சந்திப்பதற்காக காஞ்சிபுரத்தில் இருந்து நேரடியாகவே வந்துவிட்டார். எப்படி முகவரி கிடைத்தது என்று கேட்டதற்கு டிவி ஆஃபிஸில் வாங்கினேன் என்று சொன்னார்.
அவர் வியாபாரத்தில் பயன்படுத்தும் வகையில் ஒரு சாஃப்ட்வேர் தயாரித்துக் கொடுக்கும்படி கேட்டார். அவருக்கு என்ன தேவை என்று சொன்னார்.
நான் அதை உள்வாங்கிக்கொண்டு அதற்கு குறைந்தபட்சம் ஐம்பதனாயிரம் ரூபாய் ஆகும் (அன்று அந்த கட்டணம்) என்று சொன்னபோது அவர் முகம் அப்படியே சுருங்கி விட்டது.
‘டிவி பேட்டில சாஃப்ட்வேரின் விலை 100 ரூபாய்க்கு வந்தால் அது எல்லா தரப்பு மக்களையும் சென்று சேரும்னு சொன்னீங்க. நேர்ல பார்க்கும்போது அம்பதாயிரம்னு ஒரு குண்டை தூக்கிப் போடறீங்க…’ என்றார்.
‘சரி சார், எவ்வளவு செலவாகும் என்று நினைத்து என்னிடம் பேச வந்தீர்கள்?’ என்றேன்.
‘என்ன ஒரு 100, 200 ஆகும் என நினைத்தேன்…’
நான் சற்று அதிர்ந்தேன். ஆனாலும் அவருக்குப் புரியும்படி எடுத்துச் சொன்னேன்.
‘சார், கம்ப்யூட்டரை இயக்குவதற்கும் அதில் படம் வரையவும், பாட்டுப்பாடவும், புரோகிராம் எழுதவும் உதவக்கூடிய அடிப்படை சாஃப்ட்வேர்களின் விலை குறையும்போது மக்கள் அதன் ஒரிஜினல் வெர்ஷனை வாங்குவார்கள், இல்லை எனில் அது சட்டத்துக்கு விரோதமாக காப்பி செய்தே பயன்படுத்துவார்கள் (பைரட்டட்) என்று சொல்லி இருந்தேன்.
அவை ஒரு முறை தயாரிக்கப்பட்டு கோடிக்கணக்கான மக்களின் பயன்பாட்டுக்காக விடப்பட்டு விற்பனை ஆகக் கூடியவை. உதாரணத்துக்கு விண்டோஸ் என்ற சாஃப்ட்வேர் ஒரு முறை தயாரிக்கப்பட்டால் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் அனைவருக்கும் போய் சேரும். அதன் விலை குறைவாக இருந்தால் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் விலை கொடுத்து வாங்குவார்கள்.
அதுபோல மைக்ரோசாஃப்ட் வேர்ட், எக்ஸல், ஃபோட்டோஷாப், கோரல் டிரா, ஃப்ளாஷ் இப்படியான சாஃப்ட்வேர்களும் பொதுவான சாஃப்ட்வேர்கள். ஒருமுறை தயாரித்து வருடா வருடம் அப்டேட் செய்து விற்பனை செய்துகோண்டே இருக்கலாம்.
ஆனால் நீங்கள் கேட்பது கஸ்டமைஸ்டு சாஃப்ட்வேர். ஒருமுறை உங்களுக்காக தயாரித்தால் அதை மற்றொரு கஸ்டமருக்கு விற்பனை செய்ய முடியாது. உங்கள் தேவைக்காக உங்கள் விருப்புகளுக்கு ஏற்ப புரோகிராம் எழுதுவதால் அதற்கு எடுத்துக்கொள்ளும் நேரமும், உழைப்பும் மிக அதிகம். அதனை 100 ரூபாய்க்கும் 200 ரூபாய்க்கும் தயார் செய்யவே முடியாது…’ என்று எவ்வளவு புரியும்படி எடுத்துச் சொல்லியும் அவர் ஏமாற்றத்துடனேயே கிளம்பிச் சென்றார்.
கிளம்பிச் சென்றவர் ஜெயா டிவிக்கு போன் செய்து நான் விரிவாக சொன்னதை சொல்லாமல் அவர் புரிந்துகொண்டதை ஆதங்கமாக கோபமாக சொல்லி இருக்கிறார்.
இந்த விஷயம் எனக்கு பல வருடங்களுக்குப் பிறகுதான் தெரிந்தது. மற்றொரு நிகழ்ச்சிக்காக ஜெயா டிவியில் இருந்து என்னை அணுகியபோது அந்த டீமில் இருந்தவர் என்னிடம் பகிர்ந்துகொண்டார்.
அவர்கள் என்ன புரிந்துகொண்டிருப்பார்களோ யார் அறிவார்? காரணம் தொழில்நுட்பத்தின் அறிமுக காலகட்டம் அது.
இப்படியாக ஒருவர் மீதான பிம்பம் உருமாற்றம் அடைவதற்கு இதுவே ஓர் ஆகச் சிறந்த உதாரணம்.
எங்கள் காம்கேர் மூலம் தொழில்நுட்பத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது ஒரு பணி என்றால், தொழில்நுட்பம் சார்ந்த பல தவறான புரிதல்களை நீக்குவதற்கும் அதற்கு இணையான உழைப்பு தேவையாக இருந்தது.
அந்தப் பணியை சலிக்காமல் சளைக்காமல் செய்து வந்தோம். தொழில்நுட்பப் புரட்சியில் எங்கள் காம்கேரின் பங்கு அளப்பறியது.
ஜெயா டிவியில் 2000-ம் ஆண்டு வெளியான நேர்காணலில் தொழில்நுட்ப வளர்ச்சி எப்போது சாத்தியமாகும் என்பதற்கு தொலைநோக்குப் பார்வையில் நான் கொடுத்த விளக்கத்தை நீங்களே பாருங்களேன். (ஒரு நிமிட வீடியோதான்)
https://www.facebook.com/100001937835224/videos/4359763980764820/?extid=SC4lq68D8DiBnU24
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software