ஹலோ with காம்கேர் – 265
September 21, 2020
கேள்வி: செய்யும் தொழிலே தெய்வம் என்ற தத்துவத்தை 10 வயதிலேயே புரிந்துகொள்ள முடியுமா?
நிச்சயமாக புரிந்துகொள்ள முடியும். நான் என் பத்து வயதில் இருந்து எழுதி வருகிறேன் (Almost Daily) என்பது உங்களில் பெரும்பாலானோருக்குத் தெரிந்திருக்கும். பலமுறை சொல்லி இருக்கிறேன்.
நான் எழுதி பத்திரிகையில் வெளியான முதல் கதையின் தலைப்பு என்ன தெரியுமா? செய்யும் தொழிலே தெய்வம்.
அந்தக் கதை கோகுலம் பத்திரிகையில் வெளியானது. அந்தக் கதையெல்லாம் இப்போது எதற்கு என கேட்கிறீர்களா?
என் முதல் கதை வெளியானபோது குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்கள்தான் கோகுலம் பத்திரிகையின் எடிட்டராக பணியில் இருந்தார்.
25 வருடங்கள் கழித்து அவர் எழுதிய பாடல்களில் சிலவற்றை தேர்ந்தெடுத்து ‘பேரன் பேத்திப் பாடல்கள்’ என்ற அனிமேஷன் படைப்பாக சிடி வடிவில் வெளியிட்டோம். அவற்றை எங்கள் காம்கேர் டிவி யு-டியூப் சேனலிலும் பார்த்து ரசிக்கலாம்.
என் கதையை வெளியிட்டரின் வாழ்க்கைக் குறிப்பை அனிமேஷனில் படைத்ததுடன் அவருடைய பாடல்களையும் தொழில்நுட்பத்துடன் இணைத்து வெளியிட்டதை நினைத்து மகிழ்ந்திருக்கிறேன்.
ஒருவர் நம் திறமையை அங்கீகரித்து முதன் முதலில் உலகுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். அது ஒரு நிகழ்வு அவ்வளவுதான். அதற்கு நன்றி சொல்வதற்கான சூழலை இயற்கை தானாகவே ஏற்படுத்திக்கொடுத்ததுதான் ஆச்சர்யமான விஷயம். அந்த ஆச்சர்யம் என் வாழ்க்கையில் நடந்திருப்பது எனக்கு இன்றளவும் வியப்பு.
அவரை நேரில் சந்தித்ததில்லை. ஆனால் அவர் மகனை நேரில் சந்தித்திருக்கிறேன். அவரது பாடல்களை கட்டணம் கொடுத்து வாங்கி உரிமம் பெற்ற பிறகே அனிமேஷனில் குழந்தைகளுக்காக வெளியிட்டோம். நாங்கள் வெளியிட்ட வருடம் குழந்தைக் கவிஞரது பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்படவில்லை. அதற்கு அடுத்த வருடம்தான் நாட்டுடைமை ஆனது.
குழந்தைக் கவிஞரின் வாழ்க்கைக் குறிப்பு 3 நிமிட அனிமேஷனில் உங்கள் பார்வைக்காக!
https://www.facebook.com/100001937835224/videos/4364587170282501/?extid=DguJj2J7dFRbMtxU
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
குறிப்பு:
நான் எழுதி வெளியான முதல் கதையான ‘செய்யும் தொழிலே தெய்வம்’ படிக்க http://compcarebhuvaneswari.com/?p=2659
எங்கள் காம்கேரின் ‘பேரன் பேத்திப் பாடல்கள்’ (குழந்தைக் கவிஞரின் பாடல்களின் தொகுப்பு) அனிமேஷனில் ரசிக்க இங்கே செல்லவும்… https://youtu.be/xLdSMGV37Co