ஹலோ with காம்கேர் – 271
September 27, 2020
கேள்வி: நூலகம் என்பதன் பொருள் என்னவாக இருக்கும்?
அகத்துக்கு புத்துணர்வு கொடுக்கும் நூல்களை தன்னுள் வைத்திருப்பதால் நூலகம் (நூல் + அகம்) என்ற பெயர் வந்திருக்கலாம்.
நான் எழுதிய தொழில்நுட்பப் புத்தகங்கள் விற்பனை நிலையங்களில் விற்பனை ஆவதைவிட நூலகங்களாலும், கல்விக்கூடங்களாலும் மிகப் பரவலாக பொதுமக்களுக்கு அறிமுகம் ஆயின.
குறிப்பாக அரசுப் பள்ளிகள், அரசு மருத்துவமனைகள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், காவல் துறை, தொலைபேசி துறை, ரயில்வே துறை, வங்கிகள், நீதிமன்றங்கள் என ஆங்கிங்கெனாதபடி பரவலாக அனைத்துத்துறையினரும் பெரும்பாலும் என் புத்தகங்கள் வாயிலாக முதன் முதலில் தொழில்நுட்பம் கற்றனர் என்பது என் உழைப்புக்குக் கிடைத்த மரியாதை.
ஏன் சினிமா துறையினர் கூட தொழில்நுட்பம் சார்ந்த அனிமேஷன்களை அறிமுகம் செய்த ஆரம்ப காலத்தில் என்னை அணுகி அவர்களுக்கான அனிமேஷன் தயாரிப்புகளை செய்துதர இயலுமா என கேட்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் என் புத்தகங்கள் உதவி இருக்கின்றன. அவர்களில் ஒருசிலருக்கு பயிற்சியும் கொடுத்திருக்கிறேன்.
ஐ.ஐ.டி மாணவர்கள் முதல் அமெரிக்காவில் உயர்படிப்பு படிக்கும் நம் இந்திய மாணவர்கள் வரை இன்றும் ஜாவா, டாட் நெட், பிக் டேட்டா ஆரக்கிள் என உயர் தொழில்நுட்பங்களுக்கு என் புத்தகங்களை ரெஃபரென்ஸ் புத்தகங்களாக பயன்படுத்தி வருகிறார்கள்.
சாஃப்ட்வேர் துறை சார்ந்த பல்வேறு எம்.என்.சி நிறுவங்கள் தங்கள் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு என் புத்தகங்கள் வாயிலாக பயிற்சி கொடுத்து வருகின்றனர்.
1992-2000: அச்சுப் புத்தகங்கள் மட்டுமே வந்துகொண்டிருந்த அந்த நாட்களிலேயே நாங்கள் Computer Based Tutorial (CBT), Web Based Tutorial (WBT), Audio Baseds Tutorial (ABT) என புத்தகங்களின் பல்வேறு பரிணாமங்களை ஆடியோ, வீடியோ, எலக்ட்ரானிக் புத்தகங்களாக முதன்முதலில் அறிமுகப்படுத்தியது எங்கள் காம்கேர் நிறுவனமே.
இன்று அமேசானில் நீங்கள் அனைவரும் படிக்கும் இ-புத்தகங்களுக்கெல்லாம் அவை முன்னோடி என்பது குறிப்பிடத்தக்கது.
பொது மக்களுக்கு தமிழில், பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் என இரண்டு மொழிகளிலும் 100-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி உள்ளேன்.
தமிழகம், இந்தியா மட்டுமில்லாமல் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, அமெரிக்கா என பல்வேறு நாடுகளில் உள்ள நூலகங்களும், கல்விக்கூடங்களும் என் திறமையை கெளரவித்து வருகின்றன.
நான் இயங்கும் துறை தொழில்நுட்பம். என் நிறுவனம் காம்கேர் சாஃப்ட்வேர். 28 வருடங்களாக சாஃப்ட்வேர், அனிமேஷன், மொபைல் ஆப், ஆவணப்படங்கள் என தொழில்நுட்பத்தின் அத்தனை விஷயங்களிலும் கவனம் செலுத்தி வருகிறோம். அதன் மூலம் கிடைக்கும் என் அனுபவங்களை புத்தகங்களாக பதிவு செய்து வருகிறேன். இப்படி என் மூச்சாக இருந்து என்னை சுவாசிக்க வைக்கும் எழுத்துக்கு மகுடம் சூட்டிவரும் அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றிகள்.
—****—
சமீபத்தில் கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளங்கோடு அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியை உயர்திரு. எல். மீனாம்பிகா அவர்களிடம் இருந்து என் புத்தகங்கள் குறித்து வந்திருந்த மின்னஞ்சலை இன்றைய பதிவில் பகிர்ந்துகொள்கிறேன்.
இனி தலைமை ஆசிரியை மீனாம்பிகா அவர்களின் வார்த்தைகளில்…
‘வணக்கம். நான் தற்போது வெள்ளாங்கோடு அரசு ஆரம்பப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றுகிறேன்.
2004-ம் ஆண்டு என நினைக்கிறேன். அப்போது நான் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தேன். அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்க அரசு சர்க்குலர் அனுப்பியது. ஒரே ஒரு நிபந்தனை. அவர்கள் வீட்டில் கம்ப்யூட்டர் இருக்க வேண்டும் என்பதே.
பின்னர் அவர்கள் ஏனைய ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். எனது வீட்டில் கம்ப்யூட்டர் இருந்த காரணத்தால் என்னையும் பயிற்சி கொடுக்கும் ஆசிரியராக பயிற்சிக்கு அனுப்பியது.
நான் முறையாக கம்ப்யூட்டர் பயின்றவள் அல்ல. 2001-ல் எனது வீட்டுக்காரர் சுமார் 60 ஆயிரம் ரூபாய் செலவில் கம்ப்யூட்டர் வாங்கி வைத்திருந்தார். எனது வீட்டுக்காரர் அவரது வேலைக்காக பயன்படுத்திய நேரம் போக கம்ப்யூட்டரில் எங்கள் மகன் அதில் பெயிண்ட் புரோகிராமில் கலர் அடிப்பதும், பைக் ரேஸ் விளையாட்டு விளையாடுவதும், இடையிடையே ஏ.பி.சி,டி என ஆல்பபெட் படிப்பதும் என இருந்தான்.
எனக்கும் கம்ப்யூட்டர் ஆப்பரேட் செய்ய கற்றுத்தந்தார். கூடவே மகனும் கம்ப்யூட்டர் குறித்துச்சொல்லித்தந்தான். எனது வீட்டுக்காரர் சொல்லித்தந்த சொற்பமான செய்முறை பயிற்சி மட்டுமே எனக்கு உண்டு.
பயிற்சிக்குச்சென்ற இடத்திலும் விசேஷமாக எதையும் அவர்கள் சொல்லித்தரவில்லை. மைக்ரோசாஃப்ட் பற்றி 300 பக்கம் கொண்ட ஒரு பெரிய புத்தகம் தந்தார்கள். அதைப்புரட்டிப்பார்க்கவே மலைப்பாக இருந்தது.
நான் முதலில் வேலை பார்த்த பள்ளிக்கூடத்தில் கணினி அறிவியல் குறித்து ஏராளமான புத்தகங்கள் இருந்தது. அந்த பள்ளிக்கூடத்தில் நூலகப்பொறுப்பு எனக்கு கிடைத்த நேரத்தில் வேறு பள்ளிக்கூடத்திற்கு மாற்றலானது. மீண்டும் அங்கு போய் புத்தகம் எடுக்க இயலாது.
எங்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சி வகுப்பில் MS-WORD, MS-EXCEL, EMAIL, MS-POWERPOINT, PAINT இவ்வளவுதான். ஆனால் அதை எப்படி இந்த ஆசிரியைகளுக்கு சொல்லிக்கொடுப்பது என்றுதான் புரியவில்லை.
இந்நிலையில் குலசேகரத்தில் உள்ள ஊர்ப்புற நூலகத்தில் எட்டிப்பார்த்தேன். அங்கே கம்ப்யூட்டர் குறித்து சில தலைப்புகளில் இருந்த சில நூல்களைப்பார்த்ததும், அதில் என்ன சொல்லியிருக்கிறார்கள் எனப் புரட்டிப் பார்த்தேன்.
அந்த புத்தம் புதிய புத்தகங்களின் முகப்பில் ‘காம்கேர் புவனேஸ்வரி’ என எழுதியவர் பெயர் காணப்பட்டது. புத்தகத்தில் சொல்லியிருப்பவை எளிதில் மனதில் ஈர்க்கவே, ‘அடடா நான் தேடிக்கொண்டிருந்த புத்தகங்கள் இவைதான்’ என முடிவு செய்து புத்தகங்களை படிப்பதற்காக வீட்டுக்கு எடுத்து வந்தேன்.
பயிற்சி வகுப்பில் தந்திருந்த குறிப்பேடுகளையும், நீங்கள் எழுதிய புத்தகங்களில் சொல்லியிருந்த எளிய முறையிலான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தையும் ஒப்பிட்டு புரிந்து கொண்டேன். அதை அப்படியே குறிப்பெடுத்து பிற ஆசிரியர்களுக்கு சொல்லிக்கொடுத்தேன்.
பயிற்சி வகுப்பில் நான் கற்றதை விட உங்கள் புத்தகங்கள் வாயிலாக மிகவும் வேகமாக, எளிதாகக் கற்றுக்கொண்டேன் என்பதே உண்மை.
உங்கள் புத்தகங்களைப்படித்து விட்டு எனது கணவரிடம் கொடுத்து, ‘காம்கேர் புவனேஸ்வரி எழுதிய புத்தகங்கள் எளிமையாக இருக்கிறது’ என்றவாறு அவரிடம் படிக்கக்கொடுக்க, அவரும் புத்தகங்களை ஆச்சரியமுடன் வாங்கிப் பார்த்தார்.
உங்கள் புத்தகத்தை சீரியசாக படித்து பயிற்சி வகுப்புகளில் ஏனைய ஆசிரியர்களுக்கும் நான் தெளிவாக, புரியும்படியாக எளிமையாகச் சொல்லிக்கொடுக்க, அவர்கள் மகிழ்ந்தனர்.
இத்தனைக்கும் எங்களுக்குப் பயிற்சி கொடுத்த பயிற்சியாளர்கள் எம்.சி.ஏ படித்தவர்கள். அந்த பயிற்சியாளர்கள் சொல்லிக்கொடுத்ததை எனது சக ஆசிரியர்களால் புரிந்து கொள்ள இயலாமல் திணற, ‘இதெல்லாம் நமக்கு சரிப்படாது’ என வருத்தப்பட்டனர்.
ஆனால் உங்களின் எளிய கம்ப்யூட்டர் புத்தகங்களில் கற்றுக்கொண்ட பாடங்களால், நான் கம்ப்யூட்டரை இயக்க நன்கு கற்றுக்கொண்டதோடு, பிற ஆசிரியர்களுக்கும் ஐயம் திரிபுற கற்றுக்கொடுத்தேன். என்னுடன் பயிற்சிப்பெற்ற ஆசிரியர்கள் இன்றைக்கும் ஏதாவது கம்ப்யூட்டர் குறித்த சந்தேகம் எனில் என்னைத்தான் கேட்பார்கள்.
எனது கணவர் கூட இவ்வளவு சீக்கிரம் நான் கம்ப்யூட்டர் இயக்கக்கற்றுக்கொண்டதைப்பார்த்து ஆச்சரியப்பட்டார். இத்தனை வருடங்களுக்குப்பின்னர், உங்களை மீண்டும் முகநூலில் பார்த்தது மிகுந்த மகிழ்ச்சியைத்தர, நண்பர்களானோம். நீங்கள் அவ்வப்போது வழங்கும் கம்ப்யூட்டர் அப்டேட்டுகள் சிலவற்றை முயற்சி செய்து பார்ப்பேன். தமிழ்கூறும் நல்லுலகுக்கு நீங்களும், நீங்கள் எழுதிய, தொடர்ந்து எழுதி வரும் கம்ப்யூட்டர் புத்தகங்கள் ஒரு வரப்பிரசாதம். உங்களுக்கு எனது நல்வாழ்த்துகள்.’
இதைவிட ஓர் உழைப்பாளிக்கு என்ன சந்தோஷம் வேண்டும் சொல்லுங்கள்!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software