ஹலோ with காம்கேர் – 281
October 7, 2020
கேள்வி: நல்லவையும் தீயவையும் எப்படி பயணம் செய்கின்றன?
எங்கள் வீட்டு மாடியில் துளசி, கற்புரவல்லி, மருதாணி, புதினா, முருங்கை, சோற்றுக் கற்றாழை, வேப்பிலை, வெற்றிலை, பச்சை மிளகாய், பாகற்காய், பிரண்டை என செடி கொடிகள் வளர்க்கிறோம்.
தவிர செம்பருத்தி, ரோஜா, பவளமல்லி, சங்கு புஷ்பம் என பல்வேறு பூச்செடிகளும் உள்ளன.
சமையலுக்கும், பூஜைக்கும் எங்கள் வீட்டு தோட்டத்தில் இருந்தே கிடைக்கிறது.
இதை பார்த்துக்கொண்டிருந்த எங்கள் குடியிருப்பில் உள்ள மற்றொருவர் அவருக்கு விருப்பமான பூச்செடிகளை வகைகளை வைத்து தண்ணீர் ஊற்ற ஆரம்பித்தார். சில தினங்களில் அழகழகாக வண்ண மயமான பூக்கள் பூத்துக் குலுங்க ஆரம்பித்தன.
நாங்கள் தினமும் காகம், அணில், குருவி, புறா இவற்றுக்கு அரிசி, பிஸ்கெட், கருவடாம் என விதவிதமாக போடுவோம். அவற்றுக்கு குடிப்பதற்கு தண்ணீரும் வாய் அகன்ற ஆழம் குறைவாக மண் தொட்டியில் வைப்போம்.
அவை செல்ல சண்டை போட்டு, துரத்தி விளையாடி சாப்பிட்டு குளித்து கும்மாளமிட்டு கிளம்புவதற்கு கால் மணி நேரம் ஆகும். ஒரு சில காகங்கள் வெயிலில் சொகுசாக அமர்ந்து ‘சன் பாத்’ எடுத்துச் செல்லும்.
இதை பார்த்துக்கொண்டிருந்த எதிர்வீட்டு குடியிருப்பில் உள்ளவர் சப்பாத்தி, நான் என டிபன் வகைகளை போட ஆரம்பித்தார். அது எப்படி எங்களுக்குத் தெரியும் என்றால் பறவைகள் அவற்றை அங்கிருந்து கொத்தி எடுத்து வந்து எங்கள் மொட்டைமாடிக்கு வந்து தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடும்.
இதைத் தொடர்ந்து பக்கத்து குடியிருப்பில் உள்ள இளைஞர்கள் தாங்கள் சமைத்ததை ஒரு தட்டில் போட்டு வைக்க ஆரம்பித்தார்கள்.
எங்கள் குடியிருப்பில் உள்ள மற்றொரு பெண்மணி பறவைகள் சாப்பிட வசதியாக அரிசியை ஊற வைத்து கொண்டு போட ஆரம்பித்தார்.
இப்படியாக நாம் ஒரு நல்ல செயலை செய்ய ஆரம்பித்தால் அதைப் பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கும் அந்த உணர்வு தொற்றிக்கொண்டு பல்கிப் பெருக ஆரம்பிக்கும்.
நல்ல விஷயங்கள் எப்படி பல்கிப் பெருகுகிறதோ அப்படியே தீய செயல்களுக்கும் தாக்கம் இருக்கும்.
எனவே ஒரு தீய செயலை செய்யாமல் இருப்பது நூறு நல்ல செயல்களை செய்ததற்கு இணையாகும். ஏனெனில் நல்லவை நாமே துடுப்பு போட்டு பயணம் செய்யும் படகு போல. பயண வேகம் மெதுவாகவே இருக்கும். தீயவையோ மோட்டரில் இயங்கும் ஸ்ட்ரீம் போட் போல. பயண வேகம் ஜெட் வேகத்தில் இருக்கும்.
எனவே செய்யும் செயல்களில் கவனம் வைப்போம். சந்ததிகளை காப்போம்!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software