ஹலோ with காம்கேர் – 303
October 29, 2020
கேள்வி: மாற்றங்கள் நடைபெறுவதற்கான மேஜிக் தெரியுமா?
நம்மைச் சுற்றி நடக்கின்ற விஷயங்களை உள்ளது உள்ளபடி அப்படியே புரிந்துகொள்ளாமல் நமக்கு எப்படித் தேவையோ அப்படி எடுத்துக்கொள்வதினாலும், அப்படியே மனதுக்குள் உள்வாங்குவதினாலும்தான் பெரும்பாலான பிரச்சனைகள் உருவாகின்றன.
உள்ளது உள்ளபடி புரிந்துகொள்ள வேண்டுமானால் நம் மனம் தெளிவாக இருக்க வேண்டும். நாம் சோகமாக இருந்தால் நம் மனம் நாம் காணும் காட்சிகளை அந்த கண்ணோட்டத்தில்தான் உள்வாங்கும், சந்தோஷமாக இருந்தால் அதே காட்சிகள் மகிழ்ச்சியின் உணர்வுகளோடு உள்செல்லும். நாம் எந்த மனநிலையில் இருக்கிறோமோ அல்லது நமக்கு எப்படித் தேவையோ அதன் அடிப்படையில்தான் நம்மைச் சுற்றி நடக்கின்ற விஷயங்களின் தாக்கம் நமக்குள் உண்டாகும்.
நிறைய வாசிக்கும் வழக்கம் இருப்பவர்கள் புத்திசாலியாக இருப்பார்கள் என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். வாசித்தால் மட்டுமே புத்திசாலித்தனம் வந்துவிடாது. வாசிப்பதில் உள்ளதை மனதுக்குள் ஏற்றிக்கொண்டு அதன்படி செயல்பட கொஞ்சமாவது முயன்றால் மட்டுமே மாற்றங்கள் உண்டாகும். இல்லை என்றால் நாம் சாலையில் போகும்போது தன்னிச்சையாக நம் கண்களால் பார்க்கின்ற மனிதர்களையும், பஸ், கார்களையும், கடைகளையும், கோயில்களையும் போல வாசிக்கும் புத்தகத்தில் உள்ள எழுத்துக்களும்.
அதுபோல ஒருசிலர் என்னிடம் ‘மேடம் உங்கள் எழுத்துக்களைப் படித்தாலே மனிதர்கள் நல்லவர்களாக மாறிவிடுவார்கள்…’ என்று சொல்வார்கள்.
ஆனால் என்னைப் பொறுத்தவரை யாரையும் யாராலும் மாற்றவே முடியாது. அவரவர்களாக மாறினாலே தவிர அல்லது மாற முயற்சித்தாலே தவிர மாற்றங்கள் நடைபெற வாய்ப்பில்லை.
ஒரு புத்தகத்தை வாசிக்கும் வாசகனும், அந்த புத்தகத்தை எழுதிய எழுத்தாளனும் ஒரே நேர்கோட்டில் சங்கமிக்கும்போது அந்த புத்தகத்தில் உள்ள கருத்துக்கள் வாசகனது மனதைத் தானாகவே துளைத்துக்கொண்டு செல்லும்.
வாசகன் தனக்குத் தேவையானதை தேடிக்கொண்டிருக்கும் நேரத்தில் அது அவன் படிக்கும் புத்தகத்தில் ஏதோ ஓரிடத்தில் சிறு புள்ளியாய் தெரிந்தால்கூட அந்த முழு புத்தகத்தில் உள்ள விஷயங்களும் அவனுள் செல்லும். அவன் தேடுவது மன அமைதியாக இருக்கலாம், ஆலோசனையாக இருக்கலாம், ஆன்மிகமாக இருக்கலாம், கல்வியாக இருக்கலாம் இருக்கலாம்… இப்படி ஏதோ ஒரு மாற்றத்துக்காக அவன் ஏங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில் அந்தப் புத்தகம் அவன் கைகளில் கிடைத்து அது அவனை வாசிக்கத் தூண்டினால் அவனிடத்தில் சிறு மாற்றம் உண்டாகலாம்.
அதனால்தான் ஒருசில திரைப்படங்கள் மிக எளிமையாக எடுக்கப்பட்டிருந்தாலும் மக்களிடம் பிரமாண்ட வரவேற்றைப் பெறுகிறது. ஒருசில திரைப்படங்கள் பல கோடிகளில் செலவு செய்து பிரமாண்டமாய் எடுத்திருந்தாலும் படுதோல்வி அடைவதும் இதே காரணத்தினால்தான்.
எளிமையாக எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படத்தில் உள்ள மனிதர்களிடம் பார்வையாளர்கள் தங்களைப் பொறுத்திக் கொள்ளும் வகையில் எதார்த்தமாக எடுக்கப்பட்டிருப்பதால் அது பிரமாண்ட வெற்றி பெறுகிறது.
அதுபோலதான் புத்தகத்தை வாசிக்கும் வாசகன் தனக்குள் எதையோ தேடிக்கொண்டிருக்கும்போது அது அந்தப் புத்தகத்தில் கிடைத்தால் அந்தப் புத்தகத்தின் கருத்துக்கள் வாசகனின் மனதுக்குள் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்துகொள்ளும்.
யாரையேனும் மாற்ற வேண்டும் என நினைத்து ஒரு புத்தகத்தைக் கொடுத்து படிக்கச் சொன்னால் அவனுக்குள் மாற்றம் ஏற்படுவது சாத்தியமில்லை.
மாற்றங்களை ஏற்படுத்த நினைத்தால் முதலில் ‘மாற வேண்டும்’ என்ற உணர்வை நமக்குள் உருவாக்கிக்கொண்டால் மட்டுமே நம் மனம் மாற்றங்களுக்குத் தேவையான விஷயங்களை தானாகவே தேடித்தேடி எடுத்துக்கொள்ளும்.
அதைவிட்டு எங்கே மாற்றங்கள் ஏற்படப் போகிறது என்ற தாழ்வு மனப்பான்மையுடனோ அல்லது எதிர்மறை சிந்தனையுடனோ ஒரு புத்தகத்தைப் படிப்பதாலோ அல்லது ஆலோசகர்களை சந்திப்பதாலோ அல்லது மருத்துவரின் உதவியை நாடுவதாலோ எந்தப் பிரயோஜனமும் இல்லை.
அடிப்படையில் நம் மனதை தயார்படுத்திக்கொண்டால் அது தானாகவே தனக்குத் தேவையானதை தேடி எடுத்து தனக்குள் மாற்றத்தை உருவாக்கிக்கொள்ளும்.
இதுதான் மாற்றங்கள் நடைபெறுவதற்கான லாஜிக்கும், மேஜிக்கும்!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software