ஹலோ with காம்கேர் – 302
October 28, 2020
கேள்வி: ‘ரப்பர் பேண்ட்’ வாழ்க்கை தெரியுமா?
ஒரு சிலரின் கஷ்டங்களை பார்க்கும்போது ‘நமக்கெல்லாம் இப்படி கஷ்டம் வந்தால் அவ்வளவுதான்… போய் சேர்ந்திருப்போம்’ என்று நினைத்துக்கொள்வோம் அல்லவா?
அப்படி எல்லாம் யாரும் அவரவர் இஷ்டத்துக்குப் போய் சேர்ந்துவிட முடியாது, நம் காலம் முடியும் வரை அனுபவித்து வாழ்ந்துத்தான் ஆக வேண்டும் என்பது இயற்கை. விதி. கர்மா. இறைவனின் கருணை. இப்படி அவரவர் நம்பிக்கையில் எப்படி வேண்டுமானாலும் பெயரிட்டுக்கொள்ளுங்கள்.
உண்மையில் நம்மால் எதையும் தாங்கவே முடியாது என்ற பெரும்சோகம் எதுவுமே இல்லை என சொல்லலாம். ஏனெனில் நம் உடலும் மனமும் நமக்கு வரக்கூடிய அத்தனை நல்ல விஷயங்களையும் துன்பம் தரக்கூடிய விஷயங்களையும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ‘எலாஸ்டிக்’ வடிவமைப்பில்தான் வடிவமைக்கப்பட்டுள்ளன.
அவரவர் மனோதிடம், உடல் வலிமை, பொருளாதாரம், குடும்பச் சூழல் இவற்றுக்கு ஏற்ப துன்பங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கில் வேண்டுமானால் மாற்றம் இருக்கும். மற்றபடி எல்லோராலும் எல்லாவற்றையும் தாங்கிக்கொள்ளும் சக்தியுடன்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
இன்பங்களை அப்படியே எந்த சுணக்கமும் இன்றி ஏற்றுக்கொண்டாடும் நம்மால் துன்பங்களை மட்டும் அப்படியே ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.
துன்பம் வரும்போது ‘எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு கஷ்டம்’ என வருந்தும் நாம் சந்தோஷங்களை அனுபவிக்கும்போது ‘எனக்கு மட்டும் ஏன் இத்தனை மகிழ்ச்சி’ என கேள்வி கேட்பதில்லை.
இன்பம் துன்பம் எல்லாவற்றையும் அதனதன் பாதையில் ஏற்றுக்கொண்டு, குரல் கொடுக்க வேண்டிய இடத்தில் குரல் கொடுத்து, தட்டிக்கேட்க வேண்டிய நேரத்தில் தட்டிக் கேட்டு, அமைதியாக இருக்க வேண்டிய சூழலில் அமைதி காத்து சென்றுகொண்டிருந்தால் வாழ்க்கை கடந்து சென்றுகொண்டே இருக்கும். அதைவிட்டு எல்லாவற்றுக்கும் ‘ஒரே லாஜிக்’ என்ற மனோபாவத்துடன் மைக்ரோஸ்கோப் வைத்து ஒவ்வொன்றையும் ஆராய்ந்துகொண்டிருந்தால் ஒரு அடி கூட நம்மால் முன்னேறவே முடியாது. தொடங்கிய இடத்திலேயே நின்றுகொண்டிருப்போம்.
வாழ்க்கை என்பதும் ஒரு ‘ரப்பர் பேண்ட்’ போல்தான். அதை வாழ்க்கையின் ஓட்டத்துக்கு ஏற்ப நம் இஷ்டத்துக்கு இழுத்து சுருக்கி பயன்படுத்த முடியும்.
வாழ்க்கையில் கஷ்டமோ சந்தோஷமோ அதை பக்குவமாக கொண்டாடக் கற்றுக்கொள்ள வேண்டும். சந்தோஷத்தில் அதிகமாக துள்ளிக் குதிப்பதும், கஷ்ட காலத்தில் அதீதமாக மனதை வருத்திக்கொள்வதும் ரப்பர் பேண்டை அளவுக்கு அதிகமாக இழுத்து நீட்டுவதற்கு சமம். ஓர் அளவுக்கு மேல் ரப்பர் பேண்டை நீட்டினால் என்ன ஆகும்? அதுதான் நடக்கும் கஷ்டத்தையும் சந்தோஷத்தையும் ஓரளவுக்கு மேல் கொண்டாடினால்.
அவரவர் வாழ்க்கை. அவரவர்கள் மனப்பக்குவம். மனதை செம்மைப்படுத்தி நமக்குக் கிடைத்துள்ள இந்த அரிய மானிடப் பிறவியை பயனுள்ளதாக பயன்படுத்துவோமே!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software