ஹலோ With காம்கேர் -310: வாழ்க்கையில் விட்டு கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை!

ஹலோ with காம்கேர் – 310
November 5, 2020

#ask_CKB ‘நீங்களும் கேள்வி கேட்கலாம்!’ – என்னவென்று தெரிந்துகொள்ள இங்கு செல்லவும்!

கேள்வி: ‘வாழ்க்கையில் விட்டு கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை’ என்று சொல்கிறார்கள். நிஜத்தில் அவ்வாறு நடக்கவில்லையே. அவர்களை ஏமாற்றவும் அலட்சியப்படுத்தவும் அல்லவா  செய்கிறார்கள். –  இந்தக் கேள்வியைக் கேட்டவர் உயர்திரு. ரவிக்குமார் சம்பத்குமார்.

காலமாற்றத்தின் கோலம் இது. முன்பெல்லாம் ‘அதோ அவன் கெட்டவன். பார்த்து ஜாக்கிரதையா இரு’ என சொல்வார்கள். இப்போதெல்லாம் ‘அதோ அவர் ரொம்ப நல்லவர். நேர்மையானவர்…’ என சொல்கிறார்கள்.

இந்த ஒப்பீட்டில், முன்னதில் கெட்டவர்கள் குறைவாக உள்ள காலமும், பின்னதில் நல்லவர்கள் குறைவாக உள்ள காலமும் பேசப்படுவதை கவனியுங்களேன்.

அரிசியில் ஒன்றிரண்டு கல் இருந்தால் அரிசி சுத்தமாக இருக்கிறது என்பார்கள். கிடைக்கும் ஒன்றிரண்டு கற்களை சுத்தம் செய்து தூர எறிந்துவிட்டுப் பயன்படுத்துவார்கள். அரிசியில் வேண்டுமென்றே கற்கள் சேர்க்கப்பட்டு எடை கூட்டி விற்பனை செய்யப்படும்போது ‘அரிசி முழுக்க ஒரே கல்லாக உள்ளது’ என்று புலம்பிக்கொண்டே கற்களில் இருந்து அரிசியை பிரித்தெடுத்துப் பயன்படுத்துவார்கள். இரண்டுக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம்.

குறைகள் குறைவாக இருக்கும்போது நிறைகள் நிறைவாக உள்ளது. குறைகள் பெருகும்போது நிறைகள் குறைவாக தெரிகிறது. அவ்வளவுதான்.

இதுபோல இப்போது எல்லாமே மாறி வருகிறது.

அன்று  ‘விட்டுக்கொடுத்து வாழ்பவர்கள் கெட்டுப் போவதில்லை’ என அறிவுரை சொல்லி பிணக்கு ஏற்பட்ட தம்பதிகளைக் கூட சேர்த்து வைப்பார்கள். இன்று யார் விட்டுக்கொடுக்கிறார்களோ அவர்களை மொத்தமாக கீழே தள்ளி தங்கள் சுயநலத்துக்காக பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

மனிதர்கள் தங்களைச் சுற்றி உள்ள பொருட்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை மனிதர்களுக்குக் கொடுக்கத் தவறுவதன் விளைவே இதுபோன்ற சீர்கேட்டுக்கெல்லாம் காரணம்.

வீட்டில் அப்பா அம்மா இல்லை என்றால்கூட கவலைப்படாத இளைஞர்கள் கையில் மொபைல் போனில் சார்ஜ் இல்லை என்றால் டென்ஷன் ஆகிறார்கள். அதிலும் ஒய்-ஃபை தொடர்ப்பு இல்லாத இடங்களுக்குச் சென்றுவிட்டால் அவர்களின் மனப்போராட்டம் அவர்கள் உடல்மொழியிலேயே வெளிப்படும். மது அருந்துபவர்கள் அந்த நேரத்துக்கு குடிக்க முடியவில்லை என்றால் எப்படித் தடுமாறுவார்களே அதற்கு இணையான அல்லது அதற்கும் அதிகமான தடுமாற்றம், பதற்றம், எரிச்சல் இன்னும் பல உணர்ச்சிப் போராட்டங்களுக்கு ஆளாகிறார்கள்.

சாப்பாடு, தண்ணீர் இல்லை என்றாலும் பொறுத்துக்கொள்பவர்கள் கையில் இண்டர்நெட் இணைப்புடன் கூடிய மொபைல் போன் இல்லை என்றால் தடுமாறித்தான் போகிறார்கள்.

இளைஞர்கள் என்றில்லை, வயது வித்தியாசம் இன்றி அனைவருக்குமே இந்தப் பிரச்சனை உள்ளது.

குடும்ப நிகழ்ச்சிகளுக்குச் சென்றால் கவனியுங்கள். கவனிக்கும் உங்களைத் தவிர குழந்தைகள், இளைஞர்கள், நடுத்தர வயதினர், வயதில் பெரியவர்கள் என அத்தனை பேருமே தலை குனிந்து ‘அடக்க ஒடுக்கமாக’ மொபைலுக்கு மரியாதை கொடுத்துக்கொண்டிருப்பார்கள். மேடையில் நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கும். வாழ்த்துச் சொல்லி மொய் எழுத வேண்டிய நேரத்துக்கு மொபைலில் இருந்து தலை நிமிர்ந்து கடமையை செய்துவிட்டு சாப்பிட்டு கிளம்பி விடுகிறார்கள்.

நிஜ உலகில் சக மனிதர்களுக்கான முக்கியத்துவம் குறைந்து முகம் தெரியாத ஆன் லைன் மனிதர்கள் வீட்டு பிறந்த நாளும், இறந்த நாளும் முக்கியமாகிப் போய்விட்டது.

வீட்டில் அம்மா அப்பாவின் பிறந்த நாட்கள் செல்ஃபி எடுத்து பகிர வேண்டும் என்ற சம்பிரதாயத்துக்காக என்ற அளவில் மாறிவிட்டது. அதுவும் சமூக வலைதளங்கள் உங்கள் அப்பாவுக்கு பிறந்த நாள், அம்மாவுக்கு நினைவு நாள் என நினைவூட்டுவதால்.

மனிதர்களுக்கு உதவுவதற்காக என்ற அளவில் இருந்த சாதனங்களும், தகவல் தொடர்பு வசதிகளும், தொழில்நுட்பமும் சுற்றி இருக்கும் மனிதர்களிடம் இருந்து பிரிப்பதற்காகவும், மாயையாக உள்ள மனிதர்களை இணைப்பதற்காகவும் மாறியதன் உச்ச கட்டமே இன்று நாம் அனுபவித்துவரும் அத்தனை சோகங்களுக்கும் பிரதானக் காரணம்.

தேவைக்கு மட்டும் மொபைல் போன், அவசியமானதுக்கு மட்டும் இன்டர்நெட் என வைத்துக்கொண்டால் சுற்றி இருக்கும் உலகைக் காணும் பக்குவம் ஏற்படும். எதை அதிகம் கவனிக்கிறோமோ அதில்தானே நாட்டம் உண்டாகும். மொபைலையே அதிகம் கவனிப்பதால் அதிலுள்ள ஆப்களும், சமூக வலைதளங்களும், அவற்றில் இணைந்துள்ள வெர்ச்சுவல் மனிதர்களும் முக்கியமாகிப் போகிறார்கள்.

அதை கொஞ்சம் தூர தள்ளி வைத்துவிட்டால், அருகில் இருப்பவர்களை பார்க்கத் தோன்றும். கவனிக்கத் தோன்றும். பழகத் தோன்றும். புரிந்துகொள்ளத் தோன்றும். உணர்வுகளை மதிக்கத் தோன்றும்.  இப்படி பல பல ‘தோன்றல்கள்’ உண்டாகி பல மாற்றங்கள் நமக்குள் ஏற்படும். மாயையை விட உண்மை மிக ரம்யமாக இருக்கும் என்ற உண்மை புரிபடும்.

‘விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை’  என்பதை புதுமொழியாக மாற்றி மொபைல், ஆப்கள், சமூக வலைதளங்கள், இண்டர்நெட், ஆன்லைன் இவற்றை விட்டுக்கொடுப்பவர்கள் (மொத்தமாக விட்டொழிப்பவர்கள்) கெட்டுப் போவதில்லை என வைத்துக்கொள்ளலாம்.

இதுவும் காலத்தின் கோலம்தான். வேறென்ன சொல்ல?

மாறுவோம். மாற்றுவோம். நல்ல மாற்றங்கள் தனிமனித மேம்பாட்டுக்கு மட்டுமில்லாமல் சமூக மாற்றத்துக்கும் வித்திடும்.

முயற்சித்துத்தான் பார்ப்போமே!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 2,941 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon