ஹலோ with காம்கேர் – 311
November 6, 2020
#ask_CKB ‘நீங்களும் கேள்வி கேட்கலாம்!’ – என்னவென்று தெரிந்துகொள்ள இங்கு செல்லவும்!
கேள்வி: நல்லவனாக, தேச அபிமானியாக வாழ்ந்த மனிதர்கள் அவர்கள் வாழும் நாட்களில் அங்கீகரிக்கப் படாமல் அவர்கள் இறந்த பிறகே ஆகா, ஓகோ என்று போற்றப்படுகிறார்கள். அப்படியென்றால் வாழும் காலங்களில் அவர்களை போற்ற விடாமல் நம்மைத் தடுப்பது எது? – இந்தக் கேள்வியைக் கேட்டவர் உயர்திரு. சின்னசாமி சந்திரசேகரன்.
முன் குறிப்பு: இந்தப் பதிவில் சொல்லி உள்ள அனைத்திலும் விதிவிலக்குகள் உண்டு.
இதற்கு வீட்டளவிலேயே எடுத்துக்கொண்டு பதில் சொல்கிறேன். பெற்றோர்கள் வாழும்போது நன்றாக கவனித்துக்கொள்ளாத பிள்ளைகள் இறந்த பிறகு மிக சிறப்பாக அவர்களுக்குப் பிடித்த பதார்த்தங்களை ‘அப்பாவுக்குப் பிடிக்கும், அம்மாவுக்கு பிடிக்கும்’ என பார்த்துப் பார்த்து தயார் செய்து அவர்களுக்கு திதி கொடுப்பதில்லையா? அவர்களுக்கு செய்ய வேண்டிய காரியங்களை மிக பிரமாதமாக பார்ப்பவர் வியக்கும் வண்ணம் செய்வதில்லையா?
இருக்கும்போது ஒருவாய் தண்ணீர் கொடுக்காத பிள்ளைகள் இறந்தபிறகு இப்படி சிறப்பாக (!) காரியங்கள் செய்வதால் அந்த பெற்றோருக்கு என்ன பயன்?
ஒருவேளை மூதாதையர்கள் / இறந்தவர்கள் சாபம் விட்டுவிடுவார்களோ என்ற பயம் காரணமாக இருக்கலாம்.
மற்றொரு விஷயம், இருக்கும்போதும் கவனிக்காமல் இறந்த பிறகும் கவனிக்காமல்… அவர்களுக்கு செய்ய வேண்டிய காரியங்களைக் கூட செய்யாத பிள்ளைகளும் இருக்கிறார்கள் என்பது வேறுவிஷயம்.
அப்பா அம்மாவுக்கு என்ன சாப்பாடு பிடிக்கும் என்றுகூட தெரியாத பிள்ளைகள் இருப்பதுதான் வேதனையிலும் வேதனை.
இதே மனஓட்டம்தான் பொதுவெளியிலும்.
உயிருடன் இருக்கும்போது பாராட்ட மனம் இல்லாதவர்கள் இறந்த பிறகு #RIP ஹேஷ் டேக் போட்டு பக்கம் பக்கமாக அவர்களைப் பாராட்டுவதைக் காண்கிறோம்.
‘இப்படி இவ்வளவு சீக்கிரம் போய் சேருவார் என தெரிந்திருந்தால் நேரில் போய் பார்த்திருப்பேனே…’, ‘சென்ற மாதம் கூட நினைத்துக்கொண்டே இருந்தேன் அவரை சந்திக்க வேண்டும் என… எவ்வளவு தங்கமானவர்… எவ்வளவு திறமையானவர்…’ அப்படி இப்படி என சொல்லி கண்ணீர் பதிவிடுபவர்கள் அவர் ஏதேனும் ஒரு தேவைக்காக போன் செய்திருந்தால்கூட அதை எடுத்து பேசி இருக்க மாட்டார் அல்லது மிஸ்டு கால் பார்த்து திரும்பவும் அழைத்து என்ன ஏது என விசாரித்திருக்கவும் மாட்டார் என்பதுதான் ஆச்சர்யம்.
இறந்தவர்களை பற்றி பெருமை பேசுவதிலும் உளவியல் உள்ளது. ஒன்று பாவ மன்னிப்புபோல வைத்துக்கொள்ளலாம். இரண்டாவது இறந்தவர் எழுந்து வந்துவிடவா போகிறார் என்ற நினைப்பில் இல்லாத விஷயங்களையும் சேர்த்துகூட சொல்லலாம். இரண்டும் இல்லாமல் ‘அப்பாடா போய் சேர்ந்துட்டான்(ள்) இனி நாம் முன்னேறலாம்…’ என்ற தனக்கான பாதை தெளிவான நிம்மதியாகக் கூட இருக்கலாம்.
இறந்தவரின் திறமை(கள்) அவர் உயிருடன் இருக்கும்போது பொறாமையை உண்டு செய்திருக்கலாம். எப்படி அவனா(ளா)ல் மட்டும் அப்படி செயல்பட முடிகிறது என்ற காழ்ப்புணர்ச்சியை தோற்றுவித்திருக்கலாம். ‘ஏதோ ஒரு லக்கில் ஓடிக்கொண்டிருக்கு. பார்ப்போம். எத்தனைநாள் ஓடுகிறது என’ என்று காதில் புகைவரும் அளவுக்கு எரிச்சலை உண்டு செய்திருக்கலாம்.
தம்மால் செய்ய முடியாததை அல்லது தான் செய்ய முயலாததை பிறர் செய்யும்போது மனம் முழுக்க பொறாமையும், காழ்ப்புணர்ச்சியும், எரிச்சலும் மண்டுவது இயற்கை.
வீடானாலும் சரி, பொதுவெளியானாலும் சரி இருக்கும்போது தூற்றுவதும், இறந்த பிறகு போற்றுவதும் நடந்துகொண்டுதான் இருக்கின்றது. இதைகொஞ்சம் ஆழந்து கவனித்தால் ஓர் உண்மை புலப்படும்.
வாழ்பவனை போற்றாமல் இருப்பதிலும், இறந்தவனை போற்றுவதிலும் ஒரு சின்ன குரூரம் இருக்கத்தான் செய்கிறது. அதைப் பற்றிப் பேசிப் பேசி மருகுவது இயலாமையில் சுருண்டிருக்கும் மனதுக்கு ஒத்தடம் கொடுப்பதைப் போன்ற ஒரு சுகம் கொடுக்கிறது. அவ்வளவுதான்.
பொதுவெளியில் சிறப்பாக இயங்கிவருபவர்களை இருக்கும்போது கொண்டாடாமல் அவர்கள் இறந்த பிறகு கொண்டாடும் நபர்களில் ஒரு சிலர் அவர் நன்றாக வாழும்போது மிக நன்றாக செயல்பட்டுக்கொண்டிருந்தபோது அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய பலன்கள் கிடைக்க விடாமல் செய்திருப்பார்கள். அவர்களைப் பற்றி அவதூறு பேசியிருப்பார்கள். முடிந்த அளவுக்கு தன்னுடைய வட்டத்தில் உள்ளவர்களிடம் எத்தனை மோசமாக சித்தரிக்க முடியுமோ அத்தனை மோசமாக உருவகப்படுத்தி இருப்பார்கள். நேரில் இனிக்க இனிக்க பேசி மறைமுகமாக அத்தனை தொந்திரவுகளையும் கொடுத்திருப்பார்கள். மொத்தத்தில் ஒரு அழகான சித்திரத்தை சமயம் கிடைக்கும்போதெல்லாம் சிதைத்து சின்னாபின்னமாக்கி இருப்பார்கள்.
இதுபோன்ற நோயுள்ள மனதுடன் இரங்கல் கட்டுரை எழுதி இறந்தவர்களை புகழ்வதைவிட மோசமான மனநோய் இருக்கவே முடியாது.
இதைப் படிப்பதற்கு சங்கடமாகத்தான் இருக்கும். ஒருசிலருக்கு வலிக்கக் கூடச் செய்யலாம். என்ன செய்வது? உண்மை சுடும்தானே.
மனதுக்குள் மாசு கொஞ்சமாக சேரும்போதே விழித்துக்கொண்டு நம்மை சரி செய்துகொண்டுவிட்டால் பிழைத்தோம். அப்படி விழித்துக்கொள்ளவில்லையெனில் மாசு நோயாக மாறி மனநோய் வந்திருக்கிறது என அறியாமலேயே மனநோயாளியாய் வாழ்ந்து மடிய வேண்டியதுதான்.
மனதுக்குள் மாசு சேர்ந்துவிடாமல் வாழ்பவர்கள் பாக்கியசாலிகள். வாழக் கற்றுக்கொள்பவர்கள் அதிபாக்கியசாலிகள். பாக்கியசாலிகளாகவும் அதிபாக்கியசாலிகளாகவும் வாழ்வதற்கு இயற்கைக் கொடுத்திருக்கும் இந்த மானிடப் பிறவியை பயனுள்ளதாக்கிக் கொள்வோமே!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software