ஹலோ With காம்கேர் -320: ஒரு பெண் ஐந்தாறு ஆண்களை அடித்து துவம்சம் செய்ய முடியுமா?

ஹலோ with காம்கேர் – 320
November 15, 2020

கேள்வி: ஒரு பெண் ஐந்தாறு ஆண்களை அடித்து துவம்சம் செய்ய முடியுமா?

தீபாவளி தினத்துக்கு முதல் நாளில் இருந்தே விட்டு விட்டு மழை. காலையில் இருந்தே கேபிள் இணைப்பில் ஏதோ கோளாறு. மழையைப் போலவே அந்த சிக்னலும் வந்து வந்து சென்றுகொண்டிருந்தது. எந்த சேனலும் தொடர்ச்சியாக வரவில்லை.

புகார் அளித்திருந்ததோம். இரவு 9.30 மணி அளவில் No Signal என்ற தகவலுடன் வெளிப்பட்ட டிவியை ஆன் செய்து வைத்துக்கொண்டே லேப்டாப்பில் முடிக்க வேண்டிய முக்கியமானப் பணியை செய்துகொண்டிருந்தேன்.

திடீரென சிக்னல் வந்து டிவியில் வெளிப்பட்ட ஒரு காட்சி என்னை இமைக்காமல் பார்க்க வைத்தது. ஏதோ ஒரு சீரியல். பெயர் தெரியவில்லை. பெயர் இங்கு முக்கியமில்லை. காட்சிதான் முக்கியம்.

புடவை கட்டிய ஓர் அழகான இளம் பெண்ணைச் சுற்றி நான்கைந்து முரட்டு ரவுடிகள்.

வழக்கமாக சினிமாவில் இப்படி சீன் வந்தால் அடுத்ததாக அந்த இளம் பெண் அவள் காதலனை கத்தி அழைப்பாள் அல்லது  ‘என்னை விட்டுடுங்க…’ என கை கூப்பி கெஞ்சியபடி பின்னோக்கி நகர்ந்து கொண்டே இருப்பாள் அல்லது அழுதுகொண்டே கூனிக்குறுகி ஒடுங்குவாள். ஆனால் தப்பித்து மட்டும் ஓட முயற்சிக்கமாட்டாள். ஏன் என்றால் அவள் காதலன் வந்துதானே அவளை காப்பாற்ற வேண்டும். அப்போதுதானே ஹீரோவை உயர்த்திப் பிடிக்க முடியும். அப்படியே அவள் காதலன் எங்கிருந்தோ பறந்து வந்து ரவுடிகளை அடித்து துவம்சம் செய்ய ஆரம்பித்தாலும் அவள் சற்று ஓடிச் சென்று மறைந்துகொள்ள மாட்டாள். அப்படியே அதே இடத்தில் ஒடுங்கி நின்று பயந்து செத்துக்கொண்டிருப்பாள். ரவுடிகளில் ஒருவன் அவளை மீண்டும் துன்புறுத்த நெருங்குவான். நம் ஹீரோவுக்குத்தான் 360  டிகிரியில் பார்வை இருக்குமே. உடனே ஹீரோ ஹோரோயினை காப்பாற்ற அவள் இருக்கும் பக்கம் திரும்பி அந்த ரவுடியையும் அடித்து நொறுக்குவான். இதற்குள் மற்றொரு ரவுடி ஹீரோவை அடித்து நொறுக்குவதற்கு அறுவாளுடன் வருவான். அதையும் பயத்தில் உறைந்து பார்த்துக்கொண்டிருப்பாளே தவிர நம் ஹீரோயின் ஹீரோவுக்கு சிக்னல் கூட கொடுக்க மாட்டாள். ஆனால் ஹீரோ 1080 டிகிரியில் திரும்பிப் பார்த்து வில்லனை ஒரே உதையில் தூக்கி எறிவான்.

அது என்ன 1080 டிகிரி?

பொதுவாக 360 டிகிரிதான். ஹீரோ தலையை வீரத்துடன் திருப்புவதை இரண்டு மூன்று முறை ஆக்ரோஷத்துடன்  ‘ஷ் ஷ் ஷ்’ என்ற சப்தத்துடன் திரையில் காட்டுவார்கள். அதனால் 360 டிகிரியை மூன்று முறை பெருக்கி 1080 என சொல்லி உள்ளேன். அவ்வளவுதான். பெரிய கணக்கெல்லாம் இல்லை.

இப்படித்தான் சினிமாவில் பொதுவாக பெண்களின் சுபாவத்தை சித்தரிப்பார்கள். விதிவிலக்குகளாய் ஒன்றிரண்டு திரைப்படங்கள் வேறுபடலாம்.

சரி சரி. நான் டிவியில் பார்த்த காட்சிக்கு வருகிறேன்.

புடவை கட்டிய இளம் பெண் என்ன செய்தாள் தெரியுமா?

தன்னைச் சுற்றி நின்றுகொண்டிருந்த ரவுடிகளை ஒருமுறை முழுமையாக சுற்றிப் பார்த்தாள். புடவை தடுக்காமல் இருக்க சற்று உயர்த்தி இடுப்பில் செருகிக்கொண்டாள்.

நெருங்கிய ஒரு ரவுடியின் கழுத்தை அப்படியே திருகி தூக்கி எறிந்தாள். நான் சுறுசுறுப்பாகி உன்னிப்பாக பார்க்க ஆரம்பித்தேன்.

அடுத்த ரவுடியை கன்னத்தில் ஓங்கி அறைந்தாள். அவன் அப்படியே சுருண்டு விழுந்தான்.

பின்னால் இருந்து தாக்க வந்த ரவுடியை அப்படியே காலால் எட்டி உதைக்க அவனும் மேலே தூக்கி எறியப்பட்டு உதடு பிதுங்கி முகம் நசுங்க கீழே விழுந்தான்.

இப்படி தன்னைத்தாக்க வந்த ரவுடிகளை துவம்சம் செய்த அவள் நேராக மருத்துவமனை செல்கிறாள்.

இதற்கு மேல் பார்க்க முடியவில்லை. சிக்னல் போய்விட்டது.

இந்தக் காட்சியை பார்த்ததில் இருந்து எனக்குள் பலவிதமான சிந்தனைகள்.

பெண்களை இப்படி வலிமையாக காட்சிப்படுத்துவதே மிகக் குறைவு.

பொதுவாக பெண்கள் மனதளவில் வலிமையானவர்கள். உடல் அளவில் மென்மையானவர்கள் என்று சொல்லி சொல்லியே அவர்களை உடல் அளவில் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். அவர்களால் எதிர்த்து எதுவும் செய்ய முடியாது என்ற ஒரு பிம்பத்தை காலம் காலமாக ஏற்படுத்தி விட்டார்கள்.

வீடுகளில்தான் இப்படி என்றால் பெண்களை புரிந்துகொள்ள ஆண்களுக்கு சொல்லிக்கொடுக்கப்படும் வாழ்வியல் பாடங்களிலும் முதன்மையாக இருப்பது இதுதான்.

இதில் ஓரளவுக்கு உண்மை இருக்கலாம். ஆனால் உடல் அளவிலும் சரி மனதளவிலும் சரி பெண்களும் வலிமையானவர்களே. பெண்களின் அனுபவிக்கும் பிரசவ வேதனையே அவர்களின் உடல் வலிமைக்கு பெரும் சாட்சி.

ஒவ்வொரு பிரசவமும் பெண்களுக்கு வாழ்வா சாவா போராட்டம்தான். என்னதான் மருத்துவ வசதிகள் பெருகிவிட்டாலும் அவள் உடல் அளவில் தாங்கும் வலிகளை வார்த்தைகளில் வடிக்க முடியாது. ஒருமுறை சாவை நெருங்கிப் பார்த்துவிட்டு வந்த பெண் அடுத்த முறைக்கும் தயாராகும் மனவலியையே அவளது உடல் வலிமைக்கு சான்று.

‘இப்போதெல்லாம் சிசேரியன்தானே…’ என யாரும் கொடிபிடித்துக்கொண்டு வர வேண்டாம். சிசேரியன் ஆக இருந்தால் என்ன, நார்மல் டெலிவரியாக இருந்தால் என்ன குழந்தையை சுமக்க ஆரம்பித்த நாள் முதல் அவள் மனதளவிலும் உடல் அளவிலும் அனுபவிக்கும் சின்ன சின்ன அசெளகர்யங்கள் அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும்.

இத்தனை விளக்கங்கள் எதற்கு என்றால் பெண்களை புரிந்துகொள்ள ஆண்களுக்கு சொல்லப்படும் அறிவுரைகளில் ‘பெண்கள் உடல் அளவில் மென்மையானவர்கள்…’ என்ற கருத்தை வலியுறுத்துவதற்கு பதிலாக  ‘பெண்கள்(ளும்) உடல் அளவிலும் மனதளவிலும் வலிமையானவர்கள்…’  என சொல்ல ஆரம்பிக்கலாம்.

ஆண்கள் மனதில், பெண்களை மனதளவிலும் உடல் அளவிலும் அவளை எந்த எல்லைக்கும் சென்று துன்புறுத்த முடியும் என்ற அலட்சிய மனப்பாங்கு மறைய வேண்டுமானால் இப்படி பெண்களைப் பற்றிய கண்ணோட்டத்தை மாற்றி அமைத்தால் மட்டுமே சாத்தியம்.

உண்மையில் பெண்கள் உடல் அளவிலும் வலிமையானவர்களே. ஆனால் ஆண்களை உயர்த்திப் பிடிக்க பெண்களின் சக்தியை குறைத்துக் காட்டுவதற்காகவே அவளைப் பற்றிய முதன்மையான கண்ணோட்டமாக ‘பெண்கள் உடல் அளவில் மென்மையானவர்கள்’ என சொல்ல ஆரம்பித்தார்கள்.

நான் இந்தப் பதிவின் தொடக்கத்தில் சொல்லி இருந்த காட்சியில் ஓர் இளம் பெண் தன்னைச் சுற்றி நின்றுகொண்டிருந்த ரவுடிகளை அடித்து உதைத்து துவம்சம் செய்த காட்சி நடைமுறையில் சாத்தியம் இல்லைதான்.

இருந்துவிட்டுப் போகட்டுமே. கற்பனை காட்சிகளில் இப்படி பெண்களை வலிமையாக காட்ட ஆரம்பித்தாலாவது ஆண்களுக்கு பெண்கள் மீதான கண்ணோட்டம் மாற ஆரம்பிக்கட்டுமே. பொதுவெளியில் பெண்களை தொடுவதற்கும், வன்கொடுமை செய்வதற்கும் அச்சம் ஏற்படட்டுமே.

ஒரு பெண் ஐந்தாறு ரவுடிகளை அடிப்பது சாத்தியம் இல்லை என்றால், அதே லாஜிக்தானே ஒரு ஆணுக்கும்.

எப்பேற்பட்ட சக்தி வாய்ந்த வீரனாக இருந்தாலும் ஆயுதம் எதுவும் இல்லாத ஒரு ஆண்  தன்னை எதிர்க்கும் 10,15 வில்லன்களை அடித்து நொறுக்குவதும் சாத்தியமே கிடையாது. ஒருவர் 10 பேரை எப்படி அடித்து நொறுக்க முடியும்?

ஆனால் திரைப்படங்களில் ஆயுதம் ஏதும் இல்லாமல் தனித்து நின்றுகொண்டிருக்கும் ஒரு ஹீரோ பறந்து பறந்து வில்லன்களை துவம்சம் செய்வதையே காலம் காலமாக காண்பித்து வருகிறார்கள்.

ஆண்கள் என்றால் இப்படித்தான் வீரமாக இருக்க வேண்டும், இருப்பார்கள் என்ற கண்ணோட்டத்தை திரைப்படங்கள் மூலம் இப்படித்தான் அழுத்தமாக பதிவு செய்து வருகிறார்கள்.

அதன் விளைவுதான் ஒல்லியான ஹோரோ தடிதடியான வில்லன்களை பறக்கவிட்டு அடிக்கும் சுறுசுறு சண்டைக் காட்சிகள்.

இப்படியே பெண்கள் மீதான கண்ணோட்டத்தை மாற்றி அமைக்கலாமே.

நான் சொல்ல வருவது இதுதான்…

‘பெண்கள் உடல் அளவில் மென்மையானவர்கள்…’ என்று சொல்லாமல்  ‘பெண்கள்(ளும்) உடல் அளவில் வலிமையானவர்களே…’ என்று வசனத்தை சற்று மாற்றம் செய்து அந்த கண்ணோட்டத்தை பரவலாக பரவ விட ஆரம்பித்தால் கொஞ்சம் கொஞ்சமாக பெண்களுக்கு எதிராக நடந்து கொண்டிருக்கும் கொடுமைகள் சற்று குறைய ஆரம்பிக்கும்.

முயற்சிப்போமே!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 31 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon