ஹலோ with காம்கேர் – 319
November 14, 2020
கேள்வி: சிறப்பு தின உறுதிமொழி (resolution) எடுத்துக் கொள்கிறார்களே அது பயன் அளிக்குமா?
அனைவருக்கும் இனிப்பான பாதுகாப்பான தீபாவளி நல்வாழ்த்துகள்.
பெரும்பாலானோர் இந்த வருட துவக்கத்தில் இருந்து ‘நான் இன்னென்ன தீய பழக்க வழக்கங்களை விட்டொழிக்கப் போகிறேன்’ என்று உறுதிமொழி எடுப்பார்கள்.
ஒருசிலர் இந்த தீபாவளியில் இருந்து, பொங்கலில் இருந்து ‘இந்தந்த நல்ல பழக்கத்தை தொடர இருக்கிறேன்’ என உறுதிமொழி எடுப்பார்கள்.
இன்னும் ஒருசிலரோ தங்கள் பிறந்தநாளில் இருந்து, திருமண நாளில் இருந்து ‘இனி இப்படி இருக்கப் போகிறேன்’ என உறுதிமொழி எடுப்பார்கள்.
அவ்வாறு உறுதிமொழி எடுப்பதை ஆங்கிலத்தில் Resolution என்பார்கள்.
இப்படி தங்களிடம் இருக்கும் தீயவற்றை ஒதுக்கி நல்லவற்றை உள்ளுக்குள் கொண்டு வர அவரவர்கள் ஒரு நாளை தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள். அவ்வளவுதான். இதில் தவறு ஏதும் இல்லை. இது தங்களைத் தாங்களே ஊக்கப்படுத்திக்கொண்டு செயல்படும் ஒரு யுக்தி.
அப்படி அவர்கள் தொடங்கும் நல்ல செயல்களை பாதியில் விட்டாலும் தவறில்லை. மீண்டும் தொடர்ந்துகொள்ளலாம்.
இப்படி தொடர்ச்சியாகவோ, இடையில் விட்டு விட்டோ செய்யப்படும் அல்லது தொடங்கப்படும் நல்ல செயல்கள் நாளடைவில் என்றோ ஒருநாள் நிரந்தமாக அவர்களிடம் குடிகொள்ளும் என்பது உறுதி. அவர்களின் அடுத்தத் தலைமுறைக்கு அவர்களே முன்னுதாரணமாக மாறவும் வாய்ப்புண்டு.
ஏன் உறுதிமொழி எடுக்க சிறப்பு தினங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். எல்லா நாளும் நல்ல நாள் தானே. எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாமே என ஒருசிலர் நினைக்கலாம்.
இன்று தீபாவளி. புத்தாடை அணிந்துகொள்கிறோம். பட்டாசுகள் வெடிக்கிறோம். இனிப்பு காரம் என வகைவகையாக செய்து சாப்பிடுகிறோம். இப்படியான பண்டிகை தினங்களில் தினமும் இருப்பதைப் போல் நாம் இருப்பதில்லையே. சந்தோஷமாக குடும்பத்துடன் மகிழ்ந்து கொண்டாடுகிறோம் இல்லையா?
ஏன் தினமும் இதுபோல் செய்வதில்லை?
அதுபோல்தான் ஏதேனும் ஒரு சிறப்பு தினத்தில் உறுதிமொழி எடுப்பதும்.
உங்களுக்கும் ஏதேனும் உறுதிமொழி எடுக்க விருப்பம் இருந்தால் தயங்காமல் இந்த தீபாவளி திருநாளில் எடுத்துக்கொள்ளலாமே!
நானும் ஓர் உறுதிமொழி எடுத்துள்ளேன். என்ன தெரியுமா? நான் செய்வதை செய்துகொண்டிருப்பதை இன்னும் சிறப்பாக செய்ய வேண்டும் என்பதே அது.
அப்போ நீங்க ரெடியா?
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software