ஹலோ With காம்கேர் -325: இறந்த பிறகும் வாழ வேண்டுமா?

ஹலோ with காம்கேர் – 325
November 20, 2020

கேள்வி: இறந்த பிறகும் வாழ வேண்டுமா?

இரண்டு தினங்களுக்கு முன்னர், எம்.ஒ.பி. வைஷ்ணவா மகளிர் கல்லூரியில் பி.ஏ. ஜர்னலிசம் படிக்கும் மாணவி செல்வி. நித்யாஸ்ரீ தன் கல்லூரி ப்ராஜெக்ட்டுக்காக என்னை நேர்காணல் செய்திருந்தார். கிட்டத்தட்ட 20 நிமிடங்கள். போனிலேயே ரெகார்ட் செய்துகொண்டார்.

நேர்காணல் செய்து முடித்ததும் அவர் மிக நெகிழ்ச்சியாக என்னிடம் சொன்ன விஷயம் என்ன தெரியுமா?

‘மேம், நான் என் கல்வி சார்ந்து பலரை நேர்காணல் செய்து கல்லூரிக்கு ப்ராஜெக்ட் செய்து கொடுத்திருக்கிறேன். இதுவரை யாருமே இத்தனை விரிவாக விளக்கமாக பேசியதில்லை…’ என்றார்.

‘அப்படியா?’ என அதிசயித்து கேட்டதற்கு ‘ஆமாம் மேம், நான் போன் செய்து  நேர்காணல் வேண்டும் என அப்பாயிண்ட்மெண்ட் கேட்கும்போது அவர்கள் நான் ஏதோ பத்திரிகை அல்லது தொலைக்காட்சி சேனலில் இருந்து பேசுவதாக நினைத்து உற்சாகமாக பேசுவார்கள்… ஆனால் நான் கல்லூரி மாணவி, என் ப்ராஜெக்ட்டுக்காக நேர்காணல் வேண்டும் என சொன்னவுடன் அவர்களின் தோரணையே மாறிவிடுகிறது… அதன் பிறகு அப்பயிண்ட்மெண்ட்டுக்கு நாளே கொடுக்க மாட்டார்கள். நாமே பேசினாலும் போனை எடுப்பதே இல்லை… உதவியாளர் போனை எடுத்து  ‘சார் ரொம்ப பிசி…’, ‘மேடமுக்கு இந்த மாதம் முழுவதும் டைட் ஒர்க்…’ என காரணங்கள் சொல்லி தட்டிக் கழிக்க ஆரம்பிக்கிறார்கள்…’ என்று  தன் ஆதங்கத்தை சொல்லிக்கொண்டே போனார்.

நானும் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை பொறுமையாக கேட்டபடி இருந்தேன்.

‘நான் ஒரு கல்லூரி மாணவி, என் படிப்புக்கான ப்ராஜெக்ட் என தெரிந்தும் 20 நிமிடங்கள் எனக்காக ஒதுக்கி பொறுமையாக பேசியதற்கு நன்றி் மேம்…’ என சொன்னபோது நான் அவருக்கு பதில் சொல்ல ஆரம்பித்தேன்.

‘நல்லதும்மா… என்னைப் பொறுத்தவரை தொழில்நுட்பமோ, வாழ்வியலோ, உளவியலோ அல்லது எங்கள் காம்கேர் நிறுவன வளர்ச்சி குறித்த நேர்காணலோ எதுவாக இருந்தாலும் அது(வும்) எனக்கான பணி. அதை செய்யும்போது நான் எப்படி என் இயல்புபடி நேர்த்தியாக 100 சதவிகித ஈடுபாட்டுடன் செய்வேனோ அப்படித்தான் நீங்கள் உங்கள் கல்லூரி ப்ராஜெக்ட்டுக்காக என்னிடம் பேட்டி எடுத்தபோதும் செய்தேன்.

மற்றபடி அது கல்லூரி ப்ராஜெக்ட்டா, பிரமாண்டமான தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காகவா, பிரபலமான பத்திரிகை தலைப்புச் செய்திக்காகவா, பரபரப்பான யு-டியூப் சேனலுக்காகவா, இணையத்தைக் கலக்கும் வெப்மேகசினுக்காகவா என்றெல்லாம் பார்ப்பதில்லை.

என் பணியை நான் சிறப்பாக செய்ய வேண்டும் என்பதில் மட்டுமே என் கவனம் குவிந்திருக்கும். அதுபோல நான் செய்யும் எல்லா வேலைகளுமே எனக்கு முக்கியம்தான். முக்கியம் இல்லாத வேலை என்று எதுவுமே இல்லை. அதனால்தான் நான் எதிராளியை வைத்து என் பணியின் தன்மையில் காம்ப்ரமைஸ் செய்துகொள்வதில்லை. அப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி என பணியின் நேர்த்தியை மாற்றிக்கொண்டிருந்தால் எனக்கான அடையாளம் சிதைந்துபோகும் அல்லவா?

உங்களுக்கு எப்படி பேட்டி அளித்தேனோ அப்படித்தான் எந்த மீடியாவில் இருந்து கேட்டிருந்தாலும் கொடுத்திருப்பேன்.

இந்த குணம்தான் என் வெற்றிக்கான காரணமாக நான் நினைக்கிறேன். தொழில்நுட்பத்துறையில் தனித்துவமாக 28 ஆண்டுகளாக நிலைத்திருப்பதற்கான காரணமும் அதுவே…’ என்றபோது அந்த கல்லூரி மாணவி இன்னும் நெகிழ்ந்து போனார்.

அவருக்கு என் வாழ்த்தை சொல்லிவிட்டு, ‘நீங்களும் படித்து முடித்து வேலைக்கு வந்த பிறகு யாரையேனும் பேட்டி எடுக்கும்போது  அவர்கள் யாராக இருந்தாலும் சரிசமமாக பாவித்து மரியாதை கொடுத்து பழகுங்கள். ஐ.ஏ.எஸ் ஆஃபீசர் என்றால் ஒரு மரியாதை, சாலையோரத்தில் காய்கறி கடை நடத்துவர் என்றால் ஒரு மரியாதை, ஐந்தடுக்கு மாடி நிறுவனத்தில் சி.ஈ.ஓ என்றால் ஒரு மரியாதை, இல்லத்தரசிகள் என்றால் ஒரு மரியாதை என்று பாகுபாடு பார்க்காமல் எல்லோரிடத்திலும் ஒன்றுபோல மரியாதையாக பண்பாக பழகி பேட்டி எடுங்கள், நேர்காணல் செய்யுங்கள், தகவல் சேகரியுங்கள்… உங்களுக்கான தனித்துவம் தானாகவே உருவாகும்…’ என்று தனித்துவ அடையாளத்தை உருவாக்கிக்கொள்ள என் சிறிய ஆலோசனையை கொடுத்தேன்.

சில வருடங்களுக்கு முன்னர் குங்குமம் குழும பத்திரிகையில் இருந்து ஒரு நிருபர் (பெண்) போனில் பேட்டி எடுத்தார். என் புகைப்படங்களை அனுப்பி வைக்கச் சொன்னார். நானும் சில புகைப்படங்கள் அனுப்பி இருந்தேன்.

நான் பிசியான மீட்டிங்கில் இருந்தபோது போன் செய்து ‘வேறு புகைப்படம் அனுப்புங்கள்…’ என சற்றே கடுமையாக பேசினார். அவரும் பிசியாக இருந்ததால் பேச்சில் இனிமை இல்லை என நான் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

‘ஏன் நான் அனுப்பிய புகைப்படங்கள் சரியாக இல்லையா… வேண்டுமானால் என் வெப்சைட்டில் இருந்து புகைப்படங்களை எடுத்துக்கொள்ளுங்களேன்…’ என்றேன்.

அதற்கு அவர் என்ன பதில் சொல்லி இருப்பார் என நினைக்கிறீர்கள். உங்கள் யூகம் சரியாக உள்ளதா என நீங்களே படித்து தெரிந்துகொள்ளுங்களேன்.

‘மேடம் எனக்கு அதை விளக்குவதற்கு எல்லாம் நேரம் இல்லை… வேறு புகைப்படங்கள் அனுப்பி வையுங்கள்…’ என சொல்லிவிட்டு போனை கட் செய்ய முனைந்தார்.

நான் மிக அவசரமாக இடைமறித்து ‘என் இந்த சிறிய கேள்விக்குக்கூட பொறுமையாக பதில் சொல்ல உங்களுக்கு நேரம் இல்லை, இத்தனை கடுமையான வார்த்தை பிரயோகங்கள் வேறு… சாரி மேடம், என் நேர்காணலை பப்ளிஷ் செய்ய வேண்டாம்… குட் பை’ என சொல்லிவிட்டு போனை வைத்தேன்.

படபடப்பும் டென்ஷனும் அடங்கவே சில நிமிடங்கள் ஆனது.

அடுத்த சில நிமிடங்களில் மன்னிப்புக் கேட்டு வாட்ஸ் அப், இமெயில், மெசஞ்சர் என எல்லாவற்றிலும் தகவல் அனுப்பினார். நான் அவர் போன் அழைப்பை ஏற்காததால், என் நிறுவனத்துக்கு போன் செய்து என் உதவியாளரை அழைத்து என்னிடம் சாரி சொல்லச் சொல்லி வேண்டிக்கொண்டார்.

ஆனால் நான் கொடுத்த புகைப்படங்களுடன் ஆன்லைனில் என் வெப்சைட்டில் இருந்து அவர்களே சில புகைப்படங்களை எடுத்து பிரமாதமாக அந்த நேர்காணலை வெளியிட்டார்கள் என்பது வேறு விஷயம்.

இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் நாம் ஈகோ பார்க்காமல், பாரபட்சம் காண்பிக்காமல், தன்மையாகவும் பொறுமையாகவும் பேசினால் அவர்கள் என்னவோ உச்சாணி கொம்பில் இருப்பதைப் போலவும் நாம் என்னவோ பேட்டி, நேர்காணல் என ஏங்கிக்கொண்டிருப்பதைப் போலவும் சூழலை ஏற்படுத்தி விடுகிறார்கள்.

இத்தனைக்கும் அவர்கள்தான் என்னிடம் நேர்காணல் வேண்டும் என கேட்டிருந்தர்கள்.

28 வருட சர்வீஸில் எத்தனையோ பத்திரிகை, தொலைக்காட்சி, இணையதளம், யு-டியூப் பேட்டிகள் கொடுத்தாயிற்று. அத்தனையும் என் திறமையின் அடிப்படையில் எங்கள் நிறுவன தயாரிப்புகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நேர்காணல்கள். அவர்களகாவே என்னிடம் கேட்டு வாங்கி வெளியிட்டவை. ஒரு பேட்டிக்காகக் கூட நானாக வலிய சென்று கேட்டத்தில்லை. எந்த ஒரு பேட்டிக்காகவும் எந்த காம்ப்ரமைஸும் செய்துகொண்டதும் இல்லை.

எந்தத் துறையில் நீங்கள் பயணித்தாலும் உங்கள் பணியில் நீங்கள் நேர்மையாக இருந்து யாருக்காக செய்கிறோம் என்ற பாகுபாடு பார்க்காமல் நேர்த்தியாக செய்யும்போது உங்கள் அடையாளமும் தனித்துவமும் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு உந்துசக்தியாக அமையும். இறந்த பிறகும் மக்கள் மனதில் வாழ்வதற்கு இது ஒன்றே வழி.

நான் இப்படித்தான் வாழ்கிறேன். நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 24 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon