ஹலோ With காம்கேர் -326: பைரட்டட் மனிதர்கள்!

ஹலோ with காம்கேர் – 326
November 21, 2020

கேள்வி: பைரட்டட் மனிதர்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

பைரட்டட் (Pirated) என்றால் திருட்டு.

இப்போதெல்லாம் தகவல் திருட்டு என்பது ஏதேனும் ஒரு விதத்தில் நடந்துகொண்டுதான் உள்ளது. பலரது புத்தகங்கள் PDF வடிவில் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

இது குறித்து பேசும்போதெல்லாம் நான் பல கோடிகளில் தயாராகும் சினிமா ரிலீஸுக்கு முன்பே யு-டியூபில் வெளியாகும் அவலத்தையும், பல லட்சங்களில் தயாராகும் சாஃப்ட்வேர்கள் பைரட்டட் வெர்ஷன்களாக பயன்படுத்தப்படுவதையும் சொல்லி வருகிறேன்.

கடை தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைப்பதைப் போன்ற இதுபோன்ற செயல்கள் ஒருபுறம் இருக்க மனிதர்களையும் திருடும் செயல்களும் நடந்துகொண்டுதான் உள்ளன.

மனிதத் திருட்டா?

ஆம். பைரட்டட் சாஃப்ட்வேர் போல பைரட்டட் மனிதர்களும் பெருகிவிட்டார்கள். பிறர் தயாரிக்கும் சாஃப்ட்வேர்களை பணம் கொடுத்து வாங்காமல் அதனை திருட்டுத்தனமாக சட்டத்துக்குப் புறம்பாக பயன்படுத்தினால் அது பைரட்டட் சாஃப்ட்வேர். பிற நிறுவனங்களில் பணிபுரியும் தொழில்நுட்ப வல்லுநர்களை தங்கள் சுய லாபத்துக்குப் பயன்படுத்தும்ப்போது பைரட்டட் மனிதர்கள் உருவாகிறார்கள்.

உழைப்பாக இருந்தால் என்ன, பொருளாக இருந்தால் என்ன, படைப்பாக இருந்தால் என்ன, மனிதர்களாக இருந்தால் என்ன திருட்டுத்தனமாக பயன்படுத்துவதை திருட்டு (பைரட்டட்) என்றுதானே முத்திரை குத்த முடியும்.

உதாரணத்துக்கு நாம் ஒரு கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் சர்வீஸ் சென்டர் நடத்துவதாக வைத்துக்கொள்ளுங்கள். நம்மிடம் இருந்து சர்வீஸூக்கு இன்ஜினியர்களை அனுப்பும் போது கஸ்டமர்களிடம் அந்த இன்ஜினியர்கள் ‘நான் உங்களுக்கு என் நிறுவனம் வாங்கும் சர்வீஸ் சார்ஜைவிட குறைவாக வாங்கிக்கொண்டு சர்வீஸ் செய்து தருகிறேன். இனி சர்வீஸ் என்றால் என்னை அழையுங்கள்…’ என சொல்லி நம் கஸ்டமர்களை அவர்கள் தன்வசப்படுத்திக்கொள்கிறார்கள்.

இன்னும் சில இடங்களில் கஸ்டமர்களே அந்த இன்ஜினியர்களிடம் ‘நிறுவனத்துக்கு கொடுக்கும் பணத்தில் கொஞ்சம் அதிகமாக உங்களுக்கு நேரடியாக சர்வீஸ் சார்ஜ் கொடுக்கிறோம். நாங்கள் அழைக்கும்போது சர்வீஸ் செய்துகொடுக்க முடியுமா?’ என கேட்டு இன்ஜினியர்களை தன் வசப்படுத்திக்கொள்கிறார்கள்.

இந்த இரண்டில் எது நடந்தாலும் இழப்பு நிறுவனத்துக்குத்தான்.

இதைத்தான் மனிதத் திருட்டு என்கிறேன்.

சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் முதன் முதலில் The Hindu ஆங்கில செய்தித்தாளில் எங்கள் நிறுவனத்துக்கு விபி புரோகிராமர் தேவை என விளம்பரப்படுத்தி இருந்தேன். அப்போதெல்லாம் செல்போன் கிடையாது. தொலைபேசி வழியாகவே விளம்பரம் குறித்து சந்தேகம் கேட்பவர்கள் பேச முடியும். அலுவலகத்தில் என் உதவியாளர்கள் 9 மணிக்கு வரும் வரை நானே போன் அழைப்புகளுக்கு பதில் சொல்வேன். நான்  காலை 7 மணிகே அலுவலகம் சென்றுவிடுவேன்.

ஒரு போன் அழைப்பில் பேசிய நபர் என்ன சொன்னார் தெரியுமா?

‘நீங்கள் மிகவும் அழகாக பேசுகிறீர்கள்…. ஆங்கிலமும் தமிழும் நன்றாக வருகிறது… உங்கள் நிறுவனத்தில் என்ன சம்பளம் கொடுக்கிறார்களோ அதைவிட இரண்டு மடங்கு நாங்கள் கொடுக்கிறோம். எங்கள் நிறுவனத்தில் வந்து பணிக்கு சேர முடியுமா?’ என்றார்.

நான் ரிசப்ஷனிஸ்ட் என நினைத்துக்கொண்டு அவர் கேட்ட கேள்வியில் முதல் அதிர்ந்தாலும் சமாளித்துக்கொண்டு, ‘சார் நான்தான் இந்த நிறுவனத்தின் சி.இ.ஓ’ என்றேன்.

இதற்கு அவர் என்ன ரியாக்‌ஷன் கொடுத்திருப்பார் என்பதை நான் விவரிக்க விரும்பவில்லை. அதை உங்கள் கற்பனைக்கே விடுகிறேன்.

எப்படி எல்லாம் மனிதர்கள் களவாடப்படுகிறார்கள் என்று பாருங்களேன்.

பிறரது உழைப்பு அது எழுத்தாகட்டும், கான்செப்ட்டாகட்டும், திரைக்கதையாகட்டும், திரைப்படமாகட்டும், சாஃப்ட்வேராகட்டும் அவர்களின் அனுமதி இன்றி ‘திருடப்பட்டு’ பொதுவெளியில் கட்டணத்துக்கோ அல்லது இலவசமாகவோ விநியோகம் செய்யப்படுவதில் எத்தனை நஷ்டம் சம்மந்தப்பட்டவர்களுக்கு ஏற்படுகிறதோ அதுபோலவே நம் நிறுவனத்துக்காக உழைப்பவர்களை ஏதேனும் ஒரு விதத்தில் தங்கள் பக்கம் இழுப்பதிலும் உண்டாகிறது.

இந்த லீக்கேஜை எல்லாம் மீறித்தான் வாழ்க்கையை எதிர்நீச்சல் போட வேண்டி உள்ளது. ஓட்டைகளை மொத்தமாக அடைத்துவிட்டுத்தான் வாழ முடியும் என்றால் நம்மால் வாழவே முடியாது. ஓட்டைகள் வழியாக கசியும் இழப்புகளை அனுமதித்தபடி இன்னும் அதிக உத்வேகத்துடன் முன்னேறிச் செல்பவர்களாலேயே வாழ்க்கையில் வெற்றிபெற முடிகிறது.

கசியும் இழப்புகளையும் உத்வேகமாக மாற்றிக்கொண்டு முன்னேறுவோம். லாபத்தில் நஷ்டம் என்கின்ற லாஜிக்தான் இது.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 250 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon