ஹலோ with காம்கேர் – 329
November 24, 2020
கேள்வி: ‘மல்டி டாஸ்க்கிங்’ ஆண்களுக்கு சாத்தியமா?
‘மல்டி டாஸ்க்கிங்’ என்பது ஒரு கலை.
ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேலைகளை செய்யக்கூடிய ‘மல்டி டாஸ்க்கிங்’ என்பது பெண்களிடம் இயல்பாக இருக்கும் ஒரு குணம். அழும் பிள்ளையை கொஞ்சி சமாதானப்படுத்தியபடி அடுப்பில் ஏதேனும் சமையல் செய்துகொண்டிருப்பாள். துணி துவைத்தபடி அடுத்த வாரம் வரும் தன் மகள் பிறந்தநாளை எப்படி கொண்டாடலாம் என யோசித்துக்கொண்டிருப்பாள். மதிய சாப்பாடு முடிந்ததும் பாத்திரம் தேய்த்தபடி அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்யலாம் என யோசித்துக்கொண்டிருப்பாள்.
இப்படி வேலை சுமைகள் இருந்துகொண்டே இருப்பதால் 24 மணி நேரம் அவளுக்கு போதாது என்பதால் கிடைக்கின்ற நேரத்தில் 48 மணி நேர வேலையை மல்டி டாஸ்க்கிங் மூலம் 24 மணி நேரத்துக்குள் அடக்குகிறாள்.
அதுபோல பெண்களுக்கான மாதந்திரத் தொந்திரவுகள், கர்ப்ப காலம், பிரசவம் என உடல் சார்ந்த பல விஷயங்கள் அவர்களை எப்போதுமே எச்சரிக்கை உணர்வுடன் வாழ வைக்கிறது. வேறு வேலைகளில் கவனம் இருந்தாலும் உடலால் ஏற்படும் சில தொந்திரவுகள் அவர்களை எப்போதுமே ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட சிந்தனையுடன் செயல்படத் தூண்டுகிறது. அவர்கள் மல்டி டாஸ்க்கிங்கில் சிறப்பாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
பிரசவத்துக்குத் தயாராகும் பெண்கூட வீட்டில் மூத்தக் குழந்தை இருந்தால் என்ன செய்வாள் தெரியுமா?
மருத்துவமனையில் தான் இருக்கும் நாட்களில் அந்தக் குழந்தை ஏங்கிவிடக் கூடாதே என அதற்கு தினப்படி உடைகள், தின்பண்டங்கள் உட்பட அந்தக் குழந்தைக்குத் தேவையான அத்தனையையும் தயார் செய்துவிட்டே வீட்டைவிட்டுக் கிளம்புவாள். வீட்டில் மாமியார், மாமனார், அம்மா, அப்பா, கணவன் என உறவுகள் இருந்தாலும் தன் குழந்தைக்கு தானே ஏற்பாடுகள் வைப்பதில்தான் அவளுக்கு மகிழ்ச்சி. நிம்மதி.
இதுதான் விஷயம்.
ஆண்களால் ஒரு நேரத்தில் ஒரு வேலையில் மட்டுமே கவனம் செலுத்த முடியும். காரணம் அவர்களது வேலைகளை செய்வதற்கு, பங்கீடு செய்துகொள்வதற்கு அவர்களைச் சுற்றி உள்ளவர்கள் உதவ காத்திருப்பதால் அவர்களால் நின்று நிதானமாக ஒரு வேலையில் மட்டும் கவனம் செலுத்த முடிகிறது.
ஐந்தாறு வருடங்களுக்கு முன்பு வெளியான திரைப்படங்களில்கூட கிராமத்து வீடுகளில் குடும்பத் தலைவர் சாப்பிட்டு முடித்ததும் சாப்பாட்டு தட்டிலேயே கைகளை கழுவிக் கொள்வதும், அவர் கைகளை துடைத்துவிட அவர் மனைவி தன் புடவை முந்தானையைக் கொடுப்பதுமான காட்சிகள் இருந்துகொண்டுதானே இருந்தன. இப்போது மட்டும் என்ன மாறியா விட்டது என கேட்க வேண்டாம். சமீபத்தில் கிராமத்துத் திரைப்படம் ஏதும் பார்த்த நினைவு வரவைல்லை.
ஆக, ஒரு ஆண் சாப்பிட்டதும் தன் கைகளைக் கழுவவும், கைகளை துடைத்துக்கொள்ளவும்கூட உதவுவதற்கு வீடுகளில் மனைவியும், மகளும், மருமகளும் காத்திருக்கும்போது எதற்காக அவன் ‘மல்டி டாஸ்க்கிங்’ எல்லாம் செய்து கஷ்டப்பட வேண்டும்?
சுருங்கச் சொன்னால் சிங்கிள் டாஸ்க்கிங்குக்கே உதவிக்கு இரண்டு பேர் தயாராக இருக்கும்போது மல்டி டாஸ்க்கிங் செய்ய வேண்டிய அவசியம்?
மற்றபடி பெண்களின் டிஸைன் அப்படி, ஆண்களின் டிஸைன் இப்படி என்றெல்லாம் எதுவும் கிடையாது.
எல்லாம் சூழல்தான் காரணம்.
எங்கள் குடும்ப நண்பர். என் அப்பா அம்மாவுடன் பணிபுரிந்தவர். மிக இளம் வயதிலேயே மனைவியை இழந்தவர். கைக்குழந்தையுடன் இருந்த அவரை இரண்டாவது திருமணம் செய்துகொள்ளச் சொல்லி உறவினர்கள் எவ்வளவோ வற்புறுத்தியும் கேளாமல் தன்னந்தனியாகவே அந்தக் குழந்தையை வளர்த்து, படிக்க வைத்து ஆளாக்கி, நல்ல வேலையில் அமர்த்தி, திருமணம் செய்துவைத்து அருமையாக வாழ்ந்துகொண்டிருக்கிறார். இப்போது அவருக்கு ஒரு பேரன், ஒரு பேத்தி. அழகான வாழ்க்கை.
இவரால் எப்படி சாத்தியமானது?
தன் தேவைகளை சுருக்கிக்கொண்டார். அலுவலகத்தில் பணி சார்ந்த ப்ரமோஷன்களை தவிர்த்தார். காரணம் டிராஃன்ஸ்பர் ஆகும். குழந்தையை வளர்ப்பதில் சிக்கல் ஏற்படும். நண்பர்களுடன் வெளியில் செல்வதையும் குறைத்துக்கொண்டார். மகளுடன் நேரம் செலவழிக்க வேண்டும் என்பதால். அலுவலக பணி 24 மணிநேர சுழற்சி என்பதால் மகளுடன் இருப்பதற்கு வசதியான ஷிஃப்ட்டை தேர்ந்தெடுத்துக்கொள்வார். அலுவலகத்திலும் இவருக்கு நல்ல பெயர் இருந்ததால் இவருக்கு வசதியான ஷிஃப்ட்டை மாற்றிக்கொடுப்பதில் நண்பர்களும் சுணங்காமல் உதவி செய்தார்கள். இப்படி தன் எல்லைகளை சுருக்கிக்கொண்டு மகளை வளர்ப்பதில் முழு கவனத்தையும் செலுத்தினார்.
அவர் மகள் பாடம் ஒப்பிப்பத்தைக் கேட்டுக்கொண்டே சமையல் செய்வார். துணி துவைத்தபடி மகளுக்கு கதைகள் சொல்வார். வீடு சுத்தம் செய்தபடி மகளுடன் பள்ளியில் நடந்த கதைகளைக் கேட்பார். மொத்தத்தில் ‘மல்டி டாஸ்க்கிங்’ மூலம் மகளை பொறுப்புடன் வளர்த்து ஆளாக்கினார்.
இன்று அவருக்கு வயது 70+. இன்றும் அவர் தன் வேலைகளை தானேதான் பார்த்துக்கொள்கிறார். மகள் சென்னையில் இருந்தாலும் அவருக்கு அவர் வாழ்ந்த நகரத்து வீடும் சூழலும்தான் பிடித்திருக்கிறது என்பதால் அங்கேயே தனியாக சமைத்து சாப்பிட்டு வாழ்ந்துகொண்டிருக்கிறார். அவ்வப்பொழுது சென்னையில் உள்ள மகளும் மருமகனும் பேரன் பேத்தியுடன் வந்து பார்த்துக்கொள்கிறார்கள். இவரும் நினைத்துக்கொண்டால் சென்னைக்குக் கிளம்பிவிடுவார்.
இவர் வாழ்க்கையில் பெரும்பாலும் மல்டி டாஸ்க்கிங்தான் செய்திருக்கிறார்.
எந்தக் கவலையும் இல்லாமல் நிம்மதியாக அமர்ந்து டிவி பார்ப்பதோ, குழந்தை என்ன செய்கிறாளோ என்ற கவலை இல்லாமல் சாப்பிடுவதோ, மகளுக்கு பரிட்சை இருக்கிறதே காலையில் படிக்கும்போது காபி போட்டுத் தர வேண்டுமே என்ற டென்ஷன் இல்லாமல் அதிகாலை குளிரில் போர்த்திக்கொண்டு குளிரை அனுபவிப்பதோ செய்திருக்க வாய்ப்பே இல்லை. எப்போதுமே மனதுக்குள் ஒன்றுக்கும் மேற்பட்ட சிந்தனைகள் ஓடிக்கொண்டே இருக்கும்.
மொத்தத்தில் பெண்கள் எப்படி எல்லாம் மல்டி டாஸ்க்கிங்குடன் டிஸைன் செய்யப்பட்டு வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்களோ அதுபோலவே அவர் வாழ்ந்தார். அதனால் அவர் ஒன்றும் சோடை போகவில்லையே.
இவரது கதையை ஏன் சொல்கிறேன் என்றால், மனிதன் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி அவர்களின் சூழல்தான் அவர்களின் குணாதிசயங்களை நிர்ணயம் செய்கிறது.
அவசியம் ஏற்பட்டால், இப்படித்தான் என்ற கட்டாயம் உண்டானால் எல்லோராலும் எல்லாமும் செய்ய முடியும்.
கீழே விழுந்துவிடும் குழந்தையை கவனியுங்கள். அது விழுந்தவுடன் சுற்றி முற்றிப் பார்க்கும். யாரேனும் தன்னை கவனிக்கிறார்கள் என்றால் ‘ஙே’ என்று அழத் தொடங்கும். யாரும் கவனிக்கவில்லை என்றால் விளையாட்டு பொம்மையை வைத்துக்கொண்டு தானே சிரித்தபடி விளையாடத் தொடங்கும்.
இதுதான் லாஜிக். சூழல்தான் மனிதர்களின் குணாதிசயங்களை நிர்ணயிக்கிறது.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்,
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software