ஹலோ with காம்கேர் – 330
November 25, 2020
கேள்வி: சமையல் செய்வது மன அழுத்தத்தைக் கூட்டுமா குறைக்குமா?
நேற்று ‘மல்டி டாஸ்க்கிங்’ ஆண்களுக்கு சாத்தியமா என்ற கான்செப்ட்டில் நான் எழுதிய பதிவு ‘மல்டி டாஸ்க்கிங் செய்யும் திறமை ஆண்களுக்கு அதிகமா பெண்களுக்கு அதிகமா’ என்ற கோணத்தில் சென்றடைந்ததால் சிறு விளக்கம்.
நான் ஏற்கெனவே சொல்லி இருந்ததைப் போல் ‘மல்டி டாஸ்க்கிங்’ என்பது சூழல் ஏற்படுத்திக்கொடுக்கும் ஓர் அற்புதக் கலை. ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சூழல்தான் அவரவர்களின் குணாதிசயங்களை நிர்ணயம் செய்கிறது.
பணி ரீதியாக எடுத்துக்கொண்ட வேலைகளை அவை எத்தனை கடினமானதாக இருந்தாலும் எவ்வளவு மன அழுத்தங்களைக் கொடுத்தாலும் அவற்றை செய்து முடிப்பது என்பது அலுவலக ரீதியாக பொதுவாகவே எல்லோரும் (ஆண், பெண் இருபாலரும்தான்) செய்யக் கூடியதுதான்.
கஸ்டமர் சர்வீஸீல் இருப்பவர்கள் எத்தனை பரபரப்பாக இருந்தாலும் பொறுமையாக இன்முகத்துடன் பதில் சொல்லிக்கொண்டே பணிகளையும் நேரத்துக்குள் முடித்துக்கொடுப்பதில் ஆண்கள் பெண்கள் என்ற பாகுபாடு கிடையாது. அவரவர் பண்பு அது.
அதுபோலவே எந்த பரபரப்பும் இல்லை என்றாலும் வருகின்ற ஒன்றிரண்டு கஸ்டமர்களிடமும் எரிந்து விழுந்துகொண்டு வேலைகளையும் சரியாக செய்துகொடுக்காமல் தப்பும் தவறுமாக செய்துகொடுப்பதிலும் ஆண்கள் பெண்கள் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. அதுவும் அவரவர் பண்பு.
அலுவலக ரீதியாக செய்கின்ற பணிக்கு சம்பளமும், உரிய அங்கீகாரமும் கிடைத்துவிடும்.
ஆனால் அலுவலகமும் சென்று கொண்டு வீட்டையும் கவனித்துக்கொள்கின்ற பெண்கள் பலரை கவனித்துப் பாருங்கள். அலுவலகத்தில் பரபரப்பாக வேலை செய்துகொண்டே வீட்டில் ஜூரம் வந்த தன் குழந்தைக்கு என்ன ஆயிற்றோ, குழந்தை சாப்பிட்டதோ இல்லையோ என்ற கவலையை மனதுக்குள் தாங்கிக்கொண்டு கிடைக்கும் இடைவெளியில் வீட்டுக்குப் போன் செய்து குழந்தையின் உடல்நலம் குறித்து விசாரித்துக்கொண்டே வேலை செய்வார்கள். இதைத்தான் மல்டி டாஸ்க்கிங் என்று சொல்கிறேன்.
அலுவலகம் வந்தால் வீட்டுக்கவலையை விட்டுவிட வேண்டும். வீட்டுக்கு வந்தால் அலுவலகப் பிரச்சனையை விட்டுவிட வேண்டும் என்பதெல்லாம் அறிவுரையாக சொல்லலாம். ஆனால், வீட்டில் ஜூரம் வந்த குழந்தையை அப்பா அம்மாவின் கவனிப்பிலோ அல்லது மாமனார் மாமியார் கவனிப்பிலோ விட்டு வரும் பணிக்குச் செல்லும் பெண்களுக்கு அது சாத்தியமில்லை.
அவர்கள் அலுவலக வேலையையும் செய்துகொண்டே குழந்தையைப் பற்றியும் சிந்தித்துக்கொண்டிருப்பார்கள். வேலையின் நேர்த்தியிலும் கோட்டை விட்டுவிட மாட்டார்கள்.
இப்படி வீட்டு வேலைகள், குழந்தை வளர்ப்பு என குடும்பம் என்றால் பெரும்பாலும் பெண்களே முன் நின்று நடத்திச் செல்ல வேண்டி இருப்பதாலும், இயற்கை அவர்களுக்குக் கொடுத்துள்ள உடல் அமைப்பினாலும் ஒப்பீட்டளவில் ஆண்களைவிட சற்று மல்டி டாஸ்க்கிங் செய்யும் திறன் அதிகம்தான். மறுப்பதற்கில்லை.
மேலும், பெண்களுக்கான மாதந்திரத் தொந்திரவுகள், கர்ப்ப காலம், பிரசவம் என உடல் சார்ந்த பல விஷயங்கள் அவர்களை எப்போதுமே எச்சரிக்கை உணர்வுடன் வாழ வைக்கிறது. வேறு வேலைகளில் கவனம் இருந்தாலும் உடலால் ஏற்படும் சில தொந்திரவுகள் அவர்களை எப்போதுமே ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட சிந்தனையுடன் செயல்படத் தூண்டுகிறது. அவர்கள் மல்டி டாஸ்க்கிங்கில் சிறப்பாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
பொதுவெளியில் இயங்கும்போதும் தன்னைச் சுற்றிய ஒரு உள்ளுணர்வுடன்தானே பெண்கள் செயல்பட வேண்டியுள்ளது. இறக்கும் தருவாயில் உள்ள ஒரு பாட்டி தன்னை சந்திக்க வரும் உறவினர்கள் முன் தன் ஆடை விலகாமல் இருக்க புடவையை சரிசெய்துகொண்டு இன்முகத்துடன் புன்னகைத்துப் பேசுகின்ற பக்குவம் எல்லாம் பெண்களுக்கு மட்டுமே சாத்தியம். விட்டால் இறந்த பின்னரும் தன் ஆடையை சரி செய்துகொள்ளும் அளவுக்கு உள்ளுணர்வும், பாதுகாப்புணர்வும் அவர்களுக்கே அதிகம். அந்த உணர்வுகள்தான் அவர்களை மல்டி டாஸ்க்கிங் செய்ய வைக்கிறது.
அலுவலகப்பணியிலாவது மனநிறைவும், அங்கீகாரமும் கிடைக்கும். தவிர ஊதியம். ஆனால் வீட்டு வேலைகள் என்பது வீட்டில் உள்ளவர்கள் அங்கீகரித்தாலும் அங்கீகரிக்கவில்லை என்றாலும் பிடித்திருந்தாலும் பிடிக்கவில்லை என்றாலும் செய்துதான் ஆக வேண்டும் என்ற கட்டாயச் சுமை அவர்களுக்குள் ஏற்றப்படுகிறது. அவர்களால் அவற்றை எந்தக் காரணமும் சொல்லி உதறித் தள்ள முடிவதில்லை. எனவே தான் வீட்டு வேலைகளையும் செய்துகொண்டு அலுவலகப் பணிகளையும் செய்யும் மனப்பாங்கு பெண்களுக்கு இயல்பாகவே அமைந்துவிடுகிறது.
எனக்குத் தெரிந்த ஒரு இலக்கியத் தம்பதி. கணவனுக்கு வங்கி வேலை. மனைவி கல்லூரி பேராசிரியை. இருவருக்கும் இலக்கியத்தில் பெருத்த ஈடுபாடு. அலுவலக நேரம் தவிர மற்ற நேரங்களில் இலக்கிய ஆன்மிக சொற்பொழிவில் பேசுவது, புத்தகங்கள் எழுதுவது என்றே தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொண்டனர். கிரிக்கெட் வர்ணனையாளர்கள் போல இருவரும் ஒரே மேடையில் ஒரே நேரத்தில் மாறி மாறி பேசுவதுதான் இவர்களுக்கான அடையாளமாக இருந்தது.
இதெல்லாம் பெரிய விஷயம் இல்லை. தன் மனைவிக்கு சமையலில் அத்தனை ஈடுபாடு கிடையாது என்பதாலும், தனக்கும் நேரம் இல்லை என்பதாலும் மனைவியை சமைக்கச் சொல்லி வற்புறுத்தியதே இல்லை. திருமணம் ஆன நாட்களில் அவரது அம்மா சமையல் வேலைகளைப் பார்த்துக்கொண்டார். அவர் அம்மாவின் காலத்துக்குப் பிறகு மெஸ்ஸில் இருந்து சாப்பாடு வரச் செய்து சாப்பிட்டார்கள்.
அவர் மனைவி சமையலைத் தவிர மற்ற வேலைகளை கவனித்துக்கொள்வார். ஆனால், சமையல்தானே வீடுகளில் பெரும்பாலான நேரத்தை எடுத்துக்கொள்கிறது. சமையல் என்றால் சமையல் மட்டுமா? காய்கறி வாங்குவது, மளிகை சாமான்கள் வாங்குவது, தினந்தோறும் மூன்று வேளையும் சமைப்பது, வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்களோ அத்தனை பேருக்கும் பிடித்ததை செய்வது, சரியான நேரத்துக்கு சாப்பாடு தயார் செய்வது, சாப்பிட்ட பிறகு சுத்தம் செய்வது, பாத்திரங்கள் தேய்ப்பது, இத்யாதி இத்யாதி.
இப்படி பெண்களுக்கு வீட்டில் பெரும்பாலான நேரத்தை விழுங்குவதே சமையல்தான். என்னதான் சமையல் என்பது மன அழுத்தத்தைக் குறைக்கும் (cooking is stress buster) என்று சொன்னாலும் வலுக்கட்டாயமாக பெண்கள் தலையில் ஏற்றப்படும் சுமையினால் ஓய்வின்றி தினப்படி சமையல் செய்பவர்களிடம் கேட்டுப் பாருங்கள், அது எத்தனை மன அழுத்தத்தைக் கொடுக்கும் என்று.
பொழுதுபோக்கிற்காக விதவிதமான டிபன் செய்து அசத்தலாம். ஆனால், தினம் தினம் தனக்கு தேவையோ இல்லையோ, தனக்கு பிடிக்கிறதோ இல்லையோ, தனக்கு ஜூரம் தகித்தாலும், தலைவலி மண்டையைப் பிளந்தாலும், வயிற்று வலி குடைந்தெடுத்தாலும், ஏன் தனக்கு பசிக்கவே இல்லை என்றாலும்கூட மற்றவர்களுக்காக சமைத்தே ஆக வேண்டும் என்கின்ற கட்டாயம் ஏற்படும்போது அது மனழுத்தத்தை ஏற்படுத்துமா அல்லது குறைக்குமா என்பது புரியும்.
இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் மல்டி டாஸ்க்கிங் என்பது கூட பெண்களுக்குள் வலுக்கட்டாயமாக ஏற்றப்படும் திறன் என்றுகூட சொல்லலாம்.
இயற்கை, உடல் அமைப்பு, சூழல், சமுதாயக் காரணிகள், குடும்ப அமைப்பு இப்படி பல்வேறு காரணிகளால் மல்டி டாஸ்க்கிங் என்பது ஆண்களைவிட பெண்களிடன் ஒரு சதிவிகிதம் அதிகம்தான்.
மல்டி டாஸ்க்கிங் யாருக்கு அதிகம் என ஒப்பிட்டே ஆக வேண்டும் என்றால் என் தீர்ப்பு இதுதான்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்,
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software