#கதை: ஹலோ With காம்கேர் -337: கற்பனையும் கடந்து போகுமா?

ஹலோ with காம்கேர் – 337
December 2, 2020

கேள்வி: கற்பனையும் கடந்து போகுமா?

திடீர் பயணம். மனம் முழுவதும் துக்கத்தை சுமந்துகொண்டு பயணிக்கும் வலி கொடுமை.

சின்ன வயதில் இருந்தே அவளுக்கு ஒரு ராசி உண்டு. அவள் என்ன கற்பனை செய்துகொண்டாலும் அது நடக்காது. அவளுக்கு கற்பனை செய்ய காரணமெல்லாம் தேவையே இல்லை.

மழையில் நனைவதைப் போல், பத்திரிகை விளம்பரங்களில் உள்ள ஐஸ்க்ரீம் தானாகவே ஓடி வந்து அவள் கைகளில் சாப்பிடுவதற்குப் பாந்தமாக அமர்வதைப் போல், கடைகளில் அடுக்கப்பட்ட குளிர்பானங்கள் குளிரக் குளிர அவள் கைப்பையில் வந்து அமர்ந்து ஜில்லிப்பூட்டுவதைப் போல், பள்ளிக்கு செல்ல விருப்பமில்லாத நாட்களில் பள்ளி தானாகவே ஏதேனும் ஒரு காரணம் சொல்லி விடுமுறை அறிவித்துவிட்டதைப் போல், பள்ளியில் பத்தாம் வகுப்பில் மாநிலத்தில் முதலாவதாக வந்துவிட்டதாகவும் மீடியாக்கள் மைக்கைப் பிடித்துக்கொண்டு அவள் முன் காத்திருப்பதைப் போலவும்… பள்ளி நாட்களில் இப்படி அவளது கற்பனைக்கு நீள அகலம் எல்லாம் கிடையாது.

ஆனால் அவள் கற்பனை எதுவுமே நிஜத்தில் நடக்கவே நடக்காது. நடக்காததை கற்பனை செய்துகொள்வதாலா அல்லது அவளுக்கு அப்படி ஒரு ராசியா என பல நாட்கள் ஆராய்ச்சி எல்லாம்கூட செய்திருக்கிறாள்.

கல்லூரி நாட்களில் உடன் படிக்கும் மாணவிகளுக்கு ஆண் நண்பர்கள் அமைவதும், அவர்களில் ஓரிரு மாணவிகளுக்கு காதலர்கள் கிடைத்ததையும் பார்த்தபோது அவளுக்கு தனக்கும் ஒரு நல்ல நண்பன் கிடைத்ததைப் போலவும், அவன் அவளுக்காக உயிரையும் கொடுக்கும் அளவுக்கு அன்பைச் சொரிபவன் போலவும் கற்பனை வந்தது. வழக்கம்போல்தான், அதுவும் கல்லூரி காலம் முடியும்வரை நடக்கவே இல்லை.

உலகிலேயே தனக்கு மட்டும்தான் பாசமான அப்பா கிடைத்திருப்பதாக கற்பனை செய்துகொள்வாள். அப்பாவுடன் அன்பாய் குதூகலமாய் இருப்பதாக மனதுக்குள் கற்பனை செய்து மகிழ்வாள். உடன் படிக்கும் மாணவிகளின் அப்பாக்களை எல்லாம்விட தன் அப்பா ஹீரோ போல் ஜோராக இருப்பதாய் மகிழ்வாள்.

ஆனால் உண்மையில் அவள் கற்பனைக்கு முற்றிலும் எதிர்மாறாய் அவள் அப்பா. குணத்திலும் சரி, உருவத்திலும் சரி. கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தபோதே ஒருநாள் சொல்லிக்கொள்ளாமல் இறந்து விட்டார்.

அவர் இறப்பைப் பற்றி கற்பனை செய்திருந்தால் அவர் இறந்திருக்க மாட்டாரோ என அந்த துக்க நேரத்திலும் நினைத்துக்கொண்டாள்.

அன்றில் இருந்து அவள் அம்மாதான் குடும்பத்தைத் தாங்கிப் பிடிக்கும் துண் ஆனாள்.

வேலைக்கு சேர்ந்தபோது அவளுடைய டீம் லீடர் கொஞ்சம்  எரிந்து எரிந்து விழுபவன். ஆனால் அவளிடம் மட்டும் கனிவுடன் நடந்துகொள்வதைப் போலவும், அவளை ப்ராஜெக்ட்டின் அடுத்தடுத்த நிலைக்கு கொண்டு செல்வதைப் போலவும் கற்பனை தோன்றியது. ஆனால் அவள் ராசிப்படியே நடந்தது. அவளுடன் பணியில் இருந்தவர்களில் ஒருசிலர் ஆன்சைட்டுக்காக வெளிநாடு சென்றுவிட, ஒருசிலர் அடுத்த நிலைக்கு உயர்ந்துவிட அவள் மட்டும் தேங்கி ஓரிடத்திலேயே நின்றுவிட்டாள். வேறு நிறுவனம் மாறியபிறகுதான் மாற்றமும் உண்டானது. அதற்குக்கூட அவள் என்ன காரணம் என நினைத்துக்கொண்டாள் தெரியுமா? ‘நல்ல வேளையாக அந்த பணி குறித்து எந்தக் கற்பனையும் எதுவும் செய்யவில்லை…’

கற்பனை என்பது அவளாக வலுகட்டாயமாக நினைத்துக்கொள்வதில்லை. தானாக இயல்பாக தோன்றுவது. அவள் இயல்பே அப்படித்தான்.

ஒருவரிடம் பேசுவதற்கு முன் இரண்டு முறை கற்பனையில் பேசிப் பார்த்துக்கொள்வாள். ஒரு செயலை செய்வதற்கு முன் ஒருமுறைக்கு மூன்று முறை மனதுக்குள் செய்துபார்த்துக்கொள்வாள்.

அது அப்படியே ஒரு அழகிய கற்பனை எல்லைக்குள் கடத்திச் சென்றுவிடும்.

இதற்கெல்லாம் காரணம் அதிகம் பேசாத அவளுடைய குணமாகவும் இருக்கலாம். இந்தக் காரணத்தையும் அவளேதான் ஆராய்ந்து வைத்திருந்தாள். பேசினால் நண்பர்கள் கிடைப்பார்கள். நண்பர்களிடம் அவளுடைய உணர்வுகளை பேசி பகிர்ந்துகொண்டிருக்க வாய்ப்பிருக்கும். ஆனால் அவள்தான் பேசா மடந்தை ஆயிற்றே. பிறகு எப்படி நண்பர்கள் கிடைப்பார்கள். அவளுக்குள்ளேயே கற்பனையில் பேசிக்கொள்ள வேண்டியதுதான்.

அவள் குணத்தைப் பற்றி அவளே பி.எச்டி செய்யும் அளவுக்கு ஆராய்ச்சி செய்து வைத்திருக்கிறாள்.

ஊரை நெருங்க நெருங்க துக்கம் அதிகமானது.

சின்ன வயதில் கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பில் இருந்தே அக்காக்கள் இருவரிடமும் அந்த மகிழ்ச்சியை குதூகலமாக பேசிப் பேசியே மகிழ்ந்திருக்கிறாள்.

அப்போதெல்லாம் அவள் அம்மா சொல்வாள் ‘சும்மா ஒரு விஷயத்தைப் பத்தியே பேசிக்கொண்டிருந்தால் அச்சாணிபோல் ஏதேனும் நடந்துவிடும்… போதும் பேச்சை நிறுத்துங்க…’

அதுபோல வெளியூர் செல்ல திட்டமிடும் நாட்களில் முந்தைய தினம் இரவு அக்காக்கள் தூங்கிவிட அவள் மட்டும் ‘கொட்ட கொட்ட’ விழித்துக்கொண்டு படுத்திருப்பாள். மறுநாள் பயணம் போகும் அந்த காட்சியை கற்பனையில் நினைத்துக்கொண்டு புரண்டு புரண்டுப் படுத்திருப்பாள்.

அவள் அம்மா, ‘என்ன இன்னும் தூங்கலையா… தூங்கலைன்னா நாளைக்கு பகல்ல ஊருக்குப் போகும்போது தூக்கம் வரும்… கண்ணை மூடி ராமா ராமான்னு சொல்லி தூங்கு…’ என்பாள்.

அவள் கற்பனை பாதியிலேயே தடைபட தூங்கிவிடுவாள்.

இப்படி அவள் கற்பனை பாதியிலேயே தடைபட்டுவிட்டால் அந்த நிகழ்வில் எந்த பாதிப்பும் இன்றி சுமூகமாக நடந்துவிடும். தடைபடாத முழுமையான கற்பனை காட்சிகள் நிஜத்தில் நடப்பதே இல்லை.

திருமணத்துக்காக வரன் பார்த்தபோதும் அப்படித்தான். ஒன்றுமில்லாத விஷயங்களுக்கே கற்பனை செய்பவளுக்கு அவள் வாழ்க்கைக் குறித்த கற்பனைக்குக் கேட்கவா வேண்டும்?

எப்படி எப்படியெல்லாமோ கற்பனை செய்துகொண்டாள். கற்பனை செய்தால் நடக்காது என்பதெல்லாம் அவள் மரமண்டைக்கு உரைக்கவே இல்லை. கட்டற்ற கற்பனையில் மகிழ்ந்தாள்.

ஏனோ தெரியவில்லை ஒரு வரன்கூட அவளுக்கு அமையவே இல்லை. ஆனாலும் அவளால் கற்பனையை நிறுத்த முடிந்ததே இல்லை. ஒவ்வொருமுறையும் வெவ்வேறு வண்ணங்களில் கற்பனை.

‘சும்மா ஒரு விஷயத்தைப் பத்தியே பேசிக்கொண்டிருந்தால் அச்சாணிபோல் ஏதேனும் நடந்துவிடும்… போதும் பேச்சை நிறுத்துங்க…’ என அம்மா சின்ன வயதில் சொன்னது நினைவுக்கு வர, கற்பனை செய்வதை நிறுத்தினால் வரன் அமையுமோ என வலுக்கட்டாயமாக கற்பனை செய்வதை நிறுத்திப் பார்த்தாள். அப்போதும் அமையவில்லை.

இப்போதெல்லாம் திருமணம் குறித்து கற்பனை செய்வதில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்னர் வந்து சென்ற பிறந்த நாளும் அவளுக்கு வயது 55 என்பதை உணர்த்திச் சென்றது.

ஆனாலும் வாழ்க்கையில் ஒரு குறையும் இல்லை. ஒரு குழந்தைகள் காப்பகத்துக்கு அருகிலேயே ஒரு அப்பார்ட்மெண்ட்டில் சொந்த வீடு தானாகவே அமைந்தது. நினைத்துக்கொண்டால் அங்கு சென்று குழந்தைகளுடன் பேசிக்கொண்டிருப்பாள். படிப்பிற்கேற்ற வேலை. இப்போது உயர்பதவி. எப்போது வேண்டுமானாலும் அழைத்துப் பேசும் அளவுக்கு பாசம் வைத்துள்ள அக்காக்களும் அவள் குடும்பமும். குறிப்பாக அவர்கள் குழந்தைகள்.

காலை நேரத்து பனி முகத்தில் அறைந்தது, கார் ஜன்னலை திறந்து வைத்திருந்ததால்.

தனக்கு விருப்பமானவர்களின் மரண செய்தியுடன் பயணம் செய்வதைவிட கொடுங்கொடுமை வேறெதுவும் இருக்கிறதா என தெரியவைல்லை. அத்தனை ரணமாக இருந்தது அந்தப் பயணம்.

இன்னும் 10, 15 நிமிடங்களில் வீடு வந்துவிடும். அம்மாவை எப்படி படுக்க வைத்திருப்பார்கள், உறவினர்கள் யார் யார் எல்லாம் வந்திருப்பார்கள்,  எல்லோரும் அழுதுகொண்டிருப்பார்களா, அம்மாவின் அந்த கோலத்தை எப்படி எதிர்கொள்வது என்று அந்த சூழல் கற்பனையில் விரிந்துகொண்டே சென்றது.

அக்காக்கள் இருவரும் இரண்டு மணிநேரம் முன்பே அவர்கள் குடும்பத்துடன் வந்துவிட்டதாக போன் செய்திருந்தார்கள். இருவரும் போனிலேயே அழுதுகொண்டே இருந்தார்கள். அவளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அழுகையும் வரவில்லை. ஆனால் கற்பனை மட்டும் நிற்கவே இல்லை.

அவள் அம்மாவின் உடலை ஐஸ்பாக்ஸில் வைத்திருந்தார்கள். அவள் முகம் மாறிப் போயிருந்தது. அம்மாவின் அக்காக்களும் தம்பிகளும் சோகமாக உட்கார்ந்திருந்தார்கள். அக்காக்கள் ஓடி வந்து அவளை அணைத்துக்கொண்டு அழுதார்கள். அக்காக்களின் குழந்தைகள் அழவில்லை. ஏதோ தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தார்கள்.

அவள் ராசிப்படி கற்பனையில் நினைத்துக்கொண்டால் அது நடக்காதுதானே. அப்படி அம்மா இறந்துபோன காட்சியை சூழலை கற்பனை செய்துகொண்டால் அதுவும் நடக்காமல் அம்மா உயிருடன் எழுந்துவந்துவிட மாட்டாளா என்ற ஏக்கத்தில் அவள் வராத கற்பனையை வலுக்காயமாக வடிவமைத்துக்கொண்டே பயணித்தாள்.

ஆனால் அந்த கற்பனை மட்டும் பொய்க்கவில்லை.

வீடு வந்தது.

அம்மா ஐஸ்பாக்ஸில் இருந்து வெளிவரவே இல்லை. உள்ளேயே அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தாள். அவள் கற்பனையில் வந்த  சோகக் காட்சிகள் அத்தனையும் இம்மியும் பிசகாமல் நிஜத்தில் நடந்துகொண்டிருந்தது.

அழவும் தோன்றாமல் அம்மாவின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

‘போதும்டி, சும்மா ஒரு விஷயத்தைப் பற்றியே நினைத்துக்கொண்டு கற்பனை செய்துகொண்டிருக்காதே…’ என அம்மா அதட்டுவதைப் போல கற்பனையில் தோன்றியது.

அவளுடைய இந்தக் கற்பனையும் கடந்துபோகும்!

(குறிப்பு: இன்று டிசம்பர் 2, 2020 நான் எழுதிய சிறுகதை)

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்,

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 1,156 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon