ஹலோ with காம்கேர் – 338
December 3, 2020
கேள்வி: விளம்பரங்கள் பிரபலங்களை முன்வைத்து தயாரிக்கப்படுவது எதனால்?
பிரபலங்களைக் கொண்டாடுவது, அதுவும் தனக்குப் பிடித்த பிரபலங்களைக் கொண்டாடுவது என்பது ஒருவிதமான போதை.
அந்த பிரபலம் எந்தத்துறை சார்ந்தவர்களாகவும் இருக்கலாம். வரையறை எல்லாம் கிடையாது. அவர்கள் சார்ந்து இயங்கும் துறை சினிமா, அரசியல், இலக்கியம், தொழில்துறை இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
அவர்கள் என்ன சொன்னாலும் என்ன செய்தாலும் வேதவாக்காக எடுத்துக்கொண்டு அதை செயல்படுத்தும் அளவுக்கு மனது கட்டுண்டுக் கிடக்கும்.
இதன் உச்ச கட்டம்தான் நடிகர்கள் போஸ்டருக்கு பால் அபிஷேகம் செய்யும் ரசிகர்கள், தங்கள் தலைவருக்குக்காக மண் தரையில் உணவு உண்ணும் தொண்டர்கள் என சின்னதும் பெரியதுமான செயல்பாடுகள். இவை வெளியில் இருந்து பார்க்கும் நமக்கு அபத்தமாக இருக்கலாம். ஆனால் அவர்களை தலையில் வைத்துக்கொண்டு கொண்டாடும் ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் அதுவே வாழ்நாள் வரம்.
இதனால்தான் சாதாரண ஒரு மனிதன் சொல்வதைவிட பிரபலங்கள் சொல்வதை மக்கள் எளிதில் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் அவர்களை தங்கள் தயாரிப்புகளின் முகமாகப் பயன்படுத்தி விளம்பரப்படுத்துகிறார்கள்.
உதாரணத்துக்கு நீங்கள் ஒரு கதை எழுதுகிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள். அதை ஃபேஸ்புக்கில் பகிர்கிறீர்கள். அதை வாசித்து உங்களைப் பாராட்டுபவர்கள் 30 பேர் என வைத்துக்கொள்வோம். அதுவே அந்த கதையின் கீழ், இந்தக் கதை ஒரு பிரபல (?) எழுத்தாளர் எழுதிய கதை என சிறு குறிப்பு ஒன்றை கொடுங்களேன். உங்களுக்கு லைக்கும், பாராட்டும் எண்ணிக்கையில் எகிறும். கூடவே அந்த எழுத்தாளர் எழுதிய அந்தப் புத்தகம் எங்கு கிடைக்கிறது, என்ன பதிப்பகம் வெளியிட்டுள்ளது என்றெல்லாம் கேள்விகள் குவியும்.
இந்தக் கதையை திரைப்படமாகவும் எடுத்திருக்கிறார்கள் என்று கூடுதல் தகவல் போடுங்களேன். ‘அது என்ன படம், அதன் யு-டியூப் லிங்க் கொடுக்க முடியுமா, யார் நடித்தது’ என்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறுவீர்கள்.
அந்த எழுத்தாளர் அதை எழுதி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள்தான் அந்தக் கதையை எழுதி இருப்பீர்கள். பரிசோதனைக்காக இப்படி செய்யச் சொல்கிறேன். திரும்பவும் சொல்கிறேன் ஏமாற்றச் சொல்லவில்லை. சின்ன கற்பனை. அவ்வளவுதான்.
இதுபோல ஒரு உண்மை நிகழ்வும் நடந்துள்ளது.
ஒருமுறை கவிஞர் கண்ணதாசன் ஒரு கல்லூரியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். மாணவர்கள் கவிதை வாசித்தார்கள்.
முதலில் ஒரு மாணவன் கவிதை வாசிக்கத் தொடங்கினான். மாணவர்கள் மத்தியில் சின்ன கைதட்டல்கூட இல்லை.
அடுத்து கவிஞர் கண்ணதாசன் ஒரு கவிதையை வாசிக்க ஆரம்பித்தார். படிக்க ஆரம்பிப்பதற்கு முன்பே அரங்கத்தில் இருந்தவர்கள் உற்சாக ஆரவாரம் எழுப்பினர். மேலும் கவிதையின் ஒவ்வொரு வரியை வாசிக்கும்போதும் பலத்த கைதட்டல். வாசித்து முடிந்ததும் கைத்தட்டல் அடங்காமல் ஒலித்துக்கொண்டே இருந்தது.
அப்போது கவிஞர் கண்ணதாசன் சொன்ன தகவலில் அரங்கமே திகைப்பில் ஆழ்ந்தது.
அப்படி என்ன சொன்னார் அவர்?
‘இப்போது நான் வாசித்த கவிதை நான் எழுதியது அல்ல. எனக்கு முன் கவிதை வாசித்த உங்கள் கல்லூரி மாணவர் தான் எழுதிய கவிதையை என்னிடம் காண்பித்தார். அதுமிக அருமையாக இருந்தது. எனவே நான் எழுதிய கவிதையை அவரை வாசிக்க சொல்லி, அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தேன்.
என் கவிதையை அவர் வாசிக்கும்போது, எந்தவித ஆரவாரமும் இல்லை. அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தபோது பலத்த கைதட்டல், கரகோஷம், ஆரவாரமான வரவேற்பு.
ஆக, சொல்பவன் யார் என்பதைத்தான் பார்க்கிறீர்களே தவிர சொல்லும் பொருளைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை’
ஒரு கவிதை கைத்தட்டல் பெறுவதற்கே ஒரு பிரபலத்தின் முகம் தேவைப்படுகிறதென்றால், லட்சக் கணக்கில் செலவு செய்து தயாரிக்கப்படும் விளம்பரங்கள் மக்களை சென்றடைய பயன்படுத்தும் நபர் ஏற்கெனவே நன்கு அறிமுகமானவராக இருந்தால்தானே அது சாத்தியம்.
இதனால்தான் விளம்பரங்கள் பிரபலங்களை முன்வைத்து தயாரிக்கப்படுகின்றன.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்,
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software