ஹலோ With காம்கேர் -339: காலமும் ஆட்டோகிராஃப் எழுதுமே… எப்படி?

ஹலோ with காம்கேர் – 339
December 4, 2020

கேள்வி: காலமும் ஆட்டோகிராஃப் எழுதுமே… எப்படி?

தன்னை ஒரு பிரபலம் என்று அடிக்கடி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அடிக்கோடிட்டுப் பேசுகின்ற ஒருவர் தன் தொழில்நுட்பத் தேவைக்காக என்னை தொடர்பு கொண்டார். அவரும் மீடியாதுறையில் இயங்குபவரே என்பதுதான் ஹைலைட்.

சமீபத்தில் ஒரு அச்சு பத்திரிகையில் வெளியான நேர்காணலை படித்தாராம்… வாழ்த்துகள் என சம்பிரதாயமாக சொல்லிவிட்டு என்ன கேட்டார் தெரியுமா?

அந்த பத்திரிகையில் யார் உங்கள் நண்பர்?

எப்படி மாறிவிட்டது பாருங்கள் தர்மங்கள்!

எனது பேட்டிகள் வெளியாவது இது ஒன்றும் முதன்முறை அல்ல.

நான் தொழில்நுட்பத்துறையில் முதன்முதலாக இயங்க ஆரம்பித்த 1992-முதல் அனைத்துப் பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் என் திறமையை கொண்டாடி வருகின்றன. என் திறமையினால் மட்டுமே எங்கள் நிறுவனமும் பெயர் பெற்றது. வளர்ந்தது.

இன்று கால மாற்றத்துக்கு ஏற்ப வெப்சைட், யு-டியூப், மின்னிதழ்கள் என நேர்காணல்கள்  வெளியாகி வருகின்றன.

அப்போதெல்லாம் என் நேர்காணல் வரும்போது ‘உங்களைப் பார்த்தால் பொறாமையா இருக்கு… எவ்வளவு திறமையானவர் நீங்கள்… இல்லை என்றால் உங்கள் பேட்டியை வெளியிடுவார்களா?’ என சொல்வார்கள்.

அன்று பேட்டி வெளியானால் நம் திறமையை பார்த்து வியந்தார்கள். இன்று நம் பேட்டி வெளியானால் அந்த மீடியாவில்  நமக்கு  வேண்டியவர் யார் என கேட்கிறார்கள்.

நான் எதையும் விளக்கப்போவதில்லை. இந்த இரண்டுக்குமான வித்தியாசத்தை கவனியுங்கள். மாற்றங்களும், மாறிவரும் தர்மங்களும் உங்களுக்கே புரியும்.

(இதுவரை வெளியான என் பத்திரிகை, தொலைக்காட்சி, இண்டர்நெட், யு-டியூப் நேர்காணல்களை அறிந்துகொள்ள விரும்புபவர்கள் மட்டும் இந்த லிங்கில் செல்லுங்கள்… http://compcarebhuvaneswari.com/?p=2566)

இரண்டு தினங்களுக்கு முன் தொலைக்காட்சி சேனலை மாற்றிக்கொண்டே வரும்போது ஒரு சேனலில் சிவாஜி நடித்த படம் ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. ‘கீழ்வானம் சிவக்கும்’.

எத்தனையோ முறை பார்த்திருக்கிறேன். ஆனாலும் அலுக்கவில்லை. திரும்பவும் பார்த்தேன். கதைக்காக அல்ல. அதில் நடித்தவர்களின் நடிப்புக்காக.

சிவாஜி நாடி நரம்பெல்லாம் துடிக்கத் துடிக்க நடித்துக்கொண்டிருந்தார். உடன் சரிதாவும், ஜெய்சங்கரும்.

சரிதா கண்களாலேயே நடித்துக்கொண்டிருந்தார். கண்களின் அசைவுக்கு ஏற்ப உடல்மொழியா, உடல்மொழிக்கு ஏற்ப கண் அசைவா என வித்தியாசம் காண முடியாத அளவுக்கு அபாரமான நடிப்பு. சிவாஜி கணேசனுக்கு இணையாக போட்டிப் போட்டுக்கொண்டு அவரது மருமகளாகவே வாழ்ந்துகொண்டிருந்தார்.

ஜெய்சங்கரின்  நடிப்பைப் பற்றிச் சொல்லவா வேண்டும். பார்வையற்றவாராக வரும் அவருடைய உடல்மொழி உண்மையான பார்வையற்றவரின் உடல்மொழியில் இருந்து கொஞ்சமும் மாறாமல் மிகைப்படுத்தாமல் அசத்தலாக இருந்தது.

சரிதாவின் கணவனாக சரத்பாபு. ஜெய்சங்கரின் தங்கையாக இன்று திரைத்துறையில் கதாநாயகியாக இருக்கும் கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா.

சரத்பாபுவினால் ஏமாற்றப்பட்ட மேனகா தற்கொலை செய்துகொண்டுவிட தன் தங்கையை ஏமாற்றியவனை பழிவாங்குவதற்காக கத்தியுடன் அலைந்துகொண்டிருக்கும் ஜெய்சங்கர். கதையின் அடிப்படை கரு இதுதான்.

இங்கு கதைக்காக பிரமிக்கவில்லை. அந்த திரைப்படத்தில் நடித்துள்ளவர்களின் உணர்வுகள் அந்த காலத்து மனிதர்களின் உணர்வுகளை அப்படியே படம் பிடித்துக் காட்டுவதைப் போல அமைந்துள்ளதை சொல்ல வருகிறேன்.

துரோகம், காதல், அன்பு, பாசம் இப்படி எல்லா உணர்வுகளையும் வெளிப்படையாக அப்பட்டமாக வெளிக்காட்டி இருப்பார்கள் ஒவ்வொருவரும். அன்று நிஜத்திலும் மனிதர்கள் அப்படியேத்தான் இருந்தார்கள். உணர்வுப்பூர்வமாக வாழ்ந்துவந்தார்கள்.

இன்றைய திரைப்படங்களில் எல்லாமே மாறிவிட்டது. உணர்சிகளை பிரவாகமாக வெளிப்படுத்தினால் ‘ஓவர் ஆக்டிங்’ என்கிறார்கள்.

அழும் காட்சிகளில்கூட நடிகர்கள் திரையில் வந்து ஜடமாக நின்றுகொண்டிருந்தால்போதும்  ‘என்ன நடிப்பு… கிளாசிக்… அடிச்சிக்க ஆள் இல்ல…’ என்று கொண்டாடுகிறார்கள்.

மகிழ்ச்சியின் உச்சத்தை நவரசமாய் நடிப்பின் காட்டுவதில்லை. அழுத்தமான ஒரு சிரிப்பில் காட்டுகிறார்கள். ‘ஆஹா, செம நடிப்பு… என்ன மெச்சூரிடியான நடிப்பு…’ என்றெல்லாம் ரசிகர்களும் கைதட்டி மகிழ்கிறார்கள்.

நிஜத்திலும் மனிதர்கள் உணர்வுகளை அந்த அளவுக்கு வெளிக்காட்டுவதில்லையோ என்று நினைப்பதுண்டு. சோகமாகட்டும், துக்கமாகட்டும், சந்தோஷமாகட்டும் எல்லாவற்றையுமே நிமிட நேரத்தில் கடந்து சென்றுவிடுகிறார்கள். அதுவும் பிறர் சோகங்களையும் துக்கங்களையும் காது கொடுத்து விரிவாக கேட்கவும் யாரும் தயாராக இல்லை என்பதுதான் வருந்தத்தக்க விஷயம். எதற்காக அனாவசியமாக சுமக்க வேண்டும் என்ற அலட்சிய மனோபாவம்.

எல்லாவற்றையுமே லைக், கமெண்ட், ஷேர் என்ற மூன்று ஆப்ஷன்களுக்குள் அடக்கிவிடுகிறார்கள். ஃபேஸ்புக்கில் எத்தனை பதிவுகளுக்கு லைக் போட்டீர்கள், எத்தனை போஸ்ட்டுகளுக்கு கமெண்ட் செய்தீர்கள், எத்தனை வீடியோக்களை ஷேர் செய்தீர்கள் என சரியாக சொல்ல முடியுமா உங்களால்? அந்த நேரத்துக்கு பிடித்திருப்பதால் லைக்கும், கமெண்ட்டும், ஷேரும். தட்ஸ் ஆல்.

சமூக வலைதளங்களில் லைக், கமெண்ட், ஷேர் என போகிற போக்கில் செய்கின்ற வேலைகளைப் போலவே வாழ்க்கையில் உணர்வுகளையும் கையாளும் மனிதர்கள் பெருகி விட்டார்கள்.

ஒருசிலரை கவனித்திருக்கிறேன். காலையில் தன் அப்பா இறந்த செய்தியை ஃபேஸ்புக்கில் பகிர்பவர்கள் அன்று மாலையே ஃபேஸ்புக்கில் பிறர் பதிவுகளுக்கு லைக்கும் கமெண்ட்டும் போடுவதை கவனிக்கும்போது அப்பா இறந்த துக்கத்தைக் கூட இத்தனை எளிதாகக் கடந்துவந்துவிட முடிகிறதென்றால் அவர்கள் எந்த அளவுக்கு உணர்வுகளைத் தூக்கி சுமப்பதற்கு தயங்குகிறார்கள் என்பது புரியும்.

தன் சொந்த சகோதரன் இறப்புக்குக்கூட செல்லாமல் பத்தாம்நாள் காரியத்துக்குச் செல்லும் பலரை நான் சந்தித்திருக்கிறேன். காரணங்கள் ஆயிரம் இருக்கலாம். எல்லாவற்றையும் மீறித்தான் சில விஷயங்களை செய்தாக வேண்டும் என்பது என் கருத்து. பிறந்த குழந்தையை எப்போது வேண்டுமானலும் நேரில் சென்று பார்க்கலாம். ஆனால் இறந்தவர்களின் உடலை?

கோயிலுக்குச் சென்றுவிட்டு வந்து  ‘காலை வலிக்கிறது’ என புலம்பக் கூடாது என வீட்டில் பெரியவர்கள் சொல்வார்கள். என்னைப் பொருத்தவரை இறப்புக்குச் சென்று வந்த பிறகும் ‘திடீர் பயணத்தால் அத்தனை தூரம் பிரயாணம் செய்ததால் உடல் வலிக்கிறது…’ என்றுகூட புலம்பக் கூடாது என்பேன்.  ‘இறப்பவர்கள் திடீரென சாகாமல், முன்பே முடிவெடுத்து நாள் குறித்துக்கொண்டா இறப்பார்கள்’ என நினைத்துக்கொள்வேன். இறந்தவர்கள் வீட்டுக்கு அழைப்பு இல்லாமல் காதில் செய்தி விழுந்தாலே சென்றுவர வேண்டும் என்பது நியதி.

இன்றைய மனிதர்கள் இப்படி மாறிப்போனதால் இன்றைய திரைப்படங்களிலும் நடிப்பும் அப்படியே இருக்கிறது.

கலைகளில் அந்தந்த காலகட்டத்துக்கு மனிதர்களின் வாழ்க்கைமுறையும், நாகரிகமும், நடைமுறை செயல்பாடுகளும் வெளிப்படுகிறது எனலாம். கலை என்பது திரைக்கதையாக இருக்கலாம், இலக்கியமாக இருக்கலாம், பாடல் வரிகளாக இருக்கலாம், ஓவியமாக இருக்கலாம்… அது எப்படி எந்த வடிவத்தில் இருந்தாலும் கலைகள் மூலம் கடந்த கால வரலாற்றை அறிந்துகொள்ள முடியும்.

அந்த வகையில் ‘கீழ் வானம் சிவக்கும்’ என்ற அந்தத் திரைப்படம் அன்றைய மனிதர்களை அப்படியே படம் பிடித்துக் காட்டியதாகவே எனக்குத் தோன்றியது.

கலை என்பது அந்தந்த காலத்தின் ‘ஆட்டோகிராஃப்’ என்பேன். தனிநபர்கள் மட்டும்தான் ஆட்டோகிராஃப் எழுத முடியுமா என்ன, காலமும் ஆட்டோகிராஃப் எழுதுமே, கலைகள் மூலம்!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்,

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 605 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon