ஹலோ with காம்கேர் – 341
December 6, 2020
கேள்வி: கடந்து வந்த பாதையை அவமதிப்பதா?
ஒரு மாபெரும் கலைஞர் ஒருவரை அருகில் இருந்து சந்தித்துப் பேச வாய்ப்பு கிடைத்தது அன்றைய ரயில் பயணத்தில் அவனுக்கு. மீடியாக்களினால் கொண்டாடப்படும் கலைஞர் அவர். அவனுக்கு எதிர் சீட்டில் மிக அருகாமையில் ஒரு புத்தகம் படித்துக்கொண்டு அவனைப் பார்த்து அவ்வப்பொழுது சிரித்துக் கொண்டு அமர்ந்திருப்பதை நினைக்கும்போதே அது கனவா அல்லது நிஜமா என சந்தேகம் எழுந்தது.
அவனுக்கும் அவர் மீது நல்ல அபிமானம் உண்டு. ரயில் ஏறி அமர்து சீட் எண் பார்த்து அமர்ந்து பெட்டியை பாதுகாப்பாக வைத்துவிட்டு நிமிர்ந்தபோதுதான் கவனித்தான். தனக்கு எதிர் சீட்டில் மிக இயல்பாக எளிமையாக அமர்ந்திருந்த அந்த பெரியவரை எங்கோ பார்த்ததைப் போல் இருந்தது. அவரை இரண்டு மூன்று முறை உற்று உற்று பார்த்ததாலோ என்னவோ அவர் அவனைப் பார்த்து சிரித்து ‘Any thing uncomfortable?’ என கேட்டார்.
அவர் முகமும் பெயரும் நினைவுக்கு வர ஒருவித பரவச உணர்வு உடலெங்கும் பரவியதால் அவர் பேச்சு எதுவும் காதில் விழவில்லை. அதற்குள் அவர் தமிழுக்கு மாறி ‘ஏதேனும் அசெளகர்யமாக இருக்கிறதா?’ என்றார்.
டிவியில் கேட்கும் அதே குரல். அதே தொனி. அதே உருவம்.
‘இல்லை சார்… நீங்க…’ என்று ஆரம்பித்து அவர் பெயரை கேட்டு உறுதி செய்துகொண்டான் அவன்.
பிறகு இருவரும் அமைதியாக அவரவர் வேலையில். அவர் புத்தகம் படித்தபடி, அவன் கண்களை மூடியபடி அவ்வப்பொழுது கண் திறந்து அவரை பார்த்தபடி.
கையில் ஏதோ ஆங்கிலப் புத்தகம். அருகில் கிண்டில் வைத்திருந்தார். சில நிமிடங்களுக்குப் பிறகு அந்த புத்தகத்தை மூடிவைத்துவிட்டு கிண்டிலை ஆன் செய்து ஏதோ தேடி எடுத்து மீண்டும் படிக்கத் தொடங்கினார்.
அவரிடம் பேசலாம் என்றால் அவர் தொடர்ச்சியாக படிப்பதிலேயே இருக்கிறாரே என கொஞ்சம் தயங்கினான் அவன்.
இரண்டு மணி நேரத்தில் ரயில் ஏதோ ஒரு ஸ்டேஷனில் நிற்க பயணிகள் இறங்கினார்கள். கொஞ்சம் நேரம் அந்த ஸ்டேஷனில் நிற்கும் என நினைத்தான். அவனுக்கும் இறங்கி ஏதேனும் பிஸ்கட் பாக்கெட் வாங்கி வரலாம் என தோன்றியது. இப்போதுதான் அவர் கிண்டிலை ஆஃப் செய்துவிட்டு அவனை நிமிர்ந்து பார்த்தார். சிரித்தார். அவர் கண்களும் சேர்த்து சிரித்தது.
‘சார், உங்களுக்கு ஏதேனும் வேண்டுமா… நான் இறங்கி பிஸ்கட்டும் தண்ணீர் பாட்டிலும் வாங்கப் போகிறேன்…’
‘தேங்க்யூ… எதுவும் வேண்டாம்’ என சொல்லிவிட்டு தன் பையில் இருந்த தண்ணீர் பாட்டிலில் இருந்து தண்ணீர் குடித்தார்.
அவன் இறங்கி பிஸ்கட் வாங்கிவந்து ஏறுவதற்கும் ரயில் கிளம்புவதற்கும் சரியாக இருந்தது.
இருவரும் சகஜமாக பேச ஆரம்பித்தனர்.
அவர் குறித்து தன் அபிமானங்களை எல்லாம் வார்த்தைகளில் வடித்துவிட்டு அவருடன் ஒரு செல்ஃபி எடுத்துக்கொண்ட பின்னர் அவர் அவன் குறித்து விசாரித்தார்.
அவன் தான் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றுவதை சொன்னான். இப்போது வேறு நிறுவனம் மாறப் போவதை சொன்னதுடன் நிறுத்திக்கொண்டால் பரவாயில்லை. 2 வருடங்கள் பணி புரிந்த முந்தைய நிறுவனத்தைப் பற்றி குறையும் சொன்னான்.
அடுத்து அவர் கேட்காமலேயே தான் இப்போது மாறப்போகும் இடத்துக்கு அருகிலேயே வீடு பார்த்துக்கொண்டு செல்லப் போவதாக சொல்லிவிட்டு முன்பு குடியிருந்த வீட்டில் உள்ள குறைகளை பட்டியலிட்டான்.
அவர் சிரித்தபடி அவன் பேசுவதை ரசித்து கேட்டுக்கொண்டிருந்தார்.
அவன் திருமணம் குறித்து கேட்டதற்கு அவன் தன் மனைவி குழந்தைகள் குறித்து சொல்லிவிட்டு தன் பெற்றோர் தன் மனைவியுடன் ஒத்துப் போவதில்லை என்று அப்பா அம்மா குறித்தும் புலம்பத் தொடங்கினான்.
அத்துடன் நிறுத்தினானா? அவருடைய தாய் குறித்து தனக்குத் தெரிந்த வகையில் பாராட்டிப் பேசினான்.
‘உங்கள் அம்மா உங்களுக்கு இத்தனை அனுசரணையாக இருந்ததினால்தான் உங்களால் உங்கள் துறையில் சிறிய வயதில் இருந்தே ஜெயிக்கவும் ஜொலிக்கவும் முடிந்தது இல்லையா சார்…’ என்று கேள்வியையும் முன்வைத்தான்.
‘என் அம்மா குறித்து உங்களுக்கு எப்படித் தெரியும்?’ என அவர் கேட்டதற்கு அவருடைய சில பத்திரிகை நேர்காணல்களை குறிப்பிட்டு அதில் அவர் தன் தாய் குறித்து சிலாகித்து சொல்லி இருந்ததை குறிப்பிட்டான்.
அதற்கும் அவர் சிரித்துக்கொண்டே பதில் சொன்னார்.
‘ஆமாம்… என் அம்மா எனக்கு நல்ல மாரல் சப்போர்ட் தான். உங்களுக்கு ஒன்று தெரியுமா… எனக்கு வீட்டில் இன்னொரு பெயர் உண்டு. வேண்டாமகன்!’
‘என்ன சார் சொல்றீங்க…’
‘ஆமாம்… என் பெற்றோருக்கு மொத்தம் 4 குழந்தைகள். நான் தான் கடைசி. நான் என் அம்மாவின் வயிற்றில் இருக்கும்போதே அப்பா இறந்துவிட்டதால் அம்மாவுக்கு என்மீது தீராத கோபம்… எனக்கு வேண்டாமகன் என்றே பெயர் வைத்தார்… என் அக்கா அண்ணாவிடம் காண்பிக்கும் பாசத்தில் துளியையும் என்னிடம் காண்பிக்கவில்லை… இன்று வரை அப்படியேத்தான் இருக்கிறார் என் அம்மா…’
அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. எல்லா நேர்காணல்களிலும் அவர் தன் தாய் குறித்து சிலாகித்து அல்லவா சொல்லி இருப்பார்.
‘இப்போ அம்மா…’ என அவன் இழுப்பதில் உள்ள கேள்வியை புரிந்துகொண்டு ‘அவருக்கு 90 வயதாகிறது… என்னுடன் தான் இருக்கிறார். ஆனால் குணத்தில் ஒன்றும் மாற்றம் இல்லை… அதே உதாசீனம், அதே வெறுப்பு…’ என்றார்.
‘எப்படி சார் இப்படிப்பட்ட அம்மாவை உங்களால் சகித்துக்கொண்டு வாழ முடிகிறது. அத்துடன் அவர் குறித்து எந்த இடத்திலும் ஒரு துளியும் எதிர்மறையாக சொன்னதில்லையே?’ என ஆச்சர்யமாகக் கேட்டான்.
‘நீங்கள் இந்தப் பயணத்தில் ஒரு அரை மணி பேசி இருப்பீர்களா? அதில் உங்கள் முந்தைய நிறுவனத்தில் உள்ள குறைகள், முன்பு குடியிருந்த வீட்டின் குறைபாடுகள் மற்றும் உங்கள் பெற்றோர் குறித்த தொந்திரவுகள் என எதிர்மறையாகவே சொல்லிக்கொண்டு வந்தீர்கள். அப்போதே நான் சொல்ல நினைத்தேன். ஆனால் நீங்கள் இவ்வளவு கரிசனமாக என் பெற்றோர் குறித்து கேட்டதால் என் தாய் தந்தை குறித்து சொன்னேன்.
என் அம்மா நினைத்திருந்தால் என்னை தூக்கி எறிந்திருக்கலாம் அல்லது ஏதேனும் ஒரு அனாதை இல்லத்தில் சேர்த்திருக்கலாம் அல்லது படிக்க வைக்காமல் ஒதுக்கி இருக்கலாம் அல்லது சாப்பாடு போடாமல் பட்னி போட்டு கொன்றிருக்கலாம். அதையெல்லாம் அவள் செய்யவில்லையே. அவள் வயிற்றில் இருக்கும்போது அப்பா இறந்துபோனதால் ஏற்பட்ட உணர்வு ரீதியான மனசிக்கல் என்னிடம் காண்பிக்கிறாள்.
இதுவெல்லாம் சிறு வயதில் எனக்கு புரியவில்லை. உங்களைப் போல்தான் என் அம்மா என் மீது காட்டும் பாகுபாட்டை நினைத்து மனதுக்குள் குமைந்து குமைந்து அழுதிருக்கிறேன்… ஆனால் படித்து பட்டம் பெற்று நிறைய நூல்கள் வசித்து நிறைய பயணங்கள் மேற்கொண்டு என் வாழ்க்கைப் பயணத்தை நான் சீரமைத்துக்கொள்ளும் காலகட்டத்தில் அம்மாவின் உணர்வுகளை என்னால் முழுமையாக உள்வாங்கிக்கொள்ள முடிந்தது… இப்போதுவரை அவளை என்னால் சகித்துக்கொள்ள முடிகிறது…’
அவன் மனம் கரைந்து அவர் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தான்.
அவரே தொடர்ந்தார்.
‘நாம் முன்னால் பணி செய்த நிறுவனமாக இருக்கட்டும், நாம் முன்னால் குடியிருந்த வீடாக இருக்கட்டும் நாம் இருந்தவரை நமக்கு ஒருதுளியாவது நன்மை செய்திருக்காதா என்ன. அந்த நன்மையினால்தானே சிலபல வருடங்கள் அங்கு நம்மால் பயணிக்க முடிந்தது. அந்த சூழலும் நமக்கு ஏதோ ஒன்றை கற்றுக்கொடுத்துவிட்டுதானே நம்மை அங்கிருந்து அனுப்புகிறது.
அதே லாஜிக்தான் பெற்றோரிடத்திலும். ஆயிரம் குறைகள் இருக்கலாம் அவர்களிடத்தில். ஏன் உங்களிடம் இல்லாத குறைகளா… உங்கள் குழந்தைகளிடம் கேட்டுப் பார்த்தால்தான் தெரியும் நீங்கள் எந்த அளவுக்கு அவர்களைப் புரிந்துகொள்ளாமல் நடத்துகிறீர்கள் என்று.
நமக்குக் கிடைத்திருக்கும் புது சூழலால் பழைய சூழலை அவமதித்து பேசவே கூடாது. ஏனெனில் அந்த சூழலின் நிழலில் நீங்கள் பயணித்திருக்கிறீர்கள் என்பதை நினைவில் வையுங்கள். அந்த சூழல் உங்களுக்குப் புகலிடம் கொடுக்காமல் இருந்திருந்தால் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள். எனவே நாம் கடந்து வந்த பாதை அது வீடாக இருக்கலாம், அலுவலகமாக இருக்கலாம் எதுவாக இருந்தாலும் அது குறித்து குறை சொல்வதும் அவதூறு பேசுவதும் நம்மை நாமே அவமதித்துக்கொள்வதைப் போல்தான்… ஏனெனில் நாமும் அந்த பாதையில் நம் தேவைக்காகப் பயணித்தவர்கள் தானே…’
அவர் பேசி முடித்தபோது தலை குனிந்தான் அவன்.
‘சாரி, உங்களை நான் ஹர்ட் செய்திருந்தால்… என்னவோ சொல்லணும்னு தோணித்து… அதனால் நிறைய பேசிவிட்டேன்…’ என்று மன்னிப்புக் கேட்டவரை இடைமறித்து ‘ஐயோ இல்லை இல்லை சார், இந்த ரயில் பயணம் எனக்கு ஒரு போதிமரமாக இருக்கும் என நான் நினைக்கவே இல்லை. ரொம்ப நன்றி சார்…’ என நெகிழ்ந்தான்.
அவர் சொன்னதில் உள்ள பேருண்மைகள் மனதுக்குள் உறைக்க கண்களை மூடி அமர்ந்தான்.
(இன்று டிசம்பர் 6, 2020 காலையில் எழுதிய சிறுகதை இது)
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்,
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
டிசம்பர் 10, 2020 வியாழன்: சஞ்சிகை108 என்ற இணைய பத்திரிகையில் வெளியான கட்டுரை
https://sanjigai108.com/