#கதை: ஹலோ With காம்கேர் -342: பெண்கள் டிமாண்ட் செய்யக் கூடாதா?

 

ஹலோ with காம்கேர் – 342
December 7, 2020

கேள்வி: பெண்கள் டிமாண்ட் செய்யக் கூடாதா?

இப்போதெல்லாம் வழக்கமான சமையல் சாப்பாடு, வீட்டு வேலை, அலுவலக வேலை என அவளுக்கும் வாழ்க்கையில் வெறுப்பு தட்டுகிறது.

மகள் கல்லூரி படிப்பின் கடைசி வருடம். முடித்துவிட்டால் வேலைக்கு சென்றுவிடுவாள். மகன் பள்ளிப் படிப்பின் கடைசி வருடம். கல்லூரியில் சேர வேண்டும்.

கணவனுக்கு இன்னும் எட்டு வருட சர்வீஸ் இருக்கிறது.

அவள் தானாகவே விருப்ப ஓய்வு எடுத்துக்கொண்டால்தான் உண்டு. ரிடையர்மெண்ட் எல்லாம் அவள் பணியில் கிடையாது.

இவ்வளவு சீக்கிரம் வாழ்க்கையில் பிடிப்பு விட்டுப்போகும் என அவள் நினைக்கவில்லை.

சமைக்கப் பிடிக்கவில்லை. எதுவும் செய்யாமல் படுக்கையிலேயே கிடந்தாள்.

சமையல் அறையில் பேச்சு சப்தம் கேட்டது. அவள் எழுந்துகொள்வதாக இல்லை. ஏதேனும் சமைத்துக்கொள்ளட்டும் என கண்களை மூடி படுத்திருந்தாள்.

அப்பாவும் மகளும்தான் பேசிக்கொண்டிருந்தார்கள்.

‘அம்மா  இப்போதெல்லாம்  ரொம்ப மாறிப் போயிட்டா…’ – இது மகள்.

‘ஆமாம்…’ ஒத்து ஊதினான் கணவன்.

வேண்டுமென்றே பாத்திரத்தை உருட்டி சப்தம் எழுப்பினார்கள். இன்று ஒருநாள் சமைக்க வராமல் படுத்திருப்பதற்கே ‘இப்போதெல்லாம் அம்மா ரொம்ப மாறிப் போயிட்டா…’ என்ற பட்டம்.

இத்தனை வருடங்கள் தொடர்ச்சியாக சமையல் செய்தபோது ‘அம்மா உன்னால் எப்படி இப்படி ஓய்வில்லாமல் தொடர்ச்சியாக சமையல் செய்ய முடிகிறது. யு ஆர் கிரேட்’ என யாருக்குமே ஏன் பாராட்டத் தோன்றவில்லை.

இருவரும் தங்களுக்கு ஏதோ ஆர்டர் செய்து சாப்பிட்டார்கள். ஏதோ பயிற்சி வகுப்புக்குச் சென்றிருந்த மகன் வந்து அம்மாவை எழுப்ப அப்போதுதான் கண் விழித்தாள் அவள்.

எழுந்துகொள்ள வேண்டுமே என்ற அலுப்புடன் எழுந்து சமையல் அறைக்கு வந்தாள்.

எதுவுமே சமைக்கவில்லை. அப்பாவும் மகளும் ஆர்டர் செய்து சாப்பிட்ட பிறகு அந்த காகிதங்களைக் கூட தூக்கி எறியாமல் அப்படியே மேடையில் பரத்தி வைத்திருந்தார்கள்.

வெறுப்புடன் அவற்றை சுத்தம் செய்துவிட்டு தனக்கும் மகனுக்கும் சாதம் வைத்து தயிர் சாதம் ஊறுகாய் தொட்டுக்கொண்டு சாப்பிட்டாள்.

சாப்பிட்டு விட்டு திரும்பவும் போர்வையை போர்த்திக்கொண்டு முடங்கினாள்.

கணவன் மகளிடம் ஏதோ சப்தமாக கேட்டுக்கொண்டிருந்தான்.

‘வாஷிங் மெஷினில் இன்னும் துணி போடலையே… அம்மாவுக்கு என்ன ஆச்சு… நாளை ஒரு மீட்டிங் போகணும்… மாஸ்க் எல்லாம் கூட இன்னும் துவைக்கலையே…’

அதற்கு மகள் ‘ஆமாம்பா, எனக்கும்தான் நாளைக்கு ஒரு வகுப்புக்கு வரச் சொல்லி இருக்கிறார்கள்… தேவையான முக்கியமான டிரஸ் துவைக்கணும்… இன்னும் அதெல்லாம் ரெடி செய்யாமல் அம்மா எழுந்துகொள்ளாமல் படுத்திருக்கிறாள்…’ என்று புலம்பிவிட்டு சப்தமாக அவள் காதில் விழ வேண்டும் என்பதற்காக  ‘இப்போதெல்லாம் அம்மா ரொம்ப மாறிப் போயிட்டா…’ என்று குரலை உயர்த்திப் பேசினாள்.

இன்று ஒருநாள் துணி துவைக்காமல் இருப்பதற்காக  ‘இப்போதெல்லாம் அம்மா ரொம்ப மாறிப் போயிட்டா…’ என்ற பட்டம் கொடுக்கும் இவர்களுக்கு இத்தனை வருடங்கள் தொடர்ச்சியாக துணி துவைத்து ஐயர்ன் செய்து சேவை செய்தபோது ‘அம்மா உன்னால் எப்படி இப்படி அலுப்பில்லாமல் துணி துவைத்து ஐயர்ன் செய்து கொடுக்க முடிகிறது யு ஆர் ஆசம்’ என ஏன் பாராட்டத் தோன்றவில்லை.

இதற்குள் கணவன் அவள் படுத்திருக்கும் அறை  கதவை திறந்து வைத்துக் கொண்டு சப்தமாக யாருடனோ போனில் பேசிக்கொண்டிருந்தான்.

அவன் அப்படித்தான் வேலை செய்வதாய் காட்டிக்கொள்ள எதிர்முனையில் யாருமே இல்லை என்றாலும் ஆஃபீஸில் பிசி என்பதைக் காட்டிக்கொள்ள ப்ராஜெக்ட் குறித்து அலசுவதைப் போல நடிப்பான்.

இதற்குள் மகன் வந்து  ‘என்னப்பா அம்மா தூங்கறா… நீ ஏன் கதவை திறந்து வைத்துக்கொண்டு சப்தமா பேசறே…’ என கடிந்துகொள்ள ‘உங்க அம்மா இப்போதெல்லாம் மாறிப் போயிட்டா… நீயும் அவளுக்கு ஜால்ரா போடு’ என சொல்லிவிட்டு அவன் அறைக்குள் நுழைந்து கதவை அறைந்து சாத்தினான்.

மகன் அவள் அருகில் வந்து படுத்துக்கொண்டான். கலைந்திருந்த போர்வையால் போர்த்திவிட்டான். அவளுடைய ஒரே ஆறுதல் மகன் மட்டும்தான்.

தலையில் கைவைத்து சுடுகிறதா என பார்த்தான். இல்லை என்று தெரிந்தவுடன் சூடாக காபி கலந்து எடுத்துவந்தான்.

தேவாமிர்தமாக இருந்தது காபி. மகனுடைய அன்பின் கலந்த டிகாஷன் காபியாயிற்றே.

அடுத்து இரவு டிபனுக்கான ஆர்பாட்டம் தொடங்கி இருக்க வேண்டும். சமையல் அறையில் இருந்து ஒரே சப்தம்.

அப்பாவும் மகளும் ‘இப்போதெல்லாம் அம்மா ரொம்ப மாறிப் போயிட்டா…’ என்ற பட்டம் கொடுத்துவிட்டு தங்களுக்கு டிபன் ஏதோ ஆர்டர் செய்துகொண்டிருந்தார்கள்.

மகனிடமும் கேட்டிருக்க வேண்டும். அவனுடைய குரல் மட்டும் கேட்டது ‘எனக்கு எதுவும் வேண்டாம். நான் எனக்கு சேமியா உப்புமா செய்யும்போது அம்மாவுக்கும் செய்து கொடுக்கிறேன்…’ என்று சொன்னான்.

இரவு எட்டு மணிக்கு எழுந்து குளித்துவிட்டு சுவாமி அறைக்குச் சென்றாள். விளக்கு ஏற்றப்படாமல் இருந்ததை கவனித்தாள். ஆத்திரம் வந்தது.

‘ஏண்டி ஆறு மணிக்கு விளக்காவது ஏற்றக் கூடாதா?’ என கடிந்துகொண்டாள்.

‘அம்மா, நீ இப்போதெல்லம் ரொம்ப மாறிப் போயிட்ட… நானா தினமும் விளக்கு ஏற்றுவேன்… நீதானே ஏற்றுவாய்…’ என அவள் இருந்த இடத்தில் இருந்தே கத்தினாள்.

எப்போதும் நீதானே செய்வாய். இன்றும் செய். எப்போதும் செய். என வலுக்கட்டாயமாக அவள் தலையில் சுமத்தப்படும் பாரத்தை அவளால் தாங்கவே முடியவில்லை.

கண்களில் கண்ணீர். வெகு பிரயத்தனப்பட்டு அடக்கிக்கொண்டு விளக்கு ஏற்றி விட்டு மகனுடன் சேர்ந்து அவன் தயார் செய்திருந்த உப்புமாவை சாப்பிட்டாள்.

சாப்பாடு மேடையில் மகளும் கணவனும் ஆர்டர் செய்து சாப்பிட்ட பிறகு அந்த பேக்கிங் காகிதங்களைக் கூட தூக்கி எறியாமல் அப்படியே மேடையில் பரத்தி வைத்திருந்தார்கள்.

ஆத்திரம் பொங்க அவற்றை சுத்தம் செய்துவிட்டு டிவியை ஆன் செய்து சேனல் மாற்றிக்கொண்டே வந்தாள்.

இதற்குள் அப்பாவும் மகளும் அங்கு வர ‘என்ன ஆயிற்று… இப்போதெல்லாம் நீ ரொம்ப மாறிப் போயிட்ட… சமையல் செய்யலை, துணி துவைக்கலை, டிபன் செய்யலை…’ என அடுக்கிக்கொண்டே போனான் கணவன்.

மகளும் அவனுடம் சேர்த்து ஒத்து ஊதினாள்.

அவள் எதுவும் பேசிக்கொள்வதாக இல்லை. சேனலை மாற்றுவதிலேயே கவனமாக இருந்தாள்.

அப்படியே சோபாவிலேயே இரவு தூங்கினாள்.

அடுத்த நாள் காலையில் வழக்கம்போல் எழுந்து டிபனுக்கு தயார் செய்ய ஆரம்பித்தபோது மகள் அங்கு வந்தாள்.

‘என்ன செய்யப் போகிறாய் டிபனுக்கு?’ என கேட்டாள்.

‘என் கடமை. ஏதோ ஒண்ணு செய்யறேன். எனக்கும் ஆஃபீஸ் ஜூம் மீட்டிங் இருக்கு…’ என்றாள் அவள்.

அதற்கு மகள் என்ன சொன்னாள் தெரியுமா?

‘அப்படி ஒன்றும் கஷ்டப்பட்டு எங்களுக்கு செய்ய வேண்டாம். நீ சமைப்பதினால் நாங்கள் சாப்பிடுகிறோம். இல்லை என்றால் ஆர்டர் செய்து சாப்பிடப் போகிறோம்…’ என்ற மகளின் பதில் சுக்கல் நூறாகிப் போனாள் அவள்.

‘நீ இப்போதெல்லம் ரொம்ப மாறிப் போயிட்ட அம்மா…’ என்று புலம்பியபடி வேகமாக அவள் அறைக்குள் சென்று கதவை சப்தமாக சாத்திக்கொண்டாள்.

சமையல், சாப்பாடு, பாத்திரங்கள் தேய்த்தல், துணி துவைத்தல் இப்படியான வேலைகள் அவளுக்கு மட்டுமே பட்டா போட்டு கொடுத்திருப்பதாய் நினைத்து பேசுகின்ற மகள் மற்றும் கணவனின் மனப்பாங்கினால் மேலும் வெறுமையானது அவள் மனது.

மதியத்துக்கும் சமையல் செய்து வைத்துவிட்டு ஆஃபீஸ் வேலைக்காக லாகின் செய்து முடிக்க வேண்டிய பணிகளை முடித்தாள்.

சாப்பாட்டு மேஜை மீது ‘ஆமாம். நான் ரொம்ப மாறித்தான் போயிட்டேன்… எனக்கான நேரத்தையும் இந்த குடும்பத்துக்காகவே கொடுத்து உழைத்துக்கொண்டிருந்தேன். இனி எனக்கான நேரம் எனக்கு மட்டும்தான்…’ என எழுதி வைத்துவிட்டு மதிய சாப்பாட்டுக்குப் பிறகு மகனிடம் சொல்லிவிட்டு காரை எடுத்துக்கொண்டு லைப்ரரிக்குச் சென்றாள்.

இரவு ஏழு மணிக்கு வீடு திரும்பினாள்.

லைட் கூட போடாமல் இருட்டாக இருந்தது. அப்பாவும் மகளும் இரவு உணவுக்கு ஆர்டர் செய்து சாப்பிட்டிருந்தார்கள். மகன் படித்துக்கொண்டிருந்தான்.

சுவாமி அறையில் விளக்கு ஏற்றப்பட்டிருந்தது. மகள் மனம் மாறி ஏற்றியிருப்பாளோ என்ற நப்பாசையில் மகனை அழைத்து ரகசியமாய் கேட்டாள்.

‘இல்லைம்மா, நீ நேற்று சொல்லிக்கொண்டிருந்தாய் அல்லாவா, அதனால் நான் தான் ஆறு மணிக்கு விளக்கு ஏற்றினேன்…’ என்றான்.

அவன் தலையை கோதி அணைத்துக்கொண்டாள்.

மாறுவார்கள். மாற்றங்கள் நிகழும்.

இத்தனை வருடங்கள் வாயைத் திறக்காமல் உணர்வுகளை உள்ளுக்குள் பூட்டி பூட்டி வைத்துக்கொண்டு உழைத்தாயிற்று. ஒரே நாளில் அவளை புரிந்துகொள்ள வேண்டும் என நினைத்தால் எப்படி?

அடுத்தடுத்த நாள் அவள் தனக்கான நேரத்தை எடுத்துக்கொண்டு செயல்பட ஆரம்பிக்க மகள் ஏதோ டிபன் செய்ய கற்றுக்கொண்டாள். கணவன் வாஷிங் மெஷின் போட கற்றுக்கொண்டான்.

எத்தனை நாட்கள் ஆர்டர் செய்து சாப்பிடுவது… நாக்கு செத்துப் போய் விடாது?

எவ்வளவு நாட்கள் அழுக்கு சட்டையில் பவுடரை தூவி புதுசுபோல் போட்டுக்கொள்ள முடியும்… ஆல்லைன் மீட்டிங் என்றாலும் கொஞ்சமாவது ஃபார்மலாக உடை அணிய வேண்டாமா?

செய்வதை நிறுத்தினால் செய்யக் கற்றுக்கொள்வார்கள் என்ற உண்மையை உணர்ந்துகொண்டாள். எழுந்து பரபரவென வேலை செய்யத் துடிக்கும் உடம்பைக் கட்டுப்படுத்திக்கொண்டு தனக்கான நேரத்தையும் ஒதுக்கப் பழகினாள்.

மாற்றம் நிகழ்ந்தது கொஞ்சம் கொஞ்சமாக.

ஆனால் ‘அம்மா ரொம்ப மாறிப் போயிட்டா’ என்ற பட்டம் மட்டும் மாறவே இல்லை. அது பெண்களுக்கான சாபம்.

அவர்கள் மற்றவர்களின் டிமாண்டுக்கு கட்டுப்பட வேண்டும். அவள் டிமாண்ட் செய்தால் அவளுக்குக் கிடைக்கும் பட்டம் இதுவாகத்தானே இருக்கும்.

இருந்துவிட்டுப் போகட்டுமே!

(இன்று டிசம்பர் 7, 2020 எழுதிய சிறுகதை. ஓய்வில்லாமல் உழைக்கும் அம்மாக்கள் அனைவருக்கும் இந்தக் கதை சமர்ப்பணம்.)

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்,

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 1,600 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon