ஹலோ With காம்கேர் -344: ‘கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே’ (Sanjigai108.com)

ஹலோ with காம்கேர் – 344
December 9, 2020

கேள்வி:  ‘கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே’ என்ற கீதையின் வாக்கிற்கேற்ப வாழ முடியுமா?

கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்ற கீதையின் வாக்கை நான் என் வாழ்க்கையில் எப்படி செயல்படுத்துகிறேன் என்று முதலில் சொல்லி விடுகிறேன்.

நான் எடுத்துக்கொண்ட என் பணியை,

அது எனக்கானதாக இருந்தாலும் பிறருக்காக இருந்தாலும்…
அது சிறியதானாலும் பெரியதானாலும்…
பணம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும்…
புகழ் உண்டானாலும் உண்டாகாவிட்டாலும்…
அங்கீகாரம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும்…

முழு ஈடுபாட்டுடன் சலிப்பின்றி செவ்வனே செய்து வருகிறேன். காரணம் அந்தப் பணி என்னால் செய்துமுடிக்கப்பட என் கைகளுக்கு வந்துவிட்டது. அதை சரியாகவே நான் செய்ய வேண்டும். எடுத்துக்கொண்ட பணியில் காரண காரியங்களால் பாரபட்சம் காண்பிப்பது பெற்ற குழந்தைகளிடம் ஓர வஞ்சனை காண்பிப்பதற்கு ஒப்பாகும்.

என்னைப் பொருத்தவரை முக்கியம் இல்லாத வேலைகளே இல்லை எனலாம். நான் செய்கின்ற ஒவ்வொரு செயலுமே முக்கியம் என நினைத்து செய்வதாலும், என் ஆற்றல், திறமை, உழைப்பு, கல்வி, அனுபவம் இவை அத்தனையையும் எடுத்துக்கொண்ட பணியில் கொட்டி அதிலேயே திளைத்து செய்வதால் அந்தப் பணி தானாகவே இறைதன்மை பெற்றுவிடுகிறது. சேவையாகவும் மாறிவிடுகிறது.

அதனால் நான் எடுத்துக்கொண்ட பணியின் பலன் எப்படி இருந்தாலும் அது என்னை பெரிய அளவில் பாதிப்பதில்லை.

இதுதான் என் உழைப்பின் லாஜிக், வெற்றிக்கான மேஜிக்.

கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்பது கீதை வாக்கு. அதெப்படி பலனை எதிர்பார்க்காமல் கடமையை செய்ய முடியும் என பலர் நினைப்பார்கள்.

ஒன்றை மட்டும் நினைவில் வையுங்கள்.

நீங்கள் எதிர்பார்த்தாலும் எதிர்பார்க்காவிட்டாலும் எந்த ஒரு செயலுக்குமான பலனும் உங்களை வந்தடைந்தே தீரும். வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை வினைத்தவன் தினை அறுப்பான். அதில் சந்தேகமே இல்லை.

நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கு பின் விளைவுகள் உண்டு. அந்த விளைவுகள்தான் பலன்.

அந்த பலன் நாம் நினைத்ததைப் போலவே அமைய வேண்டும் அல்லது கிடைக்க வேண்டும் என நினைத்தால் ஏமாற்றமே உண்டாகும்.

ஒரு செயலை நாம் ஒரு நோக்கத்துடன் செய்திருப்போம். அந்த செயலுக்கான பலன் சரிசமமாகவோ (நாம் செய்ததுக்கு இணையாக) நாம் எதிர்பார்க்காத கோணத்தில் வேறுவிதமாகவோ கிடைக்கும். வேறுவிதம் என்பது நாம் செய்திருக்கும் செயலை மிக உயர்த்தியோ அல்லது மிக குறைத்து மதிப்பிட்டோ கிடைக்கலாம்.

நம் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ பணி செய்யும் பெண்மணிக்கு அவருடைய பிறந்த நாள் அன்று அவருக்கு  புது உடை வாங்கிக்கொடுக்கிறோம் என வைத்துக்கொள்ளுங்களேன். அதை வாங்கிக்கொண்ட அந்தப் பெண்மணி ‘ஆஹா, எவ்வளவு நன்றாக உள்ளது புடவை. இந்தக் கலர் எனக்கு மிகவும் பிடிக்கும். பெரிய மனது உங்களுக்கு… மிக்க நன்றி அம்மா…’  என அகமும் புறமும் பூரிக்க தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார் என்றால் அதுவே நாம் செய்கின்ற அந்த செயலுக்குக் கிடைக்கும் சரியான பலன். அந்த மகிழ்ச்சியைத்தானே நாமும் எதிர்பார்க்கிறோம். அவருடைய சந்தோஷம் நமக்கும் தொற்றிக்கொள்ளும்.

மாறாக, ‘புடவை நன்றாகத்தான் இருக்கிறது… இதற்கு பதிலாக உங்களிடம் இருக்கும் பயன்படுத்திய லேப்டாப் ஏதேனும் இருந்தால் கொடுத்திருக்கலாம். உபயோகமாக இருந்திருக்கும்…’ என்று அவர் பதில் சொல்லி இருந்தால் நாம் செய்கின்ற அந்த செயலை குறைத்து மதிப்பிட்டு உணர்வு ரீதியாக நம்மை உரசிப் பார்த்து நம் செயலை சற்றே தாழ்த்தி நமக்குக் கிடைக்கும் பலன்.

எங்கள் உறவினர் வீட்டில் ஐந்து வயது குழந்தைக்கு அம்மைப் போட்டிருந்தது. மருத்துவம் பார்த்துக்கொண்டதோடு, பிராத்தனையாக எங்கள் தெருவில் குப்பைகளை பிரிக்கும் பணியை செய்கின்ற ஒரு பெண்மணியின் குழந்தைக்கு புது உடையும், முன்று வேளைக்கான சாப்பாட்டுக்குப் பணமும் கொடுத்தார்கள். குழந்தைக்கு பூரண குணம் ஆன செய்தி கிடைத்த அடுத்த சில நாட்களில் அந்தப் பெண்மணி தலைக்கு மொட்டை அடித்துக்கொண்டிருந்தார். நான் ஆச்சர்யமாக திருப்பதியா, பழனியா என கேட்க, ‘இல்லம்மா இங்க பக்கத்துலதான் எங்க ஊர் கோயிலில்… உங்க உறவினர் குழந்தைக்கு நல்லபடியா குணமாக வேண்டும் என்று பிராத்தனை செய்து கொண்டேன்…’ என்ற அவர் பதிலில் உறைந்தேன். இதைக்கூட நான் கேட்டதால்தான் சொன்னார்.

இதுதான் நாம் செய்கின்ற செயலுக்குக் கிடைக்கும் அதிகபட்ச பலன். நம் செயலை உயர்த்தி நம்மை கெளரவப்படுத்தும் பலனாக இருக்கும்.

சில செயல்களுக்கான பலன் நியூட்ரலாகக் கூட இருக்கும். அதாவது எதற்காக ஒரு செயலை செய்தோமோ அதற்கான அடிப்படை பலன் கூட கிடைக்காமல் போகலாம். அந்த செயல் ஒரு செயல் வடிவதில் மட்டுமே இருக்கலாம்.

ஒரு முக்கியமான ப்ராஜெக்ட்டுக்காக முக்கியஸ்தர் ஒருவரை சந்திக்கச் செல்கிறோம் என வைத்துக்கொள்ளுங்கள். அவர் ‘உதவுகிறேன்’ என்று சொல்கிறார். அதை வேதவாக்காக எடுத்துக்கொண்டு நாமும் காத்திருப்போம். ஆனால் நாட்கள் மாதங்களாகி வருடங்களாகி ஓடிக்கொண்டே இருக்கும். அவரிடம் இருந்து எந்த பதிலும் இருக்காது. இந்த சூழல்தான் நியூட்ரலான பலன். நம் தேவைக்காக முயற்சித்தோம். பலன் வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை. ஒரு செயலை / முயற்சியை செய்தோம் அவ்வளவுதான்.

இன்னும் சில நேரங்களில் நாம் எடுக்கின்ற முயற்சிகளும் செயல்களும் தோல்வியில்கூட முடியலாம்.

திருமணம் செய்துகொள்ளும் நோக்கத்துடன் ஒருவரை தீவிரமாக காதலிக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அவர் கடைசியில் ஓர் அற்பக் காரணத்துக்காக உங்களை உதறிவிட்டு வேறொரு நபரை திருமணம் செய்துகொள்கிறார் என்றால் அதுதான் நீங்கள் எடுக்கும் ஒரு முயற்சிக்கான படுதோல்வி.

இப்படித்தான் நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலுக்குமான பலன் வெவ்வேறு விதமாக அமையும்.

எனவே வாழ்க்கையில் நாம் செய்கின்ற சின்ன சின்ன செயல்களைக்கூட ப்ளஸ், மைனஸ் கணக்குப் போட்டுக்கொண்டு செய்துகொண்டிருந்தால் தோல்விதான் மிஞ்சும். நாம் எடுத்துக்கொண்ட செயல்கள் அனைத்துமே நம்மால் முடிக்கப்பட வேண்டி தானாக நம்மை வந்தடைந்தவை என்றெண்ணி பூரிப்புடன் செய்தால் கிடைக்கும் ஆத்ம திருப்திதான் அந்த செயலுக்கான முதல் வெற்றியாக இருக்கும்.

பலன் சரியான அளவில் கிடைத்ததா, அதிகமாக கிடைத்ததா, குறைவாகக் கிடைத்ததா அல்லது கிடைக்கவே இல்லையா என்ற கணக்கெல்லாம் நமக்குக் கிடைத்த வெற்றிக்கு (ஆத்ம திருப்திக்கு) முன் செல்லாக் காசாகிவிடும்.

பலன் எது கிடைத்தாலும் சரி என்ற பக்குவம் தானாகவே நமக்குள் நிரம்பி நம்மை பூரணத்துவம் அடையவைக்கும்.

நான் இப்படித்தான் வாழ்கிறேன். நீங்களும் முயற்சியுங்களேன்!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்,

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

டிசம்பர் 17,  2020  வியாழன்: சஞ்சிகை108 என்ற இணைய பத்திரிகையில் வெளியான கட்டுரை
https://sanjigai108.com/

(Visited 70 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon