ஹலோ with காம்கேர் – 343
December 8, 2020
கேள்வி: ஒரு கதை இத்தனை தாக்கத்தை உண்டு செய்யுமா?
நேற்றைய பதிவில் ‘பெண்களின் பணிச்சுமை’ குறித்து ஒரு சிறுகதை எழுதி இருந்தேன். என்றுமில்லாத அளவுக்கு நிறைய பின்னூட்டங்கள். அதிலும் குறிப்பாக அந்தக் கதையில் வருகின்ற இளம் பெண் குறித்து.
இந்த காலத்து பெண்கள் உயர்கல்வி, வேலை, உயர்பதவி இதற்கெல்லாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை வீட்டு வேலைகளுக்கும் குடும்பப் பொறுப்புகளுக்கும் கொடுப்பதில்லை. அந்த காலத்தில் பெண்களுக்கு வீட்டு வேலைகளை சொல்லிக்கொடுத்து கண்டிப்புடன் பெற்றோர்கள் வளர்த்தார்கள். இந்தக் காலத்தில் பெண் குழந்தைகளை செல்லம் குடுத்து குட்டிச்சுவர் ஆக்குகிறார்கள், அடிகொடுத்தாவது திருத்த வேண்டாமா அப்படி இப்படி என்று ஏகப்பட்ட ஒப்பீடுகள்.
எல்லாம் சரிதான். நானும் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் ஆண் குழந்தைகளை மட்டும் என்ன கண்டிப்புடனா வளர்க்கிறார்கள். அவர்களுக்கும் அதே செல்லம்தானே கொடுக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் அதைவிட அதிக செல்லமும், சுதந்திரமும் கொடுத்தல்லவா வளர்க்கிறார்கள்.
அந்தக் கதையில் வருகின்ற உதவாத கணவன் மீது யாருக்கும் அத்தனை கோபம் இல்லை. இயல்பாய் எடுத்துக்கொண்டு கடந்துவிட்டார்கள்.
ஏன் என்றால் பெரும்பாலான ஆண்கள் (விதிவிலக்குகள் இருக்கலாம்) காலம் காலமாக இந்த கதையில் வருவதைப் போல்தான் வீட்டு வேலை செய்யாமல் எல்லா சுமையையும் பெண்கள் தலையிலேயே சுமத்தி தாங்கள் சுதந்திரப் பறவைகளாக உலா வருபவர்களாக இருக்கிறார்கள் என்பதால் பெண்கள் உட்பட அத்தனை பேருக்கும் அது சகஜமாகி அதை பெரிதுபடுத்தாமல் அந்தக் கதையில் வரும் பெண் குழந்தையை மட்டும் திட்டி இருந்தார்கள்.
பெண்களுக்குத்தான் பிறந்ததில் இருந்தே அடக்கமா இரு, ஒடுக்கமா இரு, அக்கம் பக்கம் பார்க்காதே, அதிர்ந்து நடக்காதே, சமைக்க கற்றுக்கொள் அப்போதுதான் போகின்ற இடத்தில் குப்பைக் கொட்ட முடியும், அதிர்ந்து சிரிக்காதே… அடங்காபிடாரி பட்டம் வாங்கி விடுவாய், தம்பிக்கும் அண்ணாவுக்கும் கட்டுப்படு அவர்கள்தான் உனக்கு கடைசிகாலத்தில் உதவுவார்கள் அப்படி இப்படி என ஏகப்பட்ட அறிவுரைகள் கொடுத்துக்கொண்டுதானே இருக்கிறார்கள்.
அந்த கதையில் வரும் பெண் அந்த வயதில் அப்பாவுடன் சேர்ந்துகொண்டு அப்பவை ஜெராக்ஸ் எடுத்து வைத்ததைப் போல் நடந்துகொள்கிறாள்.
ஆனால் நிச்சயம் அவள் வாழ்நாள் முழுவதும் அவள் அப்பாவைப்போல் பொறுப்பற்ற சூழலில் இருக்கப் போவதில்லை. இருக்கவும் முடியாது. ஏதோ வயசு கோளாறில் டீன் ஏஜ் சின்ரோமில் அப்படி நடந்துகொள்கிறாள். அதுவும் அவள் அப்பா தன் சுயநலத்துக்காக மகளை பகடைக்காயாக பயன்படுத்துவதால்.
அவள்(ளும்) வாழ்க்கையில் திருமணம் ஆன பிறகு வீட்டு வேலைகள், பொறுப்புகள் என சுமக்கத்தான் போகிறாள். எந்த ஆண் அவளை உட்கார வைத்து சமைத்து சாப்பாடு போட்டு உள்ளங்கையில் வைத்து தாங்கப் போகிறான்? விதிவிலக்குகள் இருக்கலாம். அதெல்லாம் 1% மட்டுமே என்பதால் அதை கணக்கில் எடுத்துக்கொள்ளவே முடியாது.
அதுபோல குழந்தை பெற்று அவர்களை வளர்த்து என வழக்கமான வாழ்க்கைக்குள்தான் அவள் பயணிக்கப் போகிறாள். எந்த ஆண் அவளுக்கு பிள்ளை பெற விருப்பம் இல்லை என்றால் அதற்கு ஒத்துக்கொண்டு அவளை வைத்துக்கொண்டு அவளுடன் குடும்பம் நடத்துவான். இதிலும் விதிவிலக்குகள் இருக்கலாம். அதெல்லாம் 1% மட்டுமே என்பதால் அதை கணக்கில் எடுத்துக்கொள்ளவே முடியாது.
எனவே ஒரு குடும்பத்தில் குழந்தைகள் அப்பா அம்மா இருவரையும் பார்த்தே வளர்கிறார்கள். சொல்லிக் கொடுப்பது, கற்றுக்கொள்வது, புரிதல் ஏற்படுத்துவது, புரிந்துகொள்வது என்பதெல்லாம் வளர்ந்து ஆளாகி கை நிறைய சம்பாதித்து 50 வயதுக்கும் மேல் ஆன ஒரு ஆணுக்கே (நேற்றைய கதையில்) இல்லாதபோது டீன் ஏஜில் உள்ள ஒரு பெண்ணிடம் எப்படி எதிர்பார்க்க முடியும்.
ஒரு வீட்டில் வளரும் இரு குழந்தைகளில் ஒரு குழந்தை அப்பாவை பார்த்தே வளரும். மற்றொன்று அப்பாவைப் பார்த்து.
நேற்றைய கதையில் அம்மாவைப் பார்த்து மகனும், அப்பாவைப் பார்த்து மகளும் வளர்வதால் அந்தக் கதை அப்படி செல்கிறது. அவ்வளவே. அந்தக் கதையில் வரும் மகளின் நடவடிக்கையை மகன் செய்வதாக சொல்லி இருந்தால் அதை வாசகர்கள் இயல்பாக எடுத்துக்கொண்டு கடந்திருப்பார்கள். ‘அதெப்படி ஒரு மகன் இப்படி இருக்கலாம்…’ என்ற கருத்துகள் எழுந்திருக்காது. ஆண்களே இப்படித்தான் என ஒற்றை வரியில் சமாதானம் சொல்லிக்கொண்டு கடந்திருப்பார்கள்.
திருந்த வேண்டும் என்றால் அந்தக் கதையில் வரும் அப்பாவைப் போல் உள்ள ஆண்கள்தான் திருந்த வேண்டும். அவர்களைப் பார்த்து வளரும் குழந்தைகளும் நல்ல குழந்தைகளாக வளர்வார்கள்.
சதா அறிவுரை சொல்வதும், அடித்துத் திருத்துவதும், கட்டாயப்படுத்துவதும் மென்மேலும் வெறுப்பை அதிகரிக்கச் செய்யுமே தவிர ஆரோக்கியமான சூழலை உண்டு செய்யவே செய்யாது.
அந்தக் காலத்தில் படிப்பு, திருமணம், குழந்தை பெறுதல், அவர்களை வளர்த்தல், குடும்ப நிர்வாகம் இவ்வளவுதான் பெண்களின் வேலைகளாக இருந்தன. ஆனால் இப்போது அவர்களுக்கு அலுவலக சுமையும் சேர்ந்துகொண்டு இரட்டை மாட்டு வண்டியில் பயணம் செய்வதைப் போன்ற அழுத்தம். ஒரு மாடு சோம்பேறித்தனமாக நின்றுவிட்டால் மற்றொரு மாடு நடக்க முயற்சித்தாலும் வண்டி நகர முடியாதல்லவா?
எனவே இன்றைய பெண்களின் பணிச் சுமை எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளதால் வீட்டில் உள்ள இணை என்றழைக்கப்படும் கணவன் சோம்பேறியாக இருந்துவிட்டால் அவனையும் சேர்த்து சுமக்க வேண்டிய துர்பாக்கிய நிலையில்தான் பல பெண்கள் உள்ளனர். இதிலும் விதிவிலக்குகள் இருக்கலாம். அதெல்லாம் 1% மட்டுமே என்பதால் அதை கணக்கில் எடுத்துக்கொள்ளவே முடியாது.
குடும்பத்தில் உள்ள பெற்றோரில், அப்பா அம்மா இருவருமே தங்கள் குழந்தைகளிடம் தாக்கத்தை உண்டு செய்வார்கள் என்பதை மட்டும் கவனத்தில் வைக்கவும்.
மாற வேண்டும் என்றால் மாற்றத்தை உண்டு செய்ய வேண்டும் என்றால் உங்கள் இருவரில் யாரிடம் தவறு உள்ளது என பார்த்து ஆரம்பத்திலேயே சரி செய்துகொண்டால் உங்கள் பிள்ளைகளிடமும் மாற்றம் உண்டாகும். அறிவுரைகளும் கற்றுக்கொடுத்தலும் அப்போதுதான் அவர்களுக்குள் செல்லும். மாற்றத்தை ஏற்படுத்தும்.
பதிவை படிக்கும் அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். மேலோட்டமாக படிக்காமல் ஆழ்ந்து படித்து நான் சொல்லி உள்ள உண்மைகளை புரிந்துகொள்ளுங்கள்.
இதுகுறித்த விவாதம் செய்ய விரும்பவில்லை. எனவே விவாத நோக்கில் வரும் பின்னூட்டங்களுக்கு பதில் கிடைக்காது. நீக்கப்படும். Sorry!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்,
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software