ஹலோ With காம்கேர் -345: சாதனைகளுக்கும், வேதனைகளுக்குமான அளவுகோல்?


ஹலோ with காம்கேர் – 345
December 10, 2020

கேள்வி: சாதனைகளுக்கும், வேதனைகளுக்கும் அளவுகோல் ஏதேனும் உண்டா என்ன?

வலிகளில் சிறியதென்ன… பெரியதென்ன…

ஒரு சிலர் தங்கள் பிரச்சனையை பிறரிடம் பகிரும்போது ‘இதெல்லாம் ஒரு கஷ்டமா… நாங்கள் படாத கஷ்டமா’ என்று சர்வ சாதாரணமாக சொல்வார்கள். இன்னும் ஒருசிலர் ‘நாம் எப்படி வாழ்கிறோமோ அதற்கேற்பத்தான் நமக்கு கிடைக்கும் நல்லது கெட்டதுகள்… நாம் சரியா இருந்தா எல்லாம் நல்லதாகவே கிடைக்கும்… எல்லாம் நாம் நடந்துகொள்ளும் விதத்தில்தான்…’ என அவர்கள்தான் உலகில் மிகச் சரியாக பிரச்சனைகள் ஏதும் இன்றி வாழ்ந்து வருபவர்களைப் போல பேசுவார்கள்.

இப்படி பேசினால் அவர்களிடம் தங்கள் பிரச்சனைகளைப் பகிரும் நண்பர்களுக்கு மேலும் மன அழுத்தம் கூடுமே தவிர குறையாது.

மாறாக, அவர்களுக்கு ஏற்பட்ட அதே அனுபவம் உங்களுக்கோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களுக்கோ ஏற்பட்டிருந்தால் (அவர்களின் பெயரைக் குறிப்பிடாமல்) அதை அவர்களிடம் ஷேர் செய்து அவர்கள் எப்படி அந்த பிரச்சனையில் இருந்து வெளிவந்தார்கள் அல்லது வெளிவந்தீர்கள் என்பதை சொன்னால் அவர்களுக்கு ஏதேனும் ஒரு மாற்றுப்பாதை தானாகவே புலப்படும்.

அதைவிட்டு ‘எல்லாம் நாம் நடந்துகொள்ளும் விதத்தில்தான் இருக்கிறது’ என்பதுபோன்ற கர்வத்தனமான பேச்சுகள் ஒருபோதும் எதிராளிக்கு மன ஆறுதலை தரவே தராது.

சாதனைகளில் சிறியதென்ன… பெரியதென்ன…

ஒரு சிலரது சாதனைகளைப் பற்றிப் பேசும்போது  ‘இதுபோல் நிறையபேர் இருக்கிறார்கள்….’,  ‘இதெல்லாம் என்ன பெரிய விஷயமா?, ‘இந்தக் காலத்தில் வாய்ப்புகள் நிறைய உள்ளன’ என்பது போன்ற கமெண்ட்டுகளை சர்வ சாதாரணமாக சொல்பவர்களின் கர்வத்தின் உச்சம் எப்போற்பட்டது என்பதை நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

ஒரு சிலருக்கு விடியற்காலை 5 மணிக்கு எழுந்துகொள்வதே சாதனையாக இருக்கலாம். இன்னும் ஒருசிலருக்கு தினமும் வாக்கிங் செல்வதே சாதனையாக இருக்கலாம். இதெல்லாம் சாதனையா என ஒரு கேள்விக்குறி போடுவதே அபத்தம். அவர்களுக்கு அது சாதனை. அவ்வளவுதான். அந்த ஊக்கம் அவர்கள் வாழ்க்கையை நகர்த்திச் செல்லுமேயானால் அதில் உங்களுக்கென்ன உறுத்தல்?

தினமும் நான் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்துகொள்வதை பற்றி பகிரும்போதும், என் பெற்றோர் குறித்து பெருமையாக சொல்லும்போதும் ஒருசிலர் ‘வாழ்த்துகள். இதுபோல் நிறைய பேர் இருக்கிறார்கள்…’, ‘வாழ்த்துகள். எல்லா பெற்றோருமே இப்படித்தான்…’ என சம்பிரதாயமாக வாழ்த்துவதைப்போல் வாழ்த்திவிட்டு நாம் மகிழ்ச்சியாக பகிர்வதை ‘இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா… என்னவோ சொல்ல வந்துட்டா…’ என்ற மனப்பாங்கில்  தங்கள் உள்ளத்து அழுக்கை / பொறாமையை ஒற்றை வரியில் வெளிப்படுத்துவார்கள்.

‘எத்தனை பேர் வேண்டுமானாலும் இருக்கட்டுமே, நான் என் அனுபவத்தை மட்டும்தான் சொல்லி இருக்கிறேன்…’ என்று பதில் சொல்லி இருக்கிறேன்.

ஒருவரின் சாதனையாகட்டும், வேதனையாகட்டும் அதற்கு சிறியது பெரியது என்ற அளவுகோல் எல்லாம் கிடையவே கிடையாது. வரவர் வாழ்க்கை, அவரவர் பக்குவம், அவரவர் உழைப்பு, அவரவர் ஏற்ற இறக்கம். That’s all.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்,

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 18 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon